By : M.S.M. Naseem - MA (P.sc), BA (Hons), PGDE (R)
ஒரு கற்றல்-கற்பித்தல் செயற்பாடானது சிறந்த முறையில் வினைத்திறன் மிக்கதாக அமைகின்ற போதே அதனால் எதிர்பார்க்கப்படும் இலக்ககளை அடையக் கூடியதாக இருக்கும். கற்றல்-கற்பித்ல் செயன்முறையானது வினைத்திறனாகக் காணப்படுவதற்கு கற்பித்தலில் ஈடுபடும் ஒரு ஆசிரியர் பின்வரும் ஆறு விடயங்கள் தொடர்பாக தனது அவதானத்தைச் செலுத்தி அவற்றை சிறந்த முறையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அவை கற்பித்தல் முன்னாயத்தம், கற்பித்தல் முறைகளினதும், நுட்பங்களினதும் பயன்பாடு, கற்றல்-கற்பித்தல் வளங்களின் பயன்பாடு, கூட்டு மற்றும் இடையிட்ட மதிப்பீட்டு நுட்பங்களின் பயன்பாடு, ஆக்கபூர்வமான பின்னூட்டல் மற்றும் சாராம்சத்தினை வழங்குதல், ஆசிரியர் ஏற்றுக் கொண்ட வௌ;வேறு வகிபாகங்கள் போன்றவைகளயாகும். இவை ஒவ்வொன்றைப் பற்றிறும் சற்று விரிவாக நோக்குவோம்.
கற்பித்தல் முன்னாயத்தம்
ஆசிரியர் முன்னாயத்தங்களை செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை பின்வருமாறு முன்வைக்கலாம். இதன் மூலம்
பாடத்தினூடாக அடைய எதிர்பார்க்கும் சிறப்பு நோக்கங்கள் பற்றி முன்கூட்டியே மீளாய்வு செய்து மதிப்பிட முடிகின்றது. பாடத்திற்கு தேவையான உபகரணங்களை முன்கூட்டியே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படுகின்றது. பாடத்தை முன்வைக்கும் போது பயன்படுத்தும் உபகரணங்களின் பொருதத்தப்பாடு பற்றி முன்கூட்டியே தேடியறிவதற்கு வாய்ப்புக் கிடைக்கின்து. பாடத்தை முன்வைப்பதற்காக திட்டமிட்டுள்ள கால வரையரையின் பொருத்தப்பாடு மற்றும் போதுமை பற்றிய மதிப்பீட்டை நடாத்த முடிகின்றது. பாடத்தை முன்வைப்பதற்கு கையாளும் கற்பித்தல் முறைகளை ஒப்பிட்டு மிகப்பொருத்தமான முறையைத் தெரிவு செய்துகொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கின்றது.
பாடத்தை முன்வைப்பதன் மூலம் ஆசிரியர் எதிர்பார்க்கும் நோக்கங்கள் அடையப்பெற்றனவா என்பதைப் பரிசீலிப்பதற்காக பயன்படுத்தவுள்ள நுட்ப முறைகள் பற்றிக் கவனஞ் செலுத்துவதற்கான வாய்ப்புக்கிடைக்கின்றமை. பாடத்தை வெற்றிகரமாக முன்வைப்பதற்குத் தேவையான பாட விடயங்களைத் தேடிப் பெறவேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுகின்றமை. பாடத்தை முன்வைப்பதற்குத் தேவையான பாட விடயங்களை தேடிப் பெறுவதற்காக மேலதிக நூல்களை உசாவும் வாய்ப்பு கிடைக்கின்றது. திட்டமிட்டு முன்வைக்கப்படும் பாடம் மாணவரைக் கவரக் கூடியதாக அமையும்.
மேற்குறிப்பிட்ட வகையில் பாடத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வதால் குறித்த பாடத்தை உரிய காலப்பகுதிக்குள் வெற்றிகரமாக சமர்ப்பிக்கலாம். பாடத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை ஆசிரியரும் மாணவரும் உச்ச அளவில் பயன்பெறக் கூடியவாறு பயன்படுத்த முடியும். மாணவர் உச்ச அளவு ஆர்வத்துடன் பாடத்தில் பங்கேற்கும் நிலைமையும் உருவாகும். மேலும் பயன்படுத்தும் வளங்களின் உச்ச பயனைப் பெறக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும்.
திட்டமிட்டு முன்வைக்கப்படும் பாடத்தின் கற்றல்-கற்பித்தல் செயன்முறையானது மகிழ்ச்சிகரமானதாக அமையும். இவ்வாறான பாடத்தினூடாக கற்றல் அனுபவங்களை வெற்றிகரமாக மாணவர்க்கு வழங்குவதோடு, கற்றல் அனுபவங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
கவனத்தைப் பெறுதல் - கற்றல் செயன்முறையை மேம்படுத்துவதற்கு மாணவரின் கவனத்தையும், ஆர்வத்தையும் பெற்றுக்கொள்ளல் முக்கியமாகும். உதாரணமாக சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வி, ருசிகரமான விடயம் அல்லது செய்தி, ஒலிகள் அல்லது இசையுடன் கூடிய அசையும் தலைப்புடனனான பல்லூடக நிகழ்ச்சி, ஆர்வத்தை தூண்டுகின்ற செய்து காட்டல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
கற்போருக்கு குறிக்கோள்களைத் தெரிவித்தல் - ஒவ்வோர் அலகிலும் ஆசிரியர் கற்றல் குறிக்கோள்களை மாணவர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். இதன் மூலம் அவர்கள் தமது கற்றலில் ஆர்வத்துடன் ஈடுபடக்கூடியதாக இருக்கும். 'இந்தப் பாடத்தைக் கற்ற பின்னர் நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யக் கூடியதாக இருக்கும்...' எனும் முறையிலேயே குறிக்கோள்கள் அமைந்திருக்கும்.
கற்பித்தல் முறைகளினதும், நுட்பங்களினதும் பயன்பாடு
'பாடசாலையில் அல்லது வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படும் முறைமையை கற்பித்தல் முறை எனலாம்'. இந்தவகையில், வகுப்புக்கு பொதுவாக கற்பித்தல், வகுப்பை குழுக்களாகப் பிரித்துக் கற்பித்தல், அணிமுறைக் கற்பித்தல், பல்வகுப்புக் கற்பித்தல் முறை, விரிவுறை முறை, கண்டறி முறை, செயற்றிட்ட முறை, முன்திட்ட முறை, ஒப்படை முறை, பிரச்சினை தீர்க்கும் முறை என பல்வேறு வகையான கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன.
எதனைக் கற்பிக்க வேண்டும்?, எத்தகைய கற்றல் அனுபவங்களை பிள்ளைகளக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்?, கற்றல் அனுபவங்களை வழங்குவதற்கு எத்தகைய கற்றல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும்? போன்ற வினாக்களுக்கான போதியளவு அறிவையும் அனுபவத்தையும் ஓரு ஆசிரியர் பெற்றிருப்பதன் மூலம் கற்பித்தலின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
'கற்பித்தல் நுட்பமுறைகள் என்பது கற்றல்-கற்பித்தல் செயன்முறைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய உபாய வழிமுறைகளாகும்'. கதை கூறுதல், நடித்தல், பொருட்காட்சி, முன்மாதிரி, கலந்துரையாடல், விவாதங்கள், வினாக்கள் வினவுதல், காரணங்கள் கூறுதல், அவதானம், களச் சுற்றுப் பயணம் போன்றவை வகுப்பறையில் பயன்படுத்தக் கூடிய சில பயனுள்ள நுட்பமுறைகளாகும்.
ஒவ்வொரு பாடத்தினதும் பகுதிகளை கற்பிப்பதற்கு பொருத்தமான நுட்பமுறைகளை தெரிவு செய்து கொள்வதற்கும் பொருத்தமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கும் ஆசிரியர் அறிவைப் பெற்றிருக்கின்றபோது அது பல்வேறு கற்பித்தல்களிலும் பொருத்தமான நுட்பமுறைகளினால் உச்ச பயனைப் பெற்றுக்கொள்வதற்கு வழியமைக்கக் கூடியதாக இருக்கும்.
முன்னைய கற்பித்தலை நினைவு படுத்திக்கொள்ள தூண்டுதல் - புதிய தகவலை முன்னைய அறிவுடன் தொடர்புபடுத்திக் கொள்ளல் கற்றல் செயன்முறைக்கு அனுசரனையாக அமையும். தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் அறிவுடன் தொடர்பு இருக்குமெனில் அத்தகைய தகவல்களை கிரகித்து நீண்டகால ஞாபகத்தில் களஞ்சியப்படுத்திக் கொள்வது கற்போருக்கு இலகுவாக இருக்கும். முன்னைய அனுபவங்கள் அல்லது எண்ணக்கருக்கள் அல்லது உள்ளடக்கம் பற்றி வினவுதல் நினைவுபடுத்தலை ஊக்குவிக்கக்கூடிய எளிய முறையாகும். அத்துடன் அது போன்ற வேறு உத்திகளும் பயனுள்ளவையாகும்.
உள்ளடக்கத்தை முன்வைத்தல் - பாடத்தில் அல்லது அலகில் புதிய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்தலுடன் இது தொடர்புபட்டது. உள்ளடக்கமானது சிறு துண்டங்களாகப் பிரிக்கப்பட்டு அர்த்தமுள்ள வகையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இத மாணவர்கள் உயிர்ப்புடன் கற்க வசதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
கற்றல்-கற்பித்தல் வளங்களின் பயன்பாடு
கற்றல் செயன்முறையை இலகுபடுத்துவதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் ஆசிரியர்களினால் உபயோகிக்கப்படும் பொருட்கள் அல்லது சாதனங்கள் கற்றல் துணைச்சாதனங்கள் ஆகும். மாணவர்களின் கற்றலை இலகுபடுத்தும் வகையில் கற்றலுக்கான சாதனங்களை வழங்குவதும் சுற்றாடலை ஒழுங்கு படுத்துவதும் ஆசிரியரால் நிறைவேற்றப்பட வேண்டிய ஆரம்பப் பங்களிப்பாகும்.
கற்றல்-கற்பித்ல் செயற்பாட்டில் ஆசிரியரின் வாய்மொழி விளக்கம் மட்டும் பயனுள்ள கற்றல்-கற்பித்தலுக்கு காரணமாக அமையமாட்டாது. மாறாக, கற்றல் சாதனங்களை கட்புல-செவிப்புல ஊடகங்களினூடாகப் பயன்படுத்துகின்ற போது அது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
கற்றல் சாதனங்கள் பயன்படுத்தல் தொடர்பான சிறந்த பயிற்சிகளையும் அனுபவத்தையும் பெற்றுக்கொள்ளுதல் அத்தியவசியமாகும். இல்லாவிடின் கற்றல் சாதனங்களின் பயன்பாட்டின் மூலம் ஆசிரியர் எதிர்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது கடினமாக இருப்பதுடன் மாணவர்களிடம் விருப்பமற்ற கற்றல் நிலைமைகள் உருவாகவும் கூடும்.
எனவே கற்றல் சாதனங்களை தெரிவு செய்யும்போது ஆசிரியர் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள், வகுப்பறையினுள் பல்வேறு துணைகளை வினைத்திறனுடையதாக்கி கொள்ளும் முறை பற்றி ஆசிரியர் அறிந்திருப்பது அவசியமாகும்.
பல்வேறு கற்றல் முறைகளை ஊக்குவித்து கற்றலை மீள வலியுறுத்துவதற்கு படம், வரைபடங்கள், கட்புல-செவிப்புல சாதனங்கள் உளளிட்ட பல்வேறு ஊடகங்களையும் வளங்களையும் பயன்படுத்த வேண்டும்.
கூட்டு மற்றும் இடையிட்ட மதிப்பீட்டு நுட்பங்களின் பயன்பாடு
தமது விளக்கங்கள் போதுமானவைதானா என்பது பற்றி மாணவர்கள் பின்னூட்டல் பெறவேண்டியது முக்கியமானது. கற்பித்தலின் ஆரம்பத்தில் இருந்தே முறையான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விரிவாக்கல் கட்டத்தின் பின்னர் ஆசிரியர் முறைசாரந்த மதிப்பீட்டைப் பூரணப்படுத்த வேண்டும். கல்விச் செயன்முறையில் ஆசிரியர்கள் கல்விசார் பேறுகளை கணிப்பீடு செய்வது முக்கியமானது.
ஒவ்வொரு மாணவரின் விளக்கத்தின் மட்டம் பற்றி தீர்மானிப்பதற்கு இக்கட்டத்தில் ஆசிரியர் தொடர் மதிப்பீட்டை அல்லது இறுதி மதிப்பீட்டை மேற்கொள்கின்றார். இது, மாணவர்களுக்கு தாம் பெற்றுக்கொண்ட திறன்களைப் பயன்படுத்தவும் தமது விளக்கத்தை மதிப்பீடு செய்து கொள்ளவும் கிடைக்கும் முக்கிய சந்தர்ப்பமாகும். அதுமாத்திரமின்றி செயலாற்றல் குறிகாட்டிகளை மாணவர்கள் அறிந்துள்ளனரா என்பதை ஆசிரியர்கள் தீர்மானிக்கவும் இதுவே பொருத்தமான சந்தர்ப்பமாகும்.
ஆசிரியர் மாணவர் அறிவையும் திறன்களையும் மதிப்பிடுதல், புதிய எண்ணக்கருக்கள் மற்றும் திறன்களை மாணவர்கள் பிரயோகிக்கும் போது அவதானித்தல், மாணவர்கள் தமது கற்றல் மற்றும் செயன்முறை திறன்களை மதிப்பீடு செய்ய அனுமதித்தல். பொருத்தமான வினாக்களைக் கேட்டல், தமது சொந்தக் கற்றல் பற்றி மதிப்பீடு செய்ய மாணவர்களை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் மூலம் கற்றலனுபவங்களை எம்மால் மேம்படுத்த முடியும்.
ஆக்கபூர்வமான பின்னூட்டல் மற்றும் சாராம்சத்தினை வழங்குதல்
மதிப்பீட்டு வினாக்கள் மூலம் மாணவர்களின் அடைவு மட்டத்தை அறிந்து, அதனடிப்படையில் அவர்களுக்கு பொருத்தமான பின்னூட்டல்களை வழங்குவேண்டும். இதன் மூலம் குறித்த கற்றல்-கற்பித்தலில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை மாணவர்களை அடையச் செய்வது முடியுமாக இருக்கும். குறிப்பாக இடர்பாடுகளை வெளிக்காட்டுகின்ற மற்றும் பின்தங்கிய மானவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே ஆசியரியர்கள் பொருத்தமான முறையில் மதிப்பீடுகளை மேற்கொண்டு அதனடிப்படையில் மாணவர்களுக்கான பின்னூட்டல்களை வழங்கக் கூடியவர்களாக காணப்பட வேண்டியது அவசியமாகும்.
அதேபோல், பாட இறுதியில் ஆசிரியர் பாடத்தின் சகல விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் சாராம்சத்தினை முன்வைக்கக் கூடியவராகவும் காணப்பட வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் மாணவர்கள் தாம் கற்ற விடயங்கள் தொடர்பான சுருக்கமான உள்ளடக்கத்தை பற்றிய தெளிவப் பெற்றுக் கொள்ள முடிகின்றது.
எனவே ஆசிரியர் கற்றபித்தல் செயற்பாட்டில் ஈடுபட முன்னர் பின்னூட்டல் மற்றும் சாராம்சத்தினை மெற்கொள்வதற்காக போதுமான நேரத்தினை ஒதுக்கியிருக்க வேண்டும். அத்துடன் பாட இறுதியில் பாடத்தின் அனைத்து விடயங்களும் உள்ளடங்கும் வகையில் சாரம்சத்தினையும், பொருத்தமான பின்னூட்டல்களையும் வழங்கக் கூடியவராக காணப்பட வேண்டும். இதன் மூலம் கற்றலனுபவங்களை மேம்படுத்த கூடியதாக இருக்கம்.
ஆசிரியர் ஏற்றுக் கொள்ளவேண்டிய வெவ்வேறு வகிபாகங்கள்
ஆசிரியர் என்ன விடயத்தை கற்பிப்பது, அதை எப்படி கற்பிப்பது, எப்போது கற்பிப்பது போன்றவற்றை அறிந்த ஆற்றலுடையவராக இருக்க வேண்டும். அதேபோன்று, தன்னம்பிக்கையும் உறுதியும் பெற்றிருத்தல், சிறந்த தொடர்பாடல் ஆற்றலைக் கொண்டிருத்தல் (விழித் தொடர்பு, தெளிவான பேச்சு, பொருத்தமான அங்க அசைவு போன்றவை), மாணவர்களை சிறந்த முறையில் நடத்துதல், பௌதீக வளங்களை வினைத்திறனுடன் முகாமை செய்தல் போன்ற பண்புகள் மூலம் மேம்படுத்த முடியும்.
ஆசிரியரானவர் ஓர் வசதியளிப்பவர் அல்லது எளிதாக்குபவர் என்ற வகையில் கற்றலைத் திட்டமிடல், திட்டத்தை நடைமுறைப்படுத்தல், செயன்முறையை மதிப்பிடல் போன்றவற்றை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் வகுப்பறையில் மகிழ்ச்சிகரமான சூழலை ஏற்படுத்தல், மாணவர்களை தர்க்க ரீதியாக தொழிற்பட ஊக்குவித்தல், மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டுவர, வெளிப்பாடுகளை முன்வைக்க சந்தர்ப்பமளித்தல், மாணவர்களின் வெளிப்பாடுகளைப் பெற்று பாடத்தை விருத்தி செய்தல், சிறந்த மாணவர்-மாணவர், ஆசிரியர்-ஆசிரியர் இடைத்தொடர்பினை ஏற்படுத்தல், சுயகற்றலில் ஈடுபடத் தேவையான சந்தர்ப்பமளித்தல், யதார்த்தமான வாழ்க்கை அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதினூடாக பாடத்தை வாழ்க்கைக்கு பொருத்தப்பாடானதாக்குதல், மீளுட்டல், பின்னூட்டல்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் கற்றலுனுபவங்களை மேம்படுத்தி கற்றல்-கற்றபித்தல் செயற்பாடுகளை வினைத்திறனுடையதாக ஆக்கிக் கொள்ள முடியும்.
கற்றலை எளிதாக்குபவர் அல்லது கற்றபதற்கு வசதி செய்து கொடுப்பவர் என்ற வகையில் ஆசிரியர் இவ்வொவ்வொரு செயன்முறையின் போதும் கனிசமான அளவு பணிகளை ஆற்ற வேண்டும். அப்பணிகளை அறிந்து சரியான முறையில் செய்கின்ற போது கற்றல் அனுபவங்களை மேம்படுத்த முடியும்.
By : M.S.M. Naseem - MA (P.sc), BA (Hons), PGDE (R)
No comments:
Post a Comment