.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, March 6, 2017

ஷீஆக்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம்



ஷீஆஎன்ற சொல் கட்சி, அணி, கோஷ்டி, குழு என்ற கருத்தைத் தருகிறது. ஆரம்பத்தில் அரசியல் ரீதியாக பிளவுபட்ட இரண்டு அணிகளை குறிப்பதற்காகத் பயண்படுத்தப்பட்ட இந்த வார்த்தைப் பிரயோகம் கால ஓட்டத்தில் ஒரு வழி கெட்ட பிரிவை இனம்காணும் வார்த்தையாக மாற்றம்கண்டது.



அந்தவகையில் அரசியல் ரீதியாக அலி(ரழி) அவர்களை ஆதரிக்க முன்வந்து, ஆரம்பத்தில் அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற நயவஞ்சக யூதனின் வழிகெட்ட சிந்தனைகளை உள்வாங்கி காலப்போக்கில் இஸ்லாத்திற்கு விரோதமான இன்னும் பல புதிய கொள்கைகளையும் சேர்த்துக்கொண்டு படிப்படியாக வளர்ந்த வழிகெட்ட கூட்டமேஷீஆக்கள் எனப்படுகின்றனர்.

இன்றும் இவர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து, பல கொள்கைகளுடன் உலகின் பல பாகங்களில் காணப்படுகின்றனர். குறிப்பாக ஈரான், ஈராக், பாகிஸ்தான், ஆப்காணிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகமாகவாழ்ந்து வருகின்ற இவர்கள் இஸ்லாத்தையும் உண்மை முஸ்லிம்களையும் அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டும் வருகின்றனர்

எனவே, ஷீஆக்கள் என்றால் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? என்பவற்றை அறிந்துகொள்வது அவசியமாகும்.


ஷீஆக்களின் தோற்றப் பின்னனி

நபியவர்களின் மரணத்திற்குப் பின் அபூ பக்கர்(ரழி)யும் அவர்களைத் தொடர்ந்து உமர்(ரழி) அவர்களும் அதன்பின் உஸ்மான்(ரழி) அவர்களும் ஆட்சிப் பொருப்பை ஏற்றுக் கொண்டார்கள். உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த சில அசம்பாவிதத்தினால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பொருப்பை ஏற்றுக் கொண்ட அலி(ரழி) அவர்கள் அப்போது அங்கு காணப்பட்ட குழப்ப நிலைகள் காரணமாக உஸ்மான்(ரழி) அவர்களை கொலை செய்தவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இந்த நேரத்தில் சிரியாவின் ஆளுனராக இருந்த முஆவியா(ரழி) அவர்களிடத்தில் பைஅத் வாங்கிக் கொண்டு அவரையே மீண்டும் சிரியாவின் ஆளுனராக நியமிக்குமாறு இப்னு அப்பாஸ்(ரழி)அவர்கள் அலி(ரழி) அவர்களுக்கு ஆலோசனை சொன்னார்கள். அதன்படி அலி(ரழி) அவர்கள் ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலி (ரழி)அவர்களை சிரியாவுக்கு அனுப்பி முஆவியா(ரழி) அவர்களிடம் பைஅத் வேண்டினார்கள். ஆனால் முஆவியா(ரழி) அதற்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. தனது தந்தையின் சகோதரரின் மகன் உஸ்மான்(ரழி) அவர்களை கொலை செய்தவர்களை தண்டிக்காத வரை தான் பைஅத் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதன் பின்னர் அபூ முஸ்லிம் அல் குராஸானி என்பவரையும் அனுப்பி முஆவியா(ரழி) அவர்கள் தன்னிடம் பைஅத் செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் முஆவியா(ரழி) அதையும் மறுத்துவிட்டார்கள்.

இந்தக் கருத்து வேறுபாடுதான் முஸ்லீம்கள் மத்தியில் இரு குழுக்களை உண்டு பண்ணியது. அதாவது அலி(ரழி) அவர்களை ஆதரித்து ஒரு பகுதியினரும் முஆவியா(ரழி) அவர்களை ஆதரித்து இன்னொரு பகுதியினருமாக முஸ்லீம்கள் பிளவு பட்டனர். இவர்கள் தான் ஷீஅத்து அலி (அலியின் கட்சியினர்), ஷீஅத்து முஆவியா(முஆவியாவின் கட்சியினர்) என வரலாற்றில் அறியப்படுகிறார்கள். இந்தப் பிரிவினையின் விளைவாக ஹிஜ்ரி 36ல் அலி(ரழி) அவர்களின் தரப்பினருக்கும் முஆவியா(ரழி) அவர்களின் படையினருக்கும் இடையில் சிப்பீன் யுத்தம் நடைபெற்றது.

இதில் அலி(ரழி) அவர்ளின் படை வெற்றியின்பால் முன்னேறிக் கொண்டிருப்பதையும் தமது படையினரில் அதிகமானோர் மடிந்து கொண்டிருப்பதையும் அவதாணித்த முஆவியா(ரழி) அவர்கள் தரப்பில் கலந்து கொண்ட அம்ர் இப்னு ஆஸ்(ரழி)அவர்கள் இந்த சண்டையை நிருத்தும் விதமாக குர்ஆனை ஈட்டி முனைகளில் தூக்கிக் காட்டுமாறு முஆவியா(ரழி) அவர்களை கேட்டுக் கொண்டார். அவ்வாரே முஆவியா(ரழி) தரப்பினரால் குர்ஆன் வசனங்கள் தூக்கிக் காண்பிக்கப்பட்டன. ஆனால் இது தமது தோல்வியை அறிந்த முஆவிய(ரழி)யின் தந்திரம் என்பதையுணர்ந்த அலி(ரழி)தொடர்ந்தும் போராடுமாறு தமது தரப்பினரை பணித்தார்கள். எனினும் அவரது படையிலிருந்த சிலர் அல் குர்ஆனை முன்னிருத்தி சமாதானம் கோரப்படும் போது அவர்களுடன் போர் புரிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், பின்னர் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இதனால்அந்த யுத்தம் முடிவுக்கு வந்து. இந்த உடண்படிக்கையை ஏற்றுக் கொள்ளாத சிலர் அலி(ரழி) மற்றும் முஆவியா(ரழி) காபிராகிவிட்டதாக கூறி அலி(ரழி)யின் தரப்பிலிருந்து பிரிந்து சென்றனர். இவர்களே கவாரிஜ்கள் என அழைக்கப்பட்டனர்.


அலி(ரழி) மரணமும் அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் பிரச்சாரமும்

அலி(ரழி) அவர்கள் ஹிஜ்ரி-39 நடுப்பகுதியில் இப்னுல் முல்ஜிம் என்ற கவாரிஜால் கொலை செய்யப் பட்டார்கள். அலி(ரழி)யின் மரணத்தின் பின்னர் அவர்களின் மூத்த புதல்வர் ஹஸன்(ரழி) அவர்கள் கலீபாவாக தெரிவுசெய்யப்பட்டார்கள். ஹிஜ்ரி 39இன் நடுப்பகுதியில் இருந்து ஹிஜ்ரி 40 வரை ஆட்சி செய்த ஹஸன்(ரழி) அவர்கள் அலியின் அணி, முஆவியாவின் அணி என்று இரு கூறுகளாக பிரிந்திருந்து மக்களை ஒன்று சேர்க்க நினைத்து தனது ஆட்சிப் பதவியை முஆவியா(ரழி)அவர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விட்டுக் கொடுத்து இரண்டு ஆட்சியை ஒற்றை ஆட்சியாக மாற்றினார்கள். ஹஸன் (ரலி) அவர்கள் செய்த இத் தியாகத்தையே வரலாற்றாசிரியர்கள் ஆமுல் ஜமாஆஒற்றுமையின் ஆண்டு என்று வர்ணிக்கின்றனர். (இந் நிகழ்வை விரும்பாத ஷீஆக்களின் ஒரு பிரிவினர் ஹஸன்(ரழி) அவர்களை பெரும் துரோகியாக சித்தரிக்கின்றனர்).

மறுபுறத்தில் உஸ்மான்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தின் இருதிப்பகுதியிலிருந்து அஹ்லுல் பைத்களுக்கே கிலாபத் உரித்துடையது எனவும், அந்தவகையில் கிலாபத்துக்கு தகுதியானவர் அலி(ரழி) தான் என அவரது வீரதீரச் செயற்பாடுகளையும் சிறப்புக்களையும் முன்வைத்து மக்கள் மத்தியில் அப்துல்லாஹ் இப்னு ஸபா பிரச்சாரம் செய்து வந்தான். அலி(ரழி) அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தெய்வீகப் பண்புகளைக் கொடுத்து தனது விசமப் பிரச்சாரத்தை தொடர்ந்தான்.

கிரேக்க, பாரசீக மஜுஸிய சிந்தனைத் தாக்கம் அதிகம்  காணப்பட்ட மவாலிகள்(புதிதாக இஸ்லாத்தை ஏற்றோர்) அதிகம் வாழ்ந்த பகுதிகளை மையப்படுத்தி இவன் பிரச்சாரம் செய்ததால், இஸ்லாம் பற்றிய தெளிவான விளக்கமற்ற அம்மக்களில் சிலர் அவனது வழிகெட்ட சிந்தனைகளை நம்பி அவற்றைப் பின்பற்றத் தொடங்கினர். (அலி ரழி அவர்களுக்கும் முஆவியா ரழி அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை சீர்குலைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப் படுவதற்கும் இவனே காரணமாக இருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது)

இந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற நயவஞ்சக யூதன் உருவாக்கிய வழிகெட்ட சிந்தனைகள் தான் இன்றுள்ள ஷீஆக்கள் மத்தியில் விரிவுபடுத்தப்பட்டு காணப்படுகின்றன. இவ்வாறு இவன் உருவாக்கிய முக்கிய கொள்கைகள் கீழே அஸ்-ஸபயிய்யா என்ற தலைப்பின் கீழ் விளக்கட்டுள்ளது.

அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் மூலமாகவே ஷீஆக் கொள்கை உருவானது என்பதை தாரீகுத் தபரி, அல்பிதாயா வன்னிஹாயா, மீஸானுல் இஃதிதால், லிஸானுல் மீஸான்,  தாரீகு இப்னு கல்தூன் போன்ற நூல்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றமான ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ‘ஷீஆஇயக்கம் உருவாவதற்கு பாரசீகப் பகுதியில் காணப்பட்ட சிந்தனைகளே காரணம் என பல ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாரசீக மக்கள், மன்னர் ஆட்சி முறைக்கு பழக்கப்பட்டவர்கள். அதனால், அவர்களுக்கு வாரிசுரிமை ரீதியிலான தலைமைத்துவமே பரிச்சியமாக இருந்தது. தகுதியான ஒரு தலைமையைத் தேர்வு செய்யும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, வாரிசுரிமை அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசியலையும் அவர்கள் நோக்கினர். ஆகவே தான்ஷீஆஇயக்கம் பாரசீக சிந்தனைத் தாக்கத்தினால் வளர்ச்சியுற்றது என Pozy போன்ற ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் ஹிஜ்ரி 61ல் இடம்பெற்ற கர்பலா நிகழ்வைத் தொடர்ந்தே ஷீஆக்கள் தனியான குழுவாக செயற்பட ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்பலாச் சம்பவம்

அலி ரழியின் மரணத்தின் பின் அவரது மூத்த மகன் ஹஸன் ரழியவர்கள் மக்களால் அடுத்த கலீபாவாக தெரிவு செய்யப்பட்டார். இயல்பிலேயே சமாதான நாட்டம் கொண்டிருந்த இவர், பொதுநலனை கருத்தில் கொண்டு அதுவரை தனது குடும்ப ஆதரவாளர்களுக்கும் முஆவியாவின் தரப்பினருக்குமிடையில் காணப்பட்டு வந்தஆட்சிப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஒரு உடண்பாட்டின் அடிப்படையில் ஆட்சியை முஆவியா ரழியடம் கையளித்தார். முஆவியா ரழிக்குப் பிறகு ஆட்சிப் பொருப்பானது தங்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதே அவ்வுடன்படிக்கையாகும்.

இந்தவகையில், ஹிஜ்ரி 41ல் முஆவியா (ரழி) முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தினதும் கலீபாவனார். இவரது ஆட்சிக்காலம் முடியும் முன்னரே ஹஸன்(ரழி) மரணமடைந்தார்கள். சுமார் 20 வருடங்கள் ஆட்சி செய்த முஆவியா (ரழி), அடுத்த கலீபாவாக தனது மகன் யஸீதை நியமித்தார். கிலாபத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும் யஸீதின் நியமனத்தை ஏற்றுக் கொண்டனர். புனித நகர்களான மக்கா, மதீனாவுக்கு கலீபா முஆவியாவே நேரில் சென்று அப்பிரதேச மக்களைச் சந்தித்து தனது மகனின் நியமனத்தை ஏற்றுக் கொள்ள வழி செய்தார். முஆவியா ரழியின் இப்புதிய நடைமுறையானது ஹஸன் ரழியுடன் செய்துகொண்ட உடன்படிக்கைக்கும், கிலாபா ராஷிதாவின் நடைமுறைக்கும், இஸ்லாமிய நெறி முறைகளுக்கும் முரணாக காணப்பட்டதால் ஸஹாபாக்களான ஹுஸைன்(ரழி), அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி), அப்துர் ரஹ்மான் பின்அபூபக்கர்(ரழி) போன்றோர் கலீபாவின் இந்த வாரிசு நியமனத்தை ஏற்க மறுத்தனர். இக்காலத்தில் யஸீதை விட மிகவும் திறமை வாய்ந்த பல ஸஹாபாக்கள் இருந்ததனால் அவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் தோன்றுவதைத் தடுக்கவே, முஆவியா (ரழி) இவ்வாறு செய்தார் என சிலர் இதை நியாயப்படுத்துகின்றனர்.

இந்தப் பின்னனியில், கலீபா யஸீதின் நியமனத்தை ஹுஸைன் மாத்திரமன்றி கூபா வாசிகளும் எதிர்த்து நின்றனர். எனவே, கூபாவுக்கு வந்தால் ஹுஸைன் ரழிக்கு ஆதரவு நல்குவதாகக் கூறி கூபாவாசிகள் ஹுஸைன் ரழியை அங்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனை நம்பி ஹுஸைன் (ரழி) கூபா செல்ல முற்பட்ட போது, அப்பிரதேச மக்கள் அடிக்கடி மனம் மாறக்கூடியவர்கள் என்றும் கூறி அவரின் ஆதரவாளர்கள் அவரைத் தடுத்தனர். எனினும் அப்துல்லாஹ் இப்னு ஸூபைர் ரழியின் தூண்டுதலால். கூபா செல்லத் தீர்மானித்தார்.

அவ்வாறே, சுமார் 100 பேர் கொண்ட தனது குடும்பத்தவர்களுடன் கூபா சென்று கொண்டிருந்த ஹுஸைன் (ரழி) ஸிபாலா எனும் இடத்தை அடைந்த போது, கூபா வாசிகள் யஸீதினால் புதிதாக நியமிக்கப்பட்ட உபைதுல்லாஹ் பின் ஸியாதின் கொடுமைகளுக்கு அஞ்சி யஸீதிற்கு ஆதரவாக செயற்படுகிறார்கள் என்ற உண்மையை அறிந்து கொண்டார். கூபாவின் நிலவரம் பற்றி அறிந்து வர ஹுஸைன் ரழியினால் அனுப்பப்பட்டசிலரும் உபைதுல்லாஹ்வினால் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையிலும் ஹுஸைன்(ரழி) கூபா நோக்கிச் சென்றார். இடையில் கர்பலா எனும் இடத்தை அடைந்த போது உமையாப் படைக்குத் தலைமை தாங்கி வந்த அம்ர் இப்னு ஸஅத் தன்னிடம் சரணடையுமாறு ஹுஸைன் ரழியைப் பணித்தார்.

இதனால் இவ்விருவருக்குமிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. முடிவில் ஹுஸைன்(ரழி) பின்வரும் 3 நிபந்தனைகளை முன்வைத்து அவற்றை ஏற்றுக் கொண்டால் தாம் சரணடைவதாக குறிப்பிட்டார்.

1. தன்னையும் தனது பரிவாரங்களையும் மக்கா அல்லது மதீனாவுக்கு செல்ல அணுமதிக்க வேண்டும்.
2. டமஸ்கஸ் சென்று கலீபா யஸீதைக் கண்டு பேச அணுமதிக்க வேண்டும்.
3. தான் விரும்பும் எந்த இடத்திற்காவது சென்று வாழ அணுமதிக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை அம்ர் இப்னு ஸஅத் கூபா கவர்னரான உபைதுல்லாஹ்விடம் முன்வைத்தார். நிபந்தனையை ஏற்றுக்கொள்ள மறுத்த உபைதுல்லாஹ் நிபந்தனையின்றிச் சரணடையுமாறும் யஸீதை கலீபாவாக ஏற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

ஹுஸைன்(ரழி) அதை மறுக்கவும் அவரையும் அவருடன் வந்தவர்களையும் ஸியாதின் படையினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுக் கொண்டனர். அருகிலிருந்த யூப்ரடீஸ் நதியிலிருந்து நீர் அருந்தவும் அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. முஹர்ரம் 10ம் நாள் இவர்களுக்கு எதிரான உமையாக்களின் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. இருதியாக ஹுஸைன் ரழியின் யுத்தப் பயிற்சி கூட இல்லாத சிறு படையும் மறுபுறம் இரணுவப் பயிற்சி பெற்ற பெரும் அளவிலான உமையாப் படையினருடன் கர்பலாவில் சமபலமற்ற நிலையில் போரிட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த யுத்ததில் ஹுஸைன் ரழியின் படையினருக்கு தமது உயிர்களைத் தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியொன்றும் இருக்கவில்லை.

ஹிஜ்ரி 61ல் இடம்பெற்ற இந்த யுத்ததின் போது துண்டிக்கப்பட்ட ஹுஸைன் ரழியின் தலை கூபாவுக்கு அணுப்பி வைக்கப்பட்டது. ஏனையேரின் உடல்கள் கூபா மற்றும் சிரியாவுக்கு அணுப்பிவைக்கப்பட்டன. இதையறிந்து அதிர்ச்சியடைந்த கலீபா யஸீத் கண்ணீர் சிந்தியவராகநான் இவ்வாறு செய்யுமாறு உத்தரவிடவில்லை. இதற்குத் துணை செய்த உபைதுல்லாஹ்வுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" எனக் கூறினார். இத்தோடு நில்லாது, ஹுஸைனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தன்னோடு சில நாட்கள் தங்கச் செய்து தனது அனுதாபத்தையும் வெளிப்படுத்தி பல நன்கொடைகளையும் கொடுத்து அவர்களை மதீனாவுக்கு அனுப்பி வைத்தார். இக்கொடூர நிகழ்வில் காய்ச்சல் காரணமாக இவர்களுடன் வராதிருந்த ஹுஸைன் ரழியின் இளவல் அலி மாத்திரமே உயிர் தப்பியிருந்தார். இவர் பிற்காலத்தில் ஸைனுல் ஆப்தீன் எனும் பெயரில் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தார்.

இக் கொடும் நிகழ்வுதான் ஷீஆக்கள் தனியான குழுவாக செயற்பட அடிப்படைக் காரணியாக அமைந்தது. இதனையே பேராசிரியர் ஹிட்டி, தனது History of the Arabs எனும் நூலில்கர்பலாவில் ஹுஸைன் (ரழி) சிந்திய இரத்தம் தான் ஷீஆக்களின் தோற்றத்துக்கான வித்தாக அமைந்தது." எனக் குறிப்பிடுகிறார். கர்பலாவில் உமையாக்கள் இழைத்த அநியாயங்கள் பின்னாளில் அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாய் அமைந்தது என்பதும் குறிப்பிடடத்தக்கது.


பிரதான பிரிவுகள்

ஷீஆ இயக்கத்திற்குள் கிட்டத்தட்ட 70 திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவற்றில் பிரதான நான்கு பிரிவுகள் உள்ளன.
1.    அஸ்ஸபஇய்யா
2.    அஸ்ஸைதிய்யா
3.    அல்கைஸானிய்யா
4.    அர்ராபிழா

அஸ்ஸப இய்யா

தன்னை முஸ்லிமாகக் காட்டி நடித்த யூதன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவை தமது தலைவனாக ஏற்று அவனது கருத்துக்களை கண்மூடித்தனமாக பின்பற்றிய கூட்டத்தினரே இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இந்த அப்துல்லாஹ் இப்னு ஸபாமூலமாகவே ஷீஆக் கொள்கை உருவாகியது என்பதை பலர் அறிஞர்கள் நிறவுகின்றனர். இவன்தான் முதன் முதலில் அலி(ரழி) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தெய்வீகத்தன்மை இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்தவன்.

நபிமார்களுக்கு வாரிசுகள் இருந்ததாகவும் அந்தவகையில் நபி(ஸல்) அவர்களின் வாரிஸ் அலீ(ரழி) அவர்களே, எனவே நபியவர்களின் மரணத்திற்குப்பின் ஆட்சிக்குறியவர் அலி(ரழி) தான் ஆனால் அவரை ஆட்சியாளராக தெரிவு செய்யாது ஸஹாபாக்கள் அனைவரும் அவருக்கு அநீதி இழைத்தனர் என்றும், அலி(ரழி) அவர்களை இமாமாக ஏற்காதோர் காபிர்கள் எனவும் பிரச்சாரம் செய்தான். மேலும் அலி (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டதற்குப் பின்அவர் மரணிக்கவில்லை மாறாக குதிரையில் உயர்த்தப்பட்ட அவர்கள் மேகத்தில் இருப்பதாகவும், இடி அவரின் ஓசை, மின்னல் அவரின் பார்வை என்றும், இறுதிகாலத்தில் மீண்டும் வந்து நீதத்தால் பூமியை அவர் நிரப்புவார்போன்ற நச்சுக்கருத்தையும் பரப்பினான்.

மேலும் அலி(ரழி) அவர்களை ஆட்சியாளராக தெரிவு செய்யாமல் ஸஹாபாக்கள் அனைவரும் அலி(ரழி) அவர்களுக்கு அநீதி இழைத்தார்கள் என்றும், அஹ்லுல் பைத் எனப்படுவோர் அலி(ரழி) மற்றும் பாத்திமா(ரழி) அவர்களின் குடும்பத்தினர் மாத்திரம் தான் எனவும் குறிபப்பபிட்டான்
இவன் இஸ்லாமியக் கொள்கைகளில் ஆழ்ந்த தெளிவற்றறோர் மத்தியிலேயே இஸ்லாத்துக்கு விரோதமான மஜுசிய, பாரசீக, பௌத்த சிந்தனைகளைக் கழந்து தனது விசமப் பிரச்சாரத்தை மேற்கொண்டான். இதனால் சிலர் இவனது பொய்களை நம்பி இவனை பின்பற்றவும் தொடங்கினர்.

இவர்களுக்குள் இரண்டுஉட்பிரிவுகள் காணப்படுகின்றது

1. அல்குராபிய்யா (காகவியல் கோட்பாடு): அலி (ரழி) முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் உருவ அமைப்பில் ஒன்று என்றும், ஜிப்ரீல் (அலை) வஹியை மாற்றிவிட்டார் என்றுகூறி ஜிப்ரீல் (அலை) அவர்களை திட்டி சபிக்கும் கூட்டம்.

2. அன்னமிரிய்யா: முஹம்மத்(ஸல்), அலி(ரழி), பாதிமா(ரழி), ஹஸன்(ரழி), ஹுஸைன்(ரழி) ஆகிய ஐவரிலும் அல்லாஹ் குடிகொண்டிருப்பதாக நம்புகின்றனர். இக்குழுவின் தலைவன், தன்மீதும் அல்லாஹ் இறங்கியுள்ளதாகவும் கூறினான்.

அஸ்ஸைதிய்யா

ஷீயாக்களிடையே காணப்படும் குழுக்களில் நிதானமான சிந்தனைப் போக்குடையவர்களாக இவர்கள் கருதப்படுகின்றனர். ஹுஸைன் (ரழி) அவர்களின் மகனான ஸைனுல் ஆப்தீனின் மகன்ஸெய்த்அவர்களை பின்பற்றுபவர்களே ஸெய்திக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஹிஜ்ரி 80ல் பிறந்த ஸெய்த் அவர்கள், ஹிஜ்ரி 122ல் கொல்லப்பட்டார். இவரிடம் தக்வா, நற்பண்புகள், அறிவு, ஆற்றல், ஆளுமை, மிதவாத சிந்தனைப் போக்குக் போன்றவை காணப்பட்டதால் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டார்.

இமாம் ஹஸனுல் பஸரி, முஃதஸிலா இயக்க ஸ்தாபகர் வாஸில் பின் அதா, இமாம் அபூ ஹனீபா போன்றோரிடம் இவர் சட்டங்கள் மற்றும் கலைகளை கற்றுள்ளார். இதனால், இவரைப் பின்பற்றும் இக்குழுவினர் அடிப்படை விடயங்களில் முஃதஸிலாக் கொள்கையுடையோராகவும், கிளை விடயங்களில் ஹனபிய்யாக்களாகவும் காணப்படுகின்றனர்.

ஸெய்த் அவர்கள் உமைய்யா ஆட்சியை எதிர்த்து மேற்கொண்ட போரில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை, கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்களது கொலை ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்ற மிகப்பெரும் அனுதாப உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது இதனால் இக்கொள்கை வளர்ச்சியடைந்தது.

கொள்கைகள்

1. இமாம்கள் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள் (மஹ்ஸூம்) இல்லை.

2. நபி(ஸல்) அவர்களுக்குப்பின் மனிதர்களில் தோன்றிய சிறந்த பிரிவினரே இமாம்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பின் கிலாபத்திற்கு உரித்துடையவர் அலி(ரழி) தான், எனினும் கிலாபத் தகுதி அடிப்படையிலும் வரலாம். எனவே அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோர் கிலாபத்தை அபகரிக்கவில்லை.

3. ஸைனுலாப்தீனுக்கு பின்னர் இமாமத் பொறுப்பு (5வது இமாம்) ஸைதுக்கே உரித்தாகும். ஏனெனில் இமாமானவர் தக்வா, ஆழ்ந்த அறிவு, பலம் போன்றவற்றை கொண்டிருப்பதுடன் அநீதியான ஆட்சியை எதிர்த்து போராட (ஜிஹாத்) வேண்டும் ஆனால் முஹம்மத் அல்-பாகிர் அநீதியான ஆட்சியாளர்களான உமையாக்களை எதிர்த்து, அரசியல் ரீதியாக போரடவில்லை மாறாக ஸைதே போராடினார். மேலும் சம காலத்தில் வேறு வேறு இடங்களில் இரண்டு இமாம்கள் இருப்பதில் தவறில்லை எனவும் குறிப்பிட்டனர். (ஆனால் இமாமியாக்கள் முஹம்மத் இப்னு அலீ அல் பாகிரை மட்டுமே 5வது இமாமாக ஏற்றுக் கொள்கின்றனர்)

4. பெரும் பாவம் செய்தவர்கள் முஸ்லிமுமல்ல, காபிருமல்ல மாறாக இரண்டுக்குமிடைப்பட்ட நிலையில் இருப்பர்.

5. ஐந்து நேரத் தொழுகையை பின்பற்றுகின்றனர் ஆனால் ஏனைய ஷீயாக்கள் மூன்று நேரத் தொழுகை முறையைப் பின்பற்றல்.

6. தகிய்யாவை பின்பற்றும் இவர்கள் முத்ஆ எனும் விபச்சாரத்தை ஊக்குவிக்கும் தற்காலிக திருமணத்தை ஏற்றுக் கொள்வதில்லை.
இதனடிப்படையில் ஏனைய ஷீயாக்களைப் போல் இஸ்லாத்திற்கெதிரான அதிக நச்சுக் கருத்துக்களைக் கொண்டிராத இவர்களை 5வது மத்ஹபாக அங்கீகரிக்க முடியுமென சில அஹ்லுஸ் ஸூன்னத் ஜமாத் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஸெய்திய்யாக்களை சார்ந்தவரான அபூ ஸஹ்ரா என்பவர், இக்குழுவை கொள்கை அடிப்படையில் இரண்டாக பிரித்துக் காட்டுகின்றார்.

மூத்தோர்கள்: இமாமத் தகுதி அடிப்படையில் வரலாம். எனவே அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரின் ஆட்சியை அங்கீகரிக்கின்றனர். இவர்கள் தற்போது எமன் நாட்டில் கருத்து முரண்பாடுகளினால் பிளவுபட்டு ஸூலைமானிய்யா, ஜாஷரூதிய்யா, ஸாலிஹிய்யா போன்ற முப்பிரிவுகளாக வாழ்ந்து வருகின்றனர். (அல்மிலல் வந்நிஹல், பாகம் 1, பக்கம் 155)

பிந்தியோர்கள்: இவர்கள் முன்னைய மூன்று நல்லாட்சி நடாத்திய கலீபாக்களையும் அவர்களது ஆட்சியை ஆதரிப்போரையும்காபிர்கள் என்கின்றனர். மேலும்ஒவ்வொரு விடயமும் நடக்கும் போதுதான் அது அல்லாஹ்வுக்கு தெரியவருகிறது, அதற்கு முன் தெரியாது. நிகழ்வுகள் அவனது அறிவில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்கின்றனர். இது. ஷீஆப் பிரிவில் மிகவும் வழிகெட்ட ராபிழாக்களினதும், கைஸானியாக்களினதும் கருத்திலிருந்து பிறப்பெடுத்த கருத்தாகும். ஆனால் ஸெய்த் அவர்களின் கொள்கை இதற்கு மாற்றமானதாகவே இருந்தது.

அல் கைஸானிய்யா or தவ்வாபீன்கள்

முஆவியா (ரழி) அவர்களின் மகன், யசீதின் ஆட்சிக் காலத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஈராக்கிலுள்ள கர்பலா எனுமிடத்தில் கொலை செய்யப்பட்டார்கள். இதற்கு பலி தீர்க்க வேண்டுமென ஒரு குழு உருவானது. இவர்கள்முக்தார் இப்னு அபீ உபைத்என்பவனின் தலைமையில்தவ்வாபீன்என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டபோது ஆத்திரமடைந்த இப்பிரிவினர், அவர்களுக்கு உதவி செய்யத் தவறியதனால் அவரை இழந்தோம். எனவே, நாம் பாவிகள் என்று கருதிதவ்பாசெய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் இயங்க ஆரம்பித்ததுடன் உமையாக்களின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து, பல தளபதிகளைக் கொலையும் செய்தனர்.

முக்தாரின் புனைப் பெயரானகைஸானிய்யாஎன்ற பெயரைக்கொண்டும் இவர்கள் அழைக்கப்படுகிறனர். (இவன் ஒரு மிகப்பெரிய பொய்யன் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்) இவர்களிடமும் ஷீஆக்களின்ஏனைய பிரிவுகளை போன்று பல வழிகெட்ட கொள்கைகள் காணப்படுகின்றன. குறிப்பாகதனாஸூக்என்ற மறுபிறப்புக் கொள்கை,‘தீன் என்பது ஒரு மனிதனுக்குக் கட்டுப்படல், அம்மனிதர் அலிதான்எனக்கூறல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அர்ராபிழாக்கள்

இஸ்லாத்தின் வரையரைகளை விட்டும் நீங்கிச் சென்ற, தீவிர சிந்தனைப் போக்குடைய ஷீஆக்களின் பிரிவினராக இந்த ராபிழாக்கள் காணப்படுகின்றனர். அறிஞர்களின் கருத்துப்படி இவர்களுக்குள் 15 முதல் 20வரை உட்பிரிவுகள் காணப்படுகின்றன. அவற்றில் முக்கிய சில பிரிவுகளை இங்கு பார்ப்போம்.

1. முஹம்மதிய்யா
2. இஸ்னா அஷ்அரிய்யா or இமாமிய்யா

முஹம்மதிய்யா

ஹுஸைன் (ரழி) அவர்களின் மகனான அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதை இவர்கள் தங்களது இமாமாகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹ்தியாகவும் கருதுகின்றனர்.

முஹம்மத் ஹிஜ்ரி 93ல் பிறந்தார். ராபிழாக்கள் இவரைஅந்நப்ஸ் அஸ்ஸகிய்யாபரிசுத்த ஆத்மா என்ற புனைப்பெயர் கொண்டு அழைத்தனர். இவர் ஹிஜ்ரி 145ம் ஆண்டுகளில் அப்பாஸிய ஆட்சியாளர் அபூ ஜஃபர் அல் மன்சூர் என்பவருக்கு எதிராக மதீனா எல்லைப் புறங்களில் கிளர்ச்சி செய்தபோது, இவர்களை எதிர்க்க அபூ ஜஃபர் அல் மன்சூர் ஒரு படையை அனுப்பினார். இரு சாரார்களுக்கிடையில் சண்டை உக்கிரமாக நடைப்பெற்றது. எனினும், கலீபா மன்சூரால் அணுப்பப்பட்ட தளபதியின் தந்திரோபாயத்தால் முஹம்மத் களத்தில் கொலை செய்யப்பட்டார். தளபதி, அவரது தலையைத் துண்டித்து, அபூ ஜஃபர் அல் மன்சூருக்கு அனுப்பிவைத்தார்.

இஸ்னா அஷ்ரிய்யா or இமாமிய்யா

நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர் கிலாபத்துக்கு உரிமையுடையவர் அலி (ரழி) அவர்கள்தான் என்றும் அவரைத் தொடர்ந்து அவரது குடும்ப வழியாக வந்த ஏனைய 11 இமாம்களும் தான் எனும் நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து  ஆட்சி செய்தகலீபா அபூ பக்கர்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகியோர் அலி (ரழி) அவர்களுக்கு கிடைக்கவேண்டிய கிலாபத் பதவியை பறித்துக் கொண்ட துரோகிகள் எனவும் குறிப்பிடுகின்றனர். அரசாட்சி இமாம் என்ற நிறுவனமுறைமையிலேயே இயங்க வேண்டும் என்பதோடுஅஹ்லுல்பைத்கலிலிருந்தே 12 இமாம்களும் தெரிவு செய்யப்படுவர் எனவும், இவர்கள் ஒவ்வொருவரும் தனக்குப் பின்னால் வரும் இமாமைவஸிய்யத்மூலம் நியமித்து, பதவியில் அமர்த்துவர் எனவும் கூறுகின்றனர்.

இந்த இமாமத் பதவிக்கு வரும் 12 பேரையும் ஏற்பது ஈமானின் ஓர் அங்கம்; எனவும், மறுப்பவர்கள் காபிர்கள் என்றும் வாதாடுகின்றனர். இந்தவகையில் இவர்கள் அலி (ரழி) அவர்களை தமது முதல் இமாமாகவும், முஹம்மத் இப்னு ஹஸன் அல் அஸ்கரீ அவர்களை இறுதி(மஹ்தி) இமாமாகவும் நம்புகின்றனர்.

இமாமத், தகிய்யா, முத்ஆ, அர் ரஜ்ஆ, அல் இஸ்மா போன்றவற்றை தமது முக்கிய கொள்கைகளாகக் கொண்டுள்ள இவர்கள் அல் குர்ஆன், ஹதீஸ்கள், ஸஹாபாக்கள் தொடர்பாகவும் அஹ்லுஸ் ஸூன்னாக்களை விட்டும் மாற்றமான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். இவ்வாறு வரம்பு மீறிய, பல வழிகெட்ட கொள்கைகளுடன் உள்ள இக்குழுவினர் இன்றும் ஈரான், ஈராக், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் கனிசமாக வாழ்கின்றனர். இவர்கள்அல் ஜஃபரிய்யாஎன்ற பெயர்கொண்டும் அழைக்கப்படுவதுடன் இவர்களது சிந்தனைகளும் கருத்துக்களும் கொள்கைகளும் யூத இனத்திற்கு ஒத்ததாக காணப்படுகின்றது.

இமாமிய்யா சிந்தனையுடையோர் நம்பும் 12 இமாம்களின் பெயர்கள் பின்வருமாறு

1.            ஆலி (ரழி)
2.            ஹஸன் (ரழி)
3.            ஹுஸைன் (ரழி)
4.            ஸெய்னுல் ஆப்தீன்
5.            முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹுஸைன் அல் பாகிர்
6.            ஜஃபர் அஸ்ஸாதிக்
7.            மூஸா இப்னு ஜஃபர் அல் காழிம்
8.            அலீ இப்னு மூஸா அர்ரிழா
9.            முஹம்மத் இப்னு அலீ அல் ஜவாத்
10.          அலீ இப்னு முஹம்மத் அல்-ஹாதி
11.          ஹஸன் அல்-அஸ்கரி
12.          முஹம்மத் இப்னு அல் ஹஸன்(அல்-மஹ்தி)

உட்பிரிவுகள்:
1.            இஸ்மாயீலிய்யா
2.            நுஸைரிகள் ழச அலவியர்கள்
3.            துரூஸிகள்

இஸ்மாயிலிய்யா

இமாமிய்யாவின் ஒரு உட்பிரிவாக இவர்கள் காணப்படுகின்றனர். 12 இமாம்களில் முதல் ஆறு நபர்களையும் ஏற்றுக் கொள்ளும் இவர்கள். ஏழாவது இமாம் யார் என்பதில் ஏற்பட்ட கருத்து மோதலினால் பிளவுபட்டனர்.அந்தவகையில் ஷீயாக்களின் 6வது இமாமான ஜஃபர் அஸ்ஸாதிக் அவர்களுக்கு இஸ்மாயீல் மற்றும் மூஸா அல் காழிம் என இரு பிள்ளைகள் இருந்தனர். இதில் இஸ்மாயீலைத் தமது 7வது இமாமாக ஏற்றவர்கள் இஸ்மாயீலிய்யாக்கள் எனப்படுகின்றனர்.

இமாமிய்யாக்களின் ஏனைய பிரிவினர் மூஸா அல் காழிமையே 7வது இமாமாக ஏற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மது அருந்தும் பழக்கத்தையுடைய இஸ்மாயீலிடம் தலைமைப் பொருப்பை ஒப்படைக்க விரும்பாத இமாம் ஜஃபர் அஸ்ஸாதிக் அவர்கள் அப்பொருப்பை மூஸா அல் காழிமிடம் கொடுத்தாக இவர்கள் நம்புகின்றனர். எனினும் இஸ்மாயீலிய்யாக்கள் இமாம்கள் மஃஸூம்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் இஸ்மாயில் அவர்களையே ஏற்றுக் கொள்கின்றனர்.

மார்க்க விடயங்களில் வரம்பு மீறிச் சென்ற இக்குழு ஈராக்கில் தோன்றி வளர்ந்தது. ஆரம்பத்தில் தமது பிரசாரத்தினை இரகசியமாக செய்த இவர்கள் அது வெற்றியளிக்கவே பின்னர் பகிரங்கமாக செய்யத் தொடங்கினர். இன்றும் ஈரான், குராஸான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்ந்துவரும் இவர்களிடம் பாரசீக மற்றும் இந்துமதச் சிந்தனைத் தாக்கங்களும் காணப்படுகின்றன. எகிப்தில் தோன்றிய பாதிமியர் ஆட்சியும் இவர்களின் வழி வந்ததே என்பதும் குறிப்பிடத்தக்கது.

அல் குர்ஆனுக்கு தெளிவான மற்றும் மறைவான விளக்கங்கள் காணப்படுவதாகவும், இம் மறைவான விடயங்கள் பற்றிய விளக்கம் தமது இமாம்களுக்கு மட்டுமே உண்டு என நம்புதல், அல்லாஹ்வின் பண்புகளை நம்பிக்கை கொள்ளாமை போன்ற வழிகெட்ட கொள்கைகளை கொண்டுள்ள இவர்கள் தமது 14வது இமாமாகஆகாகானையும், மஹ்தியாக தமது 7வது இமாமான இஸ்மாயீலையும் நம்புகின்றனர்.

நுஸைரிய்யா or அலவிய்யா

இஸ்மாயீலிய்யாப் பிரிவின் உட்பிரிவாக உள்ள இக்குழுவினர் அலி (ரழி) அவர்களை அல்லாஹ்வின் அவதாரம் என நம்புகின்றனர். இதனால் அலவிய்யாக்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். கிறிஸ்தவ மதச் சிந்தனைகளின் தாக்கத்திற்குட்பட்டவர்களாக காணப்படும் இவர்கள், அவர்களின் முக்கிய விழாக்களையும் பெருநாள் தினங்களையும் கொண்டாடுவதோடு, தமக்கு கிறிஸ்தவப் பெயர்களைச் சூட்டிக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இன்று இப்பிரிவினர் சிரியாவிலேயே அதிகமாக வாழ்கின்றனர். அங்கு இவர்களது ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்து.

துரூஸிகள்

இறைவன், இமாமின் வடிவில் வெளியாகியுள்ளான் என்ற நம்பிக்கையுடைய கூட்டமே இவர்கள். பாதிமிய்யா ஆட்சியாளனான அல்ஹாகிம் பீ அமிரில்லாஹ் என்பவன் இந்த கொள்கையின் அடிப்படையிலேயேதன்னில் இறைவன் அவதரித்துள்ளதால், தன்னை வணங்குமாறுமக்களைப் பணித்தான். இதனால் பொதுமக்களும், அவனது உறவினர்களும் ஆத்திரமடைந்தனர். பின்னர் இவனது குடும்பத்தினராலேயே இவன் கொலை செய்யப்பட்டான்.

அல் ஹாகிம் பீ அம்ரில்லாஹ் கொலை செய்யப்பட்ட பின்னர், பாரசீகப் பிரதேசத்தில் வாழ்ந்த ஹாமாஸ் அத்துஷரூஸி என்பவன்அவர் சாகவில்லை மாறாக மறைந்திருக்கின்றார்என்று பிரசாரம் செய்யத் தொடங்கினான். இதை நம்பி ஒரு கூட்டம் சேர்ந்தது. அவர்களே துஷரூஸிகள் அல்லது ஹாகிமிய்யாக்கள் என அழைக்கப்பட்டனர்.

ஷீஆக்களின் முக்கிய கொள்கைகள்

1. அல்குர்ஆன் பற்றி : நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட 30 ஜுஸ்வுகள் அடங்கிய இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்படுகின்ற அல்குர்ஆனை ஷீஆக்கள் முழுமையாக ஏற்பதில்லை. 40 ஜுஸ்வுகள் மற்றும் 17,000 வசனங்கள இருப்பதாக நம்புகின்றனர். ‘இமாமுல் காயிப்என்பவரிடம் அது இருப்பதாகவும், அவர் வெளிவரும் போது கொண்டுவருவார் எனவும் அதன் பின்னர் அதையே பின்பற்ற வேண்டும் என்றும் நம்புதல்.

சில ஷீயாக்கள் தாம் வைத்துக் கொண்டிருக்கும் குர்ஆன் (முஸ்ஹபு பாத்திமா)தான் உண்மையானது என்றும் உண்மையான முஸ்லீம்கள் உலகம் பூராகவும் பயண்படுத்தும் குர்ஆன் மூன்றில் ஒரு பகுதிதான் என்றும் கூறி குர்ஆனையே சந்தேகப்பட வைத்தல். இன்னும் சிலர் அலி(ரழி) அவர்களின் ஆட்சியை தொடர்பு படுத்தி திருக்குர்ஆனில் இறங்கிய அல்விலாயா, அந்நூரைன் போன்ற இரண்டு அத்தியாயங்களையும் நபித்தோழர்கள் திருக்குர்ஆனை ஒன்று சேர்க்கும் போது வேண்டுமென்றே குர்ஆனில் சேர்க்கவில்லை என்று பொய்கூறி குர்ஆனுக்கு பங்கம் விளைவித்தல்.

2. அல் ஹதீஸ் பற்றி : ஷீஆக்கள் முஸ்லிம்களிடமுள்ள குர்ஆனையும் ஹதீஸையும் புறக்கணித்து விட்டு, இவர்களது இமாம்கள் அறிவித்தவற்றையும் பின்வரும் நூற்களையும் மூலாதார நூற்களாக கொள்ளுகின்றனர். அல்காபி, அல்கைபா, பஸ்லுல் கிதாப், பிஹாறுல் அன்வார், மிர்ஆதுல் உகூல், மபாதீஹுல் ஜினான், நூறுல் அன்வார், கஷ்புல் அஸ்ரார், அல்ஹுகூமதுல் இஸ்லாமிய்யா, அர்ரஜ்ஆ, அல் அன்வாறுன் நுஃமானிய்யா, தஹ்ரீருல் வஸீலா, நஹ்ஜுல் பலாகா.

3. ஸஹாபாக்கள் பற்றி : அலி(ரழி, ஹஸன்(ரழி), ஹுஸைன்(ரழி), மிக்தாத்  இப்னு அஸ்வத்(ரழி), அபூதர்  அல்கிபாரி(ரழி), சல்மானுல் பாரிஸி(ரழி), பாத்திமா(ரழி) அவர்கள் உட்பட இன்னும் சில நபித் தோழர்களைத் தவிர மற்ற அனைவரும் மதம் மாறியவர்கள், காபிர்கள், அசுத்தமானவர்கள் என்று தீர்ப்பு சொல்வது.

4. இமாமத் : நபி(ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால் அலி(ரழி) அவர்களும் மேலே நாம் சுட்டிக் காட்டிய ஷீஆக்களின் 12 இமாம்களுமே ஆட்சிக்குத் தகுதியானவர்கள். மேற்கண்ட 12 பேர் அல்லாத யாரும் ஆட்சிக்கு தகுதியே இல்லாதவர்கள்.

5. அல் இஸ்மா : தமது இமாம்கள் தவறு, மறதியை விட்டும் அப்பாற் பட்டவர்கள் என்றும் நபிமார்கள் மற்றும் மலக்குமார்களை விடவும் சிறந்தவர்கள் எனவும் நம்புதல். (குமைனியின், இஸ்லாமிய அரசு, பக்கம்59)

6. தகிய்யா : இடத்திற்கு, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடிக்கும் நயவஞ்சகக் கொள்கை தக்கியா என்று சொல்லப்படும். அதாவது, தமது உண்மையான நம்பிக்கையை காட்டாது வெளிப்படையில் முஸ்லீம்களாக நடிப்பதும் உண்மையில் ஷீயாக்களாக இருப்பதும்.

தகிய்யா என்னுடையதும் எனது முன்னோர்களினதும் வழிமுறை. அது இல்லாதவனுக்கு ஈமான் இல்லைஎன்று ஷீஆ இமாம்களில் ஒருவரான அபூ ஜஃபர் கூறுகின்றார்.  (அல்காபி 2:27) 

நீங்கள் பின்பற்றும் மார்க்கத்தை மறைத்து வைத்துக் கொண்டால், அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்துவான். அதனை வெளிப்படையாகப் பரப்பினால், அல்லாஹ் உங்களை இழிவடையச் செய்வான்என அபூ அப்தில்லாஹ் எனும் ஷீஆ அறிஞர் குறிப்பிடுகின்றார். (அல்காபி 2:176) 
                                      
7. முத்ஆ: (தற்காலிகத் திருமணம்) ஒரு பெண்ணை ஆறு மாதம், ஒரு வருடம் என குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்தம் செய்து திருமணம் முடிக்கின்ற வழிகெட்ட கொள்கையை பின்பற்றல். முத்ஆ செய்யும் பெண்னின் பாவங்கள் மண்ணிக்கப்படுவதுடன் அவர்களுக்கு சுவர்க்கம் கிடைக்கப்பெறும் எனவும் நம்புதல்.

8. அல் கைபா : (தலைமறைவாதல் or மறைந்து வாழல்) அதாவது ஷீஆக்களின் 11வது இமாமான ஹஸன் அல்-அஸ்கரி ஹிஜ்ரி 260ல் மரணித்தபோது அவருக்கு 5வயதான (ஹிஜ்ரி 255ல் பிறந்த) முஹம்மத் என்ற மகன் இருந்ததாகவும், தனது தந்தையின் மரணத்தின் பின் அவரிடமிருந்து இமாமத் பதவியை ஏற்றுக் கொண்டுவிட்டு அவர் தலைமறைவாகியதாகவும் நம்புவதுடன். இவர் ஈரானின்சுர்ர மன் ரஆஎனும் தீவில் இன்னும் வாழ்ந்து வருவதாகவும் நம்புதல்.

9. அர் ரஜ்ஆ : பல ஆண்டுகளாக மறைந்து வாழும் தமது மஹ்தி மீண்டும் பூமிக்கு வருவார் எனவும், வந்து மூன்று கலீபாக்களையும் மற்றும் ஆயிஷா(ரழி) அவர்களையும் மண்ணரையிலிருந்து எழுப்பி தண்டனையளிப்பார் எனவும் நம்புதல். (ஷீஆக்களிடையே மஹ்தி பற்றி பல வகையான நம்பிக்கைகள் உள்ளன. கைஸானிய்யாக்கள், முஹம்மத் இப்னு அல்ஹனபிய்யா எனவும் இமாமிய்யாக்கள், முஹம்மத் இப்னு அல் ஹஸன் அல் அஸ்கரி எனவும் ஏனைய பிரிவினர் இன்னும் பல மஹ்தீக்கள் வருவார்கள் எனவும் நம்புகின்றனர்).

10. அல்பதாஆ : (மறைவின் பின் தென்படல் or புதிய கருத்தாக பின்னர் தெரியவருதல்) அல்லாஹ்வின் அறிவில் குறையுள்ளதாக நம்பும் ஒரு வழிகெட்ட நம்பிக்கை. ஒரு செயல் நடந்து முடிந்த பின்தான் அல்லாஹ்வுக்குத் தெரியும் அதற்கு முன் இறைவனுக்குத் தெரியாது. மேலும் தமது இமாம்கள் உலகில் காணப்படும் அனைத்து அறிவுகளையும் சேமித்து வைத்துள்ளனர் என்று நம்புதல். (ஷீஆக்கள் தமது தேவைக்கேற்றவாறு நிலைப்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்ள இக்கொள்கையை உருவாக்கியதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்)

இவையனைத்தும் இவர்களது முக்கிய கொள்கைகளாகும். இவற்றுடன் இன்னும் பல வழிகெட்ட கொள்கைகளை கொண்டவர்களாகவே இவர்கள் காணப்படுகின்றனர் அவை பின்வருமாறு.

  • நபியவர்களின் மனைவியர்கள் நபியின் குடும்பத்தில் இடம் பெறமாட்டார்கள்.
  • அலி(ரழி) அவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது. அவர்களிடம் மிகப் பெரும் அறிவுப் பொக்கிஷங்கள் எல்லாம் இருந்தன அவைகள் பற்றி எந்த நபித் தோழருக்கும் தெரியாது.
  • அலி(ரழி)அவர்கள், அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு பைஅத் செய்ய மறுத்ததார்கள்.
  • அன்னை ஆயிஷா(ரழி)அவர்களை நடத்தை கெட்டவர்களாக சித்தரித்தல்.
  • உண்மை சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்களை காபிர்கள் என்று கூறுதல்.
  • கர்பலாவை தரிசிப்பது மக்கா சென்று கஃபாவை தருசிப்பதை விட சிறந்தது என்று போதித்தல்.
  • முஹர்ரம் முதல் பத்து நாட்கள் துக்கம் அனுஷ்டித்தல்.
  • ஸூரா நோன்பை நோட்காமல் தாமும் தமது சிறு குழந்தைகளின் மேனிகளிலும் முகங்களிலும் இரும்புக் கம்பிகளால் தாக்கி இரத்தக் காயங்களை ஏற்படுத்துதல்.
  • முஹர்ரம் மாதத்தில் கர்பலாவில் ஹுஸைன்(ரழி) அவர்களின் பெயரால் மண்ணரை போன்ற உருவத்தை தயாரித்து, அலங்காரப் படுத்தி துக்கம் அனுஷ்டித்தல்.
  • கர்பலா நிகழ்ச்சி நடக்கும் காலங்களில் ஷீயாப் பெண்கள் தமது ஆபரணங்கள் எதையும் அணியமாட்டார்கள். மேலும் தங்களை அலங்காரப் படுத்திக் கொள்ளவும் மாட்டார்கள்.

ஷீஆக்கள் பற்றி அறிஞர்கள்

பொய் சொல்வதிலும் மனோ இச்சைகளைப் பின்பற்றுவதிலும் முன்னிலை வகிக்கின்றவர்கள் ராபிழாக்களே ஆவர். - இமாம் ஷாபிஈ (ரஹ்)

இஸ்லாத்தில் தேன்றியுள்ள அனைத்துப் பிரிவினர்களிடமும் பித்அத்களும் வழிகேடுகளும் காணப்படுகின்றன. எனினும், அவர்களில் எவரும் றாபிழாக்களைவிடக் கெட்டவர்கள் அல்லர். மேலும் அவர்களைவிட முட்டாள்களும், பொய்யர்களும், அநியாயக்காரர்களும், பாவச் செயல்களில் ஈடுபடுவோரும் வேறு எவருமில்லை. இன்னும், இறை நிராகரிப்பிற்கு மிக நெருக்கமானவர்களும், ஈமானின் அடிப்படைகளைவிட்டும் மிகத்தூரமானவர்களும் இவர்களே’ - இமாம் இப்னு தைமிய்யா

இதே போன்று, இந்த வழிகெட்ட ஷீஆக்களைப் பற்றி இமாம் மாலிக் (ரஹ்), அப்துல்லாஹ் இப்னுல் முபாறக் (ரஹ்), அபூ ஸர்ஆ (ரஹ்), ஷகீக் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்), இப்னுல் கையிம் (ரஹ்), அர்ராஸி, அத்தஹபி போன்றவர்களும் நவீன கால நல்லறிஞர்கள் பலரும் எச்சரித்துள்ளனர்.

by : MSM Naseem - B.A (Hons)





No comments:

Post a Comment