.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, February 21, 2017

அல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு



அல் குர்ஆன் என்பது இறைவனால் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வஹியாக அரபு மொழியில் அருளப்பட்ட அனைத்து சமூகங்களுக்குமான பொதுவான வேதமாகும். ஆரம்பத்தில் 'லவ்ஹுல் மஹ்பூல்' எனும் புனித ஏடுகளில் பாதுகாக்கப்பட்டிருந்த இவ்வேதம் பின்னர் 'பைதுல் இஷ்ஷா' எனும் கீழ் வானுக்கு இறக்கப்பட்டது. அங்கிருந்து வானவர் ஜிப்ரீல் (அலை) மூலம் மக்காவில் 13வருடங்கள் மற்றும் மதீனாவில் 10வருடங்கள் என சுமார் 23வருடங்களில் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. அந்தவகையில் நபி(ஸல்) அவர்களின் 40வது வயதில் ஹிறாக்குகையில் வைத்து சு10றாஅலக்கின் முதல் 5வசனங்களும் முதல் வஹியாக அருளப்பட்டன.

இவ் அல் குர்ஆன் ஆனது நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து உலகம் அழியும் வரைக்கும் தோன்றும் முழு மனித சமூதாயத்துக்குமான வழிகாட்டல்களை உள்ளடக்கிய இறுதி வேதமாகக் காணப்படுகிறது. எனவே இது இறுதிநாள் வரை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் நபி(ஸல்) அவர்களது காலம் முதல் இன்றுவரை இறைவனால் எவ்வாறு அருளப்பட்டதோ அதேபோன்று ஒரு எழுத்துக் கூட மாற்றப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனை பின்வரும் குர்ஆன் வசனமும் உறுதிப்படுத்துவதைக் கானலாம்.
 'நாங்களே அதை இறக்கிவைத்தோம் மேலும் அதை நாங்களே பாதுகாப்போம்'

நபி(ஸல்) காலத்தில் அல்-குர்ஆன் பாதுகாக்கப்பட்ட முறை

நபி(ஸல்) அவர்களுக்கு அல்-குர்ஆன் அருளப்பட்ட வேளையில் அதை அவர்கள் மனனம் செய்து கொள்வார்கள். இவ்வாறு மனனம் செய்வதில் ஆரம்பக் கட்டத்தில் அவர்கள் மிகவும் கடினத்தை எதிர் நோக்கினார்கள். எனவேதான் அல்லாஹ் அவ்வாறு செய்யத் தேவையில்லை என்று கூறி கீழ்வரும் அல்-குர்ஆன் வசனங்களை இறக்கினான். “திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்க வேண்டாம், அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு”- (75:16-19). “உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம், நீர் மறக்க மாட்டீர்”- (87:6). அதன்பின் ஜிப்ரீல்(அலை) அவர்கள் அதிகமான வசனங்களைக் கூறினாலும், அவை நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் அப்படியே பதிவாகிவிடும். இறைவனின் தூதராகையால் அல்லாஹ் அவர்களுக்கு இத்தகைய சிறப்பை வழங்கியிருந்தான்.

மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் ரமழானில் வானவர் ஜிப்ரீல்(அலை) வந்து அதுவரை அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்திச் செல்வார்கள். நபி(ஸல்) அவர்கள் மரணித்த கடைசி வருடத்தில் ஜிப்ரீல்(அலை) இரண்டு முறை வந்து இவ்வாறு தொகுத்து வழங்கியதாக ஹதீஸ்களில் ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (புகாரி 6, 1902, 3220, 3554, 4998). எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபி(ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது. அல்-குர்ஆன் நபி(ஸல்) அவர்களுடைய உள்ளத்தில் இவ்வாறுதான் பாதுகாக்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும் அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது. (பொதுவாக எழுத்தாற்றல் இல்லாதவர்களுக்கு அதிக அளவிலான நினைவாற்றல் இருப்பதை இன்றைக்கும் கூட நாம் காணலாம். நினைவாற்றல் மூலமாக மட்டும்தான் நம்மால் எதையும் பாதுகாத்து வைக்க முடியும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக இத்தகையோரின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அதிகரிக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற உண்மையாகும்) எழுதவும் படிக்கவும் தெரியாத அந்தச் சமுதாய மக்களில் தம்மை ஏற்றுக் கொண்டவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தமக்கு அவ்வப்போது அருளப்பட்ட வசனங்களைக் கூறுவார்கள். கூறிய உடனேயே அம்மக்கள் மனனம் செய்தும் கொள்வார்கள்.

மனனம் செய்தவற்றை மறந்து விடாமல் இருக்க இஸ்லாத்தில் சிறப்பான ஒரு ஏற்பாடும் காணப்பட்டகது. அதாவது 'முஸ்லிம்கள் தினமும் நடத்துகின்ற ஐந்து நேரத் தொழுகைகளிலும் மேலதிகமாக தொழுகின்ற தொழுகைகளிலும் அல்-குர்ஆனின் சில பகுதிகளையாவது ஓதியாக வேண்டும்' என்பது தான் அந்த ஏற்பாடு. அல்-குர்ஆனை மனனம் செய்த முஸ்லிம்கள் அதை மறந்துவிடாமல் இருக்க இவ்வேற்பாடு உதவியாக இருந்தது. மேலும் மனனம் செய்யாதவர்களும் தொழுகையில் ஓத வேண்டும் என்பதற்காக குர்ஆனை மனனம் செய்யும் நிலை ஏற்படவும் இது காரணியாக இருந்தது.

நபி(ஸல்) அவர்களின் தூண்டுதலின் அடிப்படையில் அதிகமான நபித் தோழர்கள் அல்-குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள். அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), தல்ஹா (ரலி), இப்னு மஸ்வூத் (ரலி), ஹஃப்ஸா (ரலி), உம்மு ஸலமா (ரலி), ஸாலிம் (ரலி), அபூஹரைரா (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் பலர் நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார்கள். சிலர் அவர்களின் மரணத்திற்குப் பிறகு மனனம் செய்தார்கள். இவ்வாறு கல்வியாளர்களின் உள்ளங்களில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாகக் குர்ஆனும் கூறுகிறது.(அல்-குர்ஆன் 29:49)

நபி(ஸல்) அவர்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்காக வேண்டி, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சில தோழர்களை அனுப்பி வைத்தார்கள். இதுவும் புனித அல்-குர்ஆன் மனிதர்களுடைய உள்ளங்களில் பாதுகாக்கப்படுவதற்கு ஒரு காரணியாக அமைந்தது.

உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களைக் கொண்டு தனக்கு அவ்வப்போது வருகின்ற இறைச் செய்தியை உடனே பதிவு செய்யும் வேளையையும் நபி(ஸல்) மேற்கொண்டார்கள். இவ்வாறு பதிவு செய்வதற்காக குத்தாபுல் வஹி சிலரை நியமித்திருந்தார்கள். அவர்கள் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆகியோர்களாவர்.

இந்த எழுத்தாளர்கள் நபி(ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல பேரீச்சை மரப்பட்டைகளிலும், பதனிடப்பட்ட தோல்களிலும், வெண்மையான கல் மற்றும் பலகைகளிலும், கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். அன்றைய சமுதாயத்தினர் இவற்றைத்தான் எழுதப்படும் பொருட்களாகப் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு எழுதப்பட்டவை நபி(ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள். இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அருளப்பட்ட முழுக் குர்ஆனும் நபித்தோழர்களுடைய உள்ளங்களிலும் எழுதப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்டது.

அல்-குர்ஆனின் 98வது அத்தியாயத்தின் 2வது வசனத்தில் 'நபி(ஸல்) அவர்கள் தூய்மையான ஸூஹ்பை ஓதுவார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் பல வசனங்களில், கிதாப் என்று கூறப்படுவது போல் இவ்வசனத்தில் ஸூஹ்ப் என்று கூறப்பட்டுள்ளது. தனித்தனி ஏடுகளாக இருக்கும் போது ஸூஹ்ப் என்றும், அந்த ஏடுகள் அனைத்தையும் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கும் போது அது கிதாப் என்றும் சொல்லப்படும்.

அபூபக்கர்(ரலி) காலத்தில் அல்-குர்ஆன் தொகுக்கப்படல்

நபி(ஸல்) காலம் வரை அல்-குர்ஆன் ஸூஹ்ப் என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது. நபி(ஸல்) காலத்தில் திருக்குர்ஆன் முழுமையாக எழுதப்பட்டிருந்தாலும், அனைத்து வசனங்களும் வரிசைப்படி அமைக்கப்பட்டிருந்தாலும், அத்தியாயங்களைப் பொறுத்தவரை ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கப்படாமல் இருந்தது என்பதற்கு மேலே குறிப்பிட்ட அல்-குர்ஆனின் 98:2 வசனம் ஆதாரமாகவுள்ளது. நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு வரிசைப்படுத்தித் தொகுக்கப்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவேதான் திருக்குர்ஆனை கிதாப் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்.

நபி(ஸல்) அவர்களின் மரணித்திற்குப்பின் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில், ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு தானும் ஒரு இறைத் தூதன் என்று போலி நபித்துவத்தை வாதிட்டு தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்த 'முஸைலமா இப்னு கத்தாப்' என்பவனை எதிர்த்து 'யமாமா' எனுமிடத்தில் ஒரு போர் நடந்தது. முஸைலமாவின் படைக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் அல்-குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித் தோழர்கள்(ஹாபிழ்கள்) கொல்லப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். 'நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்' என்று கூறி அபூபக்கர் (ரலி) அவர்கள் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பிலுள்ள நியாயங்களை எடுத்துரைத்து இது கட்டாயம் செய்யப்படவேண்டிய பணிதான் என்று விளக்கிய பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும் எழுதியவர்களிலும் தலைசிறந்தவராகவும் இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச்செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள். அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டாரகள். (புகாரி : 4988, 4989)

அல்-குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன், 'இந்த வசனங்களை இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள், இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள், இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள்' என்று நபி(ஸல்) கட்டளையிடுவார்கள். அதன்படி நபித்தோழர்கள் எழுதியும் மனனம் செய்தும் கொள்வார்கள். (திர்மிதீ 3011) இன்று நாம் பயன்படுத்தும் குர்ஆனின் அத்தியாயங்களில், எந்த வரிசையில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதோ அது நபி(ஸல்) காட்டிய வழிமுறையில்தான் அமைந்துள்ளது. வசனங்களின் வரிசை அமைப்பும் மற்றும் ஒரு அத்தியாயத்தில் இடம்பெற்ற வசனங்கள் எவையென்பதும் நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படியே முடிவு செய்யப்பட்டது.

அப்படியானால் அபூபக்ருக்கு இதில் என்ன வேலை என்ற சந்தேகம் ஏற்படலாம். நபி(ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தாளர்களும் மதீனாவில் இருக்க மாட்டார்கள். சில வசனங்கள் அருளப்படும் போது வெளியூரில் இருந்தவர்கள், தமது ஏடுகளில் அந்த வசனங்களை எழுதியிருக்க மாட்டார்கள். இதனால் ஒவ்வொரு எழுத்தாளருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ அல்லது அத்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது. ஒவ்வொரு எழுத்தாளரும், தம்மிடம் உள்ளதுதான் முழுமையான குர்ஆன் என்று தவறாக எண்ணும் போது குர்ஆனில் முரண்பாடு இருப்பது போல் தோன்றும். அனைத்து எழுத்தாளர்களின் அனைத்து ஏடுகளையும் ஒன்று திரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையில் சரி பார்த்தால் ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியாயங்களை எழுதாமல் விட்டுள்ளனர் என்று கண்டறிய இயலும். இந்தப் பணியைத் தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்து முடித்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த ஏடுகளையும், குர்ஆன் எழுத்தர்களிடமிருந்த ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள். இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளை வரிசைப்படுத்தினார்கள். பாதுகாக்கப்பட்ட இந்த மூலப் பிரதி அபூபக்கர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை.

அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு இந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவரது மகளும்  நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா நாயகி இடத்தில் இருந்தது. உஸ்மான் (ரலி) ஆட்சியில் இந்தக் குர்ஆன் ஆவணம் பொது மக்களுக்குப் பரவலாக சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.


உஸ்மான் (ரலி) வரிசைப்படுத்தி நூலுருப்படுத்தல்

இஸ்லாம் சிரியா, ஈராக், ஈரான் , எகிப்து, பைசந்தியா என பல பகுதிகளுக்குப் பரவி விட்ட நிலையில், பல நபித் தோழர்களும் இப்பிரதேசங்களில் குடியேறி வாழத்தொடங்கியதுடன் இப்பிரதேச மக்களின் மார்க்க வழிகாட்டிகளாகவும் இவர்கள் காணப்பட்டனர். எனவே இவர்கள் அல்-குர்ஆன் ஓதும் முறையையே அந்தந்த பகுதி மக்களும் பின்பற்ற தொடங்கினர். உதாரணமாக, கூபா வாசிகள் - இப்னு மஸ்ஊத் ரலியின் முறையையும்,,  பஸரா வாசிகள் - அபூ மூஸா அஷ்அரி அவர்களின் முறையையும், சிரியா வாசிகள் - மிக்தாத் பின் அஸ்வதின் முறையையும் பின்பற்றினர். மேலும் இஸ்லாத்தில் புதிதாக நுழைந்த அரபு மொழியை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் குர்ஆனை உச்சரிப்பதிலும் ஓதுவதிலும் பல தவறுகளையும் விடத் தொடங்கினர்.

அஸர்பைஜான், ஆர்மேனிய யுத்தத்தங்களில் பங்குபற்றச் சென்ற ஈராக்கிய மற்றும் சிரிய வீர்ரகள் வேறு வேறு விதமாக குர்ஆனை ஓதினார்கன். தாம் ஓதிய முறையே சரியென இரு பிரிவினரும் வாதாடிக் கொண்டனர். இதனை அவதானித்த தளபதி குதைபதுல் யமானி அவர்கள், அல்-குர்ஆன் விடயத்தில் முஸ்லிம்கள் பிரிந்து சென்றிருக்கின்ற நிலையை கலிபா உஸ்மான் ரலியிடம் எடுத்துக்காட்டி, அதை ஒன்றுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுருத்தினார்கள்.

இதையறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் அல்-குர்ஆனை பொதுமைப்படுத்தி மக்களிடத்திலே கொண்டுசெல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத்தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் எனக்கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.

அத்தியாயங்களை வரிசைப்படுத்துதலும் சமுதாயத்தின் அங்கீகாரமும்

ஹப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த அந்த ஒரே மூலப் பிரதியைப் பெற்று அதைப் போல் பல பிரதிகள் தயாரிக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்யலானார்கள். அந்தவகையில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரித்த மூலப் பிரதியில் ஒவ்வொரு அத்தியாயமும் முழுமைப் படுத்தப்பட்டு இருந்தாலும் இது முதல் அத்தியாயம், இது இரண்டாவது அத்தியாயம் என்று அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப்படாமல் இருந்தன இந்தப் வரிசைப்படுத்தும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் தான் செய்தார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்கள். தம்முடைய காலத்தில் இருந்த நபித் தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில் குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம் மற்றும் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதப்படக்கூடிய அத்தியாயம் என்பதால் 'அல்ஃபாத்திஹா' என்ற அத்தியாயத்தை முதல் அத்தியாயமாக அமைத்தார்கள். (இதை நீங்கள் முதல் அத்தியாயமாக வைக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை) அதன் பிறகு அளவை அடிப்படையாகக் கொண்டு பெரிய அத்தியாயத்தை முதலாவதாகவும் அதற்கடுத்த அளவிலான அத்தியாயத்தை அதற்கடுத்ததாகவும் அமைத்து குர்ஆனுடைய அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள்.

சில இடங்களில் வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறிய அத்தியாயங்களை முன்னாலும், பெரிய அத்தியாயங்களைப் பின்னாலும் வைத்தார்கள். இந்தக் காரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதை உஸ்மான் (ரலி) அவர்கள்தான் வரிசைப்படுத்தினார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு ஒழுங்குக்குள் இருந்தால்தான் குழப்பம் ஏற்படாது என்பதற்காக உஸ்மான் (ரலி) செய்த அந்த ஏற்பாட்டை உலக முஸ்லிம் சமுதாயம் எந்தக் கருத்து வேறுபாடுமின்றி ஒப்புக் கொண்டுவிட்டது. இந்த வரிசைப்படுத்துதல் இறைவன் புறத்திலிருந்து சொல்லப்பட்டதல்ல, இறைத் தூதரின் வழி காட்டுதலின்படியும் அமைக்கப்பட்டதுமல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பிரதியில் திருக்குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்கள். அவரது ஏட்டில முதல் அத்தியாயமாக 96வது அத்தியாயம் பதிவு செய்யப்பட்டிருந்தது. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களை முதலில் எழுதிவிட்டு, பிறகு மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்களை எழுதி வைத்திருந்தார். அதேபோல் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் முதல் அத்தியாயமாக 'பகரா' அத்தியாயத்தை எழுதியிருந்தார்கள். அது குர்ஆனில் தற்போது இரண்டாவது அத்தியாயமாக இருக்கிறது. இப்பொழுதுள்ள வரிசைக்கும் அவரது வரிசைக்கும் இடையே இதுபோன்று ஏராளமான மாற்றங்கள் இருந்தன. உபை இப்னு கஅப் என்ற நபித் தோழர் 5வது அத்தியாயமாக இருக்கும் அல்மாயிதாவை 7வது அத்தியாயமாகவும், 4வது அத்தியாயமான அந்நிஸாவை3வது அத்தியாயமாகவும், 3வது அத்தியாயமான ஆலு இம்ரானை 4வது அத்தியாயமாகவும், 6வது அத்தியாயமான அல் அன்ஆமை 5வது அத்தியாயமாகவும், 7வது அத்தியாயமான அல் அஃராபை 6வது அத்தியாயமாகவும் எழுதி வைத்திருந்தார்.

எனவேதான் அத்தியாயங்களை இப்போது இருக்கும் வரிசைப்படி நபி (ஸல்) அவர்கள்தான் அமைத்தார்கள் என்று கூறுவவது தவறாகும். ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஈராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, 'உங்கள் குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்' என்றார். ஏன் என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். 'குர்ஆன் அத்தியாயங்களை சரியான வரிசைப்படி அமைத்துக் கொள்வதற்காக' என்று அவர் பதிலலித்தார். அதற்கு ஆயிஷா (ரலி) 'எதை முன்னால் ஓதினாலும் அதனால் உனக்கு எந்தக் கேடும் இல்லை' என்று குறிப்பிட்டார்கள். (புகாரி : 4993). மேலும் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில், பகரா (எனும் 2வது) அத்தியாயத்தையும், பின்னர் நிஸா (எனும் 4வது) அத்தியாயத்தையும் பின்னர் ஆலு இம்ரான் (எனும் 3வது) அத்தியாயத்தையும் ஓதினார்கள். (முஸ்லிம் : 1291)

உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்த ஏற்பாட்டை அன்றைய சமுதாயத்தில் இருந்த நபித் தோழர்களிலும், நல்லோர்களிலும் யாருமே ஆட்சேபிக்கவில்லை. இது தேவையான, சரியான ஏற்பாடுதான் என்பதை ஒப்புக் கொண்டார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும்இ நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டார்.

குழுவுக்கு தலைவராக ஸைத் பின் ஸாபித் (ரலி)

அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்த ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களயே குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவும்இ பல பிரதிகள் தயாரிக்கவும் அமைக்கப்பட்ட குழுவுக்கும் தலைவராக உஸ்மான் (ரலி) நியமித்தார்கள். இந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி), ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவ்வாறு வரிசைப்படுத்தப்பட்ட அல்-குர்ஆனை பல பிரதிகள் எடுத்து அப்பிரதிகளை உஸ்மான் (ரலி) தமது ஆளுகையின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் பிரதிகளின் அடிப்படையிலேயே மற்றவர்களும் பிரதி எடுத்துக் கொள்ளவேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் வைத்துள்ள முழுமைப்படுத்தப்படாத பழைய பிரதிகளை எரித்து விடுமாறும் ஆணை பிறப்பித்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் ஒன்று துருக்கி நாட்டின் 'இஸ்தன்புல்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் 'தாஷ்கண்ட்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள்தான் இன்று உலகத்தில் உள்ள குர்ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம்.

இது தான் திருக்குர்ஆன் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட வரலாறு. இந்தப் பணிகளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 25ம் ஆண்டு செய்தார்கள். அதாவது நபி(ஸல்) அவர்கள் மரணித்து 15 ஆண்டுகளின் பின்.

குறியீடுகள் சேர்க்கப்பட்டல்

அரபு மொழியில் இறக்கப்பட்ட இவ் அல்-குர்ஆன் தற்போது இருப்பது போன்றுபத்ஹா, ழம்மா, கஸ்ரா, சுகுன்போன்ற ஹரகத்களைக் கொண்டு ஆரம்பத்தில் காணப்படவில்லை. அரபியர்களின் தாய் மொழியாக அரபு காணப்பட்டதால் இவை இல்லாமல் குர்ஆனை உச்சரிப்பதில் அவர்களுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. எனினும் குலபாஉர் ராஷிதீன்களின் காலத்தின் இஸ்லாமிய ஆட்சி பல்வேறு பகுதிகளுக்கம் விஸ்தீரனம் அடைந்தது. இதனால் அரபு மொழியை தாய் மொழியாக கொள்ளாத பலரும் இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர். அவர்கள் குர்ஆனை ஓதும் போது அதன் உச்சரிப்பில் பல பிழைகளை விடத் தொடங்கினர். இதை அவதாணித்த அலி (ரலி) அவர்களின் நெருங்கிய நண்பரும் அரபு மொழித் துறையின் முதலாவது இலக்கியவாதியாக கருதப்படுபவருமான, “அபுல் அஸத் அத்துவலிஅவர்கள் ஏனையவர்களும் குர்ஆனின் உச்சரிப்பை பிழையின்றி உச்சரிக்க வழி செய்யும் முகமாக அதன் வசனங்களில்நுக்தாஎனப்படும் புள்ளிகளை இட்டார்.

ஹிஜ்ரி 66-86 வரை (கி. பி. 685 முதல் 705 வரை) ஆட்சி புரிந்த ஐந்தாவது உமையா கலீபாவான அப்துல் மாலிக் இப்னு மர்வானின் காலத்தில், ஈராக்கில் கவர்னராக ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவர் இருந்தார். இவரின் வேண்டுகோளிற்கு இனங்கஅக்காலத்தில் வாழ்ந்த, அபுல் அஸத் அத்துவலியின் இரு மாணவர்களால் அல்-குர்ஆனைசரியான முறையில் உச்சரிப்பதற்காகவேண்டி தற்போது இருப்பது போல் பத்ஹா, ழம்மா, கஸ்ரா, சுகுன் (நஸ்பு, ரப்உ, ஜர்ரு) போன்று குறியீடுகள் அல்-குர்ஆனில் இணைக்கப்பட்டன.


by : MSM Naseem - B.A (Hons)





4 comments:

  1. இரண்டாவதாக குரானை வாசித்தவர் யார்?

    ReplyDelete
  2. முகம்மது வீட்டில் பாதுகாக்க பட்ட குர்ஆன் வசனங்கள்.எழதி வைக்க பட்ட பதப்படுத்தப்பட்ட தோல்கல் கல்பலகை விலங்குகளின் எலும்புகள் எங்கே

    ReplyDelete