.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, May 31, 2014

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆய்வும் அதன் முக்கியத்துவமும்

அறிமுகம் :

ஆய்வு என்பது இன்றைய சமகால உலகில் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஒன்றாகவும் வளர்ச்சி மற்றும் நாகரீகமடைந்த நாடுகளின் அபிவருத்தி பொறிமுறைகளில் அதிகம் பயன்படுத்தப்படக்கூடிய ஒன்றாகவும் விளங்குகிறது எனலாம். மேற்கு நாடுகள் அபிவிருத்தியில் சிகரத்தை தொட்டிருப்பதற்கு முறையான ஆய்வு முறையியல் பயன்பாடும் தொடர்ச்சியான செயற்பாடுகளும் அடிப்படையாக அமைந்துள்ளது என்பதைத் துணிந்து கூறலாம். 'மனிதனது தேடல் உண்மையைக் கண்டறிவதாகவே உள்ளது. ஆயினும் உண்மையைக் கண்டறிவதற்கான சிறந்த வழி ஆய்வாகும். இதனை பீ. ஏம். குக் பின்வருமாறு வரையரை செய்கின்றார்.
'ஒரு இனங்காணப்பட்ட பிரச்சினைக்கான தகவல்களையும் அதனுடைய கருத்துக்களையும் உண்மையாகவும் பூரணமாகவும் அறிவு பூர்வமாகவும் தேடுதல் ஆய்வு எனப்படும்.1  
ஆய்வு முறையியல் என்பதற்கு மேலும் பல வரைவிலக்கணங்கள் ஆய்வுத்துறை அறிஞர்களால் முன்வைக்கப்படுகின்ற போதிலும் முஸ்லிம் ஆய்வுத்துறை அறிஞர் கலாநிதி அப்துர் றஹ்மான் பதவி அவர்கள் ஆய்வு தொடர்பாக முன்வக்கும் கருத்து இங்கு கூர்ந்து நோக்கப்படவேண்டியதாகும். ' பொதுவான விதிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு குழுவினர் அறிவியல் சார்ந்த விடயங்களில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான வழிமுறையையும் ஒரு குறிப்பிட்ட பெறுபேறை அடையும் வகையிலும் மேற்க் கொள்ளப்படும் கடின முயற்சியே ஆய்வு முறையாகும். 2
வான் டெலன் (ஏயn னுயடநn) குறிப்பிடும் போது ' ஆய்வு முறையியல் என்பது மனிதன் தனது தடமாற்றம் சந்தேகம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை எய்வதற்கான தர்க்க ரீதியானதும் நுணுக்கமானதுமான முயற்சிகளில் ஈடுபடுவதையே இது குறிக்ககிறது என விளக்குகிறார்'. இவ்வாறே ' ஒரு ஆய்வாளன் ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டங்கள் அறிவு ரீதியான செயற்பாடுகள் பொதுவான அடிப்படைகள் என்பவற்றைப் பயன்படுத்தி நுட்பமான முயற்சிகளில் ஈடுபடுவதையே ஆய்வு குறிக்கிறது . 3
எனவே முறையாக மேற்க் கொள்ளப்படுகின்ற ஆய்வின் மூலமாகவே சரியான முடிவுகளைப் பெற்று அபிவிருதத்தியையும் சமூக மேம்பாட்டையும் அடைய முடியம் என்பது திண்ணம்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆய்வின் முக்கியத்துவம் :

ஆய்வு முயையியல் மனிதனை மயக்கமான தெளிவற்ற நிலையிலிருந்து தெளிவான சிந்தனைக்கு அல்லது முடிவிற்கு இட்டுச்செல்லும் வழிமுறையாகும். இஸ்லாம் தெளிவான சிந்தனையை கல்வியினைக் கற்பதன் மூலம் பெறுமாறு எம்மைத் தூண்டுகிறது. ஆறிவியல் தேடல்களை ஆய்வுக்குட்படுத்திய வகையிலும் பகுப்பாய்வின் மூலமும் முன்னெடுப்பதையே இஸ்லாம் எப்போதும் வரவேற்பதுடன் அறிவின்மையையும் தகவல்களை உறுதிப்படுத்தாமல் செய்திகளை வெளியிடுவதனையும் வன்மையாகக் கண்டிக்கிறது. மனிதன் தனது கருத்துக்களையும் ஆய்வுகளையும் முன்வைக்கும் போதும் தெளிவான ஆதாரங்களுடனும் தர்க்க ரீதியாகவும் முன்வைக்குமாறு புனித குர்ஆன் எம்மைத் தூண்டியிருப்பது கூர்ந்து கவனிக்கப்படவேண்டியதாகும்.
  ' உமது இறைவனின் பக்கம் தெளிவான அறிவின் மூலமும் அழகிய உபதேசத்தின் மூலமும் மக்களை அழைப்பீராக. மேலும் அவர்களுடன் மிக அழகிய முறையில் விவாதிப்பீராக'ஏனக் குர்ஆன் குறிப்பிடுகிறது.
மேலும் ஆய்வாளர்கள் குறிப்பிடும் போது ' ஒன்றிலிருந்து எந்தவொரு திசையை  நோக்கி நகர்ந்த போதிலும் அதில் சரியான பாதையை நோக்கிய நகரவேண்டும். நீ எவருடனாவது விவாதிக்க முற்பட்டால் ஆதாரத்தை முன்வைத்து விவாதிப்பீராக.' எனக்குறிப்பிடுவர்.
மக்காவில் இணைவைப்பாளர்கள் இறைவனின் படைப்பாகிய மலக்குகளை அல்லாஹ்வின் பெண்மக்களாக நம்பி அதனை நியாயப்படுத்த முற்பட்டபோது அதற்கான ஆதாரத்தை தெளிவான முறையில் கொண்டுவருமாறு அவர்களிடம் அல்லாஹ் குர்ஆனில்; அழைப்புவிடுக்கின்றான்.' றஹ்மானின் அடியார்களாக உள்ள மலக்குகளை இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் பெண்மக்களாக கருதுகின்றனர்' 4
இவ்வாறு ஆய்வு முறை சார்ந்த விடயங்களுக்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து நோக்கிறது. தெளிவற்ற ஆய்வு முறைமை மனோஇச்சைகளுக்கு வழிப்படவும் வழிதவறிச்செல்லவும் வழிவகுக்கலாம்.ஒரு மனிதன் சரியான ஆய்வு முறையினை மேற்க்கொள்ளாத போது அவனை அறிஞனாக நோக்குவதில்லை.அறிஞர் டேக்காட் குறிப்பிடும் போது ' மனிதனிடம் தெளிவான சிந்தனை அதிகமாக காணப்படுகின்றது. எனினும் அதனை எவ்வாறு சீராக பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்' 5
இஸ்லாம் அறிவுடையோர்களை சிந்திக்குமாறும் ஆராயுமாறும் குர்ஆனில் பல இடங்களில் தூண்டியுள்ளதைக் காணலாம்.' அறிவுடையோர்களே சிந்தியுங்கள் ' 6 எனக்குறிப்பிடுகிறது.
செய்திகளை உறுதிப்படுத்துவதும் ஆதாரங்களை தெளிவாக முன்வைப்பதும் இஸ்லாம் மானிட சமூகத்திற்கு புகட்டும் உயரிய முன்மாதிரிகளாகும்.' விசுவாசிகளே உங்களிடம் கெட்டவன் ஒருவன் எந்த செய்தியைக் கொண்டு வந்தால் அதனைத் துருவி ஆராயுங்கள். ஆறியாமையினால் ஒரு சமூகத்திற்து அதனை நகர்த்தி ' 7 என புனித குர்ஆன் குறிப்பிடுகிறது.

முஸ்லிம் ஆய்வாளர்கள் :
இஸ்லாமிய வரலாற்றில் பல முஸ்லிம் ஆய்வாளர்கள் ஆய்வு முறையியல் தொடர்பான பல முன்மாதிரிகளை உலகிற்கு முன்வைத்துள்ளதை நாம் கண்டு கொள்ளலாம். இல்முல் ஜரஹ் வத்தஃதீல் (ஹதீஸ் திறனாய்வுக்கலை) அஸ்மாஉர் ரிஜால் (ஹதீஸ் அறிவிப்பாளர்களைத் தரப்படுத்துதல்) அந்நக்துல் அறபி (இலக்கிய திறனாய்வு) போன்ற ஆய்வுகளுடன் தொடர்பான பல்வேறு கலைகள் சிறப்பாக வளர்ச்சியடைந்து காணப்பட்டு வந்துள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த கீழைத் தேய ஆய்வாளரான Sekirt Honko என்பவர் இதனைப் பற்றிக் குறிப்பிடும் போது ' அறபுகள் ஐரோப்பாவுக்கும் முழு உலகிற்கும் முறையான ஆய்வுகளின் மூலம் பெறுமதியான வழிகாட்டல்களையும் அறிவியல் முதுசங்களையும் வழங்கியுள்ளனர். ஸ்பெய்னில் அறபுகள் உருவாக்கிய நாகரீக எழுச்சியின் சொந்தக்காரர்களாக அவர்களே காணப்பட்டனர். ஆங்கு உருவாக்கப்பட்ட எழுச்சி ஐரோப்பாவுக்கோ பாரசீகத்திற்கோ அல்லது கிரேக்கத்திற்கோ சொந்தமானது அல்ல. அதன் உண்மையான வாரிஸிகளும் உரிமையாளர்களும் அறபு முஸ்லிம்களே.  புரவலான அறிவீனமும் வறுமையும் வெறுமை நிலையும் நிறைந்திருந்த ஸ்பெய்ன் பூமியை பசுமை பெற்ற தேசமாக மாற்றினார்கள். மரபு ரீதியாக நிலவிய தனிமனித சமூக ஆதிக்கத்தையும் வரண்ட சிந்தனைகளையும் பகுப்பாய்வு ரீதியாக ஆய்வுக்குட்படுத்தி மானிட சிந்தனையை பொதுமைப்படுத்தும் வகையில் ஐரோப்பாவில் அதனை விரிவாக்கிய பெருமை முஸ்லிம்களையே சாரும்.' 8
இஸ்லாமிய வரலாற்றில் உருவான முக்கிய துறைகளின் அறிஞர்கள் அனைவரும் தமது நூல்களையும் தொகுப்புக்களையும் ஆய்வுக்குட்படுத்திய வகையில் சமூகத்திற்கு வெளிக்கொண்டு வந்தார்கள். இப்னு கல்தூன், இப்னு அபி உறைபிய்யா(கிபி 1200 - 1270), ஹஸன் பின் ஹைஸம் ( கிபி 965 – 1039), அல்பிருனி ( கிபி 1030) , அர்ராஸி ( கிபி 864 – 932), முஹம்மது பின் மூஸா அல் குவாரிஸிமி ( கிபி 781 – 845), ஜாபிர் பின் ஹய்யான்( கிபி 721 – 813),இப்னு ஸீனா, தபரி , இப்னு நபீஸ், இப்னு ருஷ்து போன்ற அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் காணலாம். இவ்வாறே இஸ்லாத்துடன் நேரடியாக தொடர்புபுடுகின்ற கலைகளிலும் இஜ்திஹாக்கு இடன்பாடான விடயங்களில் அறிஞர்கள் தமது ஆய்வினை மேற்க்கொண்டே வந்துள்ளார்கள். இத்தகைய ஆய்வு முயற்சிகளுக்கு இஸ்லாம் இடமளித்தமையினாலேயே வரலாற்றில் மார்க்கத்திற்கு உட்பட்ட வகையில் மத்ஹப்புகள் பல தோன்றுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது எனலாம்.
துறைசார்ந்த வகையிலும் பொதுவாகவும் முஸ்லிம் ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளை சமூகத்திற்கு முன்வைத்துள்ளனர். இவர்களின் ஆய்வுகள் யாவும் சமூகத்தின் பிரச்சினைகளை மையப்படுத்தி அவற்றுக்கு தீர்வுகளை முன்வைப்பதாகவே அமைந்தன. கலாரிதி முஸ்தபா ஸிபாஈ அவர்கள் அவரின்  ' கீழைததேய ஆய்வுகளும் கீழைத்தேய ஆய்வாளர்களும் ' என்ற நூலில் குறிப்பிடும் போது ' முஸ்லிம் ஆய்வாளர்கள் வரலாற்று நெடுகிலும் சமூகத்தின் பிரச்சினைகளை முக்கியத்துவப்படுத்தி தமது ஆய்வுகளை மேற்கொண்டு வந்தருக்கிறார்கள். முஸ்லிம் சமூகம் சிந்தனை ரீதியாக சிலபோது பலவீனப்பட்டு வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டபோது பிரச்சினைகளை பகுப்பாய்வு ரீதியாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் ஆய்வுக்குட்படுத்தி அதற்கு தீர்வினைக் கண்டுபிடித்து (Finding and Solutions) ஆய்வுக்கு மெருகூட்டியவர்கள் முஸ்லிம் அறிஞர்களே. கீழைத்தேய ஆய்வாளர்களில் கடும் போக்குக் கொண்டவர்கள் சமயத்தை குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை கள நிலையிலிருந்து ஓரங்கட்ட எத்தனித்த போது அதனை தூய ஆய்வு முறைகளினால் அடையாளப்படுத்தி புத்துயிர் அளித்து பிழையான கருதுகோல்களை நீக்கி சமூகத்தைப் பாதுகாத்தார்கள்.' 9
நவீன காலப்பகுதிகளிலும் பல்வேறு முஸ்லிம் ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளை சமூக கள நிலவரங்களை மையப்படுத்தி தமது ஆய்வு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றனர். ஆய்வு நடவடிக்கைகளுக்காக பல பில்லியன்கள் தனிமனிதர்களாலும் சமூக அமைப்புக்களினாலும் செலவுசெய்யப்பட்டு சிறந்த அடைவுகளும் எய்யப்படுகின்றன.இவற்றை நாம் இன்று நேரடியாகவே கண்டு கொள்ள முடியும்.

Reference:

 1. சாஹிர் ஐ.எல்.எம் கலீல் எம்.ஐ.எம். அமீர் எம்.எல்.எப்: ஆய்வு முறையியல்இ சமூக விஞ்ஞானத்துறை தென்கிழக்கு பல்கலைகழகம் 2012 பக்: 01
  2. றஹ்மான் பதவி அப்துர் (1981) : அறிவியல் ஆய்வு முறைமைகள் . தாருக் ஷரூக் லெபனான்.
3. றிஷ்வான் முஹம்மது 1985.  ஆய்வு முறையியல் ' சூடான் உம்மு துர்மான் பல்கலைகழகத்தில்         முதமானிப்பட்டத்திற்கு சமர்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை
  4. ஸூக்ரப் வசனம் : 19
  5. றஹ்மான் பதவி அப்துர் (1981) : அறிவியல் ஆய்வு முறைமைகள் .பக்- 37 தாருக் ஷரூக் லெபனான்.
  6. ஸூரா ஹஷ்ர் , வசனம் : 2
  7.  ஸூரா அல் ஹூஜ்ராத் 10
8. Sekirt Honcho மேற்குலகில் அறேபிய ஒளிக்கீட்டுக்கள் MAKTHABA ANJALO, BAIROUT
9. முஸ்தபா ஸிபாஈ: கீழைத்தேய ஆய்வும் கீழைத்தேய ஆய்வாளர்களும்,அல்மக்தபுல் இஸ்லாமி, 1985 பக் :15


 Mr.M.T. Habeebullah (BA Hons ,MA(SL),MA(Sudan)
 Assistant Lecturer: Department of Arabic Language
 Faculty of Islamic Studies and Arabic Language
 South Eastern University of Sri Lanka, Oluvil.


No comments:

Post a Comment