By : M.S.M. Naseem - MA (P.sc), BA (Hons), PGDE (R)
பாடங்களை கற்பிக்கின்ற போது பிள்ளைகளை உள ரீதியாக ஊக்குவிப்பதற்கான ஒரு நுட்ப முறையாக வினாக்கேட்டல் காணப்படுகின்றது. கற்பித்தல் செயற்பாடுகளில் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அவற்றை மனதில் பதிய வைப்பதற்கும் ஒரு நுட்பமுறையாக பயன்படுத்தப்படுகின்றது. விஷேடமாக ஏதாவதொரு குறிப்பிட்ட பிர்ச்சினையைத் தீர்க்கும் போது அதற்குப் பொருத்தமான முறையில் வினாக்களை வினவிப் பெற்றுக் கொள்ளும் விடைகள் அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தகவல்களை வழங்கக் கூடியதாகக் காணப்படுகின்றன. இதன் மூலம் கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டில் வினாக்களை உள்ளடக்குதல் அவசியமான ஒன்று என்பது புலப்படுகின்றது.
ஒரு ஆசிரியர் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போது பொருத்தமான வினாக்களை பொருத்தமான நேரங்களில் பயன்படுத்துகின்ற போது, அது கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு வழி செய்யகின்றது. இதற்கு ஆசிரியர் வினாக்களின் நோக்கங்கள், அவற்றின் வகைகள், வினாக் கேட்டலின் நுட்பமுறைகள் போன்ற விடயங்களை அறிந்திருப்பது அவசியமாகும்.
வினாக்கேட்டலுக்கான நோக்கங்கள் என்ற வகையில் பல விடயங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பின்வருவனவற்றை மிக முக்கியமானவைகளாக எடுத்துக்காட்டலாம். மாணவர்களின் முன் அறிவைப் பரிசோதிப்பதற்கு, குறிப்பிட்ட விடயங்களை ஞாபகத்திற்கு கொண்டுவரும் திறன்கள், இனங்கானும் மற்றும் விமர்சிக்கும் திறன்களை பெற்றுக் கொள்வதற்கு, மாணவர்களின் விருப்புக்களையும் முயற்சியையும் ஊக்குவிப்பதற்கும் மற்றும் அவர்களை உளரீதியாக சாந்தப்படுத்திக் கொள்வதற்கும். மாணவர்கள் பாடத்தை விளங்கிக் கொள்கிறார்களா? இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கு.
வினாக்களின் வகைகளைப் பொருத்தமட்டில், ஜே.ஸி. அகர்வால் என்ற அறிஞர் வினாக்களை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகின்றார். இவற்றை 'நீரினால் கிடைக்கும் பயன்கள்' எனும் பாடத் தலைப்புடன் தொடர்புபடுத்தி விளக்கமாக நோக்குவோம்.
1. அறிமுகம் அல்லது ஆரம்பம் செய்வதற்கான வினாக்கள்
மாணவர்களின் பாடம் தொடர்பான முன்னறிவைப் பரீட்சித்தல், நவீன அறிவை அதனுடன் தொடர்புபடுத்திக் கொள்ளல், மாணவர்களை ஊக்குவித்து ஆர்வத்தை தூண்டல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, இத்தகைய வினாக்கள் பாடத்தின் ஆரம்பத்தில் வினவப்படுவதாகும்.
இவ்வாறான வினாக்கள் மூலம் மாணவர்கள் பாடத்துக்கு எந்தளவு ஆயத்தமாக உள்ளனர், அவர்களின் பாடப்பிரவேசம் எவ்வாறானது என்பதை ஆசிரியரால் பரீட்சித்துப் பார்க்க முடிகின்றது. இக்கட்த்தில் ஆசிரியர் அறிந்ததிலிருந்து அறியாதவற்றுக்கச் செல்வதினூடாக உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வகையான வினாக்கள் தலைப்புக்கு ஏற்றவையாக காணப்பட வேண்டியதுடன் வினாக்களை 2 அல்லது 3 ஆக வரையறுத்துக் கொள்ளவும் வேண்டும்.
உதாரணமாக :
- நீங்கள் நீரை பயன்படுத்துகிறீர்களா?
- ஆம் எனின் எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள்?
- நீரின் பயன்கள் பற்றி அறிந்து கொள்வோமா?
- நீரின் முக்கியத்துவத்தைப் பற்றி கலந்துரையாடுவோமா?
2. அபிவிருத்திக்கான வினாக்கள்
இத்தகைய வினாக்கள் விசேடமான எண்ணக்கருக்களை அபிவிருத்தி செய்தல், மாணவர்கள் பாடவிடயங்களை அறிந்து கொள்ள வழிகாட்டல், முக்கியமான விடயங்கள் மீது அவதானம் செலுத்தல், கட்டம் கட்டமாக அறிவை அபிவிருத்தி செய்தல், மாணவர்களின் அவதானிப்புத்திறன்களை ஒப்பிடுவதற்கும் ஒருமுகப்படுத்துவதற்குமான திறன்களை வழங்குதல், அவதானதமற்ற மாணவர்களின் அவதானத்தைப் பெற்றுக் கொள்ளல் போன்ற நோக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகும்.
ஒரு ஆசிரியர் இவ்வாறான வினாக்களை ஒழுங்குமுறையில் கேட்பதற்கான போதியளவு நிபுத்துவம் பெற்றவராக காணப்படுவதுடன் மாணவர்களே எண்ணிப்பர்ப்பதற்கும், விடயங்களை அறிந்து கொள்வதற்கும் வழிகாட்டவும் வேண்டும்.
உதாரணமாக :
- நீரின் மூலம் எமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமா?
- எவ்வாறான தேவைகளை பூர்த்தி செய்யலாம்?
- நீரை மனிதர்கள் மட்டுமா பயன்படுத்துகின்றார்கள்?
- வேறு எந்த வகையான தேவைகளுக்கு நீர் பயன்படுத்தப்படுகின்றது?
- (அவதானமில்லாத மானவர்களை நோக்கி) நீரினால் மிருகங்கள் அடையும் பயன்கள் என்னவென்று தெரியுமா?
- நீர் தேவையற்ற விதத்தில் பயன்படுத்தப் படுவதை அவதானித்துள்ளீர்களா?
3. புணர் அபிவிருத்திக்கான வினாக்கள்
இவ்வகை வினாக்கள் பாடத்தின் இறுதியல் அல்லது பாடத்தின் ஒவ்வொரு கட்டத்தின் இறுதியில் வினவப்படுபவையாகும். இவ்வினாக்கள் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்பார்த்த விடயங்களைக் கற்றுக்கொண்டார்களா என்பதை ஆசிரியர் அறிந்து கொள்ளுதல் மற்றும் புணர் அபிவிருத்திக்கும் பயிற்சிக்குமான சந்தர்ப்பங்களை பெற்றுக் கொடுத்தல் ஆகிய இரு நோக்கங்களை நிறைவேற்றக் கூடியவைகளாக அமைகின்றன.
உதாரணமாக :
- நீரின் மூலம் பயனடைபவர்கள் யார்?
- நீரின் மூலம் மனிதர்கள் அடையும் பயன்கள் 3 ஐக் குறிப்பிடுக?
- நீரின் மூலம் தாவரங்கள் அடையும் பயன்கள் 2 ஐக் குறிப்பிடுக?
- நீரின் மூலம் ஏனைய விலங்குகள் அடையும் பயன்கள் 2 ஐக் குறிப்பிடுக?
- நீர் வீண்விரயமாகும் வழிமுறைகள் சிலவற்றைக் குறிப்பிடுக?
4. மதிப்பீடு அல்லது பரீட்சைக்குரிய வினாக்கள்
இறுதியில் கற்பித்தலின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட அடைவை மாணர்கள் அடைந்துள்ளனரா என்பதையும், அதை எந்த அளவிற்கு அடைந்தள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த வினாக்கள் அமைதல் வேண்டும். அந்தவகையில் ஒப்பிடுவதற்கு அல்லது சமப்படுத்துவதற்கு, ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதற்கு அல்லது எதிர்ப்பதற்கு, புதிய சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்கு, பகுப்பாய்வு செய்வதற்கு, காரணத்துக்கும வினாவுக்குமிடையில் காரணத்தைக் காட்டுவதற்கு, உதாரணத்துக்கு அல்லது முன்மாதிரிக்கு, விமர்சித்தல், தீர்மானம் எடுத்தல், கலந்துரையாடல், பொருள் கூறுதல், சுருக்கிக் கூறுதல் போன்றவற்றிற்கு இவ்வகையான வினாக்களைப் பயன்படுத்த மடியும்.
உதாரணமாக :
- நாம் ஏன் நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கான 3 காரணிகள் குறிப்பிடுக
- நீரை வீண்விரயம் செய்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் 3 ஐக் குறிப்பிடுக?
- நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் 5 ஐக் குறிப்பிடுக?
- நீரை வீண்விரயம் செய்யாது சிக்கனமாக பயன்படுத் வேண்டுமென்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
இவ்வாறான அடிப்படையில் ஒரு ஆசிரியர் சிறந்த பண்புகளைக் கொண்ட வினாக்களை பொருத்தமான நுட்ப முறைகளைப் பின்பற்றி, பொருத்தமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அது குறித்த கற்றல்-கற்பித்தலில் வினைத்திறனை அதிகரிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
எனவேதான் தற்கால கல்வியில் வினாக்களை பயன்படுத்துவது பயனுள்ள அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது.
By : M.S.M. Naseem - MA (P.sc), BA (Hons), PGDE (R)
By : M.S.M. Naseem - MA (P.sc), BA (Hons), PGDE (R)
This comment has been removed by the author.
ReplyDeleteGood Essay. Use full to me.
ReplyDelete. Thank you
Good essay. Thank you. Usefull
ReplyDeleteThank sir
ReplyDelete