.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, July 21, 2015

இலங்கையில் மிகத்தொன்மையான பூர்வீக வரலாற்றை கொண்ட முஸ்லிம்கள்


அறிமுகம்
இலங்கையில் முஸ்லிம்கள் மிகப்பழமையான வரலாற்றைக் கொண்ட பூர்வீகக் குடிகளாக காணப்படுகின்றனர். எனினும் அவைபற்றிய வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அதிகமான குறிப்புக்கள் தொகுக்கப்படாத நிலையில் அரபுபாரசீகஆங்கில மொழிகளில் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றை தமிழ்சிங்களம் போன்ற மொழிகளில் முறையான ஆவணங்களாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் ஒரு சில தீயசக்திகள் இலங்கை முஸ்லிம்கள் இங்கு பூர்வீகமற்றவர்கள் என்ற போலியான வாதத்தினை முன்னிறுத்தி இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு விசமித்தனமான பிரச்சாரங்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதனை அவதானிக்கலாம்.

எனவேதான் இது பற்றிய உண்மை நிலையை மக்களுக்கு வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும். அதற்கு எமது பூர்வீக வரலாற்றை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் இலங்கையில் முஸ்லிம்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சான்றுகளில் முக்கியமான சிலவற்றை இங்கு நோக்குவோம்.

இலங்கை முஸ்லிம்கள் எனும் பதமானது பல குழுக்களை தன்னுள் இணைக்கிறது. இஸ்லாத்தைப் பின்பற்றுவோர் அனைவரும் முஸ்லிம்கள் ஆவர். அந்தவகையில் பண்டையகாலத்தில் இங்கு குடிபதிகளான அரேபியரின் வழித்தோன்றல்கள், தென்னிந்திய முஸ்லிம்களின் பரம்பரையினர்வடஇந்தியாவிலிருந்து வந்த மேமன்போனாஆப்கான், பட்டானியர் என்போர்கிழக்காசியாவின் மலாயா,ஜாவா,சுமாத்ரா போன்ற பிரதேசங்களிலிருந்து வந்த மலாயர் என்போர் அனைவரும் இதனுள் அடங்குவர்.

இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கு ஏதுவாக அமைந்த காரணிகள்

இலங்கை தீவானது கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாற்றுரீதியாக அறியப்பட்டிருந்தது. இச்சிறிய தீவுடன் பல்வேறு நாட்டவர்களும் மிக நெடுங்காலமாக அரசியல்,பொருளாதார,கடற்பயண ரீதியான தொடர்புகளை கொண்டிருந்ததை வரலாற்று ஆய்வு நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனடிப்டையில் இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கு ஏதுவாக அமைந்த காரணிகளில் பின்வருவனவற்றை முக்கியமானவையாக அடையாளப்படுத்தலாம்.

1.இங்கு ஏராளமான வியாபாரப் பொருற்கள் காணப்பட்டமை - இலங்கையின் வாசனைத்திரவியங்களும் இரத்தினக்கற்களும் பூர்வீகம் தொட்டே உலகத்தின் கவனத்தை ஈர்த்துவந்தது.

2.கேந்திர முக்கியத்துவம் - உலகின் கிழக்குப் பகுதிக்கும்மேற்குப்பகுதிக்கும் இடையிலான கடற்பாதையானது இலங்கைத்தீவின் பல இடங்களையும் அவாவிச் செல்கின்றன. இதனால் கிழக்கிற்கும்,மேற்கிற்கும் இடையிலான வணிகப்பாதைகளின் மத்தியதளமாக இலங்கை விளங்கியது.
இவ்வணிகத்தில் இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பிருந்தே அரபிகள் தனியுரிமை பெற்றுக்காணப்பட்டதை வரலாறு எடுத்துரைக்கின்றது. அரபுத்தீபகற்பத்தின் கரையோரப் பகுதிகளிலிருந்து புறப்பட்ட அரேபியர்களின் வணிகக்கப்பல்கள் இலங்கைக்கூடாக சீனாவுக்குச் சென்றன. பின் சீனாவிலிருந்து புறப்படும் கப்பல்கள் இலங்கையில் வாசனைத் திரவியங்கள்,இரத்தினக்கற்கள்,யானைத்தந்தங்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு தமது நிலயங்களை சென்றடைந்தன. இவ்வாறான வணிக நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட குடியேற்றங்களே இலங்கையில் ஏற்பட்ட ஆரம்ப அரபுக்குடியேற்றங்கள் ஆகும்.

3.முஸ்லிம்களின் முதல் தந்தையான அல்லது மனித இனத்தின் முதல் தந்தையான ஆதம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த மலை இலங்கையின் மலைநாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது என்ற நம்பிக்கையும் பல்வேறு அரபுயாத்திரிகர்களையும், வணிகர்களையும் இலங்கையை நோக்கி ஈர்த்தது.
உலகில் சிறந்த பூமி நபி ஆதம்(அலை) இறக்கப்பட்ட இடமாகும்
இந்தியாவின் தென்திசைப் பகுதியிலிருந்து ஆதி இஸ்லாத்தின் தென்றலை நான் நுகர்கிறேன்
போன்ற நபி(ஸல்) அவர்களின் கூற்றும் இதற்கு காரணியாய் அமைந்தது. (கண்டி மாவட்ட முஸ்லிம்கள்பக்கம்4-11)

4.இலங்கை அரசர்கள் இவர்களுக்கு ஆதரவு நல்கியமை.

5.இலங்கையின் சிறந்த புவியியல் நிலை.

6.மக்கள் வழங்கிய வரவேற்பு.

7.சிறந்த சுவாத்தியம்.

இவைபோன்ற பல்வேறு காரணிகள் இலங்கையில் அரபுகள் மற்றும் முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கு வழிவகுத்திருந்தது.

அதேவேளை கி.பி. 9ம்  நூற்றாண்டுகளில் தென்னிந்தியக் கரையோரங்களில் வர்த்தகரீதியாக செல்வாக்குப் பெற்ற சமூகமாக முஸ்லிம்கள் காணப்பட்டனர். இந்நிலை அண்டை நாடான இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகள் ஏற்பட ஏதுவாக அமைந்தது.

இத்தொடர்பு ஏற்பட சாதகமான சூழல் அன்று காணப்பட்டது. அந்தவகையில் இந்தியாவுக்கு மிக அண்டிய நாடாக இலங்கை காணப்பட்டமைதமது வர்த்தகத்தை மேலும் விஸ்தரிக்க வேண்டுமென்ற இந்திய முஸ்லிம்களின் அவாமிக இலகுவாக சென்று வரக்கூடியதாய் இலங்கை அமைந்திருந்தமையாவற்றையும் விட இலங்கை முஸ்லிம்களோடு தமது சமயகலாசார நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற விருப்பம் போன்றவற்றை அவற்றில் முக்கியமாக குறிப்பிடலாம்.

அரேபியர்களின் வழித்தோன்றல்கள் எனக் கருதப்படும் இலங்கை முஸ்லிம்கள் 13ம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்திய முஸ்லிம்களுடன் தமது சமூக,கலாசார,சமய உறவுகளைப் பேணத் தொடங்கினர். எனவேதான் இதன் மூலம் இலங்கையில் இந்திய முஸ்லிம்களின் குடியேற்றங்களும் தோன்ற ஆரம்பித்தன.

18ம் நூற்றாண்டுக்குப் பின்னர் மலாக்காஜாவா தீவுகளைச் சேர்ந்த மலாய் முஸ்லிம்களும்இந்திய குஜராத்தின் போராக்களும் மற்றும் சிறு அளவில் மேமன்கள் என்போரும் இலங்கை முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர்.

இதனடிப்படையில் நோக்கும்போது இலங்கை முஸ்லிம்களில் ஒருசாரார் அரேபிய வம்சாவளியைச் சேர்ந்தோராகவும் இன்னுமொருசாரார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தோராகவும் மற்றும் சிலர் மலாய் இனத்தைச் சேர்ந்தோராகவும் காணப்படுகின்றனர்.

கி.பி 10ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில் இலங்கை முஸ்லிம் குடியேற்றங்களில் அரேபியரின் செல்வாக்கு காணப்பட்ட அதேவேலை,  10ம் நூற்றாண்டிற்கு பின்னர் இந்திய மற்றும் மலாய் முஸ்லிம்களின் செல்வாக்கு இலங்கை முஸ்லிம் குடியேற்றங்களில் செல்வாக்குப் பெற்றுகாணப்பட்டன.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் முஹம்மதியர் எனும் பெயரே அரச ஆவணங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு உபயோகிக்கப்பட்டது.  அதன் பின்னர் சோனகர் எனும் பதம் வழக்கத்திற்கு வந்தது. அது இலங்கைச் சோனகர்இந்தியச் சோனகர்மலாயர் என உபபிரிவுகளாகவும் கணக்கிடப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவேதான் அரேபியரின் சந்ததியினரும்தென்னிந்திய முஸ்லிம்களின் சந்ததியினரும்மற்றும் சிலரும் இரண்டரக் கலந்து உருவாகியதுதான் இலங்கை முஸ்லிம் சமூகம் என்பது தெளிவாகின்றது.

இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் தொன்மையானது என்பதை உறுதிப்படுத்தும் ஆவங்கள்

  • உலகில் தோன்றிய முதல் மனிதனான ஆதம்(அலை) இலங்கைத் தீவிலேயே தோன்றியதாக பிரபலமான வரலாற்று ஆசிரியரான அத்தபரி” அவர்கள் தனது நூலின் 130வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
  • இலங்கையில் ஆதம்(அலை) இறங்கிய இடம் பூஸ் எனும் மலையின் உச்சி என வரலாற்று ஆசிரியர் இப்னு அதீர் குறிப்பிடுள்ளார். மேலும் அவர் இம்மலை ராஹூன் என்ற மாகாணத்தில் இருப்பதாக கூறுகின்றார். இது இலங்கையின் ருஹூனு ரட்டையினைக் குறிக்கின்றது. (A.B.M.இத்ரீஸ்)
  • இந்தியாவின் மிகப்புராதன பெயர்களில் ஒன்று பாரதம் என்பதாகும். இது பார்-ஆதம் என்ற இரு சொற்களின் புணர்ச்சியாகும். அதன்படி உலகின் தொடக்கத்தில் இன்றைய இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இணைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. (A.B.M.இத்ரீஸ்)
  • உலகில் சிறந்த பூமி நபி ஆதம்(அலை) இறக்கப்பட்ட இடமாகும்” “இந்தியாவின் தென் திசைப் பகுதியிலிருந்துஆதி இஸ்லாத்தின் தென்றலை நான் நுகர்கிறேன் என்று நபி(ஸல்) கூறினார்கள்” இது போன்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று இதை இன்னும் உறுதிப்படுத்துவதாய் அமைகின்றது. (கண்டி மாவட்ட முஸ்லிம்கள் பக்கம்4-11)
  • பாவாத மலையில் உள்ள பாதச் சுவடானது 5அடி நீளமான வலது பக்க பாதத்தின் அடையாளமாகக் காணப்படுகின்றது. இது ஆதி மனிதர்கள் பிரமாண்டமான தோற்றத்தை உடையவர்களாக இருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
  • இதனடிப்படையில் இலங்கையின் பலபாகங்களிலும் அமையப் பெற்றுள்ள கப்றுகளில் உலகில் எங்குமே காணப்படாத 40, 30, 20, 10அடிகள் அளவுகளை உடைய கப்றுகள் காணப்படுகின்றமை ஆதாரபூர்வமாக நிறுபிக்கப்பட்டுள்ளன.
  • இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரமே இறந்தவர்களின் உடலைப் புதைக்கும் பழக்கம் உடையவர்கள். நாடெங்கிலும் காணப்படுகின்ற நீளமான கப்றுகள் தற்போதைய முஸ்லிம்களின் கப்றுகளை ஒத்திருப்பதோடு இம்முறையை இலங்கை முஸ்லிம்கள் தொடர்ச்சியாக பின்பற்றிவருவதானது அவர்களின் தொன்மையை உறுதிப்படுத்துகின்றது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான ஈமத்தாழிகள் பொம்பரிப்பில்” கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈமத்தாழிகள் என்பது இறந்தவர்களை புதைப்பதற்காக புராதன மக்கள் பயன்படுத்திய புதைகுழிகளாகும். பின்னர் பூமியை தோண்டக் கூடிய ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான்- அவருடைய சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குகாண்பிப்பதற்காக (அது பூமியில் தோண்டிற்று அதனைப்பார்த்து) என்னுடைய பரிதாபமே! இந்த காக்ததைப் போன்று நான் ஆவதற்கும் என் சகோதரரின் பிரேதத்தை (மண்ணில்) மறைப்பதற்கும் இயலாதவனாகிவிட்டேனே! என்று (பிரலாபித்து) அவர் கூறினார்கைசேதப்படுபவர்களில் ஒருவராக அவர் ஆகிவிட்டார்.-(அல்-குர்ஆன்5:31) இந்த குர்ஆன் வசனமானது முஸ்லிம்கள் இறந்தவர்களை எவ்வாறு அடக்கம் செய்யவேண்டும் (அதாவது இறந்தவர்களின் உடலை மண்ணைத் தோண்டி புதைக்க வேண்டும்)  என்பதை உலகின் முதல் மனிதனான ஆதம்(அலை) அவர்களின் மகனுக்கு கற்றுக்கொடுத்ததைக கூறுகின்றது. இதன் மூலம் இலங்கை முஸ்லிம்களின் தொன்மை இன்னும் வலுப்படுத்தப்படுகின்றது.
  • அதேபோல் இலங்கையின் வரலாற்றைக் கூறும் மிகமுக்கிய நூலான மகாவம்சம் இலங்கையில் வாழ்ந்த ஆரம்ப சமூகங்களான இயக்கர்நாகர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இவர்களில் ஒரு பிரிவான நாகர் ஓர் இறைக் கொள்கை(தௌஹீத்) உடையவர்களாக வாழ்ந்துள்ளார்கள். இவர்கள் முஸ்லிம்கள் என்பதை ஏ.பி.எம். இத்ரீஸ்(நளீமி) அவர்கள் தனது சோனக தேசம் பற்றிய குறிப்புக்களில் நிறுவுகின்றார். 
  • இந்த நாகருக்கு இலங்கையில் கரையோரப்பகுதியிலும்உள்நாட்டிலும் நாவாய்கள் இருந்ததாக பேராசிரியர் கணபதி பிள்ளை கூறுகின்றார். அந்தவகையில் தமிழ் நாட்டின் அரசாங்கத்தின் கீழ்நாட்டு பழஞ்சுவடி நூல் நிலையம் ஒன்றில் வடமொழியில் நௌகா சாஸ்திரம் என்றதொரு கப்பல் நூல் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பலை தமிழ் நாவாய் என்கிறது. அதேவேலை ஹிந்திஉருதுசமஸ்கிருதம் போன்ற மொழிகள் கப்பலை நாவ் என்கிறது. ஆங்கிலம் கப்பல் படையை நேவி என்கிறது. இதில் தமிழ் மொழி மட்டுமே நாவாய் என்பதை அயல் மொழி என்று கூறாது சொந்தம் கொண்டாடுகிறது. நாவாய் என்பதற்கும் நோவா (நூஹ்நபி) என்பதற்கும் தொடர்பு இருக்கின்றது. நோவா or நூஹ்(அலை) அவர்களே உலகில் முதன் முதலாக பெரிய கப்பலை or நாவாய் கட்டியவர் அவர் பெயரிலிருந்தே கப்பலுக்கு பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். எனவேதான் இலங்கையில் வாழ்ந்த நாகர் நூஹ்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களான முஸ்லிம்களாக இருக்கவேண்டும். இவ்வாறு நபி ஆதம்(அலை) அவர்களின் பத்து தலைமுறையினர் இலங்கையிலும்இந்தியாவிலும்அழிந்துபோன குமரிக்கண்டத்திலும் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் உள்ளன.(A.B.M.இத்ரீஸ்)
  • ஆரியர்கள் இலங்கைக்கு வருகைதருகின்ற, போதிருந்த வேடுவர்களுடன் சேர்ந்திருந்த வரலாற்றை உடையவர்களே அரபிகள். இவர்கள் இலங்கையின் ஆதிக்குடிகள்” என சுவடித் திணைக்கள ஆணையாளர் கலாநிதி பாலேந்திரா குறிப்பிடுகிறார்.
  • இலங்கையின் வரலாற்றைக் கூறும் தொன்மை நூலான மகாவம்சம் மூதாதயரை (பண்டைய முஸ்லிம்களை) யோனர்” என்று குறிப்பிடுவதுடன் பண்டுகாபய மன்னன்(கி.மு. 377-307) அநுராதபுர நகரத்தை அமைத்தபோது அதன் மேற்குப்புற வாசலருகே யோனர்களுக்கு நிலத்தை ஒதுக்கினார் எனவும் குறிப்பிடுகின்றது-(மகாவம்சம் அத்தியாயம் X பகுதி9- கெய்கர் மொழி பெயர்ப்பு பக்கம்74)
  • அதேவேலை இலங்கையின் புராதன சிங்களக் காவியங்களிலும் யோனக” என்றபதம் கையாளப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
  • கி.மு 377இல் (பண்டுகாபயன் மன்னன் காலம் கி.மு377–307) தலைநகர் அநுராதபுரத்தில் அரேபியருக்கென தனியான வீடுகள் காணப்பட்டன - (அந்திரியஸ் நெல்)
  • கிரேக்க தளபதியான ஒனாசிக் கிரீட்டஸ் கி.மு 327இல் வரையப்பட்ட பூகோளப்படத்தில் மன்னார்புத்தளம் பகுதிகளில் அரபுக் குடியிருப்புக்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
  • The History of Commerce in Indian என்ற நூலில் பேராசிரியர் சிறி கந்தையா நபியவர்கள் வேதத்தை அறிமுகம் செய்ய முன்னர் மிக நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவின் மேற்குப்பகுதிக்கும் அரபுநாடுகளுக்கும் இடையிலான வியாபாரத் தொடர்புகள் விரிந்தளவில் இடம் பெற்றன” என்கிறார்.
  • கிறிஸ்தவ ஆண்டு தொடங்க முன்னரே அரேபியர் இலங்கையில் குடிகளாக வாழ்ந்தனர்.-(பிளினி)
  • கி.மு. 4ம் நூற்றாண்டளவில் தென்மேற்கு ஆசியாவின் பெரும் நிலப்பரப்பை ஆண்டு வந்த மாமன்னர் சுலைமான்(அலை) அவர்களது ஆட்சிக்காலத்தில் அவரது மனைவி பல்கீஸ் அவர்களுக்கு இலங்கையின் பெறுமதியான இரத்தினக் கற்களும், முத்துக்களும் அன்பளிப்பாகக் கிடைத்ததென்ற வரலாற்றுச் சம்பவங்கள் மரபு வழிக்கதைகளாக சில அரபு நூல்களில் காணக்கிடைக்கின்றன. இவரது ஆட்சிக் காலத்திலேயே இலங்கைஅரேபியர்களிடையே பிரபல்யம் பெற்றிருந்தமையை இதன்மூலம்  ஊகிக்கலாம்.
  • அரேபியர்களின் கடல்கடந்த வணிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் கிரேக்கர்களுக்கு முன்னரேயே தொடங்கியிருந்தது. கிரேக்கர்கள் இந்தியாவை அறிய முன்னர் அரேபியர் அதனை அறிந்திருந்ததுடன் வரலாற்றுப் புகழ்மிக்க எகிப்திய மாலுமியான ரிப்லஸ் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை பயன்படுத்தும் முறையையும் அறிந்திருந்தார். பருவக்காற்றைப் பயன்படுத்தும் அறிவை மட்டுமன்றி துணிவையும் அவர்கள் கொண்டிருந்தனர் என்று Tennant Emarson (1859) குறிப்பிடுகிறார்.
  • ஏற்கனவே சிற்சில மரபு வழிக் கட்டுப்பாடுகளுடன் இந்தியத் துணைக்கண்டத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த அரேபியர்கள் ரோமானியப் பேரரசின் சரிவைத் தொடர்ந்து துறைமுக வணிகத்தில் முழு ஆதிக்கம் பெற்றனர். தென்கிழக்காசியாவின் வர்த்தகம் அரேபியர்களின் தனியுரிமை என்று கூறுமளவுக்கு அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. கி.பி. 4ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு முற்றாக வீழ்ந்ததனாலும்அக்கால இந்தியாவின் கடல் மார்க்க வர்த்தகத்தில் பங்கு கொள்ளாததாலும் தென் அரேபியரும் பாரசீகருமே துணைக்கண்டத்துடனான வர்த்தகத்தில் செல்வாக்குச் செலுத்தினர் என்று R.E. Mille என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.
  • இக்கருத்தை Tennant Emarson தனது இலங்கை என்ற நூலில் அரேபியர்கள் நான்காம்ஐந்தாம் நூற்றாண்டுகளில் மங்களூர்கள்ளிக்கோடு, கொல்லம்காயல்பட்டணம் போன்ற நகரங்களிலும், மலபாரின் ஏனைய துறைமுகங்களிலும் தமது வர்த்தகத்தை நிலைப்படுத்திக்கொண்டனர். ஏற்கனவே இலங்கையில் குடியேறியிருந்த தமது சந்ததிகளுடனும் அவர்கள் தொடர்பாடல்களைப் பேணினர்” என்று குறிப்பிடுகின்றார்.
  • கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இலங்கைத் துறைமுகங்களுக்கு அரேபிய வணிகர்கள் அடிக்கடி வந்து போயினர் என The Periplus of the Erythrian Sea என்னும் கிரேக்க வர்த்தகக் கைநூல் குறிப்பிடுகின்றது. பிலைனிங் (கி.பி.1), ஓனர்ஸ் கிரிட்டஸ் (கி.பி.3), இன்டிகோபிரிஸ்டர்ஸ் (கி.பி. 6) ஆகியோர் தமது கிறிஸ்தவ விவரண நூல்களிலும் அக்கால இலங்கைத் துறைமுகங்களில் அரேபியர் பெற்றிருந்த வணிகச் செல்வாக்கினை உறுதிசெய்கின்றனர்.
  • கி.பி. 3ம் நூற்றாண்டின் முடிவிலிருந்து ரோமர்களின் செல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. கடலாதிக்கத்தில் உரோமர்களை வென்ற அரேபியர்கள் கி.பி 2ம் நூற்றாண்டு காலப்பகுதியில்இலங்கையுடனான வர்த்தகத் தொடர்புகள் முழுவதையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். கிறிஸ்தவயுகத்தின் 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையுடனான சீன வர்த்தகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆயினும், 8ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் துறைமுகப் பகுதிகளில் கணிசமான அரபிகள் குடியிருந்தனர்என்று Tomas Arniod தனது Preaching Of Islam எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
  • இஸ்லாத்திற்கு முந்திய ஜாஹிலியக்கால அரபுக் கவிஞர் இம்ராஉல் கைஸ் இப்னு ஹஜர் என்பவரின் கவிதைகளிலும் இலங்கைக்கும் அரபுலகிற்கும் இடையில் நிலவிய உறவுகளை சூட்சுமமாக வெளிப்படுத்துகிறார். (இவரது கவிதைகள் 1837ல் முதன் முதலாக மிஸ்யம் என்பவரால் பாரிஸ் நகரில் பதிப்பிக்கப்பட்டது.) இவரது தீவானின் மூன்றாவது கவிதையில் பில்பில்சு” என்ற வார்த்தையும் இன்னொரு கவிதையில் கரன்புல்சு என்றும் வருகிறது. பில்பில் என்பது மிளகாயைக் குறிக்கிறது. இது அரபு நாட்டில் உற்பத்தியாகாத ஒரு பொருள். அதே வேளை கரன்புல் என்பது கராம்பைக் குறிக்கும் சொல். ஆனால் இது அடிப்படையில் ஓர் அரபு மொழிச் சொல்ல்ல. கீழைத்தேய நாடுகளுடன் குறிப்பாக இலங்கையுடன் அரேபியர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை இச்சொற்கள் காட்டுவதாக இம்ராஉல் கைஸின் கவிதைகளை ஆராய்ந்தவர்கள் அபிப்பிராயப் படுகின்றனர்.-(றவூப்ஸெய்ன்)
  • கி.பி. 150ல் கிளோடியஸ் தொலமியால் வரையப்பட்ட உலக வரைபடமே உலகின் மிகப்பழமையான வரைபடமாக கருதப்படுகின்றது. இதில் இலங்கையையும் அவர் உள்ளடக்கியதாகவே அந்த வரைபடத்தை வரைந்திருந்தார். அதில் இலங்கையை தப்ரப்பேன் என்றழைக்கும் தொலமி இலங்கையின் மிகப்பெரும் ஆறுகளுள் ஒன்றான மகாவலி கங்கையை பாசில்பலூசியஸ்” (பாரசீகநதி) என்றும்ஜின் கங்கையை அஸனாக்பலூலியஸ்” (எதியோபிய நதி) என்றும்தெதுரு ஓயாவை சோனாபலூசியஸ்” (அரேபியநதி) என்றும் குறிப்பிடுகின்றார். குறிப்பிட்ட இந்த நதிக்கரையோரங்களில் பாரசீகஅரேபியமற்றும் எதியோப்பியர்களின் குடியிருப்புகள் சில இடங்களில் செறிவாகவும்இன்னும் சில இடங்களில் சிதறலாகவும் இருந்ததென தொலமி தனது இலங்கை பற்றி குறிப்புக்களில் தெரிவித்துள்ளார். அதேபோல் இலங்கையின் கிழக்குப் பகுதியை அரபித்தத்தா” என்று குறிப்பிட்டு இப்பிரதேசத்துடன் அரபிகள் வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும்அறுகம்பை துறைமுகம் அவர்களது துறைமுகமாக விளங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  (இவருக்கு முன்னர் இலங்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த ஓனஸ் கிரிட்டஸ்’ என்பவரிடமிருந்து தொலமி பெற்றுக் கொண்ட தகவல்களும்புவியியல் ஆய்வுக் குறிப்புக்களுமே தொலமி பூகோளப்படத்தில் இலங்கையையும் உள்ளடக்கி வரைவதற்கு உதவியாக அமைந்திருந்ததன)
  • கி.பி 414இல் யோனரை (அரபுவணிகர்களை) அனுராதபுரத்தில் தாம் கண்டதாகவும்அவர்களை தான் சந்தித்ததாகவும்அவர்களின் வீடுகள் அழகாகக் காட்சியளித்தன என்றும் சீனயாத்திரிகரான பாஹியன் குறிப்பிட்டுள்ளார்-( மகாவம்சம்).
இவ்வரலாற்று சான்றுகள் அனைத்தும் இஸ்லாத்துக்கு முற்பட்ட காலம் முதலே இலங்கை அரேபியருக்குப் பரீட்சயமாக இருந்துள்ளதுடன்இலங்கையில் அரேபியக் குடியேற்றங்கள் இருந்ததையும்அவர்கள் இங்கு வணிகச் செல்வாக்கினை பெற்றிருந்ததையும் பறைசாட்டுவதாய் அமைகின்றன.

எனவேதான்இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே இலங்கையில் அரேபியக் குடியேற்றங்கள் காணப்பட்டன என்பதை வரவலாற்று ஆசிரியர்களும்அவர்களது ஆவணங்களும் உறுதிப்படுத்துகின்றன. மேலும் தென்கிழக்கு ஆசிய வரலாற்றை ஆராய்ந்த அனைவரும் இதனை ஏற்றுக் கொள்கின்றனர்.

இஸ்லாத்துக்கு பின்
  • கி.பி. 632இல் நபி(ஸல்) அவர்கள் வஹாப் இப்னு அபீ ஹப்ஸா” என்ற நபித் தோழரை அப்போதிருந்த இலங்கை மன்னனிடம் அழைப்புப் பணிக்காக(தஃவா) அனுப்பி வைத்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.- (மாத்தளைமாவட்டமுஸ்லிம்கன்-பக்கம்32).
  • மேலும் நபியவர்களின் தூதுத்துவம் பற்றி கேள்வியுற்ற இலங்கையர்கள், நபி (ஸல்) அவர்கள் பற்றிய உண்மைச் செய்திகளை அறிந்துவர திறமைமிக்க ஒருவரை அரேபியாவுக்கு அனுப்பிவைத்ததாகவும்அவர் அரேபியாவை அடைந்தபோதுஅங்கு உமர்(ரழி) அவர்களின் ஆட்சி(கி.பி634-644) நடைபெற்றுக் கொண்டிருந்தது எனவும் பின் அந்ததூதுவர் செய்திகளை அறிந்து வந்து இலங்கை மன்னருக்கும், மக்களுக்கும் விளக்கமளித்தார் எனவும்“ அஜாயிபுல்ஹிந்த்” எனும் நூல் குறிப்பிடுகின்றது.
  • ஹிஜ்ரி 22இல்(கி.பி. 643) யெமன் நாட்டின் அரச வம்சத்தைச் சேர்ந்த பதியுத்தீன்ஸலாஹுத்தீன்முஹம்மத் என்ற மூவரது தலமையில் கப்பல்கள் யெமன் துறைமுகத்திலிருந்து கீழைத்தேய நாடுகளை நோக்கிப் புறப்பட்டன. இவர்களுல் ஸலாஹுத்தீனின் மகன் மன்னாரிலும்முஹம்மதும் அவரது மகனும் பேருவலையிலும் இறங்கி அங்கு வாழ ஆரம்பித்தனர்.-(மாத்தளைமாவட்டமுஸ்லிம்கள்-பக்கம்34,35).
  • கலீபா அப்துல் மலீக் இப்னு மர்வானின் ஆட்சிக் காலத்தில்(கி.பி685-705) மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு சீர்திருத்தத்தால் பாதிக்கப்பட்ட ஹாஸிம் குடும்பத்தின் ஒருபிரிவினர் தூர இடங்களுக்குச் சென்று வாழ வேண்டிய நிலையேட்பட்டது. எனவே இவ்வாறு வந்தவர்கள் இந்திய தீபகற்பத்தின் தெற்குப்பகுதியிலும், இலங்கையிலும், மலாக்காவிலும் குடியேரினர். அவர்களில் இலங்கைக்கு வந்த பிரிவினர்இலங்கையின் வடக்குகிழக்கு என நாலா புறங்களிலும் பெரியளவிலான எட்டு குடியிருப்புக்களை ஏற்படுத்தினர் என்று சேர் அலெக்சான்டர் ஜோன்ஸ்டன்”  குறிப்பிட்டுள்ளார்.
  • புகழ் பெற்ற வரலாற்றாசிரியான H.W.கொரிங்டன்- “ 8ம், 9ம், 10ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த அதிகமான அரேபிய நாணயங்கள் இலங்கையின் கரையோரங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் 9ம்,10ம் நூற்றாண்டுகளில் இலங்கை முஸ்லிம்கள் குடியேற்றங்களை ஸ்தாபித்து விட்டனர் என்றுகூறுகின்றார்.
  • இலங்கையின் புதைபொருள் ஆராய்ச்சியாளரான செனரத் பரன விதாரன” அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்கள் பற்றியும் நாணயங்கள் பற்றியும் குறிப்பிடும் போதுஅரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் அவற்றுல் அடங்குவதாகவும் அவை அப்பாஸியர் காலத்திற்கு உரியவையாக இருக்கக் கூடும் எனவும் அந்நானயங்களில் கலீபாவினதும்வர்த்தகக் கப்பலினதும் உருவங்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
  • முஸ்லிம்களின் பூர்வீக இடங்களில் ஒன்றான பேருவளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாயல் சுமார் 1300வருடங்கள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவர்கள் அதிகம் தெற்கிலும்தமிழர்கள் அதிகம் வடக்குகிழக்கிலும் வாழ்ந்து வருகின்றனர். வரலாற்று நெடுகிலும் இவ்விரு சமூகத்தின் பரம்பலும் இவ்வாறே காணப்பட்டு வருகின்றது. ஆனால் முஸ்லிம்கள் மட்டும்தான் வடக்குகிழக்குதெற்குமேற்கு என நாட்டின் சகல பாகங்களிலும்பிரதேசங்களிலும் வரலாற்றுக் காலம் தொட்டே வாழ்ந்து வருபவர்களாக இருக்கின்றனர். வடக்குகிழக்கில் தமிழர்கள் ஒருபோதுமே வாழ்ந்திராத பிரதேசங்களிலும் அதேபோல் தெற்கில் சிங்களவர்கள் ஒருபோதுமே வாழந்திராத பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் மட்டுமே நூறு வீதமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு நாட்டின் பூர்வீக குடிகள்தான் நாட்டின் சகல பாகங்களிலும் பரந்து வாழக் கூடியவர்கள். மாறாக குடியேரியவர்கள் குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே தமக்கான வாழிடங்களை அமைத்து வாழ்பவர்களாக இருப்பார்கள். எனவே இலங்கை முஸ்லிம்கள் ஆதிகாலம்(ஆதம்நபிகாலம்) தொட்டே இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என்ற உறுதியான முடிவுக்கு வரமுடியும்.

இலங்கை முஸ்லிம்களின் தொன்மையான வரலாற்றை கூறும் ஆவங்களில் பின்வருவோரின் ஆவங்கள் முக்கியமாவையாகும்.

  • கி.பி. 7ம்நூற்றாண்டு :இப்னுஅப்பாஸ்
  • கி.பி. 9ம்நூற்றாண்டு :தபறி,அல் பிலநூறிசுலைமான் தாஜிர்இப்னு வஹாப்இப்னு சஹ்றியார்
  • கி.பி. 10ம்நூற்றாண்டு :அல்-மஹுதி, இப்னுஹங்கல் ,அல்-மக்திஸிஅபூசயீத் அஸ்ஸிபானிஇஷ்திகாரி
  • கி.பி. 12ம்நூற்றாண்டு :இத்ரீஸி
  • கி.பி. 13ம்நூற்றாண்டு :கஸ்வினி
  • கி.பி. 14ம்நூற்றாண்டு :இப்னுபதூதா
இம் மூலச்சான்றுகள் அனைத்தும் அரபு மற்றும் பாரசீக மொழிகளில் காணப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை ஆங்கிலத்திலும் வேறு சில ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உசாத்துணைகள்:
  1. Nuhman, M. ASri Lankan Muslims - Ethnic Identity within Cultural Diversity, International Centre for Ethnic Studies, 2007
  2. Sameem, A. MMuslims of Sri Lanka, Kumaran Book House, 1997
  3. Sanden, Van J. CSonahar: A Brief History Of The Moors Of Ceylon,  Van Sanden & Wright, 1926
  4. முஹ்சின் அ.வஇலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்சோனகம் வெளியீட்டகம்மூதூர்.
  5. விக்டர்முஸ்லிம் தேசமும் எதிர்காலமும், 3வது மனிதன் பதிப்பகம்அக்கரைப்பற்று.
  6. அமீன் எம்.ஐ.எம்இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும்-(1870-1915), அல்ஹஸனாத் பதிப்பகம்ஹெம்மாதகம.
  7. அப்துல் அஸீஸ் ஐ.எம்.ஏஇலங்கை  சோனகர் இன வரலாறுசோனக இஸ்லாமிய கலாசார நிலைய வெளியீட்டகம்கொழும்பு.
  8. நூறுல் ஹக் எம்.எம்.எம்முஸ்லிம் பூர்வீகம்மருதம் கலை இலக்கிய வட்டம்சாய்ந்தமருது.
  9. மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள்,(1993), இலங்கை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.
  10. கண்டி மாவட்ட முஸ்லிம்கள், (1996),  இலங்கை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்கொழும்பு.
  11. அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்(1997), இலங்கை முஸ்லிம் சமயகலாசார அலுவல்கள் திணைக்களம்கொழும்பு.
  12. அல்-இஸ்லாஹ்இதழ்-03, முஸ்லிம் மஜ்லிஸ்இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
  13. மீள்பார்வைதொன்மை நோக்கிய பாதைகட்டுரைத் தொடர்.
  14. மீள்பார்வைஇலங்கை முஸ்லிம்களின் அரசியல் நெடும் பயணம்கட்டுரைத்தொடர்.
  15. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்”, A.B.M. இத்ரீஸ், மஜீதிய்யா அரபுக்கல்லூரி சிறப்புமலர் (2014.09.28), மஜீதிய்யா அரபுக்கல்லூரி.
  16. இத்ரீஸ் ஏ.பி.எம்சோனக தேசம்அறிமுக குறிப்புகள், பெருவெளி,  இதழ்-மே 2008.
  17. https://www.sonakar.com
  18. https://www.raufzain.com
by : MSM. Naseem        MA, PGDE, B.A (Hons)

No comments:

Post a Comment