.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, July 16, 2022

20 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு தொடர்பான ஒரு பார்வை

எஞ்சிய காலத்துக்கான ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் யாவை?

M.S.M. Naseem  (MA in Political Science)

இலங்கையின் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் அத்தியாயம் VII இன் உறுப்புரை 38 (1) இற்கு ஏற்ப இடைக்காலத்தில் ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்படுகின்றவிடத்து, எஞ்சியுள்ள காலத்துக்கு அப்பதவியை வகிக்கவென அரசியலமைப்பின் உறுப்புரை 40 (1) () இற்கு ஏற்ப பாராளுமன்றத்தினால் அதன் உறுப்பினர்களில் இருந்து தகுதியான ஒருவரைத்  தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு எஞ்சிய காலப்பகுதிகான ஜனாதிபதியைத் தெரிவு செய்கின்றபோது 1981 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பான (சிறப்பேற்பாடுகள்) சட்டம் பின்பற்றப்பட வேண்டும். இதன்படி,

இத்தெரிவுடன் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற பொறுப்பானது சட்ட ரீதியாக பாராளுமன்றின் செயலாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.  இதன்படி தெரிவத்தாட்சி அலுவலராகச் செயற்பட்டு வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்ளல், நிர்ணயிக்கப்பட்ட குறித்த திகதியில் வாக்கெடுப்பை நடாத்துதல் போன்றன அவரது தலமையில் மேற்கொள்ப்பட முக்கிய பணிகளாகும்.

குறித்த பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்யப்டுகின்ற வேளையில், இங்கு ஒரு உறுப்பினரின் பெயர் மாத்திரம் முன்மொழியப்படுமாக இருந்தால். குறித்த பிரதிநிதியை அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக பாராளுமன்றின் செயலாளர் நாயகம் அறிவிக்க வேண்டும்.

மாற்றமாக ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் போட்டியாளர்கள் காணப்படுமிடத்து, அவர்களிலிருந்து ஒருவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதி மற்றும் நேரம் என்பன பாராளுமன்றினால் நிர்ணயிக்கப்படல் வேண்டும், அத்துடன் குறித்த காலப்பகுதியில் அவ்வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

இவ்வாக்களிப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தாம் விரும்பும் ஒரு வேட்பாளருக்கு அல்லது வேட்பாளர்களுக்கு தமது விருப்பு ஒழுங்கின் அடிப்படையில் 1, 2, 3, 4 என வாக்குகளை அளிப்பர்.

இவ்வாறு வாக்களிப்பானது நடைபெற்று முடிந்ததன் பின்னர் வாக்கு எண்ணுகின்ற பணி மேற்கொள்ளப்படும். இதன்படி எஞ்சிய காலப்பகுதிக்கான ஜனாதிபதி பின்வரும் அடிப்படைகளில் தெரிவு செய்யப்படுவார்.

முதல்கட்டமாக, இங்கு ஒரு வேட்பாளர் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகளில் அரைவாசிக்கும் கூடுதலான (50% plus) வாக்குகளைப் பெற்றுக்கொண்டால், அவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.

அவ்வாறு அரைவாசிக்கும் கூடுதலான (50% plus) வாக்குகளை எந்த வேட்பாளரும் பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தில் அடுத்த கட்டமாக, இவ்வாக்கெடுப்பில் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை போட்டியிலிருந்து நீக்கி, அவரது வாக்குச் சீட்டுகளில் ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது விருப்பத் தெரிவுகள் குறிப்பிட்ட வேட்பாளர்களின் வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு கூட்டப்படும்.

இவ்வாறு சேர்க்கப்பட்டும் குறித்த எண்ணிக்கையிலான வாக்குகளை எந்த வேட்பாளரும் பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தில் அடுத்த கட்டமாக, இவ்வாக்கெடுப்பில் இரண்டாவதாக மிகக் குறைவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை போட்டியிலிருந்து நீக்கி, அவரது வாக்குச் சீட்டுகளில் ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பத் தெரிவுகள் குறிப்பிட்ட வேட்பாளர்களின் வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு கூட்டப்படும்.

இவ்வாறு சேர்க்கப்பட்டும் மேற்குறிப்பிட்டவாறு அரைவாசிக்கும் கூடுதலான (50% plus) வாக்குகளை எந்த வேட்பாளரும் பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தில் அடுத்தடுத்த கட்டங்களாக, இதே முறையில் கடைசி இரு வேட்பாளர்கள் மாத்திரம் எஞ்சும் வரை இதே செயன்முறை தொடரும்.

இவ்வாறு சேர்க்கப்பட்டும் கடைசிவரை குறித்த எண்ணிக்கையிலான வாக்குகளை எந்தவொரு வேட்பாளரும் பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தில், இருதியாக அவ்விருவரில் அதிகமான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் குறித்த எஞ்சிய காலப்பகுதிக்கான ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இவ்வாறு இருதியில் எஞ்சுகின்ற இரு வேட்பாளர்களுக்கும் அல்லது இருதி வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சமமானதாகக் காணப்படுமாக இருந்தால், வெற்றியாளர் திருவுளச்சீட்டின் மூலம் தெரிவு செய்யப்படுவார்.


வேட்பாளர்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு காணப்படுகின்றது?

உண்மையில் எத்தனை பேர் இவ்விடைக்கால ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிடப் போகின்றனர், அவர்கள் யார் யார் என்பது பற்றிய அதிகார பூர்வமான தகவல்கள் 19 ஆம் திகதி நடைபெறுகின்ற பாராளுமன்ற அமர்வின் பின்னரே தெரியவரும்.

எனினும் இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் ஆளும் கட்சியினைச் சேர்ந்த டளஸ் அழகப்பெரும ஆகிய மூன்று பேர் இப்பதவிக்காக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதுடன் தற்காலிக ஜனாதிபதியாக செயற்படும் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு ஏற்ப இவர்களில் எந்த வேட்பாளருக்கு அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதோ அவரே எஞ்சியகாலப்பகுதிக்கான ஜனாதிபதியாக தொரிவு செய்யப்படுவார். எனவே இவ்வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்களை அதிகரித்துக்கொள்வதற்கான தேவை காணப்படுகின்றது.

இதன்படி இப்பாராளுமன்ற உறுப்பினர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்

1) ஆளும் கட்சி மற்றும் அதற்கு சார்பானவர்கள்

தற்போதைய ஆளும் கூட்டணிக் கட்சியான பொதுஜன பெறமுனவினைப் பொறுத்தவரை அது 145 உறுப்பினர்களைக் கொண்டிருப்பதுடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2, தேசிய காங்கிரஷ் - 1, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி - 1, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு - 1, அகில இலங்கை மக்கள் காங்கிரஷ் - 1  மற்றும் முஸ்லிம் காங்கிரஷ் - 1 ஆகியவற்றுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்ணிகளான முஸ்லிம் காங்கிரஷ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஷின் சிலரின் ஆதரவினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

2) பிரதான எதிர்க்கட்சி சார்பானவர்கள்

தற்போதைய பிரதான கூட்டணி  எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியானது 54 உறுப்பினர்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இவர்களில் சிலர் கடந்த காலங்களில் ஆளும் கட்சிக்கு சார்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

3) ஏனைய தரப்பினர்

ஏனைய தரப்பினரைப் பொருத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 10, தேசிய மக்கள சக்தி (மக்கள் விடுதலை முன்னனி) - 3 மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி - 2 போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவற்றினடிப்படையில் இங்கு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் கட்டாயம் ஆளும் பொதுஜன பெறமுனக் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 

ரணில் மற்றும் டளஸ் அழகப்பெருமவ ஆகியோருக்கான வெற்றி வாய்ப்பு

பொதுஜன பெறமுனக் கூட்டணியின் செயலாளர் தாமது கட்சி குறித்த வாக்கெடுப்பில் இலங்கையின் தற்போதைய தற்காலிக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான டளஸ் அழகப்பெருமவும் இங்கு வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளமையானது அக்கட்சியின் வாக்குகள் பிரிப்பதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தும்.

எனினும் இது ஆளும் கட்சியினரால் பயன்படுத்தப்படும் ஒரு வகையான சாமர்த்தியமாக இருப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. அதாவது தற்போது இலங்கை மக்கள் மத்தியில் ஆளும் கட்சியினர் மீதும், ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதும் அத்துடன் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பாதுகாவலர் என கருதப்படும் ரணில் விக்ரமசிங்கவின் மீதும் பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்பட்டுள்ளன. மறுபுறத்தல் இவர்களுக்கு தம்மையும், தமது அரசியல் இருப்பையும், தமது சொத்தக்களையும் தக்க வைத்துக்கொள்வதற்கான தேவையும் காணப்படுகின்றது.

இதற்கு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வேண்டியதும், எனினும் அவர் முதல் கட்டத்திலேயே நேரடியாக தெரிவு செய்யப்படாமல் மேலதிக விருப்பு வாக்ககளை அடிப்படையாகக் கொண்டு தெரிவாக வேண்டியதும் அவசியமாகும் இதன் மூலம் தங்களது எதிர்பாரப்பை அடைந்துகொள்ள முடிகின்ற அதேவேளை, மக்களின் எதரிப்பிற்கு உட்படுவதிலிருந்தும் ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம்.

ஏனெனில் இவ்வாக்கெடுப்பில் பலர் போட்டியிடுகின்றபோது வாக்குகள் பலருக்கு பிரிந்து செல்லும். இதனால் முதல் கட்டத்தில் நாம் மேலே விளக்கியபடி அளிக்கப்பட்டு செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கும் கூடுதலான (50மூ pடரள) வாக்குகளை எந்த வேட்பாளராலும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும்.

எனவே இக்கூட்டணி சார்பான ஒருவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஒப்பீட்டளவில் அதிகம் காணப்படுகின்றமையை அவதாணிக்க முடிகின்றது.


சஜித் பிரேமதாஸவிற்கான வெற்றி வாய்ப்பு

சஜித் பிரேமதாஸ இவ்வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டுமெனின், தனது கூட்டணியின் உறுப்பினர்களது ஆதரவுடன், ஆளும் கட்சி உறுப்பினர்களில் சிலரதும் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களதும் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதன்படி ஆளும் பொதுஜன பெறமுனக் கூட்டணியானது தற்போது 3 பிரிவுகளாக உடைந்துள்ளதாக  கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் இவர்களில் சிலரது ஆதரவினைப் பெற்றுக்கொள்வதன் மூலம் தனது வெற்றிக்கான வாய்ப்பை அவரால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமாக இருக்கும். அல்லது ஆளும் கட்சியின் சிலரினதும் மற்றும் ஏனைய கட்சிகளினதும் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை அதிகம் பெற்றுக்கொள்வதன் மூலமும் அவரால் இதில் வெற்றிபெற முடியுமாக இருக்கும்.


அனுர குமார திஸாநாயக்கவிற்கான வெற்றி வாய்ப்பு

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுர குமார திஸாநாயக்க இவ்வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளபோதும், அக்கட்சி பாராளுமன்றத்தில் வெறும் 3 ஆசனங்களையே கொண்டிருக்கின்றமை குறிப்;பிடத்தக்கதாகும். அத்துடன் ஏனை கட்சி உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவளிப்பார்களா? என்பதும் சந்தேகத்திற்குரியதாகும்.

எனினும் இவர் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அல்லது அதிக உறுப்பினர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்புத் தெரிவைப் பெற்றுக்கொள்வதுடன், முதல் கட்ட வாக்கு எண்ணுதலின்போது அதி குறைந்த எண்ணிக்கையை விடவும் அதிக வாக்குகளை பெற்றுக் கொள்வதன் மூலமும் இப்போட்டியில் வெற்றிபெறுவதற்கான வாயப்புக்கள் காணப்படவே செய்கின்றன.


மைத்தரி அணியின் விலகல்

ஆளும் கூட்டணிக் கட்சியின் பங்காளியான மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், தாம் இவ்வாக்கெடுப்பில் யாரையும் ஆதரித்து பங்குபற்றப் போவதில்லை என அறிவித்தள்ளனர்.

இவர்களது இவ்வறிவிப்பானது மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்துள்ள பொதுஜன பெறமுனக் கட்சியினர் மற்றும் அது சார்பான ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் எதிர்வரக்கூடிய பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தலில்களில் வெற்றியீட்டுவதற்கான ஒரு திட்டமாகவே நோக்கப்படுகின்றது.

இதனை உறுப்படுத்தும் வகையிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளர் அண்மையில் ஊடகங்களில் கூறிய எஞ்சிய காலத்துக்கு ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் தெரிவு செய்யப்படுபவர் எதிர்வரக்கூடிய தேர்தல்களில் அப்பதவிகளுக்கு போட்டியிடக்கூடாதுஎனும் கூற்றும் காணப்படுகின்றது.


கிடைக்கப்பெற்ற பல தரவுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பல எதிர்வு கூறல்களை முன்வைக்க முடிந்தாலும், அரசியல் என்பது வியூகங்கள், தந்திரங்கள் மற்றும் சூழ்ச்சிகள் மிக்க ஒரு நடைமுறை என்றவகையில் இதற்கு மாற்றமான வகையிலும் எதிர்பாராத சில மாற்றங்கள் மற்றும் சாகசங்களும் ஏற்பட முடியும்.


ஆசிரியர் :  M.S.M. Naseem  (MA in Political Science)


2 comments: