.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, April 23, 2019

இலங்கையின் இன முரண்பாடுகளும் பின்னனியும்

இலங்கையின் இன முரண்பாடானது பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் விதைக்கப்பட்ட பிரிவினைவாத விதைகளாகும். பிரித்தானியா இலங்கையைக் கைப்பற்றும் போது தமிழ், சிங்கள, முஸ்லிம் இன உறவுகள் மிகவும் நெருக்கமாகவும் புரிந்துணர்வுடனுமே காணப்பட்டன. இத்தகைய ஒற்றுமைத் தன்மையானது பிரித்தானியரின் காலணித்துவத்திற்கு சவாலாக அமைந்தது. எனவே, இதனை மாற்றியமைத்து தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு பிரித்தானியா பலவிதமான பிரிவினைவாதக் கொள்கைகளை இலங்கையர் மத்தியில் உருவாக்கினர்.

பொதுவாக இவர்களின் காலணித்துவக் கொள்கையாக பிரித்தாளும் கொள்கை (Divert and Rule) காணப்படுகின்றது. இதற்காக வேண்டி குறிப்பிட்ட நாட்டின் இன, மத, பிரதேச ரீதியான வேறுபாடுகளை பயன்படுத்திக்கொண்டனர். இத்தகைய பிரிவினைவாதக் கொள்கையே இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பிரதான இனங்களுக்கிடையே முரண்பாடாக உருவெடுத்து பின்னர் ஆயுத மோதலாக பரிணாமம் எடுத்தது.

இலங்கையைப் பொருத்தமட்டில் சுதந்திரத்திற்கு முன்னர் ஒன்றுபட்டிருந்த இனங்கள் சுதந்திரத்தின் பின்னர் ஒன்றையொன்று எதிர்த்து முரண்படத் தொடங்கின. ஆட்சி உரிமை, கல்வி, தொழில்வாய்ப்பு, அரச உத்தியோகம் என்று தமது கோரிக்கைகளை முன்வைத்த சிறுபான்மை இனங்களுக்கு உரிய வகையில் பதிலளிக்க பெரும்பான்மையினம் தவறவே தமிழ் - சிங்கள இனக்குரோதம் வளர்ந்து பின்னர் அது ஆயுதப் போராட்டமாக தோற்றம் பெற்றது.

இந்தவகையில், இலங்கையின் இனமோதலுக்கு பின்னனியாக பல்வேறு காரணிகள் காணப்பட்டன. இவை பெரும்பாலும் மொழி, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் காணிப் பகிர்வு என்பவற்றை உள்ளடக்கியதாகும். ஆரம்பத்தில் இலங்கையிலிருந்த இன இனங்களுக்கிடையிலான முரண்பாடென்பது வன்முறை இல்லாமலே இருந்தது. எனினும், அது காலப்போக்கில் அரசுக்கும் சிறுபாண்மை தமிழ் ஆயுத குழுக்களுக்கிடையில் ஆயுத மோதலாக மாறியது. இது இலங்கை உள்நாட்டு ஆயுத முரண்பாடென அழைக்கப்பட்டதுடன் இந்நிலை கிட்டத்தட்ட சுமார் 30 வருடங்கள் நீடித்துக் காணப்பட்டது. இவ்வாறான பின்னனியில் தோன்றிய இலங்கையின் இன முரண்பாடானது மோதலாக மாறுவதற்கு குறிப்பாக சிங்கள – தமிழ் முரண்பாடு ஆயுத முரண்பாடாக மாறுவதற்கு பல்வேறு காரணிகள் பின்னனியாக அமைந்திருந்தன. இவற்றை விளக்கமாக இங்கு நோக்குவோம்.

1. மறைமுகமாக இனங்களுகக்கிடையில் முரண்பாடுகளும் பிரிவினை வாதமும் தோற்றுவிக்கப்பட்டமை - தென்னாசியப் பிரதேசமானது இன, மத, மொழி, கலாசாரம் என பல்வகைமை கொண்ட பிராந்தியமாக காணப்பட்டது. பிரித்தாணியர் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்த இவ்வேறுபாடுகளை, முரண்பாடுகளை பகையாக பகையாக மாற்றினர். உதாரணமாக 1935ல் இந்தியாவின் சிறுபான்மை இனத்தவரான பௌத்தர்களுக்கு பர்மா பகுதியை பிரித்து கொடுத்து பிரிவினையை ஏற்படுத்தியது. அதேபோல் 1947ல் இந்து-முஸ்லிம் கலவரத்தை திட்டமிட்டு தூண்டி பெரும் நிலபரப்பான இந்தியாவை இந்தியா-பாகிஸ்தான் பிரித்து பகை நாடுகளாக மாற்றியது மட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையில் காஸ்மீரை சர்ச்சைக்குரிய பகுதியாக்கி அவற்றை தொடர்ந்து பகைநாடுகளாக வைத்திருக்கும் தந்திரத்தையும் வெற்றிகரமாக செய்தது. 

இதே பாணியில் இலங்கையில், தொகுதிவாரி தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி, ஆரம்பத்தில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழர்களுக்கும் சம பிரதிநிதித்துவம் வழங்கியதன் மூலம், சிங்களவர்கள் மத்தியில் சிறுபான்மையினர் பற்றிய வெறுப்புனர்வை தூண்டினர், மேலும் கண்டி சிங்களவர்-கரையோர சிங்களவர் என சிங்களவர்கள் மத்தியிலும் பிரிவினையை ஏற்படுத்தினர். 1915 சிங்கள-முஸ்லிம் கலவரத்தில் தமிழ் தலமைகள் சிங்களவர்களுக்கு சார்பாக செயற்படவே இருவரும் ஒன்றுபட்டு விடுவர் என அஞ்சி பிரித்தாணியா மனிங் அரசியல் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் அதுவரை பெரும்பான்மையின சிங்களவர்களுக்கு சமமான விகிதாசாரத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் பெற்று வந்த தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். எனவே 'இலங்கை தேசிய காங்கிரசில்' இருந்த தமிழர்கள் வெளியேரி 'தமிழர் மகா சபையை' அமைத்து தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கினர். இது காலப்போக்கில் இரு சமூகங்களுக்கிடையேயும் முரண்பாடுகள் வலுப்பெற்று அது, ஆயுதப் போராட்மாக மாறுவதற்கு மிக முக்கிய காரணியாக இருந்தது.

2. மொழிப்பிரச்சினை - 1943 ஜனவரி மாதத்தில் J.R. ஜெயவர்த்தனா அவர்கள் அரசாங்க சபைக்கு சிங்கள மொழி தனிச்சட்டம் தொடர்பான முன்மொழிவினை முன்வைத்தார். இதில் சிங்களம் அரச கரும, நிர்வாக, கல்வி மொழியாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் அரசாங்க பாடசாலைகளில் கல்வி மொழியாக தமிழ் மொழி மற்றும் சுதேச மொழிகளால் போதிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்து. இதற்கு ஆதரவாக C.W.W. கன்னங்கரா, V. நல்லையன், T.P. ஜாயா போன்றோர் ஆதரவான கருத்துக்களை தெரிவித்தார்கள். J.R. ஜயவர்தன இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். எனினும், சிங்கள மொழி அழிந்து போகக்கூடிய மொழி என்ற ரீதியில் அதற்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இவ்வாறு அரசியல் ரீதியாக ஒன்றுதிரட்டி செயற்படுத்துவதற்கு சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதன் பின்பு அரசியல் வாதிகள் தமது சுய நலன்களுக்காக மொழியை உபயோகிக்க முற்பட்டனர்.

அடுத்து, 1956 ஆம் ஆண்டு S.W.R.D. பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் என்ற சட்டம். இச்சட்டத்திற்கு முன்னர் நாட்டின் நீதிமன்ற மொழியாக, தந்திச் செயன்முறைகளிலும் ஆங்கில மொழியே உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்பட்டது. பாராளுமன்ற விவாதங்கள் கூட ஆங்கில மொழியில் நடத்தப்பட்ட போது தமிழ் அல்லது சிங்களத்தில் உரையாற்ற சபாநாயகரின் விசேட அனுமதியை பெறவேண்டி இருந்தது. இவைகளை இல்லாமற் செய்யவும் தனது தேர்தலில் கீழ்மட்ட கிராமப்புற சிங்கள மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளவுவும் தாம் பதவிக்கு வந்தால் சிங்களத்தை 24 மணி நேரத்திற்குள் நாட்டின் தேசிய மொழியாக பிரகடனப்படுத்துவதாக பண்டாரநாயக்க 1954 தேர்தல் பிரசாரங்களின் போது குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தான் இக்கொள்கையை ஆரம்பத்தில் முன்வைத்தாலும், J.R. ஜயவர்தனாவும் அதற்கு முன்னரே தனிச்சிங்களம் மட்டும் என்ற கொள்கையினை உடையவராக காணப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1956 தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவாக சிங்கள தேசியவாதக் கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியின் ஆதரவு பண்டாரநாயக்காவுக்கு கிடைத்தது. அத்துடன் 1956ஆம் ஆண்டானது புத்த பெருமானின் 2500ஆம் ஆண்டு ஜனன தினமாகவும் (புத்த ஜயன்தி) காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனால், சிங்கள பௌத்த பிக்குகளின் ஆதரவினை பண்டாரநாயக்க பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஒன்றாகவே தனிச்சிங்கள மொழி என்பது காணப்பட்டது. அத்துடன், இத்தேர்தல் பிரசாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியும் தாம் தேர்தலில் வெற்றி பெற்றால் சிங்களம் உத்தியோக பூர்வ மொழியாக்கப் படும் என்று உறுதியளித்திருந்தனர்.

பின்னர், பண்டாரநாயக்கா நாடுபூராகவூம் சிங்கள மக்களது ஆதரவினை பெற்று வெற்றிப் பெற்றார். இதனை தொடர்ந்து இவருடைய வாக்குறுதிப்படி 1956 ஜூலை 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் சிங்களம் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக ஆக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியும் வாக்களித்தது. இதன் பிரகாரம் முழு நாட்டினதும் நிருவாக, நீதி மொழியாக சிங்களம் ஆக்கப்பட்டது. இதனை தமிழ் மக்கள் எதிர்த்தனர். இதற்கு எதிராக சமஷ்டி கட்சி பல எதிர்ப்பு ஊர்வலங்கைளை நடாத்தியது. இந்த சிங்கள சட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரக நடவடிக்கைகளை சமஷ்டி கட்சியினர் வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொண்டனர். வடக்கு, கிழக்கிலிருந்து கொழும்பு நோக்கிய இந்த சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட போது, இதனை தடுப்பதற்காக சிங்கள மொழி பாதுகாப்புச் சபை தலைவர்டு, L.H. மேதானந்தா போன்ற நாட்டின் உயர் மதிப்பை பெற்றோரும் அமைச்சரான K.P.M. ராஜரத்ன ஆகியோர் காலி முகத்திடலில் நடந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை வன்முறை கொண்டு தடுத்தனர். இதில் அமைச்சர் ராஜரத்னாவின் ஆதரவாளர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இவ்வன்முறையில் பல தமிழர்கள் தாக்கப்பட்டதுடன் சில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருந்த போதிலும், பண்டாரநாயக்கா தான் பலம் உள்ளவர் என்பதனை எடுத்துக்காட்டுவதற்காக இவ்வாறான பல எதிர்ப்புக்களின் மத்தியிலும், 1956 ஜூலை 6ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் உதவியுடன் பாராளுமன்றத்தில் இதை சட்டமாக்கினார். இதன் பிறகு மேலும் பல கலவரங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டது. இதனை இராணுவம், பொலிஸ் கொண்டு அரசாங்கம் தடுத்தது. இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இனத்துவ ரீதியாக கூட்டுச் சேர்ந்து செயற்படும் அதேவேளை, சிங்கள மக்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதிலும் ஈடுபட்டனர்.

மொழி என்பது எழுத்து வடிவமாக பிரயோகிக்கப்பட்ட மற்றுமொரு பிரச்சினையாக 'ஸ்ரீ' எழுத்து பிரச்சினையை குறிப்பிடலாம். 1958 ஏப்ரல், மார்ச் மாதங்களில் இலங்கை போக்குவரத்து சபை, தமக்கு சொந்தமான பஸ் வண்டிகளில் சிங்கள ஸ்ரீ எழுத்தை பொதித்து, வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்து எழுந்ததுடன், அச்சிங்கள எழுத்துக்கு பதிலாக தமிழ் ஸ்ரீ எழுத்தை பொதித்தனர். இதற்கு பதிலடியாக கொழும்பிலுள்ள தமிழ் வீடுகளில், கடைகளில் சிங்களவர்களால் ஸ்ரீ எழுத்து எழுதப்பட்டன. இதனால் 1958இல் மீண்டும்; கலவரம் ஏற்பட்டதுடன் இக்கலவரத்திலிருந்து இத்தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தவறியது. இங்கு ஏற்பட்ட கலவரங்களினால் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்;டமையினை இட்டு, பண்டாரநாயக்கா கவலைப்பட்டதுடன் தேசிய விடுதலை முன்னணியூம் தடை செய்யப்பட்டது. 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ் மொழி விசேட சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சகித்துக் கொள்ள முடியாத பௌத்த பிக்கு ஒருவரினால் 1959 செப்டம்பர் 29ஆம் திகதி பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டார். இதன் பின்பு 1960 ஜூன் தேர்தலில் வெற்றியீட்டிய சிறிமாவோ பண்டாரநாயக்க நாடுபூராகவூம் நீதிமன்ற மொழியாக சிங்கள மொழி சட்டத்தினை அமுல்பபடுத்தினார். இதன்மூலம் மீண்டும் ஒரு முறை சமஷ்டி கட்சியினர் பாரியளவில் ஆர்ப்பாட்டங்களை, சத்தியாகிரகங்களை ஏற்படுத்தினர். எனினும் நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டு இராணுவத்தைக் கொண்டு இவ் எதிர்ப்பு நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன.

3. இலங்கை அரசியவில் மதத்தின் செல்வாக்கு – இலங்கையின் சிங்கள பௌத்த சமூகக் கட்டமைப்பானது சாதிக் குழுக்களின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. பொது வாழ்க்கையிலும், தனி வாழ்க்கையிலும் அவர்களுக்கிடையில் இச்சாதிமுறையின் செல்வாக்கு தெளிவாக உணரப்பட்டுள்ளது. குறி;ப்பாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கொவிகம, ரதல, கராவ, சலாகம போன்ற சாதிகள் பரவலாக அறியப்பட்டவையாகவும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாகவும் விளங்குகின்றன. சிங்கள சமூகத்தின் இச்சாதிக்கட்டமைப்பானது இந்து சமூகத்தில் போன்று வலுவானதாக இல்லாதபோதும் சமூக அரசியல் அடையாள உருவாக்கம் போன்ற முயற்சிகளில் தெளிவான செல்வாக்கை இவை கொண்டுள்ளன. சிங்கள சமூகத்தின் இச்சாதி அமைப்பானது மிக நீண்ட வரலாற்றிற்குரியது. இலங்கையின் தொடக்ககால மன்னராட்சிக் காலப்பகுதியிலும் இச்சாதி முறையிலான அரசியல் இலங்கையில் முன்னெடுக்கப்பபட்டிருக்கிறது. தமாரா குணசேகரா தரும் தகவல்களின்படி கண்டி அரசில் சாதி மிகத் தெளிவான செல்வாக்குடன் விளங்கியுள்ளது. சிங்களவர்கள் மத்தியில் காணப்பட்ட இச்சாதியானது அவர்களின் அரசியலில் மட்டுமன்றி மதம் மற்றும் ஏனைய சமூக நடவடிக்கைகளிலும் தெளிவான செல்வாக்கைச் செலுத்தின. பௌத்த மதபீடங்களில் குருமாராக சேர்ந்துகொள்ளுதல் சாதி அடிப்படையிலானது. ரதல பிரபுகளும் கொவிகம சாதியினருமே பிக்குகள் ஆக முடியுமாக இருந்ததை தமாரா குணசேகரா தனது ஆய்வொன்றில் எடுத்துக் காட்டியுள்ளார். மத நிறுவனங்களின் உயர் பதவிகள் கூட ரதல பிரிவினருக்கே வழங்கப்பட்டன.

பொதுவாக இச் சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்துள்ளன. கொவிகம, கராவ,  சலாகம போன்ற  சாதியினர் முறையே விவசாயம், மீன்பிடி, கறுவாப்பட்டை உரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். எனவே தாம் தாம் மேற்கொள்ளும் தொழில் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அரசியல் அதிகாரமும் தேவைப்பட்டது. எனவேதான் இச்சாதிகள் ஒவ்வொன்றும் காலனித்துவ இலங்கையின் அரசியல் சீர்திருத்தங்களில் சட்டசபைப் பிரதிநிதித்துவத்தை தனியாக கோரி நின்றன. அரசியலில் மட்டுமன்றி ஏனைய சமூகப் பொருளாதார நடவடிக்கைகளிலும் கூட தனித்தனியான நலன்களை முதன்மைப்படுத்தியும் பகைமையுணர்வுடனும் நடந்து கொண்டன.

சாதிரீதியான இந்த முரண்பாடுகளுக்கப்பால் வர்க்கரீதியான முரண்பாடுகளையும் சிங்கள பௌத்த சமூகம் வெளிப்படுத்தியது. முதலாளித்துவ உயர் குழாம், மத்தியதர வர்க்கம், கீழ் வர்க்கம் என வர்க்கரீதியாக பிளவுற்றுக்கிடந்த சிங்கள பௌத்த சமூகம் கரையோரச் சிங்களவர்கள் கண்டிச் சிங்களவர்கள் என்றவகையிலும் பிளவுபட்டிருந்தனர். இந்த ஒவ்வொரு குழுவும் தத்தமது நலன்களுக்காக மட்டுமே சிந்திக்கவும் செயற்படவும் செய்தன. இத்தகைய  வெளிப்படையான முரண்பாடுகளை தனது முக்கிய பண்பாகக் கொண்டிருந்த சிங்கள பௌத்த சமூகமானது சுதந்திரத்துக்குப்பின்னர் இந்த உள் முரண்பாடுகள் களையப்பட்டு இப்பன்மைத்துவ சமூக அடையாளங்கள் நீக்கப்பட்டு சிங்கள பௌத்தம் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

சிங்கள சமூகத்தின் மத்தியில் இந்த அடையாளத்;தைப் பெறுமானமுள்ளதாகவும் அங்;கீகரிக்கத்தக்கதாகவும் மாற்றுவதற்காக வேண்டி இலங்கையின் தேசிய அரசியலில் பௌத்தம் முதன்மைப்படுத்தப்பட்டது. இதன் வெளிப்பாடாகத்தான் 1956 இன் முதலாம் குடியரசு யாப்பிலும், 1972ல் கொண்டு வரப்பட்ட இரண்டாம் குடியரசு யாப்பிலும் பௌத்த மதம் முன்னுரிமைப் படுத்தப்பட்டு அரச மதமாக உள்வாங்கப்பட்டது.

இதன் பின்னரான காலப்பகுதியில் (சுதந்திரத்தின் பின்னர்) சிறுபான்மையினருக்கெதிரான மனநிலையைக் கொண்டிருந்த ஒரு சில பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தலைவர்களும் குழுக்களும் தங்களுக்கு பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கினைப் பயண்படுத்தி  இங்கிருந்த சிறுபான்மையினருக்கெதிரான தங்களது காழ்ப்புணர்வை அரசியல் மயப்படுத்தினர். இதில் அநகாரிக தர்மபால, கங்கொடவில சோமதேரர், ஞானசார தேரர் போன்றோர்களும் ஜாதிக ஹெல உரிமய, பொது பல சேனா, ராவண பலய, சிங்ஹளே போன்ற அமைப்புக்களும் குறிப்பிடத்தக்கவையாகும். 1883ஆம் ஆண்டு கத்தோலிக்கர்களும், பௌத்தர்களும் கொழும்பு நகர வீதிகளில் பகிரங்கமாக சண்டை செய்த சம்பவம், 1915ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலகம், புத்தள கலவரம், காலிக் கலவரம், 1983 யூலைக் கலவரம், 2015 பேருவளை வன்முறைத் தாக்குதல் சம்பவம் போன்றவற்றுக்கு இவ்வாறானவர்களின் செயற்பாடுகளே காரணமாக இருந்தது.

மேலும், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வட கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள், 1948 ஆம் ஆண்டு 18ம் இலக்கப் பிரஜா உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை, 1979 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், 1983இல் இடம் பெற்ற ஜூலைக் கலவரம், 1990இல் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை போன்ற பல்வேறு காரணிகள் இலங்கையில் இன முரண்பாடுகள் வளர்ச்சியடைய பின்னனியாக அமைந்தன. இதனால் பல்லாயிரக்கணக்காண உயிர் இழப்புக்களும் சொத்திழப்புக்களும் ஏற்பட்டன.

இவ்வாறு பல்வேறு காரணிகளின் விளைவாக இலங்கையின் இனங்களுக்கிடையிலான விரிசல்கள் அதிகரித்து, அதனால் அவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்தன. இதன் ஒரு விளைவாக உருவாகிய  ஆயுதப் போராட்டமானது சுமார் 30 வருடங்கள் நீடித்து தற்போது முடிவுக்கு வந்துள்ளதுடன் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பல முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், இவை திருப்திகரமானதாக இல்லை. ஏனெனில், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கின்ற பல காரணிகள் தொடர்ந்தும் இருந்து வருவதுடன் இதனால், சமூகங்களின் மத்தியில் முரண்பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனால் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு மோதல் நிலை தோன்றுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படவே செய்கின்றன.

எனவே இலங்கையில் காணப்படும் இனங்களுக்கு மத்தியிலான முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்ற, தூண்டுகின்ற காரணிகள் அனைத்தையும் இல்லாது செய்வதற்கான முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். அவற்றுள் பின்வருபவை முக்கியமானவைகளாகும். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான சம அந்தஸ்த்தை அரசியல் அமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தல்,  இனவாதத்தினை தூண்டுபவர்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படுவதினூடாக அதனை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல். சமயத்தளங்கள், சமயக்குழுக்கள் மற்றும் சமயத்தலைவர்கள் ஊடாக சமூகங்களின் மத்தியில் ஒற்றுமை மற்றும் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள், நிவாரணங்கள், உதவிகள் போன்றவற்றை முறையாக வழங்கள். சகவாழ்வு கற்கைகளை பல்வேறு மட்டங்களிலும் விரிவுபடுத்தல். அரசியல் செயற்பாடுகளில் மதங்களினதும், மதத்தலைவர்களினதும் தலையீடுகளை முற்றாக இல்லாது செய்து ஜனனாயக ரீதியான முறையில் அரசியலை முன்னெடுத்துச் செல்லல். மக்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளல். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் இலங்கையின் பல்லின சமூகங்களுக்கு மத்தியில் முரண்பாடுகளை இல்லாது செய்ய முடியும்.


By : M.S.M. Naseem - MA, BA(Hons), PGDE (R)

1 comment: