.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, May 7, 2023

இலங்கையில் பொதுத்துறை நிர்வாகமும் பிரதேச செயலகங்களும்

இன்று உலகளவில் மிகவும் முக்கியத்துவமிக்க ஒரு அம்சமாக பொதுத் துறை நிர்வாகம் காணப்படுகின்றது. இத்துறை மூலம் ஒரு நாட்டில் வாழும் பொதுமக்களுக்கு பல விதமான சேவைகள் முன்னெடுக்ப்படுவதுடன், அதன் நிர்வாக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் சிறந்த முகாமைத்துவ செயற்பாட்டிற்கும், அவிவிருத்திக்கும் ஒரு அடிப்படையான அம்சமாகவும் இது காணப்படுகின்றது. இதனால் அரசாங்கத்தின் நான்காவது கரமாகப் பொதுத்துறை நிர்வாகமானது சிறப்பிக்கப்படுகின்றது.

பொதுத்துறை நிர்வாகம் என்றால் என்ன என்பது பற்றி பல அறிஞர்களினாலும் பல வகையான வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்படுகின்றது. அவற்றில் பிரபல்யமான சிலவற்றை இங்கு நோக்குவோம்.

சட்டத்தை முறையாகவும் ஒழுங்காகவும் நிறைவேற்றுவதே பொதுத்துறை நிர்வாகமாகும். - (வூட்றோ வில்சன்)

பொதுமக்களின் நலன்களுக்காக சட்டமன்றம் இயற்றிய சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிர்வாகத்துறை மேற்கொள்ளும் எல்லாச் செயல்களும் பொதுத்துறை நிர்வாகமாகும். - (L.D. வைட்)

சட்டத்திற்கு நடைமுறைத் தன்மையை வழங்க அரசு மேற்கொள்ளும் பணியே பொதுத்துறை நிர்வாகமாகும். - (ஹார்வே வோக்கர்)

இந்தவகையில் 'பொதுமக்களின் விருப்பங்களையும் குறிக்கோள்களையும் நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டமன்றத்தின் ஊடாக சட்டங்களை உருவாக்கி அவற்றை அரசாங்கம் செயற்படுத்தும் ஒட்டுமொத்த செயன்முறையை பொதுத்துறை நிர்வாகம் எனலாம்'. இங்கு பொதுத்துறை நிர்வாகம் என்பதில் 'பொது' என்பது மக்களைக் குறிப்பதுடன், “Ad-ministaire” எனும் இலத்தீன் மூலத்திலிருந்து பிறந்த 'நிர்வாகம்' எனும் சொல் விவகாரங்களை முகாமை செய்தலை அல்லது மக்களை பராமரித்தலைக் குறிக்கிறது.

அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் செயல்படும் இத்துறையானது, பொதுப் பணித்துறை மற்றும் முகமைத்துவப் பணி புரியும் பலமட்ட பொதுப் பணியாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள் தரவுகளைச் சேகரித்தல், வரவுசெலவுத் திட்டங்களைக் கண்காணித்தல், சட்டங்களையும் கொள்கையையும் உருவாக்குதல் மற்றும் சட்டப்பூர்வமாக கட்டாயமான செயல்பாடுகளைச் செயல்படுத்தல் போன்ற பல்வேறுபட்ட பணிகளைச் செய்கின்றனர்.

பொதுத்துறை நிர்வாகத்தின் இயல்புகளாக அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்தில் பங்கேற்றல், அவற்றை நடைமுறைப்படுத்தல், அரைகுறை நீதித்துறைப் பணிகளை நிறைவேற்றல், தனது செயற்பாடுகள் தொடர்பாக சட்டதுறையின் கண்காணிப்புக்கு உட்படுதல், தனது பணிகள் தொடர்பாக நிறைவேற்றுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டுக்கு உட்படல், தனது தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக நீதித்துறை தீர்ப்புக்களுக்கு உட்படல் போன்றவை காணப்படுகின்றன. இதேவேளை ஆராய்தல், முன்கூட்டியே உணரும் தன்மை, திட்டமிடுதல், நெகிழும் தன்மை, தேவையான உத்தியோகத்தர்கள் மற்றும் மூலப்பொருட்கள், சிறந்த அமைப்பு, அரசியல் கண்காணிப்பு, பொதுமக்கள் தொடர்பு, பொறுப்பு கூறுதல், சமூக அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படல், காலத்திற்கு காலம் நவீன முறைகள் கண்டுபிடிக்கப்படல் போன்றவை பொதுத்துறை நிர்வாகத்தின் அடிப்படை அம்சங்களாகக் காணப்படுகின்றன.

பொதுத்துறை நிர்வாகமானது பல வகைகளில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாகக் காணப்படுகின்றது. அந்தவகையில், ஒரு நாட்டில் அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் மாறுகின்ற போதும் இது நிரந்தர நிர்வாகமாக இருந்து மக்களுக்கு சேவைகளை செய்கின்றது. அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்தில் பாரியளவு பங்களிப்புச் செய்யும் அமைப்பாகத் தொழிற்படுகின்றது. நாட்டு நலனுக்குத் தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்வதற்கு சட்டத்துறைக்கு உதவி செய்வதுடன்,  அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துகின்ற பணியையும் செய்கின்றது. மேலும், நாட்டின் முத்துறைகளையும் ஒருங்கிணைத்து அவற்றின் செயற்பாடுகளை ஒழுங்குற இயக்கிச் செயற்படுகின்றது.  மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றினை நிறைவு செய்து வைக்கின்றது. அத்துடன், மக்களுக்கும் அரசியல் நிர்வாகத்திற்கும் இடையிலான இணைப்புப் பாலமாகவும் இது செயற்படுவதுடன், அரசாங்கம் தனது வருவாயினை ஈட்டிக்கொள்வதற்கு அவசியமான ஒன்றாகவும் காணப்படுகின்றது.

இந்தவகையில் இன்று சர்வதேச அளவில் பல நாடுகளிலும் பொதுத்துறை நிர்வாக அமைப்புக்கள் முக்கியத்துவம் பெற்று விளங்குவதை அவதாணிக்கலாம். பொதுத்துறை நிர்வாகத்துறையின் நடவடிக்களை விருத்தி செய்யும் முகமாக, சர்வதேச அளவில் பல நாடுகளும் பல சமூக அமைப்புக்களையும், கற்கை நிலையங்களையும் அமைத்து பொதுத்துறை நிர்வாகம் தொடர்பான செயற்பாடுகளையும், கற்கைகளையும், பயிற்சிகளையும் முன்னெடுத்தும் வருகின்றன. சீனாவில் காணப்படும் Hong Kong Public Administration Association (HKPAA), அமெரிக்காவில் உள்ள American Society for Public Administration (ASPA), இந்தியாவில் உள்ள Indian Institute of Public Administration (IIPA), வெனிசுவேலாவின் கராக்ஸ் நகரை அடிப்படையாகக் கொண்ட Center for Latin American Administration for Development (CLAD), ஐரோப்பாவில் காணப்படும் European Association for Public Administration Accreditation (EAPAA), The European Group for Public Administration (EGPA) போன்ற நிறுவனங்கள் இவற்றில் மிக முக்கியமானவைகளாகும்.

இலங்கையில் பொதுத்துறை நிர்வாகமும் பிரதேச செயலகங்களும்

இலங்கையைப் பொருத்தவரையிலும், பொதுத்துறை நிர்வாகமானது மிக முக்கியத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகவே காணப்படுகின்றது. இவ்வமைப்பின் மூலம் நாட்டு மக்களின் நலனுடன் தொடர்புடைய கொள்கைகள் வகுக்கப்படுவதுடன், பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தவும் படுகின்றன. பாராளுமன்ற, மாகாணசபை அமைச்சுக்கள், திணைக்களங்கள், பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் போன்றவை இங்கு பொதுச்சேவையை முன்னெடுக்கும் நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. விசேடமாக பிரதேச செயலங்கள் மூலமே பெரும்பாலான பொதுத்துறை சார்ந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இலங்கையின் பொதுத்துறை நிர்வாகத்தில் பிரதேச செயலகங்கள் மிக முக்கியத்துவமிக்கவைகளாக காணப்படுகின்றன.

பிரதேசச் செயலகங்கள் (Divisional Secretariat) என்பது இலங்கையில் ஒரு நிர்வாக அலகாகும். முழு இலங்கையும் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் பல பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப் பிரிவுகளும் மேலும் சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அல்லது கிராம அலுவலர் பிரிவுகள் எனப்படுகின்றன. பிரதேசச் செயலாளர் பிரிவு ஒவ்வொன்றும் பிரதேசச் செயலாளர் ஒருவரின் கீழ் இயங்குகின்றது. இப் பிரதேசச் செயலாளர்கள் மாவட்டங்களின் நிர்வாகத் தலைவர்களான அரசாங்க அதிபர்களுக்குப் பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர்.

தற்போது இலங்கையில் மொத்தமாக 331 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. மக்கள் தொகை, இடப் பரப்பளவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தளவு தொடக்கம் கூடியளவு வரையான பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இப்பிரதேச செயலகங்கள் பல நோக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

  • நிர்வாகத்தைப் பன்முகப்படுத்துவதன் மூலம் கிராமிய மட்ட முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தல்.
  • பிரதேச முன்னேற்றத்தில் மக்கள் பங்குபற்றலை அதிகரித்தல்.
  • மக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்திசெய்து கொடுப்பதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தல்.
  • மக்களின் வாழ்க்கைச் செலவு, நேர விரயம், போக்குவரத்துச் செலவு என்பவற்றைக் குறைத்து வாழ்க்கைத்தரத்தைக் கூட்டுதல்.
  • தேசிய முன்னேற்றத்தை எய்வதற்கு கிராமிய முன்னேற்றம் அவசியம் என்பதால் கிராமிய மட்டத்தை விருத்தி செய்தல்.
  • கிராமிய மட்டத்திலான சமூக, பொருளாதார, கலாசார தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொடுத்தல்.
  • வினைத்திறனான துரித தீர்மானங்களை எடுத்தல்.

இந்தவகையில் பிரதேச செயலகங்களால் பல்வேறு பொதுச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பிரதானமானவையாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. சிவில் பதிவுகள் - பிறப்புஇ இறப்பு, திருமண சான்றிதழ்கள், தோராயமான வயது சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்றவற்றுக்கான பதிவுகளை மேற்கொள்ளல்.

2. அனுமதி பத்திரம் வழங்குதல் - போக்குவரத்து, மரம் வெட்டுதல், விலங்கு போக்குவரத்து, வியாபார பெயர் பதிவு செய்தல், நிறுவனங்களை மூடுதல், மதுபான கடைகள் திறப்பு, அடகுக்கடைகளை நடத்தல், சுரங்கத் தொழில், வெடிமருந்து பாவனை, வாகன வருமான உரிமை புதுப்பித்தல் போன்ற பல்வேறு விடயங்களுக்கான அணுமதியை வழங்குதல்.

3. சான்றிதழ் விநியோகித்தல் - தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, இறப்பு, திருமணம், வருமானம், மதிப்பீட்டு அறிக்கை, வதிவிட சான்று, வதிவிடம் விட்டு செல்வதற்கான சான்று, நீர் வசதிகள் பெற்றுக்கொள்ளல், மின்சார வசதிகள் பெற்றுக்கொள்ளல் போன்றவற்றுக்கான    சான்றிதழ்களை வழங்குதல்.

4.நில நிர்வாகம் - நிலங்கள் உரிமையை பெறுதல், நிலங்கள் விநியோகம், நிலங்கள் உரிமை மாற்றுதல், பெயரிடும், வாரிசு மாற்றுதல், அறுவடை, மத ஸ்தலங்களுக்கான நிலங்கள் ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 

5. சமுர்த்தி திட்டம் - சமுர்த்தி அட்டைகள் வழங்கல், சமுர்த்தி அஞ்சல்தலைகள், சமுர்த்தி காப்புறுதி திட்டம், சமுர்த்தி சீட்டுகள், சமுர்த்தி செயற்திட்டங்கள் போன்றவற்றை முன்னெடுத்தல்.

6. கொள்முதல் - பொருட்கள், வேலை, சேவைகள் தொடர்பான கொள்முதல்களை மேற்கொள்ளல்.

7. சமூக நலம் மற்றும் நன்மைகள் - சுகாதாரம், நீர் விநியோகம், குறைந்த வருமானம் பெருவோர், நோயாளிகள், விதவைகள் போன்ற நிவாரணம் வழங்குதல், இணக்க சபைகள் மூலம் குடும்ப, சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற பல சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்தல்.

8. அபிவிருத்தி திட்டங்கள் - பரவலாக்கப்பட்ட வரவு செலவு திட்டங்கள், மாகாண சபை திட்டங்கள், வரி அமைச்சகத்தின் திட்டங்கள், அரசு விசேட நிகழ்ச்சிகள், ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் தயாரித்தல், பகுதி ஆதார விவரங்களை தயாரித்தல். போன்ற திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

9. பொருளாதார விருத்தியை அடிப்படையாகக் கொண்டு விவசாயம், நீர்ப்பாசனம், கைத்தொழில் விருத்தி, கிராமிய முன்னேற்றம், பாதை விருத்தி போன்றவற்றுக்கு தேவையான நடலடிக்கைகளை மேற்கொள்ளல்.

10. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதை நடைமுறைப்படுத்தல்.

இவ்வாறு பல்வேறு பொதுச்சேவைகள் இப்பிரதேச செயலகங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் தமது தேவைகளை விரைவாகவும், பணவிரயமின்றியும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், துரித முன்னேற்றத்தை அடைவதும் அரசாங்கத்தின் எதிர்ப்பார்க்கையாகும்.

இவ்வாறு பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, பல வகையான பொதுச்சேவைகளை முன்னெடுத்துவருகின்ற ஒரு முக்கியத்துவமிக்க அமைப்பாக பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றது. எனினும் இவை இவ்வாறான பொதுச்சேவைகளை வழங்குகின்ற போது பல பிரச்சினைகளையும் எதிர்கொள்வதை அவதாணிக்க முடிகின்றது.


பொதுச்சேவை வழங்களின் போது பிரதேச செயலகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

பொதுச்சேவை வழங்களின் போது பிரதேச செயலகங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதை காணமுடிகின்றது அவற்றில் மிக முக்கியமானவைகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.

1. ஊழியர் பற்றாக்குறை - தேவைக்கு ஏற்ற அளவில் போதுமான ஊழியர்களை இவை கொண்டிருக்காமை.

2. பயிற்றப்பட்ட ஊழியர்கள் இல்லமை - இங்கு சேவையில் ஈடுபடும் ஊழியர்களில் அதிகமானோருக்கு குறித்த சேவை தொடர்பான அனுபவங்கள் மற்றும் பயிற்சிகள் போதாமையாகக் காணப்படல்.மொழிப்பிரச்சினை – நாட்டின் பல பாகங்களிலும் சிங்களம் அல்லது தமிழை தாய் மொழியாகக் கொண்ட மக்கள் இரண்டரக் கலந்து வாழ்கின்றனர். என்pனும் இவ்வாறான நிறுவனங்களில் சேவை புரியும் ஊழியர்களில் அதிகமானோர் ஒரு மொழியை மாத்திரம் அறிந்திருப்பதால், மற்ற மொழியை பேசும் தரப்பினரின் கோரிக்கை, தேவைகளை அவர்களால் தெளிவாக அறிந்து கொள்ள முடியாமல் போகின்றது.

3. மக்களின் அறியாமை - பிரதேச செயலகம் என்பது பொதுச் சேவை வழங்குவதில் பிரதேசத்தில் காணப்படும் ஒரு முக்கிய நிறுவனம் என்ற வகையில்  மக்களுக்கு அந்த நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தெளிவான விளக்கம் மக்களிடம் காணப்படாமை.

4. பண ஒதுக்கீட்டில் காணப்படும் பாகுபாடு - அரசினால் வருடாந்தம் பிரதேச செயலங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற பணத்தில் பாகுபாடு காட்டப்படல்.
வளப்பற்றாக்குறை - பல பிரதேச செயலங்கள் போதுமான வளங்களைக் கொண்டிருக்காமை.

5. அரசியல் தலையீடு - அரசியல் வாதிகள் தமது திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்குமாறு வற்புறுத்தல், தமது ஆதரவாளர்களுக்காக சிபாரிசு செய்தல், ஊழியர்களை அச்சுறுத்தல் போன்றவற்றில் ஈடுபடல்.

6. அமைவிடத்தில் காணப்படும் குறைபாடு - பிரதேச செயலகத்தின் அமைவிடம் காரணமாக பலர் போக்குவரத்து, நேரம், பணரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கல்.

இவ்வாறான பல காரணிகளால் பிரதேச செயலகங்களால் வினைத்திறனான சேவைகள வழங்கமுடியாதுள்ளது.

இந்தவகையில், இவ்வாறான பிரச்சினைகள் எதிர்காலத்திலும் தொடராமல் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக வேண்டி போதியளவு ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொள்ளுதல், ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குதல், மொழிப்பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை முன்னெடுத்தல், பொதுச்சேவை வழங்கள் தொடர்பான அறிவினை பொது மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல், பாகுபாடின்றி சகல பொதுச்சேவை நிறுவனங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கீட்டினை செய்தல், இலஞ்ச ஊழல் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தல், போதுமான இடவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல அம்சங்களில் கவனம் செலுத்தி அவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும்.

எனவேதான், இங்கு அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் நிவர்த்திக்கப்படுவதன் மூலம், சிறந்த முறையில் வினைத்திறனான பொதுச்சேவையை இலங்கையில் வழுங்க முடிவதுடன், நாட்டின் அபிவிருத்திக்கும் உதவ முடியும்.



By : M.S.M. Naseem    MA in (P.Sci), BA (Hons), PGDE 


No comments:

Post a Comment