.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, March 31, 2017

ஏப்ரல் பூல் (முட்டாள்கள் தினம்) ஓர் எச்சரிக்கை


ஏப்ரல் 1 என்றாலேஏமாற்றுதல் என்றுபொருள் கொள்ளும் அளவிற்குஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி இன்றுமாற்றப் பட்டிருக்கிருக்கின்றது. அன்றைய தினத்தில் ஒருவர் தமது நண்பர், உறவினர், ஏனையவர்களிடம் பொய்களைச் சொல்லி நம்பவைத்து ஏமாற்றி, அவர்களை கஸ்டத்துக்கும், பதற்றத்துக்கும் உள்ளாக்கி ஏளனமாகச் சிரித்து மகிழ்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இன்று இத் தீயகலாச்சாரம் உலகளவில் இன, மத, பிரதேச வேறுபாடின்றி அனைத்து தரப்பாரிடமும் பரவியுள்ளதைக் காணலாம்.

அந்தவகையில் April Fools Day அல்லது All Fools Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இத்தினத்தில் முஸ்லிம்களும் பொய்களைச் சொல்லுதல், பொய்ச் சத்தியம் செய்தல், பொய்ச்சாட்சி கூறல், ஏமாற்றுதல், பிறருடையஆடைகள் மீதுமையைத் தெளித்து அசிங்கப் படுத்தல் (இந்தநடைமுறையானது ஹோலி பண்டிகையின் போதுநிறங்களைபரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒருபிரிவினருடையகலாச்சாரத்துடன் தழுவியது) போன்ற மார்க்க வரையரைகளை மீறிய கேவலமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதைக் கண்கூடாகக் கண்டுவருகின்றோம்.
எனவே நாம் எமது மார்க்கத்துக்கு முரணான இவ்வழிகெட்ட செயலைவிட்டும் விலகிக் கொள்ள அதுபற்றிய வரலாற்றையும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதைவிட்டும் இஸ்லாத்தின் எச்சரிக்கைகளையும் விளங்கிக் கொள்வது அவசியமாகும். அந்தவகையில் ஏப்ரல் பூல் (முட்டாள்கள் தினம்) எவ்வாறு உருவானது என்பதற்கு பல கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் பின்வருபவை முக்கியமானவை.

1. ரோமர்களின் மூடநம்பிக்கையின் படி புளூட்டோ என்ற கடவுள் பிராஸர்பினா என்ற யுவதியைக் கீழ் உலகிற்குகடத்திச் சென்றதாகவும், அவள் அழுதுதன் தாயை உதவிக்கு அழைத்தாகவும், அவள் தாயோ அவளின் அழுகை சப்தத்தைக் கேட்டு இல்லாத இடத்தில் தேடியதாகவும் இந்தத் தவறான தேடுதலே முட்டாள்கள் தினம் உருவாகக் காரணம் என ஒரு கதை சொல்லப்படுகிறது.

2. பைபிளின் படி நோவா (நூஹ் அலை)தான் முதல் முட்டாள் (நவூதுபில்லாஹ்) எனச் சொல்லப்படுகிறது. காரணம் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு பூமி காய்வதற்கு முன்னால் நோவா ஒரு புறாவை அனுப்பி காய்ந்த, வறண்ட நிலத்தை தேடச் சொல்கிறார். ஈரமான பூமியில் காய்ந்தநிலம் எங்கே இருக்கும்? அதனால் தான் அவர் ஒருமுட்டாள் என்றும் அதை மையமாக வைத்தே முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது எனவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

3. 13ஆம் நூற்றாண்டில் பிரிட்டஷில் வாழ்ந்த ஜான் என்ற மன்னர் எங்கு படையெடுத்துச் சென்றாலும் அந்தப்பகுதி 'பொதுச்சொத்தாக' ஆக்கப்பட்டுவிடும். கௌதம் என்றபகுதியில் நாட்டிங்கம்ஷைர் என்ற ஊருக்குள் அவர் படையெடுத்து வரும்போது அவ்வூர்வாசிகள் தங்களின் ஊரை மன்னர் அபகரித்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை முட்டாள்களாக ஆக்க நினைத்து தண்ணீரில் நீந்துகின்ற மீனைப் பிடித்து தரையில் விடுவதும் பிறகுமீண்டும் நீரில் விடுவதுமான பல முட்டாள் தனமான காரியங்களைச் செய்கின்றனர் அவர்களின் முட்டாள் தனங்களைக் கண்டமன்னர் அவர்களைத் தண்டிக்கிறார். இது தான் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் உருவாகக் காரணம் என இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.

4. காலண்டர் மாற்றமே முட்டாள்கள் தினம் உருவாக முக்கியக்காரணம். அதாவது கி.பி. 1582 வரை பிரான்ஸில் ஏப்ரல் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் மாதம் ஆண்டின் இறுதியாகவும், மார்ச் 25 ல் இருந்து ஏப்ரல் 1 வரை புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் உலகம் முழுவதும் நடைபெற்றுவந்தன. 'கிரிகோரி' என்கிற போப் தான் இன்றுநடைமுறையில் இருக்கின்ற ஆங்கிலக் காலண்டரை உருவாக்கியவர். அதாவது ஜனவரியை ஆண்டின் முதல் மாதமாகவும் டிசம்பரை ஆண்டின் இறுதிமாதமாகவும் வைத்துஉருவாக்கப்பட்ட இந்தக் காலண்டரை பலர் ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலர் பழையகாலண்டர் முறையையே பின்பற்றி வந்தனர். புதியகாலண்டர் முறைப்படி மாறியவர்கள் பழைய கலண்டர் முறையைப் பின்பற்றி நடப்பவர்களை முட்டாள்கள் என கேலி பேசவும், கிண்டலடிக்கவும் ஆரம்பித்தனர். இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் அனுசரிக்கக் காரணமாக அமைந்துவிட்டது.

இவை தவிர ஸ்பெயினிலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களின் சூழ்ச்சியினாலும் சதித்திட்டத்தினாலும் ஸ்பெயினை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக கிறிஸ்தவர்கள் தான் முஸ்லிம்களை முட்டாள்களாக்க இந்ததினத்தை உருவாக்கினார்கள் என்ற ஒருகருத்தும் முஸ்லிம்களிடத்தில் காணப்படுகின்றது.

இவ்வாறு பல வரலாற்றுக் கதைகள் இந்ததினத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன. எனினும் இவற்றில் 4வது கூறப்பட்ட காரணிதான் அதிகமானஅறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகக் காணப்படுகின்றது. இதில் எது உண்மையாக இருப்பினும் இஸ்லாத்தின் பார்வையில் அடுத்தவர்களை கவலைப்பட வைக்கின்ற, ஏமாற்றுகின்ற, கஸ்டத்தில் ஆழ்த்துகின்ற கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கவைகளாகும். இதனை பின்வரும் குர்ஆன் ஹதீஸ் வசனங்கள் தெளிவுபடுத்துவதைக் காணலாம்

இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்துவிட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்பவைக்கின்றனர். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்: அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர். (அல்குர்ஆன் 68:10)

அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக்குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)

தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலிசெய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 9:79)

அப்துல்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருமனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டுவிடுவார். (புகாரி : 6094)

எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புபெற்று இருக்கின்றார்களோ அவர் தான் பரிபூரண முஸ்லிம். (புகாரி 10, 6484)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல. (முஸ்லிம் : 147, திர்மிதீ : 1236)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிறசமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவனே! (அபூதாவூத் : 3512)

நபி(ஸல்) கூறினார்கள் 'மோசடி செய்பவனுக்கு மறுமைநாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி என்று கூறப்படும். (புகாரி : 6178)

அபூபக்கர் (ரலி) கூறியதாவது: 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்றுநபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். 'ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்விற்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்'என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)' என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள். (புகாரி :5976, முஸ்லிம் : 126)


எனவேதான் மேலேகுறிப்பிடப்பட்ட அல் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் தார்ப்பரியங்களை விளங்கி, இனிவரும் காலங்களிலாவது இவை போன்ற இஸ்லாமிய அடிப்படைகளுக்கு விரோதமான தீயசெயற்பாடுகளை விட்டும் விளகி வாழ முயற்சிப்போமாக.


By : MSM Naseem (B.A)

No comments:

Post a Comment