.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, July 15, 2019

சிறந்த ஆசிரியர் ஒருவரிடம் காணப்படவேண்டிய வகிபாகங்கள்


கல்வியானது மனிதவள மேம்பாட்டிற்கும் மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. கல்வியில் ஏற்படும் முன்னேற்றமானது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டின் வளமான எதிர்காலம் அந்நாட்டில் அளிக்கப்படும் கல்வியிலேயே தங்கியுள்ளது. எனவே இக்கல்வியை மாணவர்களுக்கு வழங்குகின்ற ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்புக்களும் கடமைகளும் காணப்படுகின்றன.

ஆசிரியரானவர் மாணவரின் அறநெறிப் பண்புகளுடன் ஆளுமையை வளர்த்து, அவனிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை கண்டுபிடித்து, அதனை வெளிப்படுத்தி முழுமையான வளர்ச்சிக்கு வழிகாட்டுபவராகவும் சமுதாயம் முன்னேற அதனை வடிவமைக்கக் கூடியவராகவும் காணப்பட வேண்டும். இதற்கு அவர்கள் சிறந்த ஆசிரியர்களாக திகழ்ந்து, கற்பித்தல் திறத்தாலும் மாணவர்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டு, சிறந்த நண்பனாக, நல் வழி காட்டியாக திகழ வேண்டும். அத்தோடு, பெற்றோரை விட ஆசிரியர்கள் மாணவனின் உளவியலை நன்கு அறிந்து தன் ஆசிரியர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற திட்ட வட்டமான கருத்து மாணவர் மனத்திரையில் பதிந்து ஒளிர வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் ஒவ்வொருவரும்  பல விடயங்களை அறிந்து அவற்றை நடைமுறைப்படுத்துபவராகக் காணப்பட வேண்டும். 

இந்தவகையில் சிறந்த ஆசிரியர் என்ற வகையில் அவர் பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தி செயற்பட வேண்டியது அவசியமாகும்.

1. சிறந்த கற்றல்-கற்பித்தல் செற்பாட்டை வடிவமைத்து முன்னெடுப்பவராகவும் அதனை முகாமை செய்பவராகவும் இருத்தல்

ஆசிரியரானவர் கல்வியின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை தெளிவாக அறிந்து, விளங்கியிருப்பதுடன் கலைத்திட்ட உள்ளடக்கத்தை தீர்மானித்துக் கொள்வதற்கு - எத்தகைய விடயங்கள் எந்த அளவில் தேவை என்பதனையும் முதலில் அறிந்திருக்கவேண்டும். அத்துடன் பிள்ளையின் ஆர்வம், தேவைகள், விருப்பங்கள் எவை மற்றும் கற்றல்-கற்பித்தலில் தான் கையாள வேண்டிய முறைகள் மற்றும் வழிகள் தொடர்பாகவும் அறிந்து அதனடிப்படையில் சிறந்த கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க கூடியவராக இருத்தல் வேண்டும்.

கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் அதனை முகாமை செய்பவராக ஆசிரியர் காணப்பட வேண்டியதும் அவசியமாகும். சிறந்த கற்றல்-கற்பித்தல் சூழ்நிலையை ஆசிரியர் உருவாக்குவதோடு திட்டமிடல் ஒழுங்கமைத்தல், செயற்படுத்தல், கட்டுப்படுத்தல் ஆகிய விடயங்களை நடைமுறைப்படுத்துபவராகவும் அவர் இருக்க வேண்டும். அத்துடன் ஆசிரியர் தான் கற்பிக்கின்ற போது வினைத்திறனான கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளுக்கு வழிவகுக்கின்ற கடத்தல்(Transmission), கொடுக்கல் வாங்கல்(Transection), நிலைமாறல்(Transformation) போன்ற முறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. ஆலோசகராகச் செயற்படல்

மாணவர்களை எதிர்காலத் தலைவர்களாகவும் நற்பிரஜைகளாகவும் சிறந்த கல்விமான்களாகவும் உருவாக்கும் பாரிய பொறுப்பு ஆசிரியரிடம் உள்ளது. எனவே தேவையான அளவு மாணவர்களுக்கு உடல், அறிவுத், மனப்பாங்கு, ஒழுக்க ரீதியான திறன்களை வழங்கவும், சமயப் பண்புகளைப் பின்பற்றச் செய்வதற்கும் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கி அவர்களுக்கு உதவுகின்ற ஒரு ஆலோசகராகவும் ஆசிரியரானவர் காணப்பட வேண்டும்.

3. குணவியல்புகளை கட்டியெழுப்பக் கூடியவராக இருத்தல்

மாணவர்களின் ஒழுக்க விருத்தியில் பாடசாலைக்கு பெரும் பங்குள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஆசிரியருக்குண்டு. ஆசிரியர் சுய ஒழுக்கமும் முன்மாதிரியான நடத்தையும் உடையவராக இருப்பதோடு கருணை உள்ளம் கொண்டவராகவும், இனிமையாக பேசக் கூடியவராகவும் இருக்க வேண்டும். மேலும் இப்பண்புகளை தானும் பின்பற்றுவதோடு மாணவரையும் பின்பற்றச் செய்கின்ற குணவியல்புகளை கட்டியெழுப்பும் பொறுப்பையும் ஆசிரியர் வகிக்கின்றார். இதன் மூலம் மாணவர்களிடம் சிறந்த ஒழுக்க, மனப்பாங்கு விருத்திகளை ஏற்படுத்த அவரால் முடியுமாக இருக்கும்.

4. சமூகத்தைக் கட்டியெழுப்பக் கூடியவராக இருத்தல்

சமூகத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்புதல் ஆசிரியரின் மிக முக்கிய பொறுப்பாகும். சமூகச் சீரழிவுகளையும் சமூகத்தின் தடைகளையும் நீக்குவதற்கு கல்வியைப் பயன்படுத்த வேண்டும். அத்துடன், சமூகத்தின் உயர்வான ஒழுக்க நெறிகள் மற்றும் சமூக அபிவிருத்தி என்பவற்றில் தன்னை ஈடுபடுத்தும் ஒரு சமூக பொறியலாளார் வகிபாகத்தை வகிக்கக் கூடியவராகவும் ஆசிரியரானவர் வகிக்க வேண்டும்.

5. தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்களிப்புச் செய்பவராக இருத்தல்

பல்லின சமய மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் நாட்டுப்பற்றை வளர்த்து நாட்டை நேசிக்கின்ற, மதிக்கின்ற மாணவர் சமுகத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியருக்குள்ளது. எனவே நாட்டின் வரலாறுகள் தொடர்பான விளக்கத்தை வழங்குகின்ற, பொதுநலத்தைத் தூண்டும் பண்புகள் மற்றும் நாட்டின் வளங்களை பாதுகாக்கும் பண்புகளை மாணவர்களிடம் ஏற்படுத்துகின்ற  பண்புள்ளம் கொண்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆற்றல் உள்ளவராகவும் ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.

6. முகாமைத்துவ வகிபாகத்தை உடையவராக இருத்தல்

ஆசிரியர் பாடசாலை ஒழுங்கமைப்பை திறன்பட கட்டியெழுப்புவற்கு வளங்களை வினைத்திறனாக பயன்படுத்த வேண்டும். அத்துடன் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், செயற்படுத்தல் கட்டுப்படுத்தல் மதிப்பிடல் ஆகிய விடயங்களை செயற்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். இந்த முகாமைத்துவப் பாத்திரத்தை வகிக்கும் ஆசிரியரானவர் பிறரை பயன்டுத்தி மற்றவர்களுடன் இணைந்து வேலையில் ஈடுபடுவதோடு வரைறுக்கப்பட்ட வளங்களிலிருந்து உச்சப் பயனைப் பெறுகின்ற முகாமைத்துவ வகிபாகத்தையும் வகிக்கக் கூடியவராகவும் வகுப்பறைச் சூழலை சிறந்த முறையில் வடிவமைக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

7. சூழற் பாதுகாவலராக செயற்படல்

பாரம்பரிய ஆசிரியர் வகிபாகத்திலிருந்து விடுபட்டு தற்கால நவீன உலகம் எதிர்நோக்குகின்ற சூழலியல் பிரச்சினைகள் தொர்பான சவால்களை எதிர்கொள்கின்ற ஒரு மாணவர் சமூகத்தை உருவாக்குகின்ற பொறுப்பு ஆசிரியருக்குள்ளது. சூழற்பாதுகாப்பு, அயற் சூழலை சுத்தமாக வைத்திருத்தல், சூழல்மாசடைதலை தவிர்த்தல், இயற்கையை நேசித்தல், பாதுகாத்தல் போன்ற பண்புகளை தானும் பின்பற்றி மாணவர்களையும் பின்பற்றச் செய்கின்ற சூழல் பாதுகாவலராகவும் ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.

8. கணிப்பிடுனராக இருத்தல்

மாணவர்கள் பாடக் குறிக்கோளை அடையும் வகையில் கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொண்டு கணிப்பீடு செய்யும் போது மாணவர்களின் அடைவு மட்டத்தை அறிந்து கொள்ள முடியும். கணிப்பீட்டுச் செயற்பாட்டின் போது மாணவரின் பலம், பலவீனங்களை அறியும் திறன் உடையவராக ஆசிரியர் காணப்படுகிறார். 

கணிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் தனியான மாணவர் மேம்பாட்டுக்கு வழிகாட்டுபவராக ஆசிரியர் திகழ்கின்றார். அத்துடன் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மீளாய்வு செய்து மேம்படுத்தும் மனப்பாங்குடையவராக ஆசிரியர் காணப்படுகின்றார். மாணவரின் கற்றலில் ஆசிரியரின் கணிப்பிடுனர் வகிபாகம் முக்கியத்துவமாக காணப்படுகின்றது. எனவே ஒவ்வொரு ஆசிரியரும் தமது வகிபாகங்ளை அறிந்து செயற்படுவதோடு பாடசாலை அதிபர்களும் இவற்றை அறிந்து பாசாலையின் உயர்ச்சிக்கு ஆசிரியர்ளை சிறப்பாக பயன்டுத்த வேண்டும்.

9. ஆய்வாளராக செயற்படல்

ஆசிரியரானவர் தான் கற்பிற்கும் போது மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு, அதை ஆய்வு செய்து, தகவல்களைத் திரட்டி பகுப்பாய்வு செய்து அறிக்கைப்படுத்த வேண்டும். எனவே பிரச்சினைகளிலிருந்து மாணவர்களை விடுவிப்பதற்கும் அவர்களை முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவதற்கும் உதவி செய்யும் வகையில்  ஆய்வுகளை மேற்கொள்கின்ற ஒரு ஆய்வாளராகவும் ஆசிரியர் செயற்பட வேண்டும்.

10. சுய மதிப்பிடுனராக இருத்தல்

ஆசிரியர் தன்னைப்பற்றிய விளக்கத்தைப் பெறுகின்ற வகையில் அவ்வப்போது தனது நடத்தைகள்,  ஆளுமைகள், அறிவு நிலை, மாணவர்களுடனான இடைத்தொடர்பு, மாணவர்களின் பின்பற்றல்,  போன்ற பல விடயங்கள் தொடர்பாக தன்னை சுய மதிப்பீட்டுக்கு உட்படுத்தக் கூடியவராகவும் காணப்பட வேண்டும். இதன் மூலம் தனது குறை-நிறைகளை அறிந்து கொள்ளவும், குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும், தனது ஆளுமைகளை விருத்தி செய்து கொள்ளவும், மாணவர்கள் அவர் தொடர்பாக நல்லென்னங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் வழியேற்படுகின்றது.

எனவேதான் ஆசிரியர்கள் என்றவகையில் அவர்களின் வகிபாங்களை சரியாக அறிந்து, மாணவர்களை சகல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றுவதற்கு தேவையான முன்னெடுப்புக்களையும் உதவிகளையும் செய்பவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். அத்துடன், மாணவர்கள் தொடர்பாகவும் அறிந்து அவர்களை சிறந்த முறையில் கையாளக் கூடியவர்களாகவும் காணப்பட வேண்டும்.

By : M.S.M. Naseem    
          MA, BA(Hons), PGDE(R)




6 comments: