ஸ்பெய்ன் என்பது ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் காணப்படும் ஐபீரியத் தீபகற்பத்தில்; அமைந்துள்ள ஒரு நாடாகும். இது தனது மேற்கு எல்லையில் போர்த்துக்கல்லையும், தெற்கு எல்லையில் ஜிப்ரால்டர் மற்றும் மொரோக்கோவையும், வடகிழக்கில் பிரைனீஸ்ட் மலைத்தொடர் மற்றும் பிரான்சின் ஒரு பகுதியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. ரோமப் பேரரசின் ஒரு பகுதியாகக் காணப்பட்ட இப்பிரதேசம் ஹிஜ்ரி 92ல் (கி.பி 711) முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது. அன்று முதல் ஹிஜ்ரி 898 (கி.பி 1492) வரை சுமார் 8 நூற்றாண்டுகள் முஸ்லிம்களால் ஆட்சி செய்யப்பட்டது. இக்காலப் பகுதியில் ஸ்பெய்ன் அறிவியல், அழகியல், நாகரீகம் மற்றும் கலாசாரம் என பல்வேறு துறைகளிலும் உச்ச கட்ட வளர்ச்சியைக் கண்டு செழிப்புற்று விளங்கியதுடன், அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடந்த ஐரோப்பாவுக்கு ஒளியை ஊட்டிய மூலமாகவும் காணப்பட்டது. எனவேதான் அதன் வராலாற்றுப் பின்னனியையும், பல்துறைப் பங்களிப்புக்களையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட பின்னனியும் அதற்கான காரணிகளும்
ஸ்பெய்ன் மீதான முஸ்லிம்களின் படையெடுப்பானது நாடு பிடிக்க வேன்டுமென்ற என்னத்திலோ அல்லது தமது சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணத்திலோ மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல, மாறாக பல்வேறு பின்னனிக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டமைந்ததாகும். அந்தவகையில் இப்படையெடுப்பானது அநீதியான ஆட்சியை எதிர்த்தும் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரின் தூண்டுதலின் அடிப்படையிலும் அமைந்தவொன்றாகக் காணப்பட்டது. அவற்றைப் பின்வருமாறு நோக்கலாம்.
காரணி ஒன்று ஸ்பெய்னில் ஆட்சி செய்த விதிசா எனும் மன்னனை புரட்சி ஒன்றின் மூலம் கொலை செய்வித்த கிறிஸ்தவ மதகுருமார் ரொட்ரிக் என்பவனை பதவியலமர்த்தினர். இந்த ரொட்ரிகின் அரசியல், சமூக, பொருளாதார நடவடிக்கைகள் மதகுருமாரையும் நிலப் பிரபுக்களையும் தவிர ஏனையோரை அதிகளகளவில் பாதித்தன. அந்தவகையில் மத்திய வகுப்பினர் கொடுமைப்படுத்தப்பட்டனர், அவர்கள் மீது நியாயமற்ற வகையில் அதிக வரிகள் விதிக்கப்பட்டன, கூலியின்றி வேலை வாங்கப்பட்டனர். இதனால் இவற்றை சகிக்க முடியாமல் பலர் வட ஆபிரிக்காவுக்கு தப்பியோடினர்.
காரணி இரண்டு வட ஆபிரிக்க முனையிலிருந்த ஸியூடா என்ற மாகாணம் ஸ்பானியரின் ஆட்சிக்கு உட்பட்டே காணப்பட்டது. இம் மாகாணம் கொலை செய்யப்பட்ட விதிசா மன்னனின் மகளை மணந்திருந்த ஜுலியன் எனும் சிற்றரசனால் ஆளப்பட்டு வந்தது. விதிசா மன்னனின் கொலையைத் தொடர்ந்து ஸ்பெய்னின் அரச மாளிகையில் தங்கி படித்துவந்த ஜுலியனின் மகளான புளோரிந்தா ரொட்ரிக்கினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டால். இதனால் தனது மாமனாரை கொலை செய்தவர்களையும் ரொட்ரிக்கையும் பழிவாங்க துடித்துக் கொண்டிருந்த ஜுலியன், இஸ்லாமியரின் ஆட்சிக்குட்பட்டிருந்த வட ஆபிரிக்காவின் கவர்ணர் மூஸா பின் நுஸைரை சந்தித்து ஸ்பெய்ன் மீது படையெடுக்குமாறு வேண்டினார்.
காரணி மூன்று மன்னன் ரொட்ரிக்கும் மதகுருமாரும் ஸ்பெய்னில் வாழ்ந்து வந்த யூதர்களை வெறுத்ததுடன் அவர்களை கத்தோலிக்கர்களாக மதமாற வற்புறுத்தி துன்புறுத்தத் தொடங்கினர். இதை விரும்பாதோர் கொலை செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதிலிருந்து தப்பியோடியவர்கள் பிடிக்கப்பட்டு நிலப் பிரபுக்களின் அடிமைகளாக்கப்பட்டனர். இவர்களது கொடுமைகளை சகிக்க முடியாமல் யூதர்கள் பெர்பர் இனத்தவருடன் சேர்ந்து ரொட்ரிகிற்கு எதிராக புரட்சி செய்ய ஆயத்தமாகினர். இச்சதி முயற்சி வெளியானதால் அச்சமடைந்து வட ஆபிரிக்காவுக்கு தப்பியோடினர்.
இதேவேளை, ஸ்பெய்னின் அன்மைப் பிரதேசமான வட ஆபிரிக்காவில் மக்கள், இஸ்லாமிய ஆட்சியின் கீழ்; நிம்மதியாகவும், செழிப்புடனும் வாழ்ந்து வந்தனர். இதனையறிந்திருந்த மன்னன் ரொட்ரிக் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிப்படைந்த மத்திய வர்க்கத்தினர், யூதர்கள் மற்றும் ஜூலியன் போன்றோர் வட ஆபிரிக்காவின் அப்போதைய கவர்ணாராக இருந்த மூஸா பின் நுஸைரிடம் ஸ்பெய்ன் மீது போர்தொடுத்து அங்கு நீதியை நிலைநாட்டுமாறு வேண்டிக்கொண்டனர். இந்நிலையில் மூஸா பின் நுஸைர், ஸ்பெயின் மீது படையெடுப்பை மேற்கொள்ள அணுமதி வேண்டி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அப்போதைய கலீபாவான வலீத் இப்னு அப்துல் மலிகிற்கு கடிதம் ஒன்றை அணுப்பி வைத்தார். அதில் ஸ்பெய்னில் நடக்கும் மனித ஆட்சியின் கொடுமைகளையும் அங்கு இறை ஆட்சி நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார். போர்க்கலைகளில் அணுபவம் வாய்ந்த கலீஃபா அவர்கள் மூஸா பின் நுஸைரின் திட்;டத்தினை அங்கீகரித்து, சில ஆலோசனைகள் மற்றும் நிபந்தனைகளை வழங்கிஅணுமதியளித்தார்.
அதன்படி, முழுமையான போர் நடவடிக்கையை ஆரம்பிக்க முன், நிலைமைகளை பரிசீலிக்க தரீஃப் என்பவரது தலைமையில் 400 வீரர்களைக் கொண்ட சிறு படையொன்று ஸ்பெயினுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்படை வெற்றிகரமாகச் சென்று திரும்பி வந்ததையடுத்து படையெடுப்புக்கான ஏற்பாடுகள் ஆரம்பமானது. அதன் முதல் கட்டமாக இவ்வுன்னதப் பணியை மேற்கொள்ள அணுப்பப் படவிருந்த இஸ்லாமிய படையணிக்கு தலைமை தாங்க வீரம், விவேகம், ஆளுமைமிக்க ஒரு தலைவனை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. அந்தவகையில் வட ஆபிரிக்கவின் கரையோரம் நெடுகிலும் வியாபித்திருந்த ரோமானிய சாம்ராஜ்யத்தையே ஆட்டங்காணச் செய்துகொண்டிருந்த இஸ்லாமிய படையணியின் 20வயதும் அடையாத பெர்பர் இனத்து பெரும் போர்வீரன், “தாரிக் இப்னு ஸியாத்” இப்படைக்கு தளபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இவர் உக்பா இப்னு நாஃபி என்பவரின் தலைமையில் சென்ற முஸ்லிம்களின் படை வட ஆப்ரிக்காவைக் கைப்பற்றிய பொழுது, கைதியாய்ப் பிடிபட்டு பின்தளபதி மூஸாவினால் விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் புனித இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டதுடன் வட ஆபிரிக்க முஸ்லிம் படையில் இணைந்து தனது இஸ்லாத்துக்கான சேவையை ஆரம்பித்தார். இளமையின் வேகம், அதனுடன் இணைந்த உறுதியான இறைநம்பிக்கை போன்றவை ஆப்ரிக்க மக்களின் மனங்களில் இஸ்லாத்தை பரப்புவதற்கான பணிகளில் ஆர்வத்துடன் இவரை ஈடுபட வைத்திருந்தது. தாரிக் இப்னு ஸியாதின் இளமைக்கால அர்ப்பணிப்புகளால் கவரப்பட்ட கவர்ணர் மூஸா இப்னு நுஸைர், ரோமர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட“டான்ஜியர்”(மொராக்கோ) பகுதிக்கு இவரை ஆளுநராக நியமித்தார். அத்துடன் ரோமப் பேரரசின் ஆட்சிப் பகுதியான ஸியூடாவின் கவர்ணராக இருந்த ஜுலியனை சந்தித்துப் பேசும் அதிகாரத்தையும் இவருக்கு வழங்கியதிலிருந்தார்.
அடுத்த கட்டமாக புதிய தளபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கென, அரபுகள் மற்றும் பெர்பர்களைக் கொண்ட சிறப்பு ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அவர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் திட்டங்களும் வகுக்கப்பட்டன. அதனடிப்படையில் ஹிஜ்ரி 92ல் (கி.பி.711) 7000 வீரர்களுடன் தாரிக் பின் ஸியாதின் தலைமையில் முஸ்லிம்களின் படை ஸ்பெய்ன் நோக்கிப் புறப்பட்டது. இப்படை ஸ்பெய்னின் கடற்கரையை அடைவதற்கு உதவியாக, ஜுலியன் தனது கப்பல் படைகளைக் கொடுத்து உதவியதுடன் அவனே முன்னின்று ஸ்பெய்ன் நாட்டினுள் படை நகர்த்துவதற்கான வழியையும் காட்டிச் சென்றான். அந்தவகையில் இப்படை சிறிய சிறிய குழுக்களாக கடலைக் கடந்து ஸ்பெயினுக்குள் சென்று, அங்கிருந்த ஒரு குன்றின் கீழ் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டனர். இக் குன்றுதான் இன்று ஜிப்ரால்டர்(Mount
of Tariq - தாரிக் குன்று, அரபியில் - ஜபலுத் தாரிக்) என்று அழைக்கப்படுகின்றது.
வீரர்கள் அனைவரும் கப்பலில் இருந்து இறங்கியவுடன், அவர்கள்பிரயாணித்து வந்த கப்பல்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்துமாறு தாரிக் பின் ஸியாத் தனது படையினருக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அந்தக் கப்பல்கள் யாவும் கொளுத்தப்பட்டன. அதன்பின் வீரர்களிடையே தாரிக் பின் ஸியாத் பின்வரும் வகையில் உணர்ச்சிப்பூர்வமான உரை ஒன்றை நிகழ்த்தினார். “என்னருமை மக்களே! உங்களுக்கு முன்னாலோ எதிரிகள், பின்னாலோ ஆழ் கடல். வெற்றி அல்லது வீரமரணம், இவ்விரண்டைத் தவிர வேறு தேர்வு கிடையாது. இறைவன் மீது சத்தியமாக! இந்த நிலையில் நீங்கள் பொறுமையோடும் உறுதியான இறை நம்பிக்கையோடும் இருப்பதைத் தவிர வேறொன்றும் உங்களுக்கு உதவப் போவதில்லை.” இவ்வார்த்தைகளைக் கேட்டதும் அப்படை வீரர்கள் இன்னும் உத்வேகமடைந்து தக்பீர் கோசம் எழுப்பத் தொடங்கினர்.
முஸ்லிம்களின் வரவையும் நோக்கத்தை அறிந்து கொண்ட மன்னன் ரொட்ரிக் அவர்களை எதிர்த்துப் போர் புரிய தனது படைப்பட்டாளங்களைத் தயார் செய்து சுமார் 100,000 வீரர்களைக் கொண்ட படையை நகர்த்தி வந்தான். அந்தவகையில் ஹிஜ்ரி 92 ரமழான் 28 அன்று, தாரிக் பின் ஸியாதின் தலைமையில் முஸ்லிம் படையினரும், ரொட்ரிகின் தலைமயில் ஸ்பானியப் படையினரும் “ஸிதோனியா” எனும் பள்ளத்தாக்கில் போரிட்டனர். இதேவேளை கவர்ணர் மூஸாவினால் அனுப்பி வைக்கப்பட்ட 5000 வீரர்களைக் கொண்ட இன்னொரு படையணியும் வந்து தாரிக்கின் படையுடன் இணைந்து கொண்டது. ஒரு புறத்தில் இருதரப்பினருக்குமிடையில் உக்கிரப் போர் இடம் பெற்றுக் கொண்டிருந்த அதேவேளை மறுபுறம் ஜுலியன் தலைமையின் கீழ் இயங்கிய ஸ்பானியப் படையினர் முஸ்லிம்களைப் பற்றிய நன்மதிப்பை தங்களது சொந்த நாட்டு மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தனர்.
இதேவேளை, முஸ்லிம்கள் படை நகர்த்திச் சென்றிருந்த வேளையில் ஸ்பொய்னில் உள்நாட்டுக் கலவரம் ஒன்றும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காரணம், மன்னர் விதிசா கொலை செய்யப்பட முன், அவர் தன் மகன் அகீலாவை அடுத்த ஆட்சியாளராக்கத் திட்டமிட்டு செயற்பட்டார். அந்தவகையில் அதற்காக அரசனை நியமிக்கும் உயர் குழத்தவர்களில் சிலரது ஆதரவைப் பெற்றுக் கொண்டதுடன் ஸ்பெய்னின் வட கிழக்குப் பிரதேசத்திற்கு அகீலாவை கவர்ணராகவும் ஆக்கினார். விதிசா கொலை செய்யப்பட்டதையடுத்து புதிய மன்னனை தெரிவு செய்வதற்காக மேன்மக்கள் சபை கூட்டப்பட்டபோது, அவர்கள் அகீலாவைப் புறந்தள்ளி விட்டு ரொட்ரிக்கை தெரிவு செய்தனர். ஆனால் அகிலா அவனுக்குக் கீழ்ப்படியாது தனது மேற்பார்வையின் கீழிருந்த பிரதேசத்தை சுதந்திரமாக ஆட்சி செய்தார். இதனை புலப்படுத்தும் நோக்கில் புதிய நாணயங்களையும் வெளியிட்டார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ரொட்ரிக் அகிலாவை எதிர்க்க படையெடுத்துச் சென்றிருந்தான். இதனால் அங்கு உள்நாட்டுக் கலவரம் தோன்றியது.
ஜூலியன் மற்றும் அகிலாவின் உதவியுடனும் மறுபக்கத்தில் முஸ்லிம் படையனியின் வலிமையான தாக்குதல்களின்விளைவாகவும் ஷவ்வால்மாதம் 5ம் நாள், ரொட்ரிக்கின் படையை தேல்வியடையச் செய்து தாரிக்கின் தளமையிலான முஸ்லிம்களின் படை வெற்றியை ஈட்டியது. அதில் கொடுங்கோலன் ரொட்ரிக்கும் கொலை செய்யப்பட்டான். இதேவேளை முஸ்லிம் படையினரை எதிரிகள் முற்றுகையிடலாம் எனக்கருதிய கவர்னர் மூஸா பெரும்படையுடன் தானும் அங்கு வந்து சேர்ந்தார். 8 தினங்கள் இடம் பெற்ற இப்போரில் முஸ்லிம் படையினரின் தரப்பில் சுமார் 3000 பேர் மரணமடைந்தனர்.
அன்று முதல் ஸ்பெய்னில் உத்தியோக பூர்வமாக முஸ்லிம்களின் ஆட்சி ஆரம்பமானதுடன் அது “அல்அந்தலூஸியா” என முஸ்லிம்களால் அழைக்கப்படலானது. சுமார் 800 வருடகாலங்கள் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழிருந்த அல்அந்தலூஸியா, அக்காலப் பகுதியில் பல்வேறு அறிவியல் துறைகளிலும் கலாசாரத்திலும் நாகரிகத்திலும் உச்சத்தை அடைந்து, அஞ்ஞான இருளிலிருந்த ஐரோப்பாவுக்கு ஒளியூட்டியது. இவ்வாறு முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட ஸ்பெய்ன்; அந்தலூஸ், டொலடோ, மேரிடா, ஷரகோஸா, அர்பேர்னியா என ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு பரிபாலிக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
ஹிஜ்ரி 92 முதல் 132 வரை உமையாக்களின் ஆட்சியின் கீழும் மற்றும் ஹிஜ்ரி 132 முதல் 138 வரை அப்பாசியரின் ஆட்சியின் கீழும் இஸ்லாமிய பேரரசின் ஒரு மாகாணமாக இருந்த முஸ்லிம் ஸ்பெய்ன், ஹிஜ்ரி 138 முதல் உமையாக்களின் தனி ஆட்சிப்பிரதேசமாக மாறியது. ஹிஜ்ரி 422ல் இவர்களின் ஆட்சி; அங்கு வீழ்சியடைந்தது முதல் ஹிஜ்ரி 898 (கி.பி 1492) வரை இஸ்லாமிய சிற்றரசுகள் அல் அந்தலூஸியாவை ஆட்சி செய்தன. இதில் ஹிஜ்ரி 138 முதல் 422 வரை ஆட்சி செய்த உமையா ஆட்சியாளர்களின் காலப்பகுதி முஸ்லிம் ஸ்பெய்னின் மிகவும் புகழ்மிக்க பொற்காலமாக காணப்பட்டது. இக்காலப்பகுதியில் பின்வருவோர் அங்கு ஆட்சியாளர்களாகக் காணப்பட்டனர்.
முதலாம் அப்துர் ரஹ்மான் (கி.பி. 756 -788), முதலாம் ஹிஷாம் (கி.பி. 788 - 796), முதலாம் ஹகம் (796 - 822), இரண்டாம் அப்துர்ரஹ்மான் (கி.பி. 822 - 852), முதலாம் முஹம்மத் (கி.பி. 852 - 886), முன்ஸிர் (கி.பி. 886 - 888), அப்துல்லாஹ் (கி.பி. 888 - 912), மூன்றாம் அப்துர்ரஹ்மான் (கி.பி. 912 - 961), இரண்டாம் ஹகம் (கி.பி. 961 - 976), இரண்டாம் ஹிஷாம் (976 1008).
இவர்களுள் முதலாம் அப்துர் ரஹ்மான், இரண்டாம் அப்துர் ரஹ்மான், மூன்றாம் அப்துர் ரஹ்மான் மற்றும் இரண்டாம் ஹகம் போன்றோர் மிக முக்கியமான ஆட்சியாளர்களாக காணப்பட்டனர். குறிப்பாக இவர்களது ஆட்சிக் காலங்களில்தான் ஸ்பெய்னில் முஸ்லிம்களின் ஆட்சி ஸ்திரமடைந்ததுடன் அறிவியல், அழகியல், நாகரீகம் மற்றும் கலாசாரம் என பல்வேறு துறைகளும்அதிக வளர்ச்சியடைந்து செழிப்புற்று விழங்கியது.
முதலாம் அப்துர் ரஹ்மான் - உமையா கலீபா 3ம் முஆவியாவின் மகனான இவர் ஆட்சியாளர் ஒருவருக்கு இருக்கவேண்டிய பண்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்டிருந்தார். இளமையிலேயே போர்ப் பயிற்சி, சமய அறிவு போன்றவற்றுடன் தீய நடத்தைகளை விட்டும் விளகியவராக காணப்பட்டார். அப்பாஸியர் ஆட்சியைக் கைப்பற்றிய போது இவருக்கு வயது 20 ஆகும். அரச குடும்பத்து உமையாக்களை, அப்பாஸிய கலீபா அஸ்ஸப்பாஹ் விருந்துக்கழைத்து படுகொலை செய்த தினத்தில் இவர் வெளியே சென்றிருந்ததால் உயிர் தப்பினார். பின் அப்பாஸியரிடமிருந்து தன்னைக் பாதுகாத்துக்கொள்ள தலைமறைவாகி பலஸ்தீன் மற்றும் எகிப்தினூடாக பெர்பர் இனத்தைச் சேர்ந்த தனது தாயின் கோத்திரமான பனூ நபூசாகினர் பெரும்பான்மையாக வாழ்ந்த வட ஆபிரிக்காவின் சியடா பிரதேசத்தைச் சென்றடைந்தார். அங்கு அவர்கள் மூலம் அப்துர்ரஹ்மானுக்கு ஆதரவும், பாதுகாப்பும் கிடைத்தது.
பின்னர் ஆட்சியாளராக விரும்பிய அப்துர்ரஹ்மான் சூழ்நிலைகளை அவதாணித்தார். இஸ்லாமிய கிலாபத்திற்கு உட்பட்டிருந்த அரேபியா, பாரசீகம், வட ஆபிரிக்கப் பகுதிகளில் அப்பாஸியரின் ஆதிக்கம் ஸ்த்திரமாக காணப்பட்டதால் அவர்களிடமிருந்து அவற்றைக் கைப்பற்றுவது சிரமம் என்பதை உணர்ந்தார். எனினும் சியூட்டாவுக்கு வடக்கே இருந்த முஸ்லிம் ஸ்பெய்னில் அதற்கான சாத்தியப்பாடுகள் தென்படுவதை அவதானித்து, அதற்கான முன்னெடுப்புக்களை நுணுக்கமாக நகர்த்தத் தொடங்கினார்.
அதன்படி தென் ஸ்பெய்னின் அந்தலூஸ் மாகாணத்தில் அதிகம் வாழ்ந்து வந்த சிரியா வாசிகளினதும், உமையாக்களுக்கு ஆதரவானவர்களாக காணப்பட்ட பரிபாளகர்களதும் ஆதரவைப் பெற்றுக்கொள்ள நாடினார். எனவே உமையாக் கோத்திரத்தார் அப்பாசியர்களால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டமை, தனக்கு காணப்படும் உயிர் அச்சுருத்தல், கலீபா ஹிசாமின் பேரர் என்ற வகையில் ஸ்பெய்னின் ஆட்சியில் தனக்குள்ள உரிமை மற்றும் இன்னும் பல விடயங்களை உள்ளடக்கிய வகையில் கடிதம் ஒன்றை எழுதினார். இக்கடிதத்தை தனது அடிமை மூலம் அவர்களுக்கு அணுப்பி உதவிவேண்டினார். அவர்களது உதவி கிடைக்கப் பெறவே தனது ஏனைய ஆதரவாளர்களையும் ஒன்றினைத்து அந்தலூஸ் மாகாண கவர்ணராக இருந்த யூசுபை எதிர்த்து போரிட்டு கொரடோவாவை கைப்பற்றினார். பின்னர் கொரடோவா மஸ்ஜிதில்வைத்து அப்துர் ரஹ்மான் அமீராகப் பிரகடனம் செய்யப்பட்டார்.
தோல்வியடைந்த யூசுப் தனது மகனுடன் இனைந்து கொரடோவாவை மீற்க படைதிரட்டி வந்தார். அது இயலாமல் போகவே நிராசையடைந்து அப்துர் ரஹ்மானுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டார். இதனால் அவருக்கு தனது மகனை பினைக் கைதியாக ஒப்படைக்கவும் நேர்ந்தது. சிறித காலத்தின் பின் உடன்படிக்கையை மீறும் வகையில் அப்துர் ரஹ்மானுக்கெதிராக படைதிரட்டி வரும் வழியில்; கலீபாவின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டார். இதனையரிந்த அப்பாசிய கலீபா மன்சூர் அப்போது வட ஆபிரிக்காவின் கவர்னராயிருந்த, கொலை செய்யப்பட்ட யூசுபின் உறவினரான அலா பின் முஇஸ்ஸ{க்கு அப்துர் ரஹ்மான் மீது படையெடுக்க ஆணையிட்டார். இதனால் இவ்விரு தரப்பாருக்குமிடையில் அடுத்த போர் மூண்டது. இதில் முஇஸ்ஸின் படை தோல்வியடைந்தததுடன் அவரும் கொள்ளப்பட்டார். அதன் பின் அப்துர் ரஹ்மானின் ஆட்சி ஸ்பெய்னில் ஸ்திரமடைந்தது. இதன் பின்னர் தனது திறமையின் மூலம் ஸ்பெய்னின் ஏனைய பகுதிகளையும் கைப்பற்றி தனத ஆட்சிப் பகுதியை விஸ்தீரனப்படுத்திக் கொண்டார்.
இவ்வாறு ஒரு புறத்தில் சாதகமான முன்னேற்றங்கள் கிட்டியபோதும் மறுபுறத்தில் எதிரிகளும் அவர்களால் கிளர்ச்சிகளும் அதிகரித்தன. சிலர் தமது சுய அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணத்துடன் அப்துர்ரஹ்மான் ஆட்சியாளராகுவதற்கு உதவி புரிந்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அவரது செயற்பாடுகள் மற்றும் நியமனங்கள் அவர்களை திருப்திப்படுத்தாததால் அப்துர்ரஹ்மான் மீது அதிருப்தியடைந்து, அவருக்கு எதிரிகளாக மாறி கிளர்ச்சிகள் செய்யத் தொடங்கினர். மேலும் இன்னொரு புறத்தில் அப்பாசியர்களும் இவரது ஆட்சியை முடக்குவதற்கான செயற்பாடுகளை தூண்டிவந்தனர். அந்தவகையில் உள்நாட்டு எதிரிகள் மற்றும் அப்பாஸிய ஆட்சியாளர்களின் தூண்டுதலால் பிரான்ஸிய மன்னன் சாலமன் கலீபாவை எதிர்க்க படையெடுத்து வந்தான். இப்படையெடுப்பை கலீபா விரட்டியடித்ததுடன்; தன் படையுடன் சென்று பிரான்ஸின் தென்பகுதி நகர்களையும் தாக்கினார். எனினும் அக்காலகட்டத்தில் ஸ்பெய்னில் அடிக்கடி கிளர்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் கொரடோவாவுக்கு மீண்டார்.
இவ்வாறு பல சவால்களுக்கு மத்தியில் நாட்டின் அபிவிருத்தியையும், மக்களின் நலன்கலையும் கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளையும் மேற்கொண்டார். அவற்றில் பின்வருவனவற்றை முக்கியமானவைகளாக குறிப்பிட்டுக் காட்டலாம். நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்கள் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு அறிந்து கொண்டார், மக்களின் நலன்களை குறிக்கோலாகக் கொண்ட சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தினார், நிர்வாகிகளின் திறன்களையும் பலவீனங்களையும் அவதானித்து அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். கல்வியறிவை மேம்படு;த்தத் தேவையான பாடசலைகள் மற்றும் கலாசாலைகளை அமைத்ததுடன் அறிஞர்களுக்கு ஆதரவும் உதவியும் புரிந்தார். அத்துடன் தபால் சேவைத் துறையை விருத்தி செய்தார், கைப்பற்றப்பட்ட முக்கிய நகர்களில் காவல் அரண்களை ஏற்படுத்தினார், அந்நகர்களைப் பரிபாளிக்கவும் அழகு படுத்தவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார், பொருத்தமான இடங்களில் மஸ்ஜித்களையும் பரிபாலணத்துக்கான கட்டடங்களையும் நினிர்மாணித்தார். முக்கிய நகர்களை இணைக்கும் வகையில் பாதைகளையும் பாலங்களையும் அமைத்தார், கொரடோவா நகரை உலகின் அழகு மிக்க நகர்களில் ஒன்றாக மாற்றியமைத்தார், கொரடோவா மஸ்ஜிதுக்கு மேற்குத் திசையில் அரச மாளிகையையொன்றை நிர்மாணித்தார், முஸ்லிமல்லாத குடிமக்களுடன் சுமுகமாக உறவாடி அவர்களது நலன்களையும் பேணி நடந்து கொண்டார். மேலும் தனது ஆட்சிப் பிரதேசத்தை 6 மாகாணங்களாகப் பிரித்து அவற்றின் தளபதிகளை அம்மாகனங்களுக்கு பரிபாலகர்களாக ஆக்கினார். அவர்களுக்குத் துணையாக பிரதான நிருவாகிகள், அமைச்சர்கள், காழிகள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் போன்றோரை நியமித்தார்.
நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவித்த உள் நாட்டுக் கிளர்ச்சிக் காரர்களையும் கொள்ளைக் கூட்டங்களையும் இராணுவ பலத்தைப் பிரயோகித்து அடக்கினார். கிளர்ச்சிகளை எதிர்கொள்ளவும், கட்டுப்படுத்தவும் நம்பிக்கைக்குரியவர்களை முக்கியமான நகர்களின் நிர்வாகிகளாக நியமித்ததுடன், உமையாக் கோத்திரத்தவர்களை மையப்படுத்திய படையணியையும் உருவாக்கினார்.
சுமார் 32வருடங்கள் ஆட்சி செய்து பல சுகபோகங்களைப் பெற்றிருந்தபோதும், எளிமையாகவும் மார்க்கப் பற்றுடனும் வாழ்ந்த கலீபாஅப்துர் ரஹ்மான் கி.பி. 788ல் மரணமடைந்தார். மரணிக்க முன் தனக்குப் பின் ஆட்சி செய்ய தகுதியானவர் எனக்கருதிய தனது 2வது மகன் ஹிஷாமை அடுத்த வாரிசாக நியமித்திருந்தார்.
இரண்டாம் அப்துர்ரஹ்மான் - முதலாம் ஹகமைத் தொடர்ந்து அவரது மகன் அப்துர்ரஹ்மான் தனது 31வது வயதில் (கி.பி. 822); ஆட்சியாளரானார். ஸ்பெய்னை ஆண்ட உமையா கலீபாக்களின் ஆட்சியில் இவரது ஆட்சிக் காலமும் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். இக்காலத்திலேயே உமையா ஆட்சி ஸ்பெய்னில் ஸ்திரமடைந்தது. கிளர்ச்சியில் ஈடுபட்ட வட ஸ்பெய்ன் கிறிஸ்தவர்களும், பிராங்கியரும், ஏனைய எல்லைப்புறக் குழுக்களும் அடக்கப்பட்டனர். இதனால் நாட்டில் அமைதியும் செழிப்பும் நிலவியது. கலை, இலக்கியம், கலாசரம், நிர்வாகம், கட்டடம், பாதுகாப்பு, நகராக்கம் போன்ற துறைகள் அபிவிருத்தியடைந்தன. அறிவியல் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகள், கல்லூரிகள், நூலகங்கள், மஸ்ஜித்கள் என்பன நிறுவப்பட்டன. பிற மொழி நூல்கள் அரபு மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டன. இவர் நிர்மாணித்த கட்டடங்களும் பூங்காக்களும் அழகிய கலை வண்ணம் பொதிந்து காணப்பட்டன. கொரடோவா நகர் அறிவியல் மற்றும் கலாசார வளர்ச்சியில் புகழ் பெற்று விளங்கியது. தலை நகருக்குத் தேவையான நீரை ஸியெரா மொரீனா (Sierra
Morena) மலையில் இருந்து நீண்ட நீர்க் குழாய்களூடாக எடுத்து வர ஏற்பாடுகள் செய்தார்.
சுமார் 30 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நிலை நாட்டிய இரண்டாம் அப்துர்ரஹ்மான் ஹிஜ்ரி 238ல் தனது 61வது வயதில் மரணமடைந்தார்.
மூன்றாம் அப்துர்ரஹ்மான் - ஸ்பெய்னின் வரலாற்றில் இவரது ஆட்சிக் காலம் மிகச் சிறப்புவாய்ந்த காலப்பகுதியாக காணப்பட்டது. தனது 21வது வயதில் (கி.பி 912) இவர் ஆட்சியைப் பொருப்பேற்கும் போது வெளிநாட்டுச் சதிகளின் காரணமாக அங்குஉள்நாட்டுக் குழப்பங்களும் கிளர்ச்சிகளும் மேலோங்கிக் காணப்பட்டன. எனினும் தனது திறமையையும் பலத்தையும் கொண்டு அவற்றை முறையடித்தார். பின்னர், தனது ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், ஸ்பெய்னின் அபிவிருத்தியையும் சமூக ஒற்றுமையையும் அடிப்படையாக் கொண்டு பல்வேறு செயல்திட்டங்களை படிப்படியாக முன்னெடுத்துச் சென்றார்.
அந்தவகையில், எதிரிகளை முறையடிக்கும் வகையில் தனது இராணுவத்தைச் மிகச் சிறந்த முறையில் கட்டமைத்து பலப்படுத்தினார். சுமூகமான வாழ்க்கையை கருத்திற் கொண்டு அன்னிய நாடுகளுடன் குறிப்பாக ஜேர்மன், பிரான்ஸ், வட ஸ்பெய்ன், ரோம் போன்றவற்றுடன் நல்லுறவை ஏற்படுத்தி பேணிவந்தார். வருமானத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் வரியமைப்பு முறைகளையும் சீரமைத்தார். அங்கு காணப்பட்டு வந்த இன, சமய, வர்க்க வேறுபாடுகளை நீக்கி தேசிய ஒருமைப்பாடு பேணப்பட வழி செய்தார். அறிவு, கலை, கலாசார அபிவிருத்திகளில் அதிக கவனம் செலுத்தியதுடன் அறிஞர்கள், வைத்தியர்கள், தத்துவ ஞானிககள் மற்றும்ஏனைய துறைசார்ந்த கல்விமான்களையும் கௌரவித்தார். பிற மொழிகளில் காணப்பட்ட அறிவியல் நூல்களை அரபு மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்வித்தது மட்டுமல்லாமல் இலக்கியத்துறை வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்தார். அன்றய உலகின் அறிவியல் மையமாக விளங்கிய பக்தாத் நகரிலிருந்து அதிக புத்தகங்களை பெரும் தொகையினை செலவழித்து இறக்குமதி செய்தார். அதிகளவிலான புத்தகங்களை உள்ளடக்கிய பெரும் வாசிகசாலைகளை தோற்றுவித்தார். இக்காலத்தில் ஸ்பெய்னில் பல்துறை அறிஞர்களும் வந்து குடியேறத் தொடங்கியதுடன் அதன் கல்வியறிவு வீதம் 99% ஆகவும் காணப்பட்டது. மேலும்பாதைகள், பாலங்கள், கோட்டைகள், கால்வாய்கள், மருத்துவமனைகள், ஆய்வு நிலையங்கள், அநாதை இல்லங்கள், வயோதிபர் மடங்கள் போன்றவையும் இவரால் அமைக்கப்பட்டன. விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீர்ப்பாசனத்திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏறாளமான நிலங்களை பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தினார். புடவைக் கைத்தொழில் வளர்ச்சியடைந்தது. குர்துபாவில் மாத்திரம் சுமார் 30,000 க்கும் அதிகமான நெசவாளர்கள் காணப்பட்டனர்.
கொரடோவாவிற்கு மேற்கே சுமார் 5 மைல் தொலைவில் “மதீனது ஸஹ்ரா" எனும் புதிய நகரொன்றை நிர்மாணித்தார். சுமார் 40 ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நகர் அன்றைய காலகட்டத்தின் அதிசயமாக கானப்பட்டதுடன், அங்கு கட்டப்பட்டிருந்த மாளிகையே இந்தியாவில் தாஜ்மகால் தோன்றவும் காரணமாக அமைந்தாக கருதப்படுகிறது. அக்கலப்பகுதியில் ஐரோப்பாவின் அதிக சனத்தொகை கொண்ட பிரதேசமாக இவரது ஆட்சிப்பகுதியே காணப்பட்டது. மேலும் சுமார் 1600 மஸ்ஜித்களும், 990 பொதுக் குளியலறைகளும் அங்கு காணப்பட்டன. இவரது நல்லாட்சியினால் சுதேசிகளுள் பலரும் இஸ்லாத்தைத் தழுவினர். இவ்வாறு பல சீர்திருத்தங்களையும் உன்னத சேவைகளையும்செய்த கலீபா மூன்றாம் அப்துர்ரஹ்மான், 50வருட ஆட்சியின் பின் கி.பி. 961ல் தனது நகரான மதீனது ஸஹ்ராவில் இயற்கை எய்தினார்.
இரண்டாம் ஹகம் - தந்தை 3ம் அப்துர்ரஹ்மானைத் தொடர்ந்து தனது 46வது வயதில் (கி.பி. 961), “அல்- முஸ்தன்ஸிர் பில்லாஹ்" எனும் பட்டப்பெயருடன் ஸ்பெய்னின் கலீபாவானார். இவர் சிறந்ததொரு கல்விமானாகவும், புத்தகங்களை அதிகம் நேசிப்பவராகவும், பரந்த வாசிப்பாளராகவும் திகழ்ந்தார். முஸ்லிம் ஸ்பெய்னின் வரலாற்றில் அறிவியல் துறையின் பொற்காலம் எனும் புகழப்படும் அளவுக்கு இவரது ஆட்சிக்காலத்தில்அறிவியல் நாகரிக வளர்ச்சி உச்ச நிலையை அடைந்தது. அந்தவகையில் நாடெங்கிலும் பாடசாலைகள், கல்லூரிகளை நிறுவினார். நாடு முழுவதும் இலவசக் கல்வி வழங்கப்பட்டது, இவரின் முயற்சியால் குர்துபாப் பல்கலைக்கழகம் பெரும் வளர்ச்சி கண்டது. இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகமான முஸ்லிம், யூத, கிறிஸ்தவ மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்றனர். அன்றைய உலகின் மிகப் பெரும் பல்கலைக்கழகமாக குர்துபாப் பல்கலைக்கழகம் காணப்பட்டது. நாடு பூராகவும் நூலகங்களை நிறுவினார். குறிப்பாக குர்துபாப் பல்கலைக்கழக நூலகம் மிகப் பிரபலமானது. இது சுமார் 4 முதல் 6 இலட்சம் நூல்களைக் கொண்டிருந்ததுடன் அரிய கையெழுத்துப் பிரதிகளும் அங்கு காணப்பட்டன. கலீபா ஹகம் குர்துபா நகரை பெரும் புத்தகச் சந்தை ஒன்றாகவே மாற்றியமைத்தார். இங்கு சுமார் 20,000 புத்தகக் கடைகள் காணப்பட்டன. மேலும் குர்துபா மஸ்ஜிதை விசாலப்படுத்தினார், தலை நகரை அழகிய கட்டங்களால் அழகுபடுத்தினார். இவ்வாறு இவரது ஆட்சிக் காலத்தில் ஸ்பெய்ன் எல்லாத் துறைகளிலும் தன்னிறைவு கண்டு காணப்பட்டது.
இவரது ஆட்சியின்போது கலீபா அப்துர்ரஹ்மானின் காலத்தில் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் அவற்றை முறித்துக் கொண்டதுடன் குழப்பமும் விளைவித்தனர். இதை தனது இராணுவத் திறன் மூலம் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தினார். இவ்வாறு பெரும் சேவைகளையும் அபிவிருத்திகளையும் புரிந்த கலீபா 2ம் ஹகம் 15 வருட ஆட்சியின் பின் தனது 61ம் வயதில் (கி.பி. 975) மரணமடைந்தார். ஸ்பெய்னை ஆண்ட மிக்ச்சிறந்த உமையா கலீபாக்கள் வரிசையில் இறுதியானவராகக் கருதப்படுகின்ற இவரின் மறைவோடு புகழ்மிக்க உமையா ஆட்சியும் ஸ்பெய்னில் அஸ்தமித்தது.
முஸ்லிம்களின்அறிவியல் பங்களிப்புகள்
முஸ்லிம்களின் ஆட்சிக் காலத்தில்தான் ஸ்பெய்ன் அறிவியல், அழகியல், நாகரீகம் மற்றும் கலாசாரம் போன்ற பல்வேறு துறைகளிளும் அதிக வளர்ச்சியடைந்து காணப்பட்டதுடன் அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடந்த அன்றைய ஐரோப்பாவுக்கு அறிவியல் ஒளியை வழங்கிய மத்திய நிலையமாகவும் காணப்பட்டது. இக்காலப்பகுதியில்தான் உலகின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படைத் தூன்களாக அமைந்த பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள் அங்குதோன்றியதுடன் அவர்களால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பலநூல்களும் எழுதப்பட்டன. அந்தவகையில் பின்வருவனவற்றை அதற்கான உதாரணங்களாக எடுத்துக் காட்டலாம்.
“இப்னு பர்னாஸ்” என்ற அறிஞர் விமானம் பறப்பதற்கான இயந்திரவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். மரத்திலான இரண்டு இறக்கைகளுடைய விமானத்தை முதன் முதலில் உருவாக்கி பறப்பதற்கான முதல் முயற்சியை உலகில் மேற்கொண்டார். இது இவருக்கு 6 நூற்றாண்டுகளுக்குப்பின் வந்த லியானாடோ டாவின்சி மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அடிப்படையாக அமைந்தது. “மஸ்லமா அல் மாஜிரித்தி” எனும் அறிஞர் கணிதம், வானியல் பற்றிய அதிக நூல்களை எழுதினார். மேலும் புகழ்மிக்க அறிஞரான அல்குவாரிஸ்மியின் வானவியல் பற்றிய பட்டியல்களை திருத்தி, விரிவுபடுத்தி எழுதினார்.
கணித மேதையும் வானவியல் ஆய்வாளருமான “அல் சர்காழி” வானியல் ஆய்வுக்கான துல்லியமான கருவிகளை கண்டுபிடித்தார். மேலும் நாற்களையும் மாதங்களையும் கணக்கிடக்கூடிய கடிகாரத்தையும் கண்டுபிடித்தார். “அல் பிட்ரூஜி” எனும் அறிஞர் நட்சத்திரங்களின் இயக்கம் பற்றிய புதிய சிந்தனைகளை அரிஸ்டோட்டிலின் சிந்தனைகளையொட்டி உருவாக்கினார். “இப்னு அல் நபீஸ்” என்ற வைத்தியத் துறை ஆய்வாளர் இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தார். “இப்னு அல் சுபைர்” எனும் அறிஞர் கட்டிகளை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றும் முறையை முதன் முதலில் ஆய்வு செய்து விளக்கினார். இவரை ஐரோப்பியர் அவன்கோல் என அழைக்கின்றனர்.
“அப்துல் ஹாசிம் அல் ஸஹ்றாவி” மேற்கு நாடுகளால் அபுல் டார்சிப் என அழைக்கப்படுபவர். மத்திய காலப்பகுதி ஐரோப்பாவின் மிகவும் செல்வாக்குப் பெற்ற அறுவைச் சிகிச்சை நிபுணராக காணப்பட்டார். இவர் அறுவைச் சிகிச்சைக் கருவிகளின் விளக்கப்படங்களுடன் கூடிய அறுவைச் சிகிச்சை முறைகளை தெளிவுபடுத்தும் ‘டார்சிப்’ எனும் மருத்துவ நூலின் ஆசிரியராவார். இந்நூல் கிரேக்க மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் முன்னனி மருத்துவ நூலாக பயண்படுத்தப்பட்டது.
“அல் பைத்தர்” அந்தலூஸியாவின் மிகவும் புகழ் பெற்ற தாவரவியல் நிபுனராக காணப்பட்டார். ‘எழிய மருந்துகளும் உணவும்’ எனும் நூலை எழுதியிருந்தார். அதில் மருத்துவ குணம் கொண்ட செடி, கொடிகளை அகர வரிசைப்படி தொகுத்துள்ளார். இவ்வாராய்ச்சிக்காக தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்து செயற்பட்டார். “அஹமத் இப்னு முஹம்மத் அல் ராஸி” எனும் அறிஞர் பூகோள அமைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். தனது நாடான ஸ்பெய்னின் பூகோல அமைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்ததுடன் அதைப் பற்றி தெளிவாக புத்தகம் ஒன்றையும் எழுதினார்.
ஸ்பெய்னின் இவ்வறிவியல் எழுச்சியானது அதன் அன்மைப் பிரதேசமான வட ஆபிரிக்காவிலும் பிரதிபலித்தது. மொரோக்கோவைச் சேர்ந்த “இப்னு பதூதா” சுமார் 28 ஆண்டுகள் தொடர் பிரயாணங்களை மேற்கொண்டு பல பயண நூல்களை எழுதினார். மேலும் உலக நாகரீகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய ஆய்வு நூல்களையும் எழுதினார். இவை இன்றும் சிறப்புமிக்க ஆவணங்களாக திகழ்கின்றன. நவீன வரலாற்றின் முதல் தத்துவ ஞானியாகவும் இவர் போற்றப்படுகிறார். “அல் இத்ரீஸி” என்ற அறிஞர் உலக வரைபடைத்தை வரைந்தார். உலகின் முதலாவது அறிவியல் வரைபடமாக இவர் வடிவமைத்த வரைபடமே திகழ்கிறது.
இவை மட்டுமன்றி மேலே ஆட்சியாளர்களின் சேவைப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று அழகியல், கட்டிடக் கலை, நாகரீகம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளுக்கும் அக்கால முஸ்லிம்களால் பாரிய சேவைகள் செய்யப்பட்டன. மேலும் சமூக சேவையை அடிப்படையாகக் கொண்ட பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. உதாரனமாக ஐரோப்பாவிலேயே இங்குதான் முதல் முதலாக தெருவிளக்குகள் போடப்பட்டமை, நவீன நகர்கள் மற்றும் கட்டிடங்கள் தோற்றுவிக்கப்பட்டமை, பாதைகள் நவீன முறையில் விஸ்தரிக்கப்பட்டமை, அக்காலத்தில் ஸ்பெய்னில் மட்டும் சுமார் 1000 பொதுக் குளியலறைகள் காணப்பட்டமை போன்றவற்றை குறிப்பிடலாம்.
இவ்வாறு கணிதம், புவியியல், வானியல், மருத்துவம், பொருளியல், தாவரவியல், வரலாறு, தத்துவம், அழகியல், கட்டிடக் கலை என பல்வேறு துறைகளையும் உள்ளடக்கிய வகையில், ஸ்பெய்னினதும் உலகினதும் அறிவியல், தொழிநுட்பம் சார்ந்த வளர்ச்சிக்கு முஸ்லிம் ஸ்பெய்னின் ஆட்சியாளர்களும், அறிஞர்களும், கலைஞர்களும் பெரும் பங்காற்றியுள்ளனர்.
இஸ்லாமிய ஆட்சியின் வீழ்ச்சி
கி.பி 11ம் நூற்றாண்டில் ஸ்பெய்னின் சிறிய கிறிஸ்தவப் பகுதியிலிருந்து இஸ்லாமிய ஆட்சிக்கெதிராக தொடங்கிய சிறிய அளவிலான கிளர்ச்சி காலப்போக்கில் வலுப்பெறத் தொடங்கியது. இவ்வாறு வலுப்பபெற்ற இவர்கள் மன்னர் 6ம் அல்போன்ஸா தலைமையில் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய ஆட்சியின் கீழிருந்த டொலேடோ பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். இந்த வெற்றியினால் உந்தப்பட்ட கிறிஸ்தவப் படைகள் முழு ஸ்பெய்னையும் முஸ்லீம்களிடமிருந்து மீட்டெடுக்க ஒன்றுபட்டு செயற்படத் தொடங்கினர். இதே சந்தர்ப்பத்தில் ஸ்பெய்னை ஆட்சி செய்து வந்த இஸ்லாமிய மன்னர்களிடையே உட்பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அவர்கள் பிரிந்து செயற்படத் தொடங்கினர். இச் சந்தர்ப்பத்தைப் பயண்படுத்திக் கொண்ட கிறிஸ்தவப் படைகள் முஸ்லிம் ஆட்சியாளர்களைக் கடுமையாக எதிர்;க்கத் தொடங்கினர். இவர்களின் எதிர்ப்பை ஸ்பெய்னின் முஸ்லிம் படையினரால் சமாளிக்க முடியாமல் போகவே அன்டைய பிரதேசமான வட ஆபிரிக்காவின் முஸ்லிம் பெர்பர் இன ஆட்சியாளர்களின் உதவியை; நாடினர். பெரும் படையுடன் வந்த பெர்பர்கள் கிறிஸ்தவப் படையினரின் கிளர்ச்சியை முறையடித்து அடக்கியதுடன் சந்தர்ப்பத்தைப் பயண்படுத்திக் கொண்டு ஆட்சியையும் தம் வசப்படுத்திக் கொண்டனர்.
கி.பி 1147ல் இவ்வாறு ஸ்பெய்னின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட பெர்பர் இனத்தின் அல் மோரா பரம்பரையிடமிருந்து அதே பரம்பரையைச் சேர்ந்த இன்னொரு இராணுவக் கூட்டனி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. இதன் பின்னர் இவ்வாறு ஸ்பெய்னை ஆட்சி செய்த வந்த இஸ்லாமிய மன்னர்களுக்கிடையில் அடிக்கடி போர்கள் இடம்பெறத் தொடங்கியது. இதனால் இஸ்லாமிய மன்னர்களினதும் படையினதும் பலம் குன்றி பலவீனமடைந்தது. மறுபுறத்தில் தோல்வியடைந்த கிறிஸ்துவக் குழுக்கள் தமது இராணுவப் பலத்தை பெருக்கிக் கொண்டதுடன் தங்களுக்கு மத்தியில் இராணுவக் கூட்டமைப்பையும் ஏற்படுத்திக் கொண்டனர். இவ்வாறு ஒன்றினைந்த இவர்கள் இஸ்லாமியப் படையினரை கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். எனினும் முஸ்லிம்களை இலகுவில் வெற்றி கொள்வது அவர்களுக்கு பெரும் சிரமமாகவே காணப்பட்டது.
காலப்போக்கில், இவ்வாறு ஒன்றினைந்த கிறிஸ்தவப் படையினரின் தொடரான கடுமையான தாக்குதலின் விளைவாகவும், முஸ்லிம் ஆட்சியாளர்களின் ஒற்றுமையின்மையின் காரணமாகவும் முஸ்லிம் படையினர் ஸ்பெய்னை விட்டும் கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்க நேர்ந்தது. அந்தவகையில் கி.பி 13ம் நூற்றாண்டில் வடக்கு மற்றும் மத்திய ஸ்பெயய்னிலிருந்து இஸ்லாமியப் படையினர் பின்வாங்கினர். இதனால் இஸ்லாமியப் பேரரசு பல சிற்றரசுகளாக மாறத் தொடங்கியது. பின்னர் ஏனைய பகுதிகளையும் முஸ்லிம்களிடமிருந்த கிறிஸ்தவப் படைகள் ஒவ்வொன்றாகக் கைப்பற்றிக் கொண்டன. இருதியாக முஸ்லிம்களிடம் கிரனாடா பகுதி மட்டும் எஞ்சியிருந்தது. முஸ்லிம்களிடமிருந்து கிரனாடா பகுதியைக் கைப்பற்ற மட்டும் கிறிஸ்தப் படைகளுக்கு சுமார் 2 நூற்றாண்டுகள் எடுத்தது.
கி.பி 1482ல் கிரனடாவை மையமாகக் கொண்டிருந்த முஸ்லிம் படை தங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டால் பகைகொண்ட இரு குழுக்கழாக பிரிந்தனர். இதே நேரத்தில் தான் இரண்டு பெரும் கிறிஸ்தவ சாம்ராஜ்யங்களின் வலுவான மன்னர்களான “பெர்டினன்ட் மற்றும் இஸபெல்லா” ஆகியோர் திருமனப்பந்தத்தில் இனைந்து கொண்டனர். இதனால் இரு சாம்ராஜ்யங்கள் ஒன்றினைக்கப்பட்டு ஒரு சாம்ராஜ்யமாக்கப்பட்டது. இவ்விருவரினதும் படைகளும் ஒன்றினைந்த கிரனாடா மீது போர் தொடுத்தனர். சுமார் 10வருட தொடர் போரின் பின் கி.பி 1492 ஜனவரி 2ம் நாள் பெரும் படையுடன் பெர்டினன்ட் மற்றும் இஸபெல்லா இனைந்து “கிறிஸ்தவ ஸ்பெய்ன்” எனும் பதாகையை தமது கைகளில் ஏந்தியவர்களாக கிரனடாவின் அரச மாளிகையான அல் ஹம்ரா மீது படையெடுத்து வந்தனர். இப் படையானது கிரனடாவைக் கைப்பற்றிக் கொண்டதுடன் அங்கிருந்த இருதி முஸ்லிம் ஆட்சியாளரையும் நாடு கடத்தியது. அன்றுடன் முஸ்லிம்களின்; ஆட்சி ஸ்பெய்னிலிருந்து முடிவுக்கு வந்தது.
இவ்வாறு ஸ்பெய்ன் முழுமையாக முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு சிறிது காலத்தின் பின் அங்கு வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கெதிரான கிறிஸ்தவ கெடுபிடிகள் ஆரம்பித்தன. அந்தவகையில், முஸ்லிம்களின் அனைத்து உரிமைகளும் ரத்து செய்யப்பட்டன, அவர்களின் வழிபாடுகளுக்க அணுமதி மறுக்கப்பட்டது, அவர்கள் அங்கு வாழ்வதே கடினமானது. இதனால் முஸ்லிம்களில் பலர் வட ஆபிரிக்கா, சிசிலி, துருக்கி, எகிப்து போன்ற நாடுகளுக்கு இடம்பெயரத் தொடங்கினர். கி.பி 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அங்கு எஞ்சியிருந்த முஸ்லிம்கள் அனைவரும் கிறிஸ்தவ மதவெறி கொண்ட மன்னர்களால் வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்டனர்.
சுமார் 8 நூற்றாண்டுகளாக ஸ்பெய்னின் பல்துறை வளர்சிசிக்கும், அவிவிருத்திக்கும் பெரும் அர்ப்பணிப்புக்களையும் சேவைகளையும் செய்த முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் பலவீனமடைந்து ஆட்சியை இழந்தனர். அதன் பின் கிறிஸ்துவ மன்னர்களின் கெடுபிடிகள் மற்றும் அடக்குமுறைகளால் ஒருவர் கூட அங்கு வாழ அணுமதிக்கப்படாமல் அகற்றப்பட்டனர்.
By M.S.M. Naseem B.A (Hons)
اسلام عليكم ورحمة الله وبركاته
ReplyDeleteI'm Zaara from Srilanka .
I would like to inform you that I'm using your content for a better cause . Please reply me, if I'm not permitted..
جزاك الله خيرا
உண்மையில் மிகவும் தேவையான வரலாற்று பதிவு இது.
ReplyDeleteதுரதிருஷ்டவசமாக இதை இப்படியே வைத்து படிக்க எல்லோருக்கும் முடியாது copy பண்ணி print எடுத்தும் வேறு வழிகளிலும் படிக்க எதுவாக அனுமதி வழங்கப்பட வேண்டும். உங்கள் முயற்சி பாராட்டத்தக்கதுதான் அதன்மூலம் எல்லோரும் பயனடையவும் வேண்டுமே!