.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, April 11, 2019

கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறனாக அமைய ஆசிரியர் ஆற்ற வேண்டிய வகிபாகங்கள்

கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் ஆசிரியர்கள் பொதுவாக மூன்று வகையான வகிபாகங்களை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். அவை அறிவைக் கடத்தல் வகிபாகம் (Transmission role) கொடுக்கல் வாங்கல் வகிபாகம் (Transaction role) நிலைமாற்ற வகிபாகம் (Transformation role) என்பனவாகும்.

அறிவைக் கடத்தும் வகிபாகத்தில் ஆசிரியர் கற்பிக்கப்பட வேண்டிய விடயங்கள் அனைத்தையும் மாணவர்களுக்கு கடத்தும் ஒருவராக காணப்படுகின்றார். இம்முறையில் ஆசிரியர் விரிவுரையாளர் போலத் தொழிற்படுவதோடு மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்கோ, மாணவர்களின் தனியாள் திறன்கள், சமூகத்திறன்களை விருத்தி செய்வதற்கோ செய்யும் பங்களிப்பு போதுமானதல்ல. இங்கு ஆசிரியர் தகவல்களைக் கடத்தும் ஒருவழித் தொடர்பு மட்டுமே காணப்படும். கொடுக்கல்-வாங்கள் வகிபாகத்தைப் பொருத்தமட்டில் அது கடத்தல் வகிபாகத்தைவிட ஓரளவு சிறப்பானதாக காணப்படுகின்ற போதும் பூரண திருப்திகரமாக கற்றல் முறையாக காணப்படவில்லை.

இதனால் ஆசிரியர் வகிபாகமானது கடத்தல் மற்றும் பரிமாற்ற வகிபாகம் ஆகிய இரண்டையும் தாண்டி தற்காலத்துக்குப் பொருத்தமான வகையில் நிலைமாற்ற வகிபாகத்துக்குச் (Transformation Role) செல்ல வேண்டியேற்பட்டுள்ளது. இங்கு ஆசிரியரானவர் கற்றலுக்கு வசதிசெய்து கொடுப்பவராக காணப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்தவகையில் ஆசிரியரானவர் கற்றலுக்கு வசதிசெய்து கொடுப்பவர் என்றவகையில் பல வகிபாகங்களை நிறைவேற்ற வேண்டியவராகக் காணப்படுகின்றார். அவற்றில் பிரதானமானவைகளாக பின்வரும் வகிபாகங்களை எடுத்துக்காட்லாம்.


1. கற்றலைத் திட்டமிடல்

ஆசிரியர் மாணவர்களின் கற்றல் விளைவுகளை தீர்மானித்துக் கொள்வதன் மூலம், பாட அலகின் எல்லையும் தனித்தனியான பாடக்குறிப்பையும் திட்டமிட முடிகின்றது. அதனூடாக மாணவனைச் சுயமாக கற்றலில் ஈடுபடுத்தக் கூடியவகையில் பாடக்குறிப்பைத் தயாரித்து கற்றல் சூழலை தயார்படுத்தல், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களில் அடங்கியுள்ள பொருத்தமான பாடப்பகுதிகளை அறிந்துகொள்ளல் ஆகியன முக்கியமான பணிகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். வகுப்பறைக் கற்பித்தலின்போது ஆசிரியரது பணியின் பேறுகளை அளக்கும் பிரமாணங்களாக இப்பணிகளைக் குறிப்பிடலாம்.

கற்றலுக்கு வசதி செய்து கொடுப்பவர் என்ற வகையில் வகுப்பறைச் செயன்முறையை வடிவமைக்கின்ற காரணிகளான தன்மை உறுதிப்படுத்திக் கொள்ளல், தனியாள் விளக்கம், உயிர்ப்பான கற்றல், கூட்டுறவுக் கற்றல், வலுவூட்டல் போன்றவற்றை ஆசிரியர் கவனத்தில் கொண்டு செயற்படுதல் அவசியமாகும்.

அதேபோல், மாணவர்களது உள்ளார்ந்த ஆற்றல்கள், பாடம் தொடர்பான முன்னாயத்தம், அவர்களது கடந்தகால அனுபவங்களை பாடத்துடன் தொடர்பபடுத்தல், மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டக்கூடிய ஊக்குவிக்கக்கூடிய பாடவிடயத்தை தெரிவு செய்து ஓழுங்குபடுத்தல், பொருத்தமான கற்றல் சாதனங்களையும் முறைகளையும் தெரிவு செய்தல் போன்ற விடயங்களிலும் கவனம் செலுத்தவேண்டும்.

அத்துடன் மாணவர்களது கவர்ச்சிகள், இடர்பாடுகள், தேவைகள், பிரசினங்கள் பற்றி அறிந்து, மாணவர்களது தனியாள் வேறுபாடுகட்கு வாய்ப்பளிக்க் கூடிய வகையிலும் வௌ;வேறு திறன்களைக்கொண்ட எல்லா மாணவர்களுக்கும் பொருந்தக்கூடிய வகையிலும் பாடக்குறிப்பைத் தயாரித்துக் கொள்ளல் வேண்டும். பின்னர் மாணவர்கள் செயல் ரீதியில் பங்குகொள்வதற்கேற்ற வகையில் சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் ஆசிரியரால் சிறந்த பாடத்திட்டமிடலை மேற்கொள்ளவும், கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவும் முடியுமாகின்றது. இது சிறந்த கற்றல்-கற்பித்தலுக்கு வழிசமைக்கக் கூடியதாக அமையும்.


2. மாணவர்களை ஊக்குவித்தல்

மாணவர்கள் ஊக்கப்படும் அளவுக்கேற்ப கற்றல் பயனுறுதியுடையதாக அமையும். ஒவ்வொரு பிள்ளையினதும் ஆளுமைக் கோலம், சமூக, பொருளாதாரப் பின்னனிகள் போன்றவற்றுக்கமைய அவர்களின் சிறப்பான தேவைகளும் மாற்றமடைகின்றது. எனவே அவர்களை ஊக்குவிப்பதற்காகக் கையாளும் உத்திகளை விவேகத்துடன் மாற்றியமைத்து கொள்ளக்கூடிய திறனை ஆசிரியர் கொண்டிருத்தல் வேண்டும்.

கற்றலுக்கு வசதி செய்து கொடுப்பவர் என்ற வகையில் மாணவர்களை ஊக்குவிப்பதற்கு பின்வரும் உத்திகளை கையாள முடியும்.

* மாணவர்களின் இயல்பான எழுச்சிகளைத் தூண்டுதல் - புதுமை, நாட்டம், ஆக்கம், சுய வெளிப்பாடு போன்றவை பிள்ளைகளை செயற்பட தூண்டும் காரணிகளாகும். எனவே அவர்களை தூண்டுவதற்காக விளையாட்டுக்கள், நடிப்பு, ஆக்கம் போன்ற பல செயற்பாடுகளில் ஈடுபடுபவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

* ஆசிரியரின் நடத்தைப் பல்வகைமை - கற்றல்-கற்பித்தலில் வினைத்திறனை அதிகரிக்கக் கூடிய ஒரு முக்கிய காரணியாக இது காணப்படுகின்றது. அந்தவகையில் ஆசிரியர் தனது மெய்ந்நிலைகளையும் பேச்சுப் பாணியையும் மாற்றுதல், அபிநயங்கள் செய்து காட்டல்.

* மாணவர்களை பாராட்டுதல் - மாணவர்கள் சிறந்த செயல்களை அல்லது திறமைகளை வெளிப்படுத்துகின்றபோது அவர்களையும், ஏனைய மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டுதல் மற்றும் பரிசு வழங்குதல் போன்றவற்றில் ஆசிரியர் ஈடுபாடு காட்டக்கூடியவராக இருக்கவேண்டும். இதற்கு அவர் சொல் சார்ந்த அல்லது சொல் சாராத பாராட்டுக்களையும், பொருள் சார்ந்த அல்லது குறியீடு சார்ந்த பரிசுகளையும் பயன்படுத்த முடியும்.

* அடையக்கூடிய இலக்குகளை முன்வைத்தல் - எல்லாப்பாடங்களிலும் மாணவர்கள் அடையக் கூடிய நோக்கங்கள் காணப்பட வேண்டும். குறிப்பிட்ட நோக்கங்களை இலகுவாக அடையும் வகையில் இலக்குகளை அமைத்து அவற்றை அடையச் செய்ய ஊக்குவிப்பது ஆசிரியர்களின் கடமையாகும்.

* போட்டியையும் ஒத்தழைப்பையும் ஏற்படுத்தல் - மாணவர்களை குழுக்களாகப் பிரித்து போட்டியையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்தி கற்றலை ஊக்குவிக்கின்ற பணியையும் ஆசிரியர்கள் முன்னெடுக்கக் கூடியவர்களாக காணப்படவேண்டும். இதனால் மாணவர்கள் வெற்றியையும் தோல்வியையும் பகிர்ந்து கொள்ளவும், கணிப்பைப் பெற்றுக் கொள்ளவும் மற்றும் கற்றலை உளத்திருப்தியுடன் மேற்கொள்ளவும் வழிபிறக்கின்றது.

* கற்பித்தலில் புதுமையை புகுத்தல், செயல் ரிதியில் தொடர்பு கொள்ளச் செய்தல் மற்றும் கற்றல்-கற்பித்தலில் சாதனங்களைப் பயன்படுத்தல்.

இவ்வாறு இது போன்ற வழிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தி கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனாக அமைத்துக் கொள்வதற்கு ஆசிரியர்கள் பங்களிப்புச் செய்பவர்களாக காணப்பட வேண்டும்.


3. கற்பித்தலுக்காக பல்வேறு மாணவர் மைய முறைகளைக் கையாளல்

கற்றலில் விருப்பத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதற்கும் பயனுறுதியுடைய வகையில் செயற்படுவதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் கற்றல்-கற்பித்தல் செயன்முறையின்போது ஆசிரியர் கற்பித்தற் முறைகளைக் கையாளுதல் வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாணவர் பொருத்தமான நிபந்தனைகளின் கீழ் விருப்பத்துடன் கற்கக் கூடியவரகளாகக் காணப்படுவர். இதற்காக ஆசிரியர் மாணவர் மைய கற்றல்-கற்பித்தல் முறைகளாக காணப்படுகின்ற செயற்திட்ட முறை, கண்டறி முறை, கலந்துரையாடல் முறை, பிரச்சினை தீர்த்தல் முறை ஆகியவற்றை பயன்படுத்த முடியும்.

ஆசிரியர் கற்பித்தல் முறைகளை கையாளுகின்ற போது மாணவர்கள் சுய முயற்சியோடு சுயாதீனமாக செயற்பட்டு அறிவைப் பெற்றுக்கொள்ள வழிசெய்பவராக காணப்படவேண்டும். சாதாரண மட்ட, மீத்திறன் கூடிய மற்றும் பின்தங்கிய என அனைத்து மட்ட மாணவர்களையும் கவனத்தில் கொண்டு பொருத்தமான கற்றல்-கற்பித்தல் முறைகளை பயன்படுத்தவேண்டும்.


4. வெவ்வேறு கட்புல-செவிப்புல சாதனங்களைப் பயன்படுத்தல்

கட்புல-செவிப்புல சாதனங்கள் தனியாளுக்கும் குழுவுக்கும் இடையேயான கருத்துப்பரிமாற்றத்தை எளிது படுத்ததுகின்ற மற்றும் கற்றலை தூண்டுகின்ற பல்லூடக தொடர்பாடல் பொருள்களாகக் காணப்படுகின்றன. பல ஆய்வு முடிவுகளின் படி கேட்டல் மற்றும் பார்த்தலினூடாகவே மாணவர்கள் அதிகமான விடயங்களை கற்றுக்கொள்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த அடிப்படையில் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் கட்புல-செவிப்புல சாதனங்களை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ள ஒன்றாகக் காணப்படுகின்றது.

கற்றலுக்கு வசதி செய்துகொடுப்பவர் என்றவகையில், ஆசிரியர் பயனுறுதிமிக்க கவர்ச்சிகரமான கற்றல் சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கு பல்வேறு வகையான கட்புல-செவிப்புல சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். பார்த்தல், செவிமடுத்தல், தொடுதல், சுவைத்தல் போன்றவற்றின் மூலம் இயற்கையான நேரடி அனுபவங்களை உரிய வகையில் எளிதாக மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை ஆசிரியர் உருவாக்கிக் கொடுத்தல் வேண்டும்.

அத்துடன் கற்றலின் வௌ;வேறு சந்தரப்பங்களுக்கு பொருத்தமானவாறு வௌ;வேறு விதமான பல்வகைப்பட்ட கட்புல-செவிப்புல சாதனங்களை மாணவர்கள் தாமாகக் கையாளக் கூடிய வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்தலும் முக்கியமானதாகும். எடுத்துக்காட்டாக கல்விச் சுற்றுலாக்கள், காணொளிக் காட்சிகள், சினிமாக் காட்சிகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இவ்வாறு கற்றல் செயன்முறையில் அடங்கும் ஊக்கல், தெளிவுபடுத்திக் கொள்ளல், தூண்டல் ஆகிய 3 அம்சங்களையும் நிறைவேற்றுதற்கு ஆசிரியர் முடியுமானவரை பல்வகைப்பட்ட கட்புல-செவிப்புல சாதனங்களை பயன்படுத்துவது அவசியமாகும்.


5. செயன் முறையை மதிப்பிடல்

கற்றலுக்கு வசதி செய்து கொடுப்பவர் என்றவகையில் வகுப்பறைக் கற்றல்-கற்பித்தல் செயன்முறை எதிர்பர்க்கப்ட்ட விதத்தில் வெற்றிகரமாக நடைபெறுகின்றதா என தொடர்ந்து தேடிப்பார்ப்பது ஆசிரியரது பிரதான கடைமையாகும். இதற்காக கற்பித்தல் செய்கையினுள் இடம்பெறுவதற்கு திட்மிட்ட கணிப்பீட்டையும் (யுளளநளளஅநவெ)இ கணிப்பீட்டோடு சார்ந்த மதீப்பீட்டையும் (நுஎயடரஎயவழைn) நிகழ்த்துவதற்கு அவசியமாகும். இவ்வாறு மதிப்பீட்டை மேற்கொள்கின்ற போது பின்வரும் பணிகளை ஆசிரியர் ஆற்ற வேண்டும்.

* தீர்மாணிக்கப்பட்ட கற்பித்தல் நோக்கங்களின் பொருத்தப்பாடடை மதிப்பிடல்.

* குறித்த விடய உள்ளடக்கத்தை மீண்டும் கற்பிப்பதா அல்லது தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா என்பதை தீர்மாணித்தல்.

* கற்பித்தல் முறை மற்றும் கற்றல்-கற்பித்தல் துணைச்சாதனங்களின் பொருத்தப்பாட்டை மதிப்பிடல்.

* வழங்கப்பட்ட கற்றல்-கற்பித்தல் அனுபவங்கள் எந்தளவுக்கு பயனுறுதி உடையனவாக அமைந்தன என மதிப்பிடல்.

இதன் மூலம் கற்றல்-கற்பித்தல் செயற்பாடு மூலம் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை மாணவர்கள் அடைந்துள்ளார்களா என்பதனை அறிந்து கொள்ள முடிவதுடன் பொருத்தமான பின்னுட்ல்களையும் வழங்க முடியுமாக இருக்கும்.


தொகுத்து நோக்குகின்றபோது, இங்கு ஆசிரியர் வகிபாகமானது ஆசிரிய மையத்திலிருந்து பிள்ளை மையத்திற்கு இட்டுச் செல்லப்படுகிறது. வகுப்பிலுள்ள ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது அண்மிய தேர்ச்சிமட்டங்களையாவது பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவகையில் ஆசிரியர் ஒரு வளவாளராக (Resource Person) ஆக மாறுகிறார். கற்றலுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் வசதிகள் கொண்ட சூழல் ஒன்றைத் திட்டமிடுதல், மாணவர் கற்கும் விதத்தை அருகில் இருந்து அவதானித்தல், மாணவரது இயலுமை இயலாமை என்பவற்றை இனங்காணுதல், தேவையான முன்னூட்டல், பின்னூட்டல் என்பவற்றை வழங்கல் மூலம் கற்றலை விருத்தி செய்தல், வகுப்பறைக்கு வெளியிலும் மாணவர்கள் கற்பதை தூண்டல், கற்றல் உபகரணங்களை திட்டமிடுதல் ஆகியவை ஆசிரியரின் அடிப்படை கடமையாக காணப்படுகின்றது.

அத்துடன் தேர்ச்சியை அடிப்படையாக கொண்டு பல்வழித் தொடர்புகள் மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது. ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றார். இதன் போது ஆசிரியர்-மாணவர், மாணவர்-ஆசிரியர்களுக்கிடையில் கருத்துக்கள் பரிமாற்றப்படுகிறது. அதை தொடர்ந்து மாணவர்-மாணவர் இடைத்தொடர்பும், ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கிடையிலும் கருத்துப்பரிமாற்றல் நடைபெற்று அது தர்க்கரீதியான கலந்துரையாடலாக மாறுகிறது. தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும், எளிதிலிருந்து சிக்கலானதிற்கும், தூல விடயத்திலிருந்து கருத்துநிலை விடயத்திற்கும், மாணவர்களைக் கொண்டு செல்லும் வகையில் ஆசிரியர் தொடர்ந்து வினாக்களை தொடுப்பதில் ஈடுபடுகின்றார். இநதவகையில் இங்கு ஆசிரியர் ஒரு வசதி செய்து கொடுப்பர் (Facilitator) ஆக காணப்படுகிறார்.

இவ்வாறு கற்றல்-கற்பித்தல் செயன்முறையில் ஆசிரியர்களின் வகிபாகம் அறிவைக் கடத்துபவர் என்பதிலிருந்து கற்றலுக்கு வசதி செய்பவர் என்பதை நோக்கியதாக பரிணாமம் அடைவதில் பல்வேறுபட்ட தத்துவ மற்றும் உளவியல் சிந்தனைகள் செல்வாக்குச் செலுத்தயுள்ளன. அந்தவகையில், மாணவர் மையக் கல்வியின் முன்னோடியான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தத்துவவியலாளரான ரூஸோ தனது 'எமில்' எனும் நூலில், மாணவர்களுக்கு அனுபவங்கள் மூலம் கற்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென வாதிட்டார். வெறுமனே ஞாபகப்படுத்தலை நோக்காகக் கொண்ட கற்பித்தல் முறையை எதிர்த்தார்.

சுவிட்ஸலாந்து நாட்டைச்சேர்ந்த உளவியலாளரான பெஸ்டலோசி, மாணவர்களுக்கு கல்வியை வழங்க முன்னர் அவர்களைப்பற்றிய ஆய்வை நடத்த வேண்டுமென்று கூறினார். கல்வி பயனுடையதாக வேண்டுமாயின் அது மாணவனின் கவர்ச்சிகள், உளச்சார்புகள், உள்ளார்ந்த ஆற்றல்கள் போன்றவற்றின் அடிப்படையில் அமைய வேண்டமென்றார். ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் ஆளுமைப் பல்வகைமை மற்றும் தனிப்பட்ட தேவைகள் பற்றியும் கவனம் செலுத்தவேண்டுமென்றார்.


இதேபோல், ஆங்கிலேய கல்வித் தத்துவ ஞானியான எச். ஸ்பென்சர், பிரான்ஸ் நாட்டு உளவியலாளரான அல்பிரட் பினே, அமெரிக்க கல்வித் தத்துவ ஞானியான ஜோன் டூயி, இத்தாலி நாட்வரான மரியா மொண்டிசோரி போன்ற பல அறிஞர்களின் கல்வித்தத்துவங்களும், உளவியல் சிந்தனைகளும் இதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

எனவே மாணவர் மைய கற்றல்-கற்பித்தலை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் வகிபாகத்தின் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு மாணவர்களுக்கு கற்றலில் வசதி செய்து கொடுப்பவராக ஒரு ஆசிரியர் திகழு வேண்டும்.

By : M.S.M. Naseem
MA, BA (Hons), PGDE (R)


2 comments:

  1. சிறந்த கட்டுரையாகும்

    ReplyDelete
  2. கற்றல் கற்பித்தல் முறைமையினை கட்டுரை நன்கு தெளிவுபடுத்துகிறது. சிறப்பு

    ReplyDelete