.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, January 28, 2023

இலங்கையின் தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை தொடர்பான பார்வை (தொடர் - 01)

இலங்கையில் தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கலப்பு விகிதாசார முறையின் அடிப்படையிலேயே நடாத்தப்படுகின்றது. (2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின்படி) 

கலப்பு விகிதாசார முறை என்பது, ஏதேனும் ஒரு உள்ளுராட்சி மன்றுக்கான உறுப்பினர்கள் வட்டார (உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பிரதேச அலகு) மட்ட ரீதியாகவும் பொது ஆவணத்தின் மூலமாகவும் தேர்ந்தெடுக்கும் வழிமுறையாகும். 

வட்டாரம் மற்றும் வேட்பாளர் ஒதுக்கீடு

2017 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க பிரதேச சபைகள் திருத்தச் சட்டத்தில் இது தொடர்பான விடயங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இதன்படி வட்டாரங்களையும் பொது ஆவணத்தையும் அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட வேண்டிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை வட்டார மட்ட ரீதியாக 60% உறுப்பினர்களும், விகிதாசார அடிப்படையில் 40% உறுப்பினர்களும் எனும் அடிப்படையில் அமைதல் வேண்டும். 

உதாரணமாக A எனும் உள்ளுராட்சி மன்றுக்கு வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆகக் காணப்படுகிறது என வைத்துக்கொள்வோம் (ஒற்றை மற்றும் பன்மை வட்டாரங்கள் உள்ளடங்கலாக). இங்கு இந்த 10 உறுப்பினர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 60 வீதமாகக் கணிப்பிடப்படும். 

எனவே 10*40/60 = 6.66 எனும் வகையில் 6 உறுப்பினர்கள் (தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாது) இவ்வுள்ளுராட்சி மன்றுக்கு விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட வேண்டும். இதன்படி இவ்வுள்ளுராட்சி மன்றுக்கான மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை வட்டார ரீதியாக 10 மற்றும் விகிததாசார அடிப்படையில் 6 எனும் வகையில் மொத்தம் 16 ஆகும். 

உள்ளூராட்சி சபைக்கான நிருவாகப் பிரதேசத்தில் உள்ள வட்டாரங்கள் மற்றும் அதற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பன எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றி 2015.08.21 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1928/26 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 2017.02.17 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2006/44 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் என்பவற்றின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இதன்படி நாட்டின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வட்டாரங்களை தீர்மானிக்க வேண்டியது எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பணியாகும். இதன்போது சனத்தொகை, நிலப்பிரதேசத்தின் அளவு மற்றும் இன ரீதியான அடிப்படை என்பன தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும். இதன் பிரகாரம் உள்ளுராட்சி மன்றங்கள் ஒற்றை உறுப்பினர் வட்டாரம் மற்றும் பன்மை உறுப்பினர்கள் வட்டாரம் என இரண்டு வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

இவ்வேட்பாடுகளின் படி தற்போது நாட்டின் சகல உள்ளுராட்சி மன்றங்களுக்குமான வட்டாரங்கள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பின்வருமாறு, 



வேட்புமனு தாக்கல் செய்தலும் பெண்களுக்கான ஒதுக்கீடுகளும்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்காக வேண்டி வேட்புமனு தாக்கல் செய்கின்றபோது அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் இரண்டு படிவங்களில் தமது வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். 

1) வட்டாரங்களுக்கான வேட்புமனுக்கள் : ஒற்றை வட்டாரங்கள் மற்றும் பன்மை வட்டாரங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, குறித்த உள்ளுராட்சி மன்றுக்கு வட்டார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குச் சமமான அளவில் வேட்பாளர்களின் பெயர்களை குறித்த வேட்புமனுவில் உள்ளடக்கி சமர்ப்பிக்க வேண்டும். 

2) விகிதாசார ரீதியிலான வேட்புமனுக்கள் : மேலே குறிப்பிட்டவாறு குறித்த உள்ளுராட்சி மன்றுக்கான நூற்றுக்கு 40 வீதமான எண்ணிக்கையைக் கணித்து, அவ்வெண்ணிக்கையுடன் மேலதிகமாக 03 ஐச் சேர்த்து வரும் எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கையிலான வேட்பாளர்களின் பெயர்களை உள்ளடக்கி குறித்த வேட்புமனுவை சமர்ப்பிக்க வேண்டும். 

உதாரணமாக மேலே குறிப்பிட்ட A எனும் உள்ளுராட்சி மன்றுக்கு விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகக் காணப்படுகிறது. எனவே குறித்த உள்ளுராட்சி மன்றுக்கான விகிதாசார ரீதியிலான வேட்புமனுவில் 09 (6+3) வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட வேண்டும். 

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களால் வேட்புமனுப் பத்திரம் தயாரிக்கப்படுகின்ற போது மேலே குறிப்பிட்ட சட்ட ஏற்பாடுகளில் காணப்படுகின்ற பெண்கள் தொடர்பான ஏற்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதன்படி அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் மேற்குறிப்பிட்டவாறான இரண்டு வகையான வேட்புமனுப் பத்திரங்களிலும் பின்வரும் முறையில் பெண் வேட்பாளர்களின் பெயர்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும். 

ஒரு உள்ளுராட்சி மன்றுக்கான வட்டார ரீதியான வேட்புமனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை, அதன் மொத்த உறுப்பினர் தொகையில் நூற்றுக்கு 10 வீதமாகக் காணப்பட வேண்டும். 

உதாரணமாக மேலே குறிப்பிட்ட A எனும் உள்ளுராட்சி மன்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆகக் காணப்படுகிறது. இதன்படி 16*10/100 = 1.6 எனும் அடிப்படையில் இவ்வுள்ளுராட்சி மன்றுக்கான வட்டார அடிப்படையிலான வேட்புமனுவில் 1 பெண் வேட்பாளர் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் (தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாது). 

இதேவேளை விகிதாசார ரீதியிலான வேட்புமனுவைப் பொருத்தமட்டில் அதில் நூற்றுக்கு 50 வீதமான பெண் வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். 

உதாரணமாக மேலே குறிப்பிட்ட A எனும் உள்ளுராட்சி மன்றுக்கு விகிதாசார ரீதியாக தெரிவு செய்யப்பட வேண்டிய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகக் காணப்படுகிறது. இதன்படி 6*50/100 = 3 எனும் அடிப்படையில் இவ்வுள்ளுராட்சி மன்றுக்கான விகிதாசார ரீதியிலான வேட்புமனுவில் 3 பெண் வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். 


 ஆசிரியர் : M.S.M. நஸீம்   MA in (Political Science) 


 தொடரும் ...


1 comment: