.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, June 11, 2023

சமகால அரசியல் கருத்தியல்களும் அவற்றின் பொருத்தப்பாடுகளும்

கருத்தியல் அறிமுகம்

கருத்தியல் எனும் சொல் முதலில் பிரெஞ்சுப் புரட்சியில் உருவாகிப் பின்னர் பலவகைப் பொருள் மாற்றங்களை அடைந்த ஒன்றாகும். கருத்தியல் (Ideology) என்பது தனி ஒருவர் or ஒரு குழு or ஒரு சமூகம் பெற்றிருக்கும் வரன்முறை நம்பிக்கைகள், மன எண்ணக்கருக்கள் ஆகியவற்றின் நுண்ணிலைத் தொகுப்பாக காணப்படுவதுடன், அது உலகப் பார்வை, கற்பனை (சமூகவியல்), இருப்பியல் (மெய்யியல்) ஆகியவற்றை விடக் குறுகிய கருத்துப்படிமம் கொண்டதாகும். கருத்தியல் என்றால் என்ன என்பது பற்றி பொதுவான ஒரு வரைவிளக்கனம் காணப்படாத போதும், அது தொடர்பாக பின்வரும் மூன்று அறிஞர்களின் கூற்றுக்கள் பிரபல்யமானதாகும்.

'கருத்தியல் என்பது, நம்பிக்கைகள், இலக்குகள், எண்ணக்கருக்கள் ஆகியவற்றின் ஒரு தொகுதி. பொதுவாக அரசியலில் இது பயன்படுத்தபடுகிறது. கருத்தியல் என்னும் சொல்லுக்குப் பதிலாக கருத்துநிலை, சித்தாந்தம் போன்ற சொற்களும் வழக்கில் உள்ளன. சமூக ஊடாட்டம் வளர வளர மனிதர்கள் பொதுவான எண்ணக் கருத்துக்களையும், உலகம் பற்றியனவும், தமது சமூக வாழ்க்கை பற்றியனவும், தெய்வம், சொத்து, தர்மம், நீதி ஆகியவை பற்றியவையுமான நோக்குகளை வளர்த்துக் கொள்கிறார்கள். இவ்வாறாக இவை சமூகம், அரசியல், சட்டம், மதம், கலை, மெய்யியல் நோக்கு ஆகியவை தொடர்பான கருத்துநிலைப்பட்ட எண்ணங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இவையே கருத்துநிலை என்று பெரும்பாலும் குறிப்பிடப்படுகின்றது.' - ஜேம்ஸ் கிளக்மன்

'கருத்தியல் என்பது நிலவும் மெய்ந்நிலை நிலைமைகளினைச் சார்ந்த கற்பனை உணர்வாகும்.' - L. Althusser

'கருத்தியல் என்பது அரசியல் மற்றும் சமூக பெறுமதிகளை பங்கீடு செய்தல் தொடர்பாக கவனம் செலுத்தும் கருத்துக்களின் முறைமையாகும்.' - S.P.Huntington 

இந்தவகையில், பல்வேறுபட்ட காலப்பகுதிகளிலும் உலகில் மதம், புவியியல், தத்துவம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என பல்வேறு துறைகளிலும் பல கருத்தியல்கள் தோற்றம்பெற்றன. அதில் சில வலுவிழந்துவிட்டதுடன், இன்னும் சில இன்றும் காணப்படுகின்றன. இந்தவகையில், அரசியலிலும் பல கருத்தியல்கள் தோற்றம் பெற்றது. அவற்றில் சில கருத்தியல்கள் பரவலாகவும், இன்னும் சில கருத்தியல்கள் சிறிய அளவிலும் மக்களால் பின்பற்றப் பட்டு வருகின்றன.


அரசியல் கருத்தியல்

சமூகத்தின் அரசியல் அறிவிற்கு, தனி நபர்கள் மற்றும் சமூக குழுக்களின் அரசியல் செயற்பாட்டிற்கும், அரசியல் நிறுவனங்களின் தன்மை மற்றும் பணிகளையும் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்ற ஒழுங்கமைந்த வகையில் காணப்படும் அரசியல் கருத்துக்களின் தொகுதியே அரசியல் கருத்தியல்களாகும். அரசியல் கோட்பாடுகள் மற்றும் அரசியல் சிந்தனைகள் என்பன இதற்காக பயன்படுத்தப்படுகின்ற இருவேறு பதங்களாகும். அரசறிவியலில் அரசியல் கருத்தியல்கள் என்ற எண்ணக் கருவானது முறையாக அமையப்பெற்றுள்ள அரசியல் சிந்தனை தொகுதிகள் மற்றும் கருத்துக்களின் தொகுதி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகிறது.

ஒரு அரசியல் கருத்தியலானது பிரபலமான ஒரு சிந்தனையாளர் அல்லது பல சிந்தனையாளர்களின் கற்பிதங்கள் மற்றும் கருத்துக்களின் தொகுதியாக கட்டியெழுப்பப்பட்டிருக்கலாம். அல்லது பிரதான ஒரு சிந்தனையாளரின்றி சிந்தனையாளர்கள் பலரினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் வளர்ச்சியின் பெறுபேறாக கட்டியெழுப்பப்பட்டிருக்க முடியும். இந்தவகையில், மிகமுக்கியமான அரசியல் கருத்தியல்களாக தாராண்மை வாதம், முதலாளித்துவம், மார்க்சிஸம், பாஸிசம், குடியரசு வாதம், சமூக ஜனநாயக வாதம், தேசிய வாதம், மதசார்பின்மைவாதம், பெண்ணிய வாதம் போன்றவற்றை அடையாளப்படுத்தலாம்.

கருத்தியலின் முக்கியமான நோக்கம் நெறி சார்ந்த சிந்தனைகள் ஊடாக மாற்றங்களை உண்டாக்குவதாகும். கருத்தியல்கள் பொது விடயங்களில் பயன்படுத்தப்படும் நுண்ணிலைச் சிந்தனை (abstract thought) முறைமைகள் எனலாம். இதனால் கருத்தியல் என்னும் கருத்துரு அரசியலில் சிறப்பிடம் பெறுகிறது. வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும் சொல்லப்படாவிட்டாலும் எல்லா அரசியல் போக்குகளும் உள்ளார்ந்த நிலையில் ஒரு கருத்தியல் நிலையைக் கொண்டிருக்கின்றன.

எனவேதான் தற்கால நடைமுறையில் காணப்படும் மேலே குறிப்பிடப்பட்ட அரசியல் கருத்தியல்கள், தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் அவற்றின் வகிபங்கு மற்றும் தற்கால தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் அவற்றின் பொருத்தப்பாடு என்பன பற்றி இங்கு பார்ப்போம்.


இன்றைய தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் கருத்தியல்களின் வகிபாகம்

தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் கருத்தியல்கள் மிகவும் முக்கியத்துவமிக்கவைகளாக காணப்படுகின்றன. அரசியலை கற்கவும், அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இவை பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக தேசிய மற்றும் சர்வதேச அரசியலினை விளங்கிக் கொள்ள கருத்தியல்கள் மிகவும் அவசியமானவையாகக் காணப்படுகின்றன. ஒரு அரசில் வாழும் மக்களின் உரிமைகள், சுதந்திரம் எந்த அளவில் காணப்படுகின்றன. மக்கள் எவ்வகையான ஆட்சியினை எதிர்பார்க்கின்றனர். ஆட்சியாளர் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் எவ்வாறு காணப்படுகின்றது. போன்ற பல அம்சங்களை விளங்கிக் கொள்ளவும், கால சூழ்நிலைகளுக்கேற்ப ஒரு அரசிற்கு பொருத்தமான கொள்கைகள் எவை என்பதை தீர்மானிக்கவும் இது உதவுகின்றது.

ஒரு அரசின் ஆட்சி, அதிகாரமானது அரசியல் கருத்தியல்களை மையப்படுத்தியே ஏற்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அதாவது, மக்கள் தம்மை வழிநடத்துகின்ற அரசாங்கத்தை அல்லது தமது ஆட்சியாளர்களை தெரிவு செய்கின்றபோது, குறிப்பிட்ட கட்சிகள் அல்லது குழுக்கள் எந்த கருத்தியலை ஆதரிக்கின்றது. அல்லது கட்சிகள் மற்றும் குழுக்கள் கொண்டுள்ன கருத்தியல்களில் தமது அரசுக்கும் தமக்கும் எது பொருத்தமானது என்ற அடிப்படையை வைத்தே தெரிவு செய்கின்றனர்.

இதேபோல், சர்வதேச அளவில் அரசுகளின் கூட்டினிகள் மற்றும் அவற்றுக்கிடையிலான உறவுகள் என்பன பெரும்பாலும் அவைகளது அரசியல் கருத்தியல்களை மையப்படுத்திய வகையிலேயே காணப்படுகின்றன. உதாரணமாக, கம்யூனிஸ நாடுகிளின் கூட்டனி, முதலாளித்துவ நாடுகளின் கூட்டனி போன்றவற்றை எடுத்துக்காட்டலாம். இவ்வாறு அரசுகள் தமது வேறுபட்ட தேசிய நலன்களை அடைந்துக் கொள்ள அரசியல் கருத்தியல்களை வழிகாட்டிகளாக பயன்படுத்துகின்றன. இந்தவகையில் தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் அரசியல் கருத்தியல்களின் வகிபாகமானது மிக முக்கியத்துவமிக்க ஒன்றாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.


சமகால நடைமுறையில் காணப்படும் கருத்தியல்கள் 


தாராண்மை வாதம் (Liberalism)

தாராண்மை வாதக் கருத்தியலானது, 'அரசு என்பது மக்களினுடைய நலன்களை பேணுவதற்காக மக்களால் உருவாக்கப்பட்ட உயர் சமூக நிறுவனம் என்றும் மனிதனின் முன்னேற்றப்பாதையில் அரசு ஒரு வழிகாட்டி' என்று குறிப்பிடுகிறது. இந்தவகையில், இக்கருத்தியலில் மக்களின் நலன்களைப் பேணுதல், மக்களினால் உருவாக்கப்படுதல் எனும் இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தாராண்மை வாதக் கருத்தியலானது, புராதன கிரேக்க காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்த போதும், தற்காலத்தில் நடைமுறையில் இருக்கும் இதன் கோட்பாடுகள், கி.பி 18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பாவில் அறிமுகமானதாகும். இவற்றை முன்வைத்து பிரபல்யப்படுத்தியவர்களில் ஜோன் லொக், அடம் ஸ்மித், டேவிட் ரிகாடோ, ஜே. எஸ் மில், ஜெரமி பென்தம், ஜோன் மார்சல் ஆகியோர் மிக முக்கியமானவர்களாவார்கள். இங்கு அரசின் பணியானது, சமுதாயத்தின் தேவைக்காகவும், நன்மைக்காகவும் காணப்படுவதால், காலத்திற்கு காலம் அது மாறுபட்டு செல்லும் போக்கினை கொண்டதாக காணப்படுகின்றது.

இந்தவகையில், வர்த்தகத்துறை வளர்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தில் இக்கொள்கையானது ஆரம்பத்தில் பொருளியலிலேயே தோற்றம் பெற்றது. பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் தலையீடுகளோ, கட்டுப்பாடுகளோ இருக்கக் கூடாது எனவும், எவ்வளவு செல்வத்தையும் உழகை;கும், அனுபவிக்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்மெனவும் கூறி, அரசானது பொருளாதார நடவடிக்கையிலிருந்து முற்றிலும் விலகியிருக்கும் தலையிடாக் கொள்கையை வழியுறுத்தியது. காலப்போக்கில், பொருளியலில் முன்வைக்கப்பட்ட தாராண்மைக் கொள்கை அரசியலிலும் பரவி அரசின் தலையிடாக் கொள்கையை வாதிட்டது. இதன் மூலம் அரசானது, சட்டத்தையும் ஒழுங்கையும் பேனும் கருமத்தோடு மட்டும் தனது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டது. இதேவேளை, கைத்தொழில் புரட்சிக்காலத்தில் ஜே. எஸ் மில், ஜெரமி பென்தம் போன்றோர் அரசின் தலையிடாக் கொள்கைக்குப் பதிலாக பொருளாதார விருத்தியிலும் பொருளாதார விருத்தியின் பயன்களை சமூகத்தில் மீளப்பகிர்ந்தளிப்பதலும் அரசு நேரடியாக தலையிட வேண்டுமெனவும் வாதிட்டனர்.

பின்னர் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அரசானது காலத்தின் தேவைக்கு பொருந்தும் வகையில், சமூகத்தின் சகல துறைகளிலும் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதில் தலையிட வேண்டுமென அரசு பற்றிய பொதுநலக் கொள்கை வழியுறுத்தப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய 21ம் நூற்றாண்டில் சமூக விவகாரங்களில் குறைந்த முகாமைப்படுத்தலை அரசும், பொருளாதார விடயங்களை முகாமைப்படுத்தலை தனியார் துறையும் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலான 'குறைந்தபட்ச அரசு' என்ற நவ தாராண்மைவாதக் கருத்தியலே தற்காலத்தில் காணப்படுகிறது. 


மார்க்ஸிசம் (Marxism)

ஜேர்மனியைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸ்(Karl Marx) என்பவரால் முன்வைக்கப்பட்ட அரசியல் கருத்தியலே சோஷலிஸக் கொள்கை அல்லது மார்க்ஸிசக் கொள்கை எனப்படுகிறது. இவர், 'அரசு என்பது மக்கள் நலன் பேனும் அமைப்பு அல்ல மாறாக மக்களிடையே ஒரு பகுதியாக இருக்கும் ஒரு வர்க்கத்தின் நலன் பேனும் அமைப்பு' என்றார். இவர் தனது இக்கருத்தை, மூலதனம் (Das Capital) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (Communist Manifesto) ஆகிய தனது புத்தகங்களின் மூலம், சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சியை பல கட்டங்களாக பிரித்து விளக்கினார்.

மார்க்ஸிச கொள்கையின் பிரதான பண்புகளாக பின்வருபவை காணப்படுகின்றன. இங்கு சொத்துக்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமான வகையில் பொதுவுடமையாக இருப்பதுடன், மக்கள் அனைவரும் அரசின் ஊழியர்களாக காணப்படுவர். மக்களினுடைய பொதுத்தேவைகளை அரசே நிறைவேற்றிக் கொடுப்பதுடன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தகுதிக்கேற்ற தொழிலையும், தேவைக்கேற்ற ஊதியத்தையும் வழங்கும். மேலும் இங்கு பொருளாதார ரீதியாக மக்களிடையே ஒரு நடைமுறைசார் சமத்துவம் காணப்படுவதுடன், தொழில்களைப் பொருத்தவரையிலும் ஊதியத்திலோ, அந்தஸ்த்திலோ மக்களிடையே பெரிய வேறுபாடுகள் காணப்படமாட்டாது.

இதேபோல், பாட்டாளி வர்க்க மக்களின் புரட்சி மூலம் சோஷலிஸ அரசு உருவாக்கப்படுவதுடன், முதலாளித்துவ வர்க்கம் திரும்பவும் மீண்டெழுந்து அரசைக் கைப்பற்றாது இருப்பதற்காக இவ்வர்க்க மக்களின் சர்வதிகாரம் நடைமுறையில் இருக்கும். மேலும் கம்யூனிஸ அல்லது பொதுவுடமைக் கட்சி எனப்படு;ம் பாட்டாளி வர்க்கத்தினரின் சார்பில் செயற்படும் தனிக்கட்சி முறையே இங்கு அமுலில் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


முதலாளித்துவம் (Capitalism)

முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பொருளியல் முறைமையை மையப்படுத்திய ஒரு கருத்தியலாகும். இம்முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்தி, பொருள்களின் விலை குறித்தல், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், மூலதனப் பொருட்கள், கூலி, நிலம் மற்றும் பணம் ஆகியவற்றில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனிப்பட்டவர்களினதும், சட்ட அடிப்படையில் நபர்களாகச் செயற்படும் தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுக்களினதும், உரிமைகள் தொடர்புபடுகின்றன. நிலப்பிரபுத்துவத்தின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவம் மேலை நாடுகளில் முதன்மை பெற்று விளங்கியதுடன், 16ம் மற்றும் 19ம் நூற்றாண்டுக்கிடையில் அங்கு நிறுவனப்படுத்தப்பட்டது. வணிக முதலாளித்துவத்தின் தொடக்க வடிவங்கள் மத்திய காலத்தில் சிறப்புற்று விளங்கின. இது இங்கிலாந்தில் இருந்து படிப்படியாக அரசியல் மற்றும் பண்பாட்டு எல்லைகளைக் கடந்து பிற இடங்களுக்கும் பரவியது. 19ம், 20ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம், உலகம் முழுவதிலும் தொழில் மயமாக்கத்துக்கான முக்கிய காரணியாக விளங்கியது.

முதலாளித்துவ கருத்தியலானது மூலதன குவிப்பு, தயாரிப்பு உற்பத்தி, தனியார் உடைமை உற்பத்தி முறை, அதிக அளவு ஊதிய உழைப்பு, இலாபத்தை சம்பாதிக்க பணம் முதலீடு, போட்டித்தன்மைமிக்க சந்தை முறை காணப்படல், போட்டியிடும் பயன்பாடுகளுக்கு இடையே வளங்களை ஒதுக்குவதற்கு விலைக் கருவி பயன்படுத்தப்படல் போன்ற அம்சங்களை தனது பிரதான பண்பியல்புகளாகக் கொண்டு காணப்படுகின்றது.


பாசிஸம் (Fascism)

20ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு தீவிர அரசியல் கருத்தியல் பாசிஸமாகும். இக்கருத்தியலின் தந்தையாக இத்தாலியின் சர்வாதிகாரியான பெனிடோ முசோலினி கருதப்படுகிறார். 1922ம் ஆண்டு முசோலினையும் அவரது பாசிசக் கட்சியும் இத்தாலியில் பதவிக்கு வருவதோடு பாசிசக் கோட்பாடும் ஆரம்பமாகியது. 1933ம் ஆண்டு ஜெர்மனியில் பதவிக்கு வந்த சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லர் முசோலினியை பின்பற்றி நாசிசம் (Nazismஎன்ற பெயரில் பாசிசக் கோட்பாட்டை உருவாக்கினார். பாசிஸம் என்ற சொல் ‘Fascio’ அல்லது ‘Fasci’ என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இதன் பொருள் இறுக்கமாக கட்டப்பட்ட தடிக்கட்டு (well tied bundle of nods) என்பதாகும். பாசிஸம் இத்தாலிய இராணுவத்திற்குள் ஐக்கியம், பலம், ஒற்றுமை என்பவற்றை இறுக்கமாக ஏற்படுத்த முயன்றது. புராதன உரோமானிய இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட கோடரிச் சின்னமே பாசிச இராணுவத்தின் சின்னமாக பயன்படுத்தப்பட்டது.

ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் ஏனைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதே பாசிஸமாகும். இன்னொரு வகையில் கூறுவதாயின், தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிஸமாகும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். முசோலினியின் இத்தாலி, ஹிட்லரின் ஜெர்மனி பாசிஸத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

பாசிஸமானது அரசை மேன்மைப்படுத்தும் ஒரு தத்துவமாகும். இந்தவகையில் இக்கருத்தியலை முன்வைப்பவர்கள் 'அரசுக்காக மக்களேயன்றி மக்களுக்காக அரசு இல்லை' எனக் கூறுகின்றார்கள். இதன் மூலம் ஜனநாயகத்தினை பாசிஸம் நிராகரிக்கிறது. மேலும் இது, தனியொரு கட்சியை கொண்ட ஒரு ஆட்சி முறை மற்றும் அதிகாரம் மிக்க ஒரு தலைவனையும் அத்தலைவனை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்கள் கூட்டத்தினையும் கொண்ட அரசாங்க முறையாகவும் காணப்படுகின்றது. இது அகிம்சை, சமாதானம், சோசலிஸம், ஜனநாயகம், தனிமனித வாதம் என்பவற்றை நிராகரிப்பதுடன் பொய், பகட்டு, அடக்குமுறை, சந்தர்ப்ப வாதம், அதிகார ஆசை, போர் வெறி போன்றவற்றில் நம்பிக்கை கொண்ட ஒரு கருத்தியலாகவும் காணப்படுகிறது. பாசிஸவாதிகள் தமது கட்சி அங்கத்தவர்களை இராணுவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பாசிஸ்ட்டுக்கள் தங்கள் கோட்பாடுகளுக்கு தெளிவான விளக்கங்களை முன்வைப்பதில்லை. கோட்பாட்டை விட செயற்பாட்டிலேயே நம்பிக்கை கொண்ட இவர்கள் செயற்பாட்டினை நியாயப்படுத்த கோட்பாட்டை உருவாக்குபவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கோட்பாட்டையும் செயற்பாட்டையும் மாற்றியமைத்துக் கொள்வார்கள். நம்பு, கீழ்ப்படி, போர்புரி என்பதே இவர்களின் உபதேசமாகும். மிகவும் உறுதியாக மையப்படுத்தப்பட்ட அதிகாரம், எதிர்க் கட்சியில்லாமை, விமர்சனம் இல்லாமை, தேசத்தின் எல்லா விடயங்கள் மீதான கட்டுப்பாடு, ஆக்கிரமிப்புத் தேசியவாத உணர்வு, கம்யூனிச எதிர்ப்பு போன்ற பண்புகள் இவர்களிடம் காணப்படுகிறது. பாசிஸம் சர்வ அதிகாரங்களும், சர்வ வல்லமையும் கொண்ட தனியொரு ஸ்தாபனமாக அரசை உருவாக்குகின்றது. அரசில் வெகுஜன தொடர்பு சாதனங்கள், கல்வி முறைமைகள் அனைத்தும் அரசின் பூரண கட்டுப்பாட்டிலிருக்கும். இவைகளினூடாக பாசிஸமானது தனது பிரச்சாரங்களைத் திட்டமிட்டு மேற்கொள்ளும். இங்கு பலாத்காரம் என்பது நிரந்தரமானதாகும். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், வளர்ப்பதற்கும் எதிரிகளை ஒழிப்பதற்கும், பலாத்காரமே தேவையாகும். இரகசிய போலிஸ் பிரிவின் மூலம் எதிரிகளை இனம் கண்டு இராணுவ நீதிமன்றங்களுடாக கடுமையான தண்டனை வழங்கி பலாத்கார ஆட்சி நடத்தப் படவேண்டும்.

இவ்வாறான பண்புகளைக் கொண்ட பாசிஸமானது, 2ம் உலக மகா யுத்த முடிவில் ஹிட்லரும், முஸேலினியும் மறைந்ததைத் தொடர்ந்து வலுவிழக்கத் தொடங்கியது. எனினும் இன்றும் பல நாடுகளில் குறிப்பாக இராணுவ ஆட்சி இடம்பெறும், மத அடிப்படைவாதம் ஆட்சி செலுத்தும் மற்றும் பலவீனமான ஜனனாயகத்தை பின்னற்றும் நாடுகளில் இதன் கருத்தியல்கள் பரவலாகவும், சாதாரண அளவிலும் காணப்படுகின்றன.


தேசிய வாதம் (Nationalism)

நவீன உலகில் அரசின் அரசியல் முரண்பாடுகள் மற்றும் அரசுகளுக்கிடையிலான உறவுகள் என்பவற்றை தீரமானிப்பதில் செல்லவாக்குச் செலுத்துகின்ற மிக முக்கிய ஒரு காரணியாக தேசியவாதம் காணப்படுகின்றது. இது 19ம் மற்றும் 20ம நூற்றாண்டுகளில் வளர்ச்சியடைந்த ஒரு முக்கிய அரசியல் கருத்தியலாகக் காணப்படுகின்றது. தேசிய வாதம் தொடர்பாக பல அறிஞர்கள் பல விதமாக வரைவிலக்கணப்படுத்துகின்றனர். எனினும், பொதுவாக தேசியவாதம் என்பது நாட்டின் மீது வைத்திருக்கின்ற பற்றுணர்வு அல்லது காதல் என்பதையே வெளிப்படுத்துகின்றது.

தேசியவாதம் என்பதற்கு முறையான ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனையொன்றில்லாமை மற்றும் தனித்துவமான தத்துவவியலாளர்கள், சிந்தனையாளர்களினால் தேற்றுவிக்கப்படாவிட்டாலும் பல்வேறு சமூகங்களிலிருந்து தோற்றம் பெற்றுள்ள தேசியவாத கருத்தியல்களில் பொதுவான கட்டமைப்பொன்று காணப்படுகின்றமை இதன் விசேட அம்சமாகும்.

தேசியவாதத்தை பின்வரு பிரதான மூன்று அணுகுமுறைகளினூடாக இனங்காணலாம்.
  • மரபு ரீதியான அணுகுமுறை (Primordialist: தேசியவாதமானது பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான மனித வரலாற்றைப் போன்றே பழைமையான நிகழ்வாக கொள்ளப்படுகின்றது.
  • கருவிவாத அணுகுமுறை (Instrumentalist: இனம் என்ற கருத்து அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்துகின்ற கருவியாகும் என இதனால் குறிப்பிடப்படுகிறது.
  • நவீன அணுகுமுறை (Modernist) : 18ம் நூற்றாண்டின் பின்னர் ஐரோப்பிய கைத்தொழில் முதலாளித்துவ நாடுகளில் தேசிய அரசுகள் வளர்ச்சியடையும் செயற்பாட்டுடன் கட்டியெழுப்பப்பட்ட கருத்தே தேசியவாதாகும்.

ஏதேனும் சமூகத்திற்கு தாங்கள் அனைவரும் கூட்டாக இனம் எனும் பாரிய சமூகத்திற்குள் உடன்படுவோம் என்கின்ற உணர்வினைக் கட்டியெழுப்புவதே தேசியவாதத்தின் பிரதான பணியாகும். ஒரே இனமாக சிந்திப்பதற்கு அவர்களுக்கிடையே பொதுத்தன்மை தொடர்பான உறுதிப்பாடு இருத்தல் வேண்டும். தேசியவாதிகள் இதனை 'தேசிய அடையாளம்' (National Identityஎன்கின்றனர். இங்கு தேசிய அடையாள சின்னங்களாக மொழி, மதம், கலாசாரம், பொது வரலாறு, நிலப் பிரதேமும் போன்றவை காணப்படுகின்றன. பொதுத்தன்மை தொடர்பான உணர்வின் மூலம் தோற்றம் பெறுகின்ற தேசியவாதம் பின்னர் அரசியல் தன்மையையும் பெற்றுக் கொள்கிறது. இதன் மூலம் 'இனம்' என்பதற்கு அரசியல் அடையாளமொன்று கிடைப்பதோடு அதனூடாக மக்களுக்கு அரசியல் இலக்குகளை பெற்றுக் கொடுத்து இனத்தை அரசியல் ரீதியாக வழிநடத்தும். அரசியல் சுதந்திரம், பிரதேச சுய ஆட்சி மற்றும் சமூக குழுக்களின் உரிமைகள் என்பன இந்த அரசியல் நோக்கங்களில் பிரதானமாகின்றன.

இனம் என்று குறிப்பிடப்படுகின்ற ஒரு சமூகத்தை ஏனைய சமூகங்களிலிருந்து வேறுபடுத்தி அடையாளம் காண்பது அரசியல் ரீதியாக தேசியவாதத்தின் பணியாகக் காணப்படுகின்றது. அத்துடன், தேசிய அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய அரச தேசியவாதம் மற்றும் மொழி, மதம், கலாசாரம் பொது அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட இனத்துவ தேசியவாதம் என்பன தற்கால தேசியவாதத்தின் பிரதான இரு தன்மைகளாகக் காணப்படுகின்றன.


குடியரசுவாதம் (Republicanism)

குடியரசுவாதம் அரசியல் எண்ணக்கருவாகவும், தத்துவமாகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இதன் வரலாறு கிரேக்க, உரோம காலங்கள் வரை நீண்டு செல்கிறது. இது தாராண்மைவாதம் போன்றே அரசியல் கருத்தியலாக இருப்பதோடு அரசியல் கோட்பாடு மற்றும் அரசியல் தத்துவம் என்ற வகைப்படுத்தலுக்கும் உட்படுகின்றது. அரசியல் பிரஜைகள், பிரஜா உரிமை, சுதந்திரம் மற்றும் அரசியல் தொடர்பான குடியரசுவாத கருத்துக்கள் நவீன அரசுகள் மற்றும் அவற்றின் இயல்புகள், நோக்கங்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. தாராண்மைவாதம் மற்றும் குடியரசுவாதம் என்பன ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புள்ள அரசியல் கருத்தியலாகக் காணப்படுகின்றன. எனினும் இவை இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இக்கருத்தியலானது நான்கு கட்டங்களாக வளர்ச்சியடைந்ததாகும். முதல் கட்டமாக கிரேக்க, உரேம காலத்தில் அரிஸ்டோட்டில், பொலிபியஸ், சிசரோ ஆகியோரால் முன்வைக்கப்பட்டது (பழமையான குடியரசுவாதம்). பின்னர் இது ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் மக்கியவள்ளியின் சிந்தனைகளால் விருத்தி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18ம் நூற்றாண்டில் ருஸோ, மொண்டஸ்கியு, தோமஸ் ஜெபர்ஸன், ஜேமஸ் மெடிஸன் ஆகியோரால் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா குடியரசுவாதமும் இறுதியாக் ஹென்னா ஹெரன்டிட், குவேன்டின் ஸ்கினர், பிலிப் பெட்டியிட் ஆகியோரின் கரத்துகளால் 20ம் நூற்றாண்டின் குடியரசுவாதமும் என வளர்ச்சிபெற்றது.

குடியரசுவாதத்தின் பொதுவான கொள்கைகளாக பின்வருவனவற்றை அடையாளப்படத்தலாம். அந்தவகையில், குடியரசுவாதத்தின்படி இறைமையின் உரிமையாளன் அரசனோ அல்லது ஆட்சியாளனோ அன்றி பொதுமக்களாவர். அரசின் தலைவன் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்கிறது. பிரஜைகள் அரசியல் ரீதியாக உண்மையாகவும், துருவிராய்கின்ற அரசியல் விலங்காகவும் செயற்பாடுகளில் பங்குப்பற்றுவார். அரசியல் ரீதியாக செயற்பாட்டுடன் இருந்து பொது நன்மைக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தல் குடியரசுவாத பிரஜையொருவரின் பிரதான பண்பாகும். இது அரிஸ்டோட்டிலின் காலத்திலிருந்து இடம்பெற்றுவரும் கருத்து. இந்த குணாம்சங்களை அவர்கள் குறிப்பிடுவது 'சிவில் நல்லொழுக்கம்' என்றாகும். அனைத்து பிரஜைகளினதும் பொது நலலுக்காகவே பிரஜைகள் அரசியல் சமூகமாக ஒழுங்கமைந்திருப்பதன் நோக்கமாகும்.

அரசியலின் நோக்கம் சுதந்திரமாகும். அது பிரசைகளின் செயற்பாட்டில் தவிர அமைதியாக இருப்பதனால் பெற்றுக் கொள்வதற்கோ, பாதுகாத்துக் கொள்வதற்கோ முடியுமானதல்ல. இலகுவில் இல்லாமல் போகக்கூடிய வளமான சுதந்திரத்தை பாதுகாக்கக் கூடியது பிரசைகளின் அரசியல் பங்குபற்றுதல் செயற்பாட்டினாலேயேயாகும். கீழ்வரும் பண்புகளின் மூலமே தாராண்மைவாதம் மற்றும் குடியரசுவாதம் ஆகியன ஒன்றிற்கொன்று வேறுபடுகின்றது.

குடியரசுவாதத்திற்கு ஏற்ப பிரஜாஉரிமை என்பது வெறுமனே அரசின் அல்லது அரசியல் சமூகத்தில் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வது மட்டுமல்ல. அரசியல் செயற்பாட்டில் செயலூக்கத்துடன் பங்குபற்றும், அதனூடாக பொது நன்மைக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கின்ற பிரஜைகளின் நற்பண்பாகும். அரசியலில் ஈடுபடுதல் என்பது அந்த பொது நன்மையையும், சுதந்திரத்தையும் அடைந்துக்கொள்வதை நோக்காகக் கொண்டு ஏனைய பிரஜைகளுடனும் இணைந்து கூட்டுணர்வுடன் செயற்படுவதாகும். பிரஜை செயலூக்கத்துடன் அரசியலை மேற்கொள்ளும் நிலையில் சுதந்திரம் பாதுகாக்கப்படும். இங்கு சுதந்திரம் என்பது பிரசைகள் தங்களது போராட்டங்களின் மூலம் பெற்றுக் கொள்கின்ற மற்றும் பாதுகாத்துக் கொள்கின்ற உரிமையாகும். சுதந்திரம் என்பது இயல்பாக இழக்கப்படக்கூடிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கின்ற பொதுவான உரிமையாகும்.

20ம் நூற்றாண்டில் குடியரசுவாதத்தின் பிரதான சிந்தனையாளர்களான ஹென்னா ஹெரன்டிட், குவேன்டின் ஸ்கினர், பிலிப் பெட்டியிட் ஆகியயோர் காணப்படுகின்றனர். இவர்களின் சிந்தனைகளில் பிரதான இரு கருத்துக்கள் காணப்படுகின்றன. அவை அரசியல் ஆதிபத்தியவாதத்திலிருந்து விடுபட்ட சுதந்திரம், சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளும் ஊடகமாக பிரஜைகளின் செயற்பாடு ஆகியவையாகும்.


மதசார்பின்மை வாதம்  (Secularism)

இது 18ம் மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற ஒரு கருத்தியலாகும். இது சமயமும் அரசியலும் ஒன்று கலக்காமல் இருப்பதுடன் இரண்டு துறைகளும் ஒன்றன் மீது ஒன்றின் அழுத்தம் இல்லாது சுயாதனீமான செயற்பட வேண்டும் என வழியுறுத்துகின்றது.

ஐரோப்பிய மதசார்பின்மைவாதமானது மத்திய காலத்தின் இறுதி காலத்தில் பிரதான அங்கமாக அரசு மற்றும் திருச்சபைகளுக்கிடையில் காணப்பட்ட நிறுவன இணைப்பின்மீது அரசாட்சியின் காவலனாக திருச்சபை இருந்தமைக்கு எதிராக வளர்ச்சியுற்றதாகும். அரசாட்சி முறைமைக்கு எதிரான இயக்கங்கள் அரசு மற்றும் திருச்சபைகளுக்கிடையில் காணப்பட்ட இந்த 'தூய்மையற்ற கூட்டிற்கு' எதிரானதன் மூலம் அந்த போராட்டத்தின் தத்துவார்த்த வெளிப்பாடாக மதசார்பின்மைவாதம் தோன்றியது.

மதசார்பின்மை வாதம் தோற்றம்பெறுவதற்கான மற்றுமொரு காரணமாக ஐரோப்பிய மறுமலர்ச்சி யுகத்தில் தோன்றிய தர்க்க அறிவுக்கு முதலிடம் கொடுத்தமையை சுட்டிக் காட்ட முடியும். இது திருச்சபை முன்னெடுத்துச்சென்ற அஞ்ஞான ரீதியான ஆதிக்கத்திற்கு எதிரானதாகும். மறுமலர்ச்சி காலத்தில் தோன்றிய மதசார்பின்மைவாதம், பழைமைவாத தாராண்மைவாதத்தினதும், சமவுடைமை வாதத்தினதும் சிந்தனை ரீதியிலான மூலமாகும். தாராண்மை வாதம், மதச்சார்பின்மையில் தனியாள் சுதந்திரம், சிந்தனை மற்றும் மனசாட்சியை பின்பற்றும் சுதந்திரம் ஆகிய மூலத்தத்துவங்களை ஈர்த்துக் கொண்டதோடு சமவுடைமைவாதம் சமூக அழுத்தத்தின் நிறுவனமாக மத ஆதிபத்திற்கு எதிராக புரட்சி செய்தலை ஏற்றுக் கொண்டது. இதன்படி 'திருச்சபையும் அரசையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்துவது' ஐரோப்பிய தாராண்மைவாத மற்றும் சமவுடைமைவாத சம்பிரதாயத்தினுள் தோற்றம் பெற்ற பிரதான அம்சமாகும்.

மதசார்பின்மையின் மூலம் மேற்கொள்ளப்படுவது அரசு மற்றும் சமயங்களுக்கிடையிலான தொடர்பு, அரச கொள்கை மற்றும் பிரஜைகளின் உரிமைகளை மதச்சார்பின்றி நிர்ணயிப்பதாகும். எனினும், அரசியலில் மதம் தொடர்புபடாதிருக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல. மதசார்பின்மைவாதம் இன்றைய உலக அரசியலில் பின்வரும் இரண்டு அடிப்படையில்; முக்கியத்துவம் பெறுகின்றது. ஒன்று சமய அடிப்படைவாதத்தை துணையாகக் கொண்ட மதம்சார் அரசுகள்  தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படல். இரண்டாவது பன்மைக் கலாசாரவாதத்தினை மையப்படுத்திய சமய அடையாளங்களை உடைய சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்.


பெண்ணிய வாதம் (Feminism)

ஆரம்ப காலம் முதல் பெண்கள் அடிமைகளாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும், அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவும், சுதந்திரம் மற்றும் உரிமைகள் என்பன மறுக்கப்பட்டவர்களாகவுமே வாழ்ந்து வந்தனர். இவ்வாறு பெண்களுக்கெதிரான வகையில் ஆணுக்கான சமூக அங்கீகாரம், ஆதிக்க மனோபாவம் என்பன தீவிரம் பெற்ற சூழ்நிலையில் இவற்றை எதிர்த்து தோற்றம் பெற்றதே பெண்ணியமாகும். அரசியல் கருத்தியலொன்றாக பெண்ணியவாதத்தின் தலையீடு 1970களில் ஆரம்பமானது. கோட்பாட்டு மற்றும் செயற்பாட்டு சமூக கற்கையாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தோற்றம் பெற்ற இந்த கருத்தியல் பின்னர் ஐரோப்பா தவிர்ந்த சமூகங்களிலும் பரவியது.

இவ்வகையில் எழுச்சி பெற்ற பெண்ணியவாத இயக்கத்திலும் சிந்தனையிலும்  தாராண்மை பெண்ணியல் வாதம், சமவுடைமை பெண்ணியல் வாதம், தீவிர (Redicalபெண்ணியல் வாதம், பின்நவீன பெண்ணியல் வாதம், பின் காலனித்துவ பெண்ணியல் வாதம் என பிரதான 5 துறைகள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் பெண்களுக்கான விடுதலை, அரசியல் மற்றும் சமூக ரீதியான உரிமைகள், சமத்துவம், விசேட ஏற்பாடகள் போன்ற பல அம்சங்கள் வழியுறுத்தப்படுகின்றன. இக்கருத்தியலின் தாக்கத்தினால் தற்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக அரசியலில் பெண்களின் அரசியல் பங்குபற்றல் அதிகரித்துள்ளதைக் காணமுடிகின்றது.

இவற்றைப் போல் அடிப்படைவாதம், சூழலியலட வாதம், சமூக ஜனனாயகம், அராஜகவாதம் என இன்னும் பல கருத்தியல்களும் இன்றைய தேசிய மற்றும் சர்லதேச அரசியலில் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இன்றைய தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் இவற்றின் பொருத்தப்பாடு

தாராண்மை வாதத்தை எடுத்துக் கொண்டால், இக்கருத்தியலானது தற்கால தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொருந்தும் வகையில் பல சாதகமான பண்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. அந்தவகையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசுகளாக உள்ளமையினால் மக்களின் நலன்களை பேனும் கட்டாயம் அரசுக்கு காணப்படுகின்றமை. மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள் சட்டரீதியாக பாதுகாக்கப்படுகின்றமை. சுதந்திரமான முயற்சிகள் மூலம் தனி நபர்கள் சுதந்திரமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடிகின்றமை. ஊடகங்களுக்கு சுதந்திரங்கள் வழங்கப்படுவதன் மூலம் விழிப்புணர்வுமிக்க ஊடகத்துறையை உருவாக்க வழி செய்கின்றமை. அரசியல் கட்சிகளிடையேயான போட்டித்தன்மை காரணமாக ஒழுங்கமைக்கப்பட் கட்சிகளும், தரம் வாய்ந்த அவற்றின் செயற்பாடுகளும் உருவாக வாய்ப்புக்கள் ஏற்படுகின்றமை. போன்றவை அவற்றில் முக்கியமானவைகளாகும்.

எனினும் இக்கருத்தியலானது தற்கால தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொருந்தாத பல அம்சங்களையும் கொண்டிருப்பதைக் காணலாம். அவற்றையும் இங்கு நோக்குவோம். தாராண்மை கோட்பாட்டின்படி எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மையோரின் முடிவுகளே தீர்மானங்களாக நிறைவேற்றப்படுகின்றன. இந்நிலையில், பல இனங்கள் வாழ்கின்ற நாட்டில் இது சிறுபான்மையினருக்கு எதிரானதாக காணப்படுகின்றது. தற்காலத்தில் பெரும்பாலான அரசுகள் பல்லின சமூக அமைப்பைக் கொண்டவையாகவே காணப்படுகின்றன. எனவே அவ்வாறான அரசுகளில் வாழும் சிறுபான்மையினர் புறக்கணிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்துள்ள வன்முறைகளையும் அதைக் கண்டு கொள்ளாத அரசையும் எடுத்துக்காட்டலாம்.

இக்கருத்தியலானது குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடைவை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றது. அந்தவகையில், தேர்தலின் மூலம் அரசாங்கம் மாற்றமடையும்போது முன்னைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நீண்ட கால திட்டங்களை நடைமுறையில் செயற்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அரசின் அபிவிருத்தியும் தடைப்படுகின்றது.

இங்கு அரசியல் அதிகாரமானது, தொடர்ந்தும் பொருளாதார ரீதியாக பலம் பெற்றவர்களின் கைகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புக்களே அதிகமாகவுள்ளது. நடுத்தர மற்றும் கீழ்த்தர மக்கள் தேர்தலில் போட்டியிட்டு பிரசாரம் செய்வதற்கான பொருளாதார பலம் அற்றவர்களாகக் காணப்படுகின்றமையே இதற்கு காரணமாகும். தற்காலத்தில் அநேக நாடுகளில் நடுத்தர மற்றும் கீழ்த்தர மக்களே பெரும்பான்மையினராக காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் இது, தாராண்மை பொருளாதாரக் கோட்பாட்டுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றது. தாராண்மை பொருளாதார கோட்பாடு தனியார் துறை பொருளாதாரத்தை ஆதரிக்கின்ற ஒன்றாகும். இப்பொருளாதார முறையானது, சாதாரண மக்களின் நலன்களைக் கவனிப்பது குறைவு. ஆகையால், தாராண்மைவாதக் கோட்பாட்டினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு தாராண்மைக் கருத்தியலானது தற்கால தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொருந்துகின்ற மற்றும் பொருத்தப் பாடற்ற சிந்தனைகளையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.

மார்க்ஸிசத்தை எடுத்துக் கொண்டால், ஒரு அரசில் காணப்படும் அடித்தள மக்களின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கருத்தியலாகக் காணப்படுகின்றமை. சமூகக் குடியாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றமை, நடைமுறைசார் சமத்துவம் நிலவுதல் போன்ற சில நல்ல கருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள போதும், தற்கால தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொருந்தாத பல சிந்தனைகளையும் கொண்டு காணப்படுகின்றது.

காலச் சூழ்நிலையால் பாதிகக்கப்பட்ட நிலையிலேயே கார்ள் மார்க்ஸால் இக்கொள்கை முன்வைக்கப்பட்டது. எனவே அவரது காலத்தில் காணப்பட்ட வர்க்கப்பிரிவு சார்ந்த சமூதாயத்தை மையமாக வைத்து முன்வைக்கப்பட்ட இக்கருத்தியலானது, இன்று அவ்வாறான வர்க்கப்பிரிவினர்; இல்லாது வளர்ச்சியடைந்து காணப்படும் இன்றய சமுதாய அமைப்பைக் கொண்ட சூழலுக்கு பொருத்தமற்றதாகவே காணப்படுகின்றது.

இக்கருத்தியலின் படி தொழிலாளர் வர்க்கமானது அடக்குமுறைமிக்க முதலாளித்து வர்க்கத்துக்கெதிராக போரிட்டு தொழிலாளர் வர்க்க அரசை உருவாக்குவர் என்று குறிப்பிடப்படுகின்றது. இன்றைய முதலாளித்துவமானது நலன்புரி முதலாளித்துவமாக மாற்றமடைந்துள்ள நிலையில், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சி செய்ய முன்வருவார்கள் என்பது சந்தேகமானதே.

இது பொருளாதாரக் காரணிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தனது கோட்பாடுகளை முன்வைக்கின்றது. தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் முக்கிய  செல்வாக்கைச் செலுத்தும் ஏனைய காரிணிகளான மனிதர்கள், சமூகம், மதம், வரலாறு, புவியியல் போன்றவையும் காணப்படுகின்றன. ஆனால், இது இக்காரணிகளை கவனத்தில் எடுக்கவில்லை.

மக்கள் இருக்கின்ற வரை மக்களுக்கான பொதுத் தேவைகளும் காணப்பட்டுக் கொண்டே இருப்பதுடன், இப்பொதுத் தேவைகளை நிறைவேற்ற அரசு என்ற நிறுவனமும் எப்போதும் அவசியமாகவே இருக்கும். இந்நிலையில் அரசற்ற கம்யூனிஸ சமூகம் உருவாகும் எனும் இதன் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மேலும் வலுவேறாக்கம், அதிகாரப் பரவலாக்கம், சமஷ்டி போன்றவற்றின் நடைமுறைகள் அதிகரித்து வருகின்ற தற்கால அரசுகளில், அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்க தூண்டுகின்ற இக்கருத்தியலின் சிந்தனை ஒதுக்கப்படக் கூடிய ஒன்றாகவே உள்ளது.

நடைமுறையில் காணப்பட்ட, காணப்படும் சோஷலிஸ அரசுகளில் மக்களின் அடிப்படை ஜனனாயக உரிமைகள் பல மறுக்கப்பட்டிருப்பதையும், மேலும் இக்கருத்தியலை நடைமுறையில் கொண்டிருக்கும் நாடுகளில்கூட முதலாளித்துவத்தின் தாக்கம் மிகுந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக கம்யூனிஸ சீனாவானது இன்று முதலாளித்துவ எஜமானர்களின் அபிமானத்திற்குரிய பிரதேசமாக மாறியிருப்பதைக் காணலாம்.

இவற்றையெல்லாம் வைத்து நோக்குகின்ற போது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பொருந்துகின்ற வகையில் முன்வைக்கப்பட்ட இக்கொள்கையானது தற்கால தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொருத்தமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. கடந்தகாலங்களில் உலகளவில் கம்யூனிஸத்தை பின்பற்றி பல நாடுகள் ஏனைய கருத்தியலை நோக்கி நகர்ந்துள்ளமை மற்றும் தற்போதும் நகர்ந்து கொண்டிருக்கின்றமை இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

முதலாளித்துவத்தை எடுத்து நோக்கினால் தனியார் உற்பத்தி, உழைப்பை ஊக்குவித்தல் மற்றும் போட்டித்தன்மை மிக்க சந்தை முறை மூலம் தரமான உற்பத்திகள் கிடைக்க வழிசெய்தல் போன்ற சிலவற்றைத் தவிர, இதனது பெரும்பாலான கருத்துக்கள் தற்காலத்து தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொருத்தமற்றவைகளாகவே காணப்படுகின்றன. அந்தவகையில், இது தனிமனித சொத்துரிமையை முழுமையாக அங்கீகரிக்கும் ஒரு கருத்தியலாகக் காணப்படுகின்றது. இதடிப்படையில், எல்லா சொத்துக்களுமே தனி மனிதர்களின் உடைமையாக மட்டுமே இருப்பதுடன் உற்பத்தி, வர்த்தகம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் அரசு பங்கேற்கக் கூடாது என்கிறது. ஆனால் தற்கால நடைமுறையை நோக்குகின்ற போது இவையிரண்டும் சாத்தியமற்றவையாகவே உள்ளன. சொத்துக்கள் தனிமனித மற்றும் அரசாங்க உடமைகளாகவும் காணப்படுகின்றது. அதேபோல் உலகமயமாக்களின் விளைவால் வளர்ச்சியரடந்துள்ள சர்வதேசப் பொருளாதாரத்தின் விளைவாக உற்பத்தி, வர்த்தகம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் அரசினது பங்களிப்புக்கள் மற்றும் கட்டுப்பாடுகள் அதிகமாகக் காணப்பட்டு வருகின்றன.

முதலாளித்துவ கருத்தியலானது வரையரையற்ற தனியார் சொத்துரிமையயையும் கட்டுப்பாடற்ற வர்த்தகத்தையும் ஊக்குவிப்பதாக காணப்படுகின்றது. எனவே தேசிய மற்றும் சர்வதேசளவில் சில பெரிய நிறுவனங்கள் தமது வியாபாரத்தையும், செல்வத்தையும் பெருக்கிக் கொள்ளும் நோக்கில் தமக்கு போட்டியான சிறிய மற்றும் நடுத்தர அளவிளான சுதேச உற்பத்தியாளர்களை முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல், 2ம், 3ம் உலக நாடுகளில் தரமற்ற உற்பத்திகளை வினியோத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பின்தங்கிய நிலையிலுள்ள அரசுகளுக்கும், சாதாரண மட்ட மக்களுக்கும் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

பொருளாதார ரீதியாக பலம்வாய்ந்த நாடுகள் தமது பொருளாதார நலனை இலக்காக் கொண்டு அபிவிருத்தித் அடையாத மற்றும் அபிவிருத்தித் அடைந்து வரும் நாடுகளில் அத்து மீறி நுழைந்து அவற்றை ஆக்கிரமித்து தமது பொருளாதார ரீதியான நலன்களை அடைந்து கொள்கின்றன. இதனால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் அமைதி சீர்கெடுவதுடன், ஆயுதக்கலாச்சாரம் மற்றும் ஆயுதக்குழுக்களும் தோற்றம் பெறவும் வழிகள் ஏற்படுகின்றது. இதற்கு உதாரணமாக, மசகு எண்ணெய், கனியவளத்தை  பெருவதற்காக வேண்டி, அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பை எடுத்துக்காட்டலாம். இதுவும் முதலாளித்துவத்தின் ஒரு விளைவே.

தனியார் பொருளாதாரச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத்தின் முக்கிய ஒரு அம்சமாக வட்டி கணப்படுகின்றது. இந்த வட்டியானது பணக்காரர்கள் தொடர்ந்தும் கொழுத்த பணக்காரர்களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் இருக்க வழிவகுப்பதன் மூலம்; பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மென்மேலும் அதிகரிக்க வகை செய்யும் கருவியாகக் காணப்படுகின்றது. இதனால் உலகளவில் பல நாடுகளில் முரண்பாடுகள் மற்றும் பஞ்சம் தோன்றுவதற்கு இது வழி வகுக்கின்றது.

முதலாளித்துவத்தின் பார்வையில், மனிதர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே சுயநலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. இதனடிப்படையிலேயே John Anderson Kay என்ற பொருளியலாளர், 'மனிதர்கள் பொதுவாக சுயநலவாதிகள். உலகாதாய நோக்கம் மட்டுமே கொண்டவர்கள். தனது செல்வ மதிப்பை கணக்கிடுவதிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள்' என்கிறார். இதுதான் முதலாளித்துவம் அறிமுகப்படுத்தும் 'பொருளாதார மனிதன்'. மனிதர்களைப் பற்றிய இந்த மதிப்பீட்டின் அடிப்படையில்தான் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகள் கட்டமைக்கப் பட்டுள்ளன. அதனால்தான், சிறு முதலாளிகள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை தங்களது இலாபங்களை அதிகரித்துக் கொள்வதற்காக செய்யும் முறைகேடுகளும் தில்லுமுல்லுகளும், நியாயப்படுத்தப்படுகின்றன. இதுவும் தற்காலத்தில் பரவலாக முன்வைக்கப்படும் மக்கள் நலனை மையப்படுத்திய கருத்துக்களுக்கு எதிரானதாகவே காணப்படுகிள்றது. இவ்வாறு முதலாளித்துவமானது தற்கால தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொருத்தமற்ற பல கருத்துக்களை கொண்டிருப்பதைக் காணலாம்.

பாசிஸத்தை எடுத்துக் கொண்டால், இது ஒரு கருத்தியலா? அல்லது சந்தர்ப்ப வாதமா? என்ற வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகின்ற அளவிற்கு கருத்துக்கள் காணப்படுகின்றன. இது யுத்தத்தை முழுமையாக ஆதரிக்கின்றது. அமைதி, சமாதானம் என்ற மனித வாழ்வின் மேன்மையான அம்சங்களை புறக்கணிக்கப்பதுடன், மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட எச்செயலையும் தனது நலனுக்காக மேற்கொள்வதற்கும் தூண்டுகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. ஹிட்லர் இலட்சக்கணக்கான யூதர்களையும், முசோலினி நூற்றுக்கணக்கான சோஷலிஸ்டுக்களையும் கொலை செய்தமையை இதற்கு உதாரணமாகவும் எடுத்துக்காட்டலாம். மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்கள், தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் போன்றவை உலகளவில் வளர்ச்சியடைந்து காணப்படும் தற்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு இக்கருத்தியலானது பொருத்தமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

பாசிஸமானது மூடப்பட்ட பொருளாதாரத்தையே ஆதறிக்கின்றது. தற்போது சர்வதேச பொருளாதாரம் வளர்ந்து விட்ட சூழலில் எவ்வளவு தூரம் மூடப்பட்ட பொருளாதாரம் தேசிய மற்றும் சர்வதேச அரசுளுக்கு பயனளிக்கும் என்பதும் சந்தேகமானதே. மேலும், ஜனனாயக கோட்பாடுகள் பரந்தளவில் வளர்ந்து காணப்படுகிற இன்றைய தேசிய மற்றும் சர்வதேச அரசியல் சூழலில், தனிமனித சர்வாதிகாரத்தை ஆதரிக்கின்ற இக்கருத்தியலானது ஏற்புடையதற்ற ஒன்றகவே காணப்படுகின்றது.

இவ்வாறு பல ஜனனாயகத்திற்கு எதிரான பண்புகளைக் கொண்ட  இக்கருத்தியல் இன்றைய தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொருத்தமற்றது என பல அறிஞர்களாலும் குறிப்பிடப்படுகின்ற போதும் இன்றைய அரசியலில் சில நாடுகளில் உள்ள ஆட்சியாளர்கள் தமது சுயநலனுக்காகப் இதன் சிந்தனைகளை நடைமுறைப்படுத்த முனைவதனை காணமுடிகின்றது.

தேசியவாதத்தை எடுத்துக்கொண்டால் அண்மைக்காலத்தில் அதிகமாக பேசப்படுகின்ற ஒரு கருத்தியலாகவும், அரசுகள் தமது அடையாளத்தை வெளிப்படுத்த உதவிபுரியும் ஒரு கருத்தியலாகவும் இது காணப்படுகின்றது. எனினும், இது முரண்பட்ட தேசிய அரசியலுக்கு பொருத்தமற்ற கருத்தியலாகக் கருதப்படுகின்றது. அந்தவகையில் தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் இன, மத, மொழி ரீதியான வேறுபாடுகளை உருவாக்கி அதனூடாக பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்திய, பாகிஸ்தான் மக்களின் தேசியவாதமானது ஒருவரையொருவர் பகைமைக் கன்னுடன் நோக்கச் செய்வதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். மேலும் சில அரசுகளில் சிறுபான்மை இனத்தவர்களை அடக்கு முறைக்கு உட்படுத்தவும், ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளை நியாயப்படுத்தவும் தேசியவாதமானது ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவதையும் அவதானிக்க முடிககின்றது. இதற்கு உதாரணமாக தற்போதைய இந்திய அரசாங்கத்தால் தமிழ் நாட்டு, காஸ்மீர் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை குறிப்பிடலாம்.

மதசார்பின்மைவாதத்தை எடுத்துக்கொண்டால், பல்லின சமூகங்கள் வாழுகின்ற அரசுகளுக்கு இது மிகவும் பொருந்தக்கூடியதாகக் காணப்படுகின்றது. அவ்வாறான அரசுகளில் மதவாத சக்திகளின் தலையீடு அரசியலில் இல்லாமல் இருப்பதுடன், அங்கு சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், சமத்துவம் பேனப்படவும் இது வழிசெய்கிறது. எனினும் மதசார்பின்மைவாதம் காணப்படும் நாடுகளில் மதவாத அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் அரசியலில் அவற்றின் தலையீடும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. இந்தியா இதற்கு சிறந்த உதாரணமாகும்.

பெண்ணியல்வாதத்தை நோக்குகின்றபோது, இது இன்றைய தேசிய மற்றும் சர்வதேச அரசியலில்  தேவைப்பாடுடைய ஒரு கருத்தியலாகவே காணப்படுகின்றது. ஆரம்பத்தில் ஒரே இலக்கு ஒரே கொள்கை என்ற அடிப்படையில் தோன்றினாலும் தாராண்மை பெண்ணிலைவாதம், சோஷலிச பெண்ணிலைவாதம், மாக்சிஸ பெண்ணிலைவாதம், தீவிர பெண்ணிலைவாதம் எனவும் அதிலும் பல உட்பிரிவுகளாகவும்  கொள்கை அடிப்படையில் பிளவுக்குள்ளாகியுள்ளது.

இவற்றையெல்லாம் தொகுத்து நோக்குகின்ற போது இன்றைய தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் கருத்தியல்களின் தாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகவும், முக்கியத்துவம் பொருந்தியதாகவும் கானப்படுகிறது. இக்கருத்தியல்கள் அனைத்தும் மேலே குறிப்பிடப்பட்டவாறு, தற்கால தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொறுந்துகின்ற மற்றும் பொருத்தமற்ற அம்சங்களைக் கொண்டதாகவே காணப்படுவதுடன், முழுமையாக பொருந்தக் கூடிய ஒரு கருத்தியல் இல்லையென்ற முடிவிற்கே வரமுடிகின்றது. மனிதர்களின் வரையறுக்கப்பட்ட சிந்தனைகளை மையமாக வைத்து வெளிப்படுகின்ற இவ்வாறான கருத்தியல்கள் குறிப்பிட்ட ஒரு தொகுதி அல்லது காலப்பகுதி மக்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகக் காணப்படுகிறது.

இவ்வாறான அரசியல் கருத்தியல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கும், பிரதேசத்திற்கும் மட்டும் பொருந்தும் வகையில் காணப்படுவதற்கும், காலப்போக்கில் இவை வலுவிழந்து போவதற்கு பின்வரும் விடயங்கள் வழிசமைப்பவையாக காணப்படுகின்றன. அவற்றில் தொழிநுட்ப வளர்ச்சி, புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள், மக்களிடம் ஏற்படுகின்ற அரசியல் விழிப்புணர்வுகள், பொருளாதார ரீதியான மாற்றங்கள், மக்களிடம் ஏற்படுகின்ற கலாசார ரீதியான மாற்றங்கள், அதிகரித்துள்ள அரசுகளுக்கிடையிலான தொடர்புகள், உலகமயமாக்களின் தாக்கங்கள், அதிகரிக்கும் மக்கள் சனத்தொகை, சர்வதேச மற்றும் பிராந்திய வல்லரசுகளின் எழுச்சி, மக்களின் வாழ்க்கைப் போக்கில் ஏற்படுகின்ற மாற்றங்கள் போன்றவற்றை முக்கியமானவைகளாக எடுத்துக் காட்ட முடியும்.

எனவேதான் தற்போது உலகில் பரவலாகக் காணப்படும்; கருத்தியல்கள், தற்கால தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொருந்தக் கூடிய சில அம்சங்களைக் கொண்டு காணப்படுகின்ற போதும், எதிர்காலத்தில் இவையும் வலுவிழந்து செல்லக்கூடும். அத்துடன் எதிர்காலத்தில், கால சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் புதிய அரசியல் கருத்தியல்கள் தோன்றவும், பின்பற்றப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு தோன்றும் புதிய அரசியல் கருத்தியல்கள் குறிப்பிட்ட காலத்துக்கு மற்றும் மக்களுக்கு பொருந்தும் வகையிலான பழைய கருத்தியல்களின் சில அல்லது பல அம்சங்களை உள்ளடக்கியிருக்கவும் கூடும்.

By : M.S.M. Naseem  -  BA (Hons),  MA in (Political Science),  PGDE

References
  1. “Modern Political Idealogies” (2010), Andrew Vincent, Wiley Blackwell Publication.
  2. Political Idealogies an idroduction”, Andrew Heywood, 3rd edition, Palgrave, UK.
  3. “சோஸலிசம் தத்துவமும் நடைமுறையும்” (1988),  விதாலி கொரியனேவ், சோவியத் தூதரக தகவல் பிரிவு, சில்வா மாவத்த, கொழும்பு 07.
  4. அரசறிவியல் ஓர் அறிமுகம்” (2016), சி.அ. யோதலிங்கம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
  5. “Ideology and Political Theory”, Michael Freeden, Journal of Political Ideology, Vol-11 (2006.8.01).
  6. “The Liberal in the modern world”, Towner Phelan, www.fee.org.
  7. “Capitalism in the 21st century”, Graham Vanbergen, www.worldfinancialreiev.com (20.03.2018).
  8. “what is fascism and are there any fascists today?”, Tim Stanley, www.telegraph.co.uk  (23.08.2017).
  9. “Ideology”, www.wikipedia.org 
  10. முதலாளித்துவம்', C.P சரவணன், www.dinamani.com (16.11.2017).



No comments:

Post a Comment