.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, April 4, 2019

பிள்ளைகளின் விருத்திக்கட்டங்களும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்களும்


                M.S.M. Naseem - MA, BA (Hons), PGDE (R)

ஒரு பிள்ளையின் வாழ்வின் குறிப்பிட்ட வயதுக் கட்டங்களில் ஏனைய கட்டங்களிலும் பார்க்க வேறுபட்டுக் காணப்படும் பல்வேறு பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அறிஞர்களால் பிள்ளை விருத்திக்கட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அனைத்துக் குழந்தைகளும் தனித்தன்மை கொண்டவர்கள் என்பதால், அவர்கள் ஒவ்வொருவரினதும் நடத்தைக் கோலங்கள் அவர்களுக்கு மட்டுமே உரியதாகும். எனினும் எல்லாக் குழந்தைகளுக்குமான ஓர் பொதுவான வளர்ச்சி முறையொன்று உள்ளது என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் அவ்வவ் வயதுக்கட்டங்களில் தெளிவாகக் காணப்படும் நடத்தைப்பண்புகளைக் கற்பது இலகுவாகின்றது.


இந்தவகையில் பொதுவாக பிள்ளைகளின் விருத்திக்கட்டங்களை கல்வி உளவியலாளர்கள் பின்வருமாறு வகைப்படுத்திக்காட்டுகின்றனர்.
  • பிறப்புக்கு முன்னைய பருவம் - கருவுற்றது தொடக்கம் பிறப்பு வரை.
  • குழந்தைப் பருவம் - பிறப்பு தொடக்கம் இரண்டு வயது வரை.
  • ஆரம்பப் பிள்ளைப் பருவம் - 2 வயது முதல் 5 or 6 வயது வரை.
  • பின்னைய பிள்ளைப் பருவம் - 6 வயது முதல் 12 வயது வரை.
  • கட்டிளமைப் பருவம் - 12 வயது முதல் 20 வயது வரை.
  • வளர்ந்தோர் பருவம் - 21 வயதின் பின்னரான பருவம்.
இங்கு குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு கட்டங்களிலும் ஒரு பிள்ளையானது பல வகையான விருத்திகளை அடைந்து கொள்வதற்கான பக்குவத்தைப் பெறுகின்றது. முன்னைய கட்டமானது அதற்கடுத்த கட்டத்திற்கு ஆயத்தப்படுத்துவதுடன் அதனடிப்படையிலேயே அடுத்துவரும் கட்டமும் உருவாகின்றது. எனவேதான் பிள்ளைகள் திருப்திகரமான சிறந்த விருத்தியை அடைந்து கொள்ள வேண்டுமெனின் இவ்வொவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு தேவையான அறிவுகள், பயிற்சிகள், வழிகாட்டல்களை முறையாக பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

எனவேதான் இதற்கான சிறந்த சூழலை அமைத்துக் கொடுப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படைப் பொறுப்பாகும். பிள்ளைகளின் பொதுவான விருத்திக் கட்டங்களை சரியாகப் பெற்றோர் புரிந்து கொண்டால் அதற்கேற்ற தூண்டலை வழங்கி பிள்ளைகளை சிறந்த ஆளுமை மிக்கவர்களாக மாற்ற முடியும். அந்தவகையில், இவ் ஒவ்வொறு கட்டங்களிலும் பெற்றோர்கள் மற்றும் ஆசியர்கள் தமது பிள்ளைகளில் சிறந்த விருத்தியை ஏற்படுத்துவதற்கு பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம்.


பிறப்புக்கு முன்னைய பருவம்

ஒரு தாய் கர்ப்பம் தரித்தது முதல் சிசுவைப் பெற்றெடுக்கும் வரையிலான காலப்பகுதியை இது குறிக்கின்றது. இக்காலப்பகுதியில் கருவுற்றிருக்கும் ஒரு தாயின் உடல் நலம், போஷாக்கு நிலை, மனவெழுச்சிகள், மனப்பாங்குகள் என்பன கருவிலிருக்கும் சிசுவை பாதிக்கின்ற மிக முக்கிய காரணிகளாகக் காணப்படுகின்றன.

இந்தவகையில், சுகதேகியான ஒரு தாய்க்கு கிடைக்கும் குழந்தைகள் சுகதேகியாகக் காணப்படும். சயரோகம், ருபெல்லா, சிபிலிஸ், டிப்தீரியா போன்ற நோய்களால் பீடிக்கப்பட்ட மற்றும் போதைப் பொருள் பாவனையைக் கொண்ட தாயின் வயிற்றிலுள்ள குழந்தையானது, அதனால் பாதகான தாக்கத்துக்கு உள்ளாவதுடன், இது குழந்தையில் அதன் வாழ்நாள் முழுவதும் செல்வாக்குச் செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

கருவுற்றிருக்கும் ஒரு தாய் போதுமான போஷாக்குணவுகளை உற்கொள்ளாத சந்தர்ப்பத்தில், வயிற்றிலுள்ள குழந்தைக்கும் தேவையான போஷாக்குகள் கிடைக்காது போகின்றது. இதனால் குறித்த குழந்தையானது மந்த போசனம், உடல் வளர்ச்சி போதாமை போன்ற நோய்களுக்கு உட்படும்.

தாயின் குழப்பமான மனநிலை காரணமாக, குருதியோட்டத்தில் சுரக்கும் பதார்த்தங்கள் சூல்வித்தகம் மூலம் முதல் மூலவுருவிற்கு செல்வதால் பிறப்பு நிறை குறைவு, குழந்தையில் எரிச்சல் தன்மை, சீரண குறைபாடுகன் என்பன ஏற்பட வாய்ப்புகள் காணப்படுகின்றன.

எனவேதான், கர்ப்பிணியாகவுள்ள ஒரு தாய் போதைப் பொருள் பாவனையிலிருந்து முற்றாக தவிர்ந்து கொள்வேண்டும். நோய்கள் ஏற்படாதவாறு தம்மை பாதுகாத்துக் கொள்ளவதுடன், ஏதாவது நோய்களுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியரை அனுகி உரிய சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளவேண்டும். அத்துடன் குறிப்பிட்ட காலப்பகுதியில் குழந்தையின் விருத்திக்கு தேவையான போஷாக்கான உணவுகளை போதுமான அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அதேபோல், குறித்த தாயானவர் குறிப்பிட்ட காலப்பகுதியல் எவ்வித மன உளைச்சல், மிகுந்த கோபம் போன்ற மனவெழுச்சிகளுக்கும் உட்படாமலிருக்க வேண்டும். இவ்விடயத்தில் குடும்பத்திலுள்ள ஏனைய உறுப்பினர்களும் மிகவும் கவனமாக இருப்பதுடன், அக்கர்ப்பிணிக்கு அதிக வேலைகள் வழங்கள், தூற்றுதல், அவருடன் சண்டை பிடித்தல் போன்றவற்றிலிருந்தும் முற்றாக தவிர்ந்திருத்தல் வேண்டும்.

மேலும் இக்காலப்பகுதியில் குறித்த தாய் மனதை ஒரு நிலைப்படுத்தக் கூடிய வணக்க வழிபாடுகள், தியானம் போன்றவற்றில் ஈடுபடுதல், சந்தோசமான மனநிலையைக் கொண்டிருத்தல், கற்றல் கற்பித்தலில் ஈடுபடல் போன்றவற்றிலும் ஈடுபாடுகாட்டுதல் சாலச் சிறந்ததாகும். இவ்வாறான அம்சங்களைக் கடை பிடிப்பதன் மூலம் கருவிலுள்ள சிசுவின் விருத்திக்கு உதவ முடியும்.


குழந்தைப் பருவம்

இது ஒரு குழந்தை பிறந்தது முதல் 2 வயதை அடையும் வரைக்குமான காலப்பகுதியாகும்.குழந்தைகள் முதல் இரண்டு வருடங்களில் நிறையிலும் உயரத்திலும் விரைவாக அதிகரிக்கின்றனர். இது விரைவான உடல் இயக்க விருத்திக்கும் அடுத்த கட்ட விருத்தியானது சிறந்த முறையில் ஏற்படுவதற்கும் வழிவுகுக்கின்றது. அதேபோல் அறிவுசார் விருத்தியிலும் இப்பருமானது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இதனாலேயே பியாஜே இப்பருவத்தை புலனியக்க அறிவு வளரும் காலம் என குறிப்பிடுகிறார்.

எனவே குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பாலூட்டல், உரிய போஷாக்குமிக்க உணவுகளை வழங்குதல், போதுமான ஓய்வு கொடுத்தல், பாதுகாப்பளித்தல் போன்றன பற்றி பெற்றோர் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இவற்றுடன் குழந்தையின் அறிவு, உள-சமூக, மனவெழுச்சி வளர்ச்சி பற்றியும் அவதானமாக இருப்பது முக்கியமானதாகும். குழந்தையின் உள-சமூக மனவெழுச்சி வளர்ச்சிக் கட்டங்கள் சமனிலையாக விருத்தியுறும் போதே பிள்ளை சமநிலை மிக்க ஆளுமையாக வளர்ச்சியடையும். இந்தவகையில், பெற்றோர் இப்பருவத்தில் குழந்தையின் உள-சமூக, மனவெழுச்சி சார்ந்த விருத்தியை ஏற்படுத்துவதற்கு தூண்டல் மற்றும் உறவு பற்றிய தேவை ஆகிய இரு வழிகளைக் கையால முடியும்.

ந்தவகையில், பிறந்ததிலிருந்து குழந்தையோடு கதைத்தல், கொஞ்சி விளையாடல். முகத்தைப் பார்த்து சிரித்தல். குழந்தை சொல்வதற்கு முயற்சிக்கின்ற விடயத்துக்கு செவிமடுத்தல். அடுத்தவர்களோடு சேர்ந்து பழகுவதற்கு வாய்ப்பளித்தல். பிள்ளையிடம் அடிக்கடி கவனம் செலுத்தல் (புறக்கணிக்கப்படும் குழந்தைகள் வாழ்க்கையில் பிடிப்பின்றி வளரும்). குழந்தை ஒரு விடயத்தைச் செய்வதன் மூலம் தான் கற்றுக் கொள்கின்றது. அதனால் விளையாடுவதற்கும் ஆய்வு செய்வதற்கும் சுதந்திரமாக இடமளித்தல். முத்தமிடல், கட்டி அணைத்தல், ஸ்பரிசம் செய்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் குழந்தையிடம் அன்பை வெளிப்படுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு பெற்றோர் பொருத்தமான தூண்டல்களை உரிய வேளையில் வழங்கிக் கொண்டிருப்பதுடன், வயது விருத்திக்கேற்ற விருத்தியை பிள்ளை வெளிப்படுத்தாவிடின் அல்லது தாமதமாக வெளிப்படுத்தினால் பொருத்தமான தூண்டல்களைக் கொடுத்து அதனை சீர்செய்ய வேண்டும். உதாரணமாக குழந்தை வயதுக்கேற்ற சொற்களை, வாக்கியங்களை வெளிப்படுத்த வில்லையாயின் அல்லது தாமதமாக வெளிப்படுத்துவதாயின், குழந்தையோடு அடிக்கடி கதையுங்கள். பாடல்களைப் பாடுங்கள். இதனால் குழந்தை தூண்டப்படுகிறது. இவ்வாறு குழந்தையின் உள, சமூக விருத்தியானது பெற்றோரின் தூண்டலில்தான் தங்கியுள்ளது. தூண்டல் என்பது குழந்தையின் தேவையாகும். அது பூரணப்படுத்தப்படும் போதே சமநிலை கொண்ட ஆளுமையாக குழந்தை வளர்கிறது.


ஆரம்பப் பிள்ளைப் பருவம்

2 வயது முதல் 56 வயது வரையான காலப்பகுதியையே இப்பருவம் குறிக்கின்றது.பிள்ளைகளின் உடல் வளர்ச்சி இயக்க விருத்தி, அறிவு விருத்தி, மொழி விருத்தி மற்றும் பிள்ளைக்கும், சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு போன்றவற்றுக்கான முக்கிய பருவமாகும். இக்காலத்திலேயே அவன் தான் பிறந்த கலாச்சாரத்தின் பெறுமதி, நம்பிக்கைகள், விழுமியங்கள், அவனுடைய நடிப்பங்கு போன்ற பல விடயங்களையும் கற்றுக் கொள்கின்றான். ஒரு மனிதனின் வாழ்நாளில் விருத்தியடையக் கூடிய நுண்ணறிவு வளர்ச்சியில் 50மூ அவரது 3-4 வயதில்தான் விருத்தியடைகின்றது என்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன் (B.S. புளும் - 1964).

இப்பருவத்தில் பிள்ளைகளால் இயக்கச் செயற்பாடுகளை ஒன்றினைக்க முடிவதால், கை-கண் ஒன்றினைப்பு தேவைப்படும் விளையாட்டுக்களை விளையாட முடிகின்றது. மேலும், உண்ணுதல், உடுத்தல் போன்ற சுய பராமரிப்பு செயல்கள், முழு வசனமாகப் பேசும் திறன், சுயாதீனம், சுதந்திரம், குழு விளையாட்டில் ஈடுபடும் தகுதி போன்ற பல்வேறு தன்மைகளையும் விருத்தி செய்து கொள்கின்றனர்.

அறிவுசார் விருத்தியைப் பொருத்தளவில் இது தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவம் எணப்படுகின்றது. இப்பருவத்தின் இருதியில் எண்ணக்கருக்களை கிரகித்தல் முக்கிய பணியாக இருக்கின்றது. இதை இலகு படுத்துவதற்கு போதுமான அளவு பொருத்தமான அனுபவங்களை வழங்கவேண்டியது பெற்றோரதும், ஆசிரியர்களதும் பொறுப்பாகும்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இக்காலப்பகுதியல், குழு விளையாட்டுக்கள் மூலம் புதிய இயக்கத்திறன்களையும், அறிவுத்திறன்களையும், சமூக வகிபங்குகளையும் பயிற்சிப்பதற்கான போதிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதேபோல், சிறந்த ஒழுக்காற்று நுட்பங்களையும் கையாண்டு, பிள்ளைகள் விழுமியங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், மனசாட்சி விருத்தியை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவ வேண்டும்.

இப்பருவத்தில் பிள்ளைகளுக்கு கோபம், பயம், கலக்கம், பின்வாங்கல் போன்ற எதிர்மறையான மனவெழுச்சிகள் அடிக்கடி வெளிப்படக் கூடும் எனவே பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இவ்வாறான விடயங்களை சரியாக இனம்கண்டு இவற்றை இல்லாது செய்லதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் அவசியமாகும். இதற்கு பிள்ளைகளை மகிழ்சிப்படுத்தல், தைரியப் படுத்தல், ஊக்கப்படுத்தல், அமைதிப்படுத்ல் போன்ற வழிமுறைகளை கையாளலாம்.

மேலும் இப்பருவத்தில் பிள்ளைகள் பௌதீக ரீதியாகவும், மனவெழுச்சி ரீதியாகவும் பிறரில் அதிகளவு தங்கியருக்கும் நிலை காணப்படலாம். இது அவர்களின் ஆளுமை விருத்தியல் பாதகமான நிலையை ஏற்படுத்தும். எனவே பெற்றோர் பிள்ளைகளின் நடத்தயை கவனமாக அவதானித்து, அவர்கள் தமது திறமைகளுக்கேற்ப, தாமே ஆளுகை செய்வதற்கு இடமளித்து வழிகாட்ட வேண்டும். இதனால் பிள்ளைகள் சுயாதீனம் என்ற உணர்வு விருத்தி செய்யப்படுவதுடன், அவர்களது ஆளுமையும் உடன்பாடான விதத்தில் விருத்தியடையும்.


பின்னைய பிள்ளைப் பருவம்

ஒரு பிள்ளையின் 6 முதல் 12 வயது வரையான காலப்பகுதியை இது குறிக்கின்றது. இப்பருவகாலத்தின் 6 தொடக்கம் 9 வரையான காலப்பகுதியில் பிள்ளைகளின் பாற்பற்கள் விழுந்து புதிய பற்கள் முளைக்கின்றன. உடலின் எழும்புகள் விரைவாக வளர்ச்சியடைவுதடன் உடலின் அளவிலும், தோற்றத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. மூளையிலும் முதுகெழும்பிலும் கிரமமான அபிவிருத்தி ஏற்படுகின்றது. எனவேதான் பெற்றோர்கள் பிள்ளைகளின் பற்கள் பராமரிப்பு தொடர்பாகவும், அவர்களுக்கு தேவையான போஷாக்கான உணவுகளை பெற்றுக் கொடுப்பதிலும், பொருதத்தமான உடலியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இப்பருவத்தில் பிள்ளைகளின் உடற் சுரப்பிகள் வளர்ச்சியடைவதுடன் அவற்றின் தொழிற்பாடுகளும் அதிகரிக்கினறன. புலன்களின் வளர்ச்சியும் படிப்படியாக வேகமடையத் தொடங்குகின்றன. 6 வயதளவில் பார்க்கும், கேற்கும் சக்திகள் மிகத் துரிதமாக வளர்ச்சியடையும். எனினும் பல காரணங்களால் அவர்களின் பார்வைக், கேள்விக் குறைபாடுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. இவை பிள்ளையின் கல்விச் செயற்பாடுளை பலவீனமடையச் செய்யும். எனவேதான் இத்தகைய பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் மற்றும் ஆசியர்கள் மிகவும் விழிப்புடன் இருந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஒரு பிள்ளையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு செயற்பாடுகளும், ஓய்வும் சமப்படுத்தப்பட்தாக இருத்தல் அவசியமாகும். எனினும் இப்பருவத்திலுள்ள பிள்ளைகள் மிதமிஞ்சிய செயற்பாடுகளில் ஈடுபடக் கூடும். எனவே பிள்ளைகளின் செயற்பாடுகள் மற்றும் ஓய்வுகள் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தி அவற்றறை சமமான அளவில் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வழிகாட்டி உதவி செய்பவர்களாக பெற்றோர் இருக்க வேண்டும். ஆசியர்களும் இது தொடர்பான வழிகாட்டல்களை பிள்ளைகளுக்கு வழங்கி உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும்.

இது வீட்டிலிருந்து பாடசாலைக்கும், குறுகிய உலகிலிருந்து விசாலமாக உலகிற்கு நுழைவதற்கும், அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் முயலும் கட்டமாகும். ஆகவே அதை திருப்திகரமானத முறையில் நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையான பலத்தையும், உதவிகளையும் வழங்க வேண்டியது ஆசிரியர்களின் முக்கிய பொருப்பாகும்.

இப்பருவத்தில் பிள்ளைகள் சகபாடிகளுடன் அதிக நெருக்கத்தை விரும்புவதுடன், அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதிலும், பெற்றோரின் கட்டுப்பாட்டிலருந்து விலகி சுதந்திரமாக இருப்பதிலும் விருப்பம் கொள்வர். இதனால் சிலவேளை அவர்கள் கொட்ட நபர்களுடன் சேர்ந்து வழிகெட்டுப் போகவும், போதைப் பொருள் பாவனைகளில் ஈடுபடவும் வாய்ப்புக்கள் உள்ளது. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பாக இது விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமாகும். அதேபோல், ஆசிரியர்களும் இது தொடர்பான வழிகாட்டல்களை பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் வழங்கி உதவி செய்பவர்களாக காணப்பட வேண்டும்.


கட்டிளமைப் பருவம்

ஒருவரின் 12 வயதிலிருந்து 20 வயது வரைக்குமான காலப்பகுதியே கட்டிளமைப்பருவம் எனப்படுகிறது. இது ஒருவர் பிள்ளைப்பருவத்திலிருந்த முதிரவுப்பருத்திற்கு மாறுகின்ற பருவமாகும். இப்பருவமானது உடல், நுண்ணறிவு, சமுதாய அறிவு போன்றவை உச்ச அளவில் விருத்தியடைகின்ற பருமாகக் காணப்படுகின்றது.

இப்பருவத்தின் ஆரம்பகாலத்தில் நுண்ணறிவு வளர்ச்சியானது துரிதமாக நிகழ்கின்றது. இதன் வளர்ச்சிக்குப் பொருத்தமாகக் கிடைக்கப் பெறும் தூண்டல்களின் பண்புகளுக்கும் அளவுக்கும் ஏற்ப கட்டிளமைப்பருவத்தினரின் நுண்ணறிவுத்திறன் விருத்தியடைகின்றது. எனவே இதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்க வேண்டியது விஷேடமாக ஆசியர்களதும் மற்றும் பெற்றோர்களதும் பொறுப்பாகும்.

மீசை முளைத்தல், குரலில் மாற்றம் ஏற்படல், துரித உடல் வளர்ச்சி, பாலியல் இயல்புகள் தோன்றுதல், தசைகள் வளர்ச்சியடைதல் போன்ற உடலியல் ரீதியான வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் ஏற்படுவதும் இப்பருவத்தின் இன்னுமொரு முக்கிய அம்சமாகும். எனவே பாலியல் ரீதியான பொருத்தமான அறிவுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கள், பொருத்தமான விளையாட்டுக்கள் உடற் பராமரிப்பு மற்றும் உடற் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான தூண்டதல்கள், வழிகாட்டல்களை வழங்கள், ஒழுக்க நெறிகளை போதித்தல் போன்ற வழிகாட்டல்களை இவர்களுக்கு பெற்றுக் கொடுக்க ஆசியர்களும், பெற்றோரும் முன்வரவேண்டும்.

சமவயதினரின் பழக்கவழக்கங்களும் கருத்துக்களும் கட்டிளமைப்பருவத்தினர மீது அதிகமாக செல்வாக்கு செலுத்துகின்றன. அவர்களுடன் பழகுவதையும், சமநிலையில் கணிக்கப்படுவதையும் விரும்புவர். இதனால் சிலவேளை, அவர்களுடன் இணைந்து புகைத்தல், போதைப் பொருள் பாவனை, ஒழுக்கக் கேடான விடயங்களில் ஈடுபடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இப்பருவத்தினர் தொடர்பாக மிக கவணிப்புடன் இருப்பதுடன், குறித்த விடயம் தொடர்பாக அவர்களுக்கு எச்சரிக்கை செய்பவர்களாகவும், ஆலோசனைகள் வழங்கக் கூடியவர்களாகவும், வழிகாட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

கட்டிளமைப் பருவத்தினர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் பல காரணிகள் அவர்களிடையே மனக்கலக்கத்தையும் சிக்கலான நிலைகளையும் தோற்றுவிக்கின்றன. அவற்றில் காதல், சமயம், குடும்பத் தொடர்பு, கற்றல்கள், தொழில் பற்றிய பிரச்சினை, எதிர்காலத் திட்டங்கள், திருமணம் தொடர்பான கருத்துக்கள் போன்றவை மிக முக்கியமானவைகளாகும். இவை தொடர்பான சிக்கல்கள் மற்றும் மோதல்களை தீர்ப்பதற்கு அவர்களுக்கு சிறந்த கற்பித்தல் முறைகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கள். அன்பு காட்டல், கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் ஆசிரியர்கள் மற்றும் பொற்றோர்களால் அவர்களுக்கு உதவ முடியும்.


வளர்ந்தோர் பருவம் (21 வயதின் பின்னரான பருவம்)

இப்பருவமானது ஒருவர் தனது செயற்பாடுகள், தேவைகள், விருப்புகள் போன்ற சகல வற்றையும் தாமே சுயமாக தீர்மானித்து செயல்படக் கூடிய பருவமாகும். எனினும் அனுபவ ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் இவர்களை விடவும் சிறந்தவர்களாகக் காணப்படும் பெற்றோர் மற்றும் ஆசியர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் அவர்களால் மிகச் சரியான தீர்மாணங்களுக்கு வருவது இலகுவாகின்றது. மேலும் இதன் மூலம் அவர்களால் தங்களது ஆளுமையையும் விருத்தி செய்து கொள்ள முடியும்.

ஒருவர் சுய விருப்பத்துடன் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முன்வரும் தருணம் அவ்வணுபவங்களை வழங்க மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாகும். ஏதாவது ஒரு விடயத்தை கற்பிக்க முன் பிள்ளைகள் அதற்கு ஆயத்தமாக இருக்கின்றனவா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனின் அதற்கான முதிர்ச்சியை அடையும் வரை கற்பிததல்களையும் பயிற்சிகளையும் தாமதப்படுத்த வேண்டும். மேலுமம், காலங்கடந்து வழங்கப்படும் பயிற்சிகள் பிள்ளையின் விருத்தியில் பின்னடைவை ஏற்படத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவேதான் இவ்வொவ்வொரு பருவத்திலும் தமது பிள்ளைகள் தொடர்பாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிக அவதானமாக இருந்து, பொருதத்தமான பயிற்சிகள், அறிவுகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை பொருத்தமான நேரத்தில் வழங்குவதன் மூலம் அவர்களை சிறநந்த ஆளுமைமிக்கவர்களாக மாற்ற முடியும்.




         M.S.M. Naseem - MA, BA (Hons), PGDE (R)

5 comments:

  1. நன்றி பிள்ளைகளின் பருவ மாற்றம் தொடர்பான ஆக்கங்களை தேடிக் கொண்டிருந்தேன் எதிர்பாராத விதமாக கிடைத்தது நன்றி

    ReplyDelete
  2. Havighurst இன் அபிவிருத்தி இலக்கு சார் கோட்பாடு பற்றி போடவும்

    ReplyDelete
  3. ஹெவிக்கர்டஸ்

    ReplyDelete
  4. Good morning sir, அறிகைச் செயன்முறையியின் மூலம் பிள்ளைகள் கற்றவை மறவாமல் இருக்க பயன்படும் வழிகள் பற்றிய தகவல்களை பதிவிட முடியுமா?

    ReplyDelete
  5. Very useful information for my studies Thankyou sir

    ReplyDelete