மத்திய ஆசியாவில் வாழ்ந்த துருக்கியர்கள் கி.பி 7ம் நூற்றாண்டில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுடன், 10ம் நூற்றாண்டளவில் ஈராக், ஈரான், சிரியா போன்ற பகுதிகளில் குடியேறினர். இவ்வாறு குராசானில் குடியேறியிருந்த இவர்களில் ஒரு பிரிவான ஸெல்ஜுக்கியர்கள் 11ம் நூற்றாண்டுப் பகுதியில் பெரும் சக்தியாக எழுச்சி பெறத்தொடங்கினர். அந்தவகையில் அப்பாஸிய கலீபாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அக்கால பேரரசான பைசாந்தியவின் கீழிருந்த அனடோலியாவையும் கைப்பற்றிக்கொண்டனர். அப்போதைய ஸெல்ஜுக்கிய சுல்தான் அலப் அல் அர்சலான் என்பவரே அனடோலியா எனப்பட்ட இப்பகுதிக்கு துருக்கி என பெயரிட்டவராவார்.
ஸெல்ஜுக்கியர்களின் வீழ்ச்சிக்குப் பின் துருக்கியரில் இன்னொரு பிரிவினர் உஸ்மான் காஸி (முதலாம் உஸ்மான்) என்பவரின் தலமையில் பைஸாந்தியர்களுக்கு எதிராகப் போரிட்டு கி.பி 1326ல் தற்போதைய துருக்கியின் ஒரு பகுதியான பூர்சாவை (Bursa) வெற்றி கொண்டு உஸ்மானிய அரசினை தாபித்தனர். இதனால் இவர்கள் உஸ்மானிய துருக்கியர் எனப்பட்டனர். உஸ்மான் என்ற பெயரிலிருந்தே ஒட்டோமன் என்ற பெயரும் பெறப்பட்டது. உஸ்மான் காஸி துருக்கியக் குடியிருப்புக்களை பைசாந்தியப் பேரரசின் முனைப்பகுதியை நோக்கி விரிவுபடுத்தினார். இவரைத் தொடர்ந்து இவர் வழி வந்த ஏனைய ஆட்சியாளர்கள் படிப்படியாக தமது ஆட்சிப்பரப்பை விஸ்தரித்துச் சென்றனர். உஸ்மானின் மறைவுக்குப் பின்வந்த நூற்றாண்டில் உஸ்மானிய ஆட்சி கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் பால்கன் மேலாக விரிவடைய ஆரம்பித்தது.
கொன்ஸ்தாந்து நோபில் வெற்றி
துருக்கியின் தற்போதைய பெரிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்பூலே அப்போது கொன்ஸ்தாந்து நோபிள் எனவும், அரபியில் குஸ்தன்தீனியா எனவும் அழைக்கப்பட்டது. இது மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டு, பிரமாண்டமான அரண்களுடன் பலவகையிலும் பாதுகாப்பான இடமாக காணப்பட்டது. இதனால் பைஸாந்தியர்கள் கொன்ஸ்தாந்து நோபிளையே தமது சாம்ராஜ்யத்தின் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். அன்று இந்நகரம் உலகிலேயே சிறந்த இராணுவப் படைப்பலமிக்க நகரமாக விளங்கியது. கோட்டையின் வாயிலை அடையவேண்டுமாயின் படகு மூலமே நீர்ப்பரப்பைக் கடந்து செல்லவேண்டும். எனவே தமது அணுமதியின்றி எதிரிகள் வாயிலை நெருங்காமலிருக்க நீர்ப்பரப்பின் மேற்பகுதியில் பிரம்மாண்டமான இறும்புச் சங்கிலியை குறுக்காகக் கட்டியிருந்தனர். இக்காரணிகள் அவர்களை கர்வங்கொள்ளச் செய்திருந்ததுடன் அவர்களின் கொடுங்கோன்மை மேலோங்கவும் காரணியாக இருந்தது.
பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரமானது, ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்திருந்ததை பின்வரும் ஹதீஸ்களின் மூலம் அறியமுடிகின்றது.
'கொன்ஸ்தாந்து நோபிள் நிச்சயம் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அதை வெற்றி கொள்ளும் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த சேனைதான் சிறந்த சேனை'. (முஸ்னத் அஹ்மத்)
அம்ர் இப்னு ஆஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது அவரிடம் 'கொன்ஸ்தாந்து நோபிள் மற்றம் ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்?' என வினவப்பட்டது. அதற்கவர் 'ஹிரகல் மன்னனின் நகரம் - கொன்ஸ்தாந்து நோபிள் - தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)
நபியவர்களது இக்கூற்றை உண்மைப்படுத்தவும், அச்சிறப்பைப் பெற்றுக் கொள்ளவும் வரலாற்று நெடுகிலும் பல வீரர்கள் கொன்ஸ்தாந்து நோபிளை நோக்கிப் படை நகர்த்திச் சென்றிருந்தனர். அந்தவகையில் ஹிஜ்ரி 48ல் கலீபா முஆவியா(ரழி) அவர்கள் ஸுப்யான் பின் அவ்ப்(ரழி) அவர்களின் தலைமையில் ஒரு படையை அணுப்பினார். அதில் மிக முக்கிய ஸஹாபாக்களான அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி), அப்துல்லாஹ் இப்னு உமர்;(ரழி), அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரழி), அபூ அய்யூப் அல்அன்ஸாரி(ரழி) போன்ற பல முக்கிய ஸஹாபாக்கள் பங்கேற்றிருந்தனர். பின்னர் ஹிஜ்ரி 94ல் தளபதி மூஸா பின் நுஸைரின் தலைமையில் கலீபா வலீத் பின் அப்துல் மலிக்கின் காலத்திலும், அதன் பின் ஹிஜ்ரி 98ல் ஸுலைமான் பின் அப்துல் மலிக்கின் காலத்திலும், அப்பாஸிய கலீபான முஃதஸிமின் காலத்திலும், கொன்ஸ்தாந்து நோபிளை வெற்றி கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, எனினும் அவர்களால் அந்நகரை வெற்றிகொள்ள முடியவில்லை.
இவர்களுக்குப் பின் கி.பி 1393ல் உஸ்மானிய கலீபா பெய்ஸீத் பெரும்படையுடன் சென்று கொன்ஸ்தாந்து நோபிளை முற்றுகையிட்டார். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இறையாட்சி புரியுமாரும் அல்லது 'ஜிஸ்யா' (ஆள்வரி) செலுத்தி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கீழ் ஆட்சிபுரியுமாரு குறிப்பிட்டு ஒரு நிறுபமனுப்பினார். எனினும் பைஸாந்தியப் பேரரசன் அதனை மறுத்து ஐரோப்பாவின் உதவியை நாடினான். அதே சந்தர்ப்பத்தில் மங்கோலியர்கள் படையெடுத்துவந்து முஸ்லிம்களுக்கு எதிராகப் போர்தொடுத்தனர். இதனால் முஸ்லிம் படை தோல்வியைத் தழுவியதுடன், கலீபா பெய்ஸீதும் அதில் கொலை செய்யப்பட்டார்.
கலீபா பெய்ஸீதின் மரணத்தைத் தொடர்ந்து அடுத்த கலீபாவாக அவரது மகன், முஹம்மத் இப்னு பெய்ஸித்(1ம் முஹம்மத்) அவர்களும், அவரைத் தொடர்ந்து அவரது மகன் முராத் இப்னு முஹம்மதும்(2ம் முராத்) ஆட்சி செய்தனர்.
முஹம்மத் அல் பாதிஹ் (1451 – 1481)
7வது உஸ்மானிய ஆட்சியாளரான 2ம் முராதுக்கு கி.பி 1432ல்(ஹி-835) முஹம்மத் எனும் ஒரு ஆண் மகன் பிறந்தார். சுல்தான் 2ம் முராத் தனது மகனை கண்காணித்துப் பராமரிக்கும் பொருப்பை 'ஷேக் ஆக் சம்சுதீன்' எனும் அறிஞரிடம் ஒப்படைத்தார். அந்தவகையில் முஹம்மத் இவரின் உதவியுடன் அல்குர்ஆன், அல்ஹதீஸ், இஸ்லாமிய சட்டக்கலை, விளையாட்டு, கணிதவியல், விண்ணியல், போர் தந்திரம், வரலாறு போன்றவற்றையும் அரபு, பாரஸீகம், துருக்கி, லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகள் என்பவற்றையும் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தார். இயற்கையிலேயே அன்பு, பணிவு, மார்க்கப் பற்று போன்ற குணங்களையும், கவித்துவத்தில் புலமையும் பெற்றிருந்த இவர் சிறுவயது முதல் தனது தந்தையுடன் போர்களிலும் பங்குபற்றியிருந்தார்.
கி.பி 1444ல் சுல்தான் 2ம் முராத் 12 வயது மாத்திரமே கொண்ட தனது மகன் 'முஹம்மதை' உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் சுல்தானாக நியமித்து விட்டு அணைத்துப் பொருப்புக் களிலிருந்தும் ஒதுங்கி தூர இடம் ஒன்றிற்கு சென்று வாழத் தொடங்கினார். முஹம்மதோ அறிவு, வால் வீச்சு, குதிரை ஓட்டம், போர் பயிற்சி என்று அணைத்திலும் சிறந்து விளங்கினும் போதிய அணுபவமற்றவராக இருந்தார். இந்நிலையில் ஆட்சிப் பொருப்பையேற்று சில மாதங்களே கடந்த நிலையில், கலீபா முராத் இல்லாததையறிந்து ரோமப் பேரரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பாரியதொரு படையெடுப்பை மேற்கொண்டது.
இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது முஹம்மதுக்கு மிகக்கடினமாக இருந்ததால் தனது தந்தையின் உதவியை நாட முடிவு செய்தார். “விரைவாக வந்து படைக்குத் தலைமை தாங்குமாறு தந்தைக்கு கடிதம் அனுப்பினார்” தந்தையிடமிருந்து 'இப்பொழுது நீ தான் சுல்தான், படைக்கும் நீயே தலைமை தாங்கு..! என்னால் வர முடியாது' என்று பதில் வந்தது. இதற்கு முஹம்மதின் பதில் கடிதம் பின்வருமாரு அமைந்தது. “ஆம் நான் தான் சுல்தான். இப்பொழுது நான் கட்டளையிடுகிறேன், உடனடியாக வந்து படையை வழி நடாத்துங்கள்..!”.
சுல்தான் முஹம்மதின் ஆணையையேற்று 2ம் முராத் திரும்பி வந்து படைக்கு தலமை தாங்கியதுடன் ரோமர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். போர் வெற்றிக்குப் பின் கி.பி 1446ல் சுல்தான் முஹம்மத் தனது தந்தையான 2ம் முராதை மீண்டும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் சுல்தானாக நியமித்தார். கி.பி 1451ல் 2ம் முராத் மரணித்ததன் பின் தனது 18வது வயதில் மீண்டும் சுல்தானாக பதவியேற்றார். இந்த சிறுவன் தான் வரலாற்றில் சுல்தான் 'முஹம்மத் அல் பாதிஹ்' என்று போற்றப்படும். நபி(ஸல்) அவர்களால் முன்னறிவுப்பு செய்யப்பட்ட கொன்ஸ்தாந்து நோபிலை பைஸாந்தியரிடமிருந்து கைப்பற்றிய மாவீரனாகும்.
ஆட்சிக்கு வந்ததும் நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருந்த குறித்த சிறப்பை அடையும் பொருட்டு, முஹம்மத் அல்பாதிஹ் கொன்ஸ்தான்து நோபிளை வெற்றி கொள்ளவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளத் தொடங்கினார். அந்தவகையில் தனது தளபதிகளை வரவழைத்து ஆலோசனைகளைப் பெற்று யுத்ததுக்கான வியூகங்களை வகுத்தார், பெரும் படையொன்றை திரட்டி அவர்கள் மத்தியில் ஜிஹாதின் மகிமையையும், நபியவர்களின் பொன்மொழியையும் சுட்டிக்காட்டி கொன்ஸ்தான்துநோபிள் வெற்றி கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கி அவர்களை ஆர்வமூட்டினார். திறமை மிக்க பொறியியலாளர்களைக் கொண்டு யுத்ததிற்கு தேவையான பீராங்கிகளையும், ஏனைய ஆயுதங்களையும், போர்க் குதிரைகளையும், படகுகளையும் தயார் செய்தார்.
போருக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்ததன் பின் கி.பி 1453ல் சுல்தான் முஹம்மத் தலைமையில் சுமார் 265,000 பேரைக் கொண்ட இஸ்லாமியப் படை பைஸாந்தியப் பேரரசின் கோட்டை கொன்ஸ்தான்து நோபிளை நோக்கி புறப்பட்டது. கோட்டையை அன்மித்ததும் சுல்தான் முஹம்மத் தன் சேனைப் படைகள் முன் சென்று இஸ்லாம் வழியுருத்தியுள்ள போரில் பின்பற்றப்பட வேண்டிய விழுமியங்கள் பற்றி உபதேசங்களை நிகழ்த்தியதுடன் வெற்றி அல்லது வீரமரணம் என்ற கொள்கையை அவர்களின் உள்ளங்களில் ஆழமாக பதித்தார். பின் தன் படையை பிரித்து பல பகுதிகளிலும் முற்றுகைக்காக நிறுத்தி வைத்தார். அவர்களது படகுகளும் கடல் வழியாக வந்து சேர்ந்தன.
கோட்டையை முற்றுகையிட்ட பின் சுல்தான் முஹம்மத் 'கொன்ஸ்தான்து நோபிளை தம்மிடம் ஒப்படைத்து நல்லாட்சி புரிய ஒத்துழைக்குமாறு அல்லது ஆள்வரி(ஜிஸ்யா) செலுத்தி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கீழ் நல்லாட்சி புரியுமாறும் வேண்டி' கொன்ஸ்தான்து நோபிள் மன்னனுக்கு நிருபம் ஒன்றை அணுப்பினார். அதைக் பார்த்த கோட்டை மன்னன் ஆவேசப்பட்டு இஸ்லாமியப் படைக்கெதிராக போர் அறிவித்தான். முஸ்லிம்களின் படையெடுப்பை முற்கூட்டியே அறிந்து கொண்ட அவன் ஐரோப்பியரிடம் படையுதவியையும் வேண்டி பெற்றுக்கொண்டான்.
இரு தரப்பாருக்கிடையிலும் போர் தொடங்கியது. ஆரம்பத்தில் முஸ்லிம்களால் கோட்டையை சூழ்ந்திருந்த நீர்ப்பரப்பை தாண்டி முன்னேற முடியாமலிருந்தது. எனினும் சுல்தான் முஹம்மதின் சாமர்த்திய உத்தியின் மூலம் இஸ்லாமிய படை நீர்ப்பரப்பை தாண்டி கோட்டையை அடைந்து வெற்றி வாகை சூடினர். இதனால் மக்கள் வெற்றியாளர் எனும் பொருளைத்தரும் 'அல் பாதிஹ்' எனும் சிறப்புப் பெயர் கொண்டு அவரை அழைக்கத் தொடங்கினர்.
முஸ்லிம் படையின் வெற்றிகுறித்து செய்தியறிந்த கொன்ஸ்தாந்து நோபிளின் மக்களில் அதிகமானோர், அச்சத்தினாலும் பீதியினாலும் கிறிஸ்தவ தேவாலயங்களில் தஞ்சம் புகுந்துதிருந்தனர். முஹம்மத் அல் பாதிஹ், அவர்கள் முன் தோன்றி தான் அவர்ளுக்கெதிராக எதையும் செய்யப்போவதில்லை என்று எடுத்துக்கூறி முன்னர் எப்படி வாழ்ந்தார்களோ அதேபோன்றே தங்களின் வீடுகளுக்குச்சென்று நிம்மதி சந்தோசமாக வாழுமாறு அறிவித்தார். தங்களின் நாட்டிற்கு எதிராக படையெடுத்து வந்தவர்களா இப்படிக் கூறுகிறார்களென வியப்படைந்த அம்மக்கள், தமது உயிர்களுக்கும் உடமைகளுக்கும் எவ்வித ஆபத்தும் நேராததைக் கண்டு பூரிப்படைந்தனர்.
முஹம்மத் அல்பாதிஹ் வெற்றிகொள்ளப்பட்ட கொன்ஸ்தாந்து நோபிளின் பேரளவிலான ஆட்சிமுறையை மாற்றியமைத்ததுடன் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். கைதிகளிடம் இரக்கம் காட்டினார், தனது சொந்தப் பணத்திலிருந்து அவர்களுக்குத் செலவுசெய்தார், ஏழை மக்களுக்கு உதவினார், அறிவியல் வளர்ச்சிக்காகப் பல பாடசாலைகளையும், வாசிகசாலைகளையும் அமைத்தார், அங்காடிகளையும் வைத்தியசாலைகளையும் கட்டினார், பூந்தோட்டங்களையும் நீர்க்குட்டைகளையும் அமைத்து நகரை அழகுபடுத்தினார், பாதைகளைப் புணரமைத்து தெருவிளக்குகளைப் பொருத்தியதுடன் புதுச்சாலைகளையும் அமைத்தார். இவ்வாறு பல்வேறு பொதுப்பணிகளைச் செய்து புதியதோர் நாகரிகத்தையும் கலைச் செழுமையையும் அம்மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களது உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்தார். அங்கு வாழ்ந்த அதிகமான மக்கள் முஸ்லிம்களின் நல்ல பண்புகளையும் இஸ்லாத்தின் உன்னத விழுமியங்களையும் கண்டு இஸ்லாத்தில் இணைந்துகொண்டனர்.
சுல்தான் முஹம்மத் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக கொன்ஸ்தாந்து நோபிளை மாற்றி அதற்கு 'இஸ்லாம் பூல்'( இஸ்லாமிய நகரம்) எனப்பெயரிட்டார். இதுவே காலப்போக்கில் மறுவி இன்று இஸ்தான்பூல் என்றழைக்கப்படுகிறது.
கொன்ஸ்தாந்து நோபிளின் வெற்றிக்குப் பின் சேர்பியா, ரொமேனியா, அல்பேனிய, கிரீஸ், பொஸ்னியா ஹர்ஸகோவியா போன்ற பால்கனின் பெரும்பகுதிகளும் கரமான் துருக்கியின் ஒரு பகுதியும் வெற்றிகொள்ளப்பட்டன. அடுத்த கட்டமாக மற்றுமொறு பெரும் வல்லரசாகக் காணப்பட்ட ரோமப் பேரரசின் தலைநகரான இத்தாலியைக் கைப்பற்ற சுல்தான் முஹம்மத் அல்பாதிஹ் உளப்பூர்வமாக தயாராகி அதற்கான ஆயத்தங்களை திட்டமிட்டு முன்னெடுத்தார். அதற்காக வேண்டி பெரும் படை ஒன்றை திரட்டினார், தேவையான ஆயுதங்களையும், தளபாடங்களையும் தயார் செய்தார். பின் இத்தாலியின் நகரான “ஒட்ரான்ட்” பகுதியை அன்மித்த இடத்தில் பெருந்தொகையான யுத்த பீராங்கிகளை கொண்டு நிருத்தினார்.
இதையறிந்த ஐரோப்பியர் தமது வரலாற்றுப் பாரம்பரியமிக்க ரோம் நகரம் சுல்தான் முஹம்மத் அல்பாதிஹிடம் வீழப் போவதை எண்ணி பெரும் அச்சம் கொள்ளத் தொடங்கினர். எனினும் துரதிஷ்ட வசமாக பேர்ருக்கான நேரம் வருவதற்கு முன்பே மாவீரன் சுல்தான் முஹம்மத் கி.பி 1481ம் ஆண்டு (ஹிஜ்ரி– 886) தனது 52ம் வயதில் திடீரென மரணமடைந்தார். சுல்தானின் மரணத்தை கேள்வியுற்ற ஐரோப்பியர் பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். ரோமின் போப் தேவாலயத்தில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் பிரார்த்தனை மூலம் தமது சந்தோசத்தை வெளிப்படுத்தவும் ஆணையிட்டார்.
சுல்தான் முஹம்மத் அல்பாதிஹின் மரணத்திற்குப் பின்
இவருக்குப் பின் வந்த உஸ்மானிய ஆட்சியாளர்களில், பின்வருவோர் மிக முக்கியமானவர்களாவர். சுல்தான் முதலாம் சலீம்(1512-1520) மம்லூக்கியரையும், பாரசீகத்தின் சபாவித் வம்ச ஆட்சியாளர் ஷா இஸ்மாயிலையும் வெற்றி கொண்டு எகிப்து, சிரியா, பலஸ்தீன், ஹிஜாஸ் போன்ற பகுதிகளையும் தமத ஆட்சியுடன் இனைத்துக் கொண்டார். அத்துடன் கடற்படை ஒன்றை உருவாக்கி செங்கடலில் நிலை நிறுத்தினார். உஸ்மானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பிராந்தியத்தில் பலமிக்க பேரரசு எனும் நிலையை அது அடைந்தது.
சுல்தான் முதலாம் சுலைமான்(1520-1566) 1521ல் பெல்கிறேட் நகரை கைப்பற்றினார், 1526ல் வரலாற்று முக்கியத்துவமிக்க முஹாக்ஸ் போரில் வெற்றிபெற்று இன்றைய ஹங்கேரி(மேற்குப் பகுதி தவிர்ந்த பகுதிகள்) மற்றும் ஏனைய மத்திய ஐரோப்பாவின் நிலப்பகுதிகளிலும் உஸ்மானிய ஆட்சி நிறுவினார். இவரது ஆட்சியின் இறுதிப்பகுதியில், பேரரசின் மொத்த சனத்தொகை ஏறத்தாழ 15,000,000 மக்கள் மூன்று கண்டங்களுக்கும் மேலாக பரந்து காணப்பட்டனர். இவரது சக்திவாய்ந்த கடற்படை மத்தியதரைக்கடலின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அத்துடன் சுல்தான் முதலாம் சுலைமான் தனது ஆட்சியில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். பல்லின மக்கள் வாழ்ந்த பேரரசில் அனைத்து பிரிவினரும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான பல்லின சமூகத்துக்கும் பொருந்தும் வகையில் ஒரு சட்ட யாப்பை உருவாக்கினார். இதனால் இவருக்கு 'சுலைமான் அல் கானூனி' என சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது. அமெரிக்காவின் செனட் சபையில் தொங்கவிடப்பட்டுள்ள சட்டவாக்க அறிஞர்களின் பட்டியலில் இவரது பெயரும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
சுல்தான் 2ம் அப்துல் ஹமீத்(கி.பி 1876 - 1909) பிரித்தாணியா, ரஸ்யா போன்ற நாடுகளிடமிருந்து இஸ்லாமிய ஆள்புளத்தை பாதுகாப்பதில் உருதியாக இருந்ததுடன் தனது ஆட்சிக்காலத்தில் பாரிய சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார். 1882 தொடக்கம் 1994 வரை இஸ்தான்பூல், சீனாவின் தலைநகர் பீஜிங் போன்ற வற்றில் பல்கலைக்ககழகங்களை நிறுவினார், 51 இரண்டாம் நிலை பாடசாலைகளை நிறுவினார், முதலவாது நீதி அமைச்சும் சுல்தானின் காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது, டெலிகிராம் என்று அழைக்கப்படும் தந்தி சேவை விஸ்தரிக்கப்பட்டது, ஹிஜாஸ் ரயில்வே திட்டமும் சுல்தானின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மதீனா மற்றும் துருக்கியின் தலைநகர் இஸ்தான்பூலை இணைப்பதும், ஐரோப்பாவில் இருந்து ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கு இலகுவான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதும் சுல்தான் அவர்களின் இலக்காக இருந்தது. ஹிஜாஸ் ரயில்வே கட்டமைப்பு 1903ம் ஆண்டு முதல் 1920ம் ஆண்டு வரை இயங்கியது. ((T. E. Lawrence என்ற பிரித்தானிய உளவாளியின் தலைமயில் இயங்கிய அரபு சவுதிய புரட்சிப்படையினர் ரயில்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஹிஜாஸ் ரயில்வே கட்டமைப்பு முழுமையாக சீர்குலைந்தது)
இவ்வாறு கி.பி 1326 முதல் கி.பி 1924 வரை 38 உஸ்மானிய சுல்தான்கள் ஆட்சி செய்தனர்.
உஸ்மானிய கிலாபத் வீழ்ச்சி
1566க்குப் புpற்பட்ட காலங்களில் உஸ்மானிய பேரரசு தேக்கநிலையில் வீழ்ச்சியடையத் தொடங்கியதுடன் இடைக்கிடையே சில காலங்களில் மீளுருவாக்கமும் சீர்திருத்தங்களும் நிகழ்ந்தும் வந்தன. திறமையற்ற சுல்தான்கள் மற்றும் முதலமைச்சர்கள், படைகயினர் பற்றாக்குறை, அலுவலர்களின் ஊழல் நடவடிக்கைகள், நண்பர்கள் துரோகமிழைத்தமை போன்ற காரணிகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததுடன் இதன் நேரடி விளைவாக காலப் போக்கில் மாகாண கவர்ணர்கள் வலுபெற்று கொன்ஸ்தாந்து நோபிளை தவிர்க்கத் தொடங்கினர். ஐரோப்பிய எதிரிகள் வலுப்பெற்று வந்தனர்;, உதுமானியப் படைகள் மேம்படுத்தப்படாதிருந்தது, இறுதியாக உதுமானியப் பொருளியல் சீர் குலைந்தது; போரின் விளைவாக ஏற்பட்ட பணவீக்கம், உலக வணிகத்தின் திசை மாற்றங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்தன.
சுல்தான் 2ம் அப்துல் ஹமீத் அவரது ஆட்சிக்காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலங்களில் வந்த ஜமாலுத்தீன் ஆப்கானி, முஹம்மத் அப்துஹூ, பதிஉஸ்ஸமான் நூர்ஸி போன்ற இஸ்லாமிய அறிஞர்களாலும் இஸ்லாமிய கிலாபத்தை வீழ்ச்சியை விட்டும் தடுப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் அவை பலனலிக்கவில்லை.
உஸ்மானிய கிலாபத் ஐரோப்பாவுக்கு பெரும் சவாலாக அமைந்ததால் அதனை ஒழிக்க ஐரோப்பியர்களும் யூத, கிறிஸ்தவ சக்திகளும் பல தந்திரங்களையும் சூழ்சிகளையும் கையாளத் தொடங்கினர். அந்தவகையில் எதிரிகளை பல பெயர்களில் முஸ்லிம்களின் ஆட்சிப் பிரதேசங்களுக்குள் ஊடுருவச் செய்தனர், முஸ்லிம் பிரதேசங்களில் முஹம்மத் அலி பாச்சா(எகிப்து), இப்னு ஸூஊத்(ஹிஜாஸ்) போன்ற மூளைச்சலவை செய்யப்பட்ட தேசிய வாதிகளை உருவாக்கினர். இவர்கள் மூலம் அரேபியர், பாரசீகர், கிப்தியர், துருக்கியர் எனும் இனரீதியான, பிரதேசரீதியான வேறுபாடுகளை முன்னிருத்தி இஸ்லாமிய ஆட்சிப் பிரதேசத்தை துண்டாடினர். சாமர்த்தியமிக்க சதித் திட்டங்களின் மூலம் முஸ்தபா கமால் என்ற நயவஞ்சகன் பற்றிய மாயயை தோற்று வித்து துருக்கிய மக்கள் மத்தியில் அவனை கதாநாயகனாக்கினர். இதன் மூலம் ஐரோப்பியர் தமது இலக்கினை அடைந்து கொண்டனர்.
நவம்பர் 17, 1922இல் உதுமானியப் பேரரசு கலைக்கப்பட்ட பிறகு கடைசி சுல்தான் ஆறாம் முஹம்மத் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். துருக்கி தேசியப் பேரவை அக்டோபர் 29, 1923இல் துருக்கி குடியரசை நிறுவியது. 1924 மார்ச் 3இல் இராணுவ அதிகாரி முஸ்தபா கமால் ஜனனாயக ஆட்சியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்து கிலாபத்தை ஒழித்துவிட்டதாக பிரகடனப்படுத்தினார். அதன் பின் அவர் இஸ்லாமிய சின்னங்களைப் படிப்படியாக ஒழிக்க தொடங்கினான். துருக்கித் தொப்பிக்குப் பதிலாக ஐரோப்பிய தொப்பியை அணியச் செய்தார், பெண்கள் முகம் மூடுவதை தடுத்தார், இஸ்லாமிய மத நிறுவனங்களை கலைத்ததுடன் அவற்றினது சொத்துக்களைப் பறிமுதல் செய்தார், அறபு லிபியிலிருந்து துருக்கி மொழி லிபியை லத்தீன் லிபிக்கு மாற்றினார், பெயர்களை அறபு மொழியிலல்லாமல் துருக்கி மொழியில் வைக்க ஆணையிட்டார், அவரது காலத்திலேயே அவருக்க சிலைகள் எழுப்பப்பட்டன, பலதார மணத்திற்கு தடை விதிக்கப்பட்டது, வெள்ளிக்கிழமை இருந்த விடுமுறை சனி, ஞாயிறாக மயற்றப்பட்டது. இது போன்று இன்னும் பல இஸ்லாமிய விரோத செயற்பாடுகளும் அரங்கேற்றப்பட்டன.
By : MSM. Naseem (B.A)
No comments:
Post a Comment