.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, July 11, 2022

“புரட்டப்பட்ட வகுப்பறை (Flipped classroom)” தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமான ஒரு கற்றல்-கற்பித்தல் முறை

புரட்டப்பட்ட வகுப்பறை என்றால் என்ன?

சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் ஒரு மாற்று கற்பித்தல் முறையாக புரட்டப்பட்ட வகுப்பறை என்பது காணப்படுகின்றது. இக்கற்பித்தல் முறையானது பாரம்பரிய கற்றல் சூழலுக்கு மாற்றமான வகையில், பெரும்பாலும் பாடசாலை மற்றும் வகுப்பறைக்கு வெளியே YouTube, Dailymotion மற்றும் Google Drive போன்ற நிகழ்நிலை (Online) ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இது தலைகீழ் வகுப்பறை மற்றும் மறுபுறம் திருப்பப்பட்ட வகுப்பறை எனவும் அழைக்கப்படுகிறது.

ஆசிரியர் :  M.S.M. Naseem  

MA (Pera), PGDE (OUSL) & BA Hons. (SEUSL)

இக்கற்றல் முறையில் பாடங்களின் உள்ளடக்கங்கள் காணொளிகளாக வழங்கப்படுவதுடன், மாணவர்கள் தங்களின் திறன் மற்றும் வேகத்துக்கு ஏற்ப அவர்களது வீடுகளிலிருந்து அல்லது அவர்களுக்கு வசதியான இடங்களிலிருந்து அவற்றைப் பார்த்து கற்றுக்கொள்ள முடியும். பின்னர் குறித்த விடயங்கள் தொடர்பாக வகுப்பறையில் கலந்துரையாடப்பட்டு அவற்றைப் புரிந்துகொள்ள வழிசெய்யப்படும்.

எடுத்துக்காட்டாக கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் போன்ற பாடங்கள் 5 முதல் 10 அல்லது 15 நிமிடங்கள் கொண்ட சிறுசிறு காணொளிகளாக ஆசிரியர்களால் நிகழ்நிலையில் பதிவேற்றம் செய்யப்படும். அதை மாணவர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் வீடுகளிலிருந்து பார்த்துக் கற்றுக்கொள்வர்.

இதனால் மாணவர்களின் திறன் மற்றும் கற்கும் வேகத்துக்கு ஏற்ப அவற்றை நிறுத்தி நிறுத்திப் பார்க்க முடியும். அத்துடன் தேவையெனின் குறித்த விடயங்கள் தொடர்பாக சக மாணவர்களுடன் நிகழ்நிலையில் கலந்தரையாடவும் முடியும். பின்னர் அடுத்து வரும் நாட்களில் வகுப்பறையில் ஆசிரியரின் வழிகாட்டுதல்களோடு தாம் கற்ற குறித்த விடயங்கள் தொடர்பாக மாணவர்கள் கலந்ரையாடல்கள் மற்றும் விவாதங்களில் ஈடுபடுவர்.

இவ்வுரையாடல் மற்றும் விவாதங்களில் மாணவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு ஆசிரியர் நேரடியாக விடைகொடுப்பதன் மூலம் இங்கு  கற்பிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் தமது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடிவதுடன் குறித்த விடயங்கள் தொடர்பான தெளிவினையும் பெற்றுக்கொள்ள முடிகின்றது.

இதன்படி, இம்முறையில் மாணவர்கள் தமது வீடு மற்றும் பாடசாலை ஆகிய இரு இடங்களிலும் கற்றலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர்கள் இரு இடங்களிலும் மேற்கொள்ளும் கற்றல் செயற்பாடுகளை பின்வருமாறு பிரித்துக்காட்டலாம்.


தமது வீடுகளில் மாணவர்கள் மேற்கொள்ளும் கற்றல் செயற்பாடுகள்

  • நிகழ்நிலை (Online) விரிவுரைகளைப் பார்த்தல்
  • நிகழ்நிலை கற்றல் சாதணங்கள் தொடர்பாக பரிசீலித்தல் (Review online Course Materials)
  • பாடம் தொடர்பான விடயங்களை வாசித்தல் (Read physical or digital texts)
  • நிகழ்நிலை மூலமான கலந்துரையாடல்களில் ஈடுபடல் (Participate in online discussion)
  • ஆய்வுகளை மேற்கொள்ளல் (Perform research)


பாடசாலையில் மாணவர்கள் மேற்கொள்ளும் கற்றல் செயற்பாடுகள்

  • பெற்ற அறிவினைப் பரீட்சித்தல் (Skill  Practice)
  • சக மாணவர்களுடன் நேருக்கு - நேர் கலந்துரையாடலில் ஈடுபடல் (Face to face discussion)
  • விவதித்தல் (Debate)
  • முன்வைப்புச் செய்தல் (Presentation)
  • நிலையக் கற்றலில் ஈடுபடல் (Station learning)
  • பரிசோதனைகளில் ஈடுபடல் (Lab experiments)
  • சுய மதிப்பிடுதலில் ஈடுபடல் (Peer assessment)
  • விமர்சித்தல் (Criticize)
  • மதிப்பாய்வு செய்தல் (Review)

 

அமெரிக்காவின் உயர் பள்ளி ஆசிரியர்களான ஜொனதன் பெர்க்மேன் (Jonathan Bergmann) மற்றும் ஆரொன் சம்ஸ் (Aaron Sams) ஆகியோரே புரட்டப்பட்ட வகுப்பறை முறையைக் கண்டுபிடித்தனர். விரைவாக பாடம் நடாத்தும் ஆசிரியர்களின் வேகத்தோடு முடியாமல் தடுமாறும் மாணவர்கள் மற்றும் கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஈடுபட்டு அதனால் வகுப்புக்களுக்கு அடிக்கடி வர முடியாமல் போகும் மாணவர்களுக்கு என்ன மாற்றீட்டினை செய்யலாம் எனும் விடயத்தினை அடிப்படையாகக் கொண்டே இவர்கள் இம்முறையை கண்டறிந்தனர்.

 

புரட்டப்பட்ட வகுப்பறையின் நன்மைகள்

  • பாரம்பரிய நடைமுறையிலான வகுப்பறை முறையில் ஆசிரியர்கள் கற்பித்தலை சொற்பொழிவு பாணியில் விளக்குவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். அத்துடன் இங்கு மேற்கொள்ளப்படும் உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் என்பன ஆசிரியர்களை மையமாகக் கொண்டவையாக காணப்படுவதுடன், அவை ஆசிரியர்களால் கட்டுப்படுத்தப்படும் வகையிலும் காணப்படும். இதனால் பாட உள்ளடக்கங்களை மாணவர்களால் போதுமான அளவு உள்வாங்க முடிவதில்லை. எனினும்  புரட்டப்பட்ட வகுப்பறையானது மாணவர்களின் கற்றலையே அடிப்படையாகக் கொண்டு காணப்படுகின்றமையால் இக்குறைபாடுகள் நிவர்த்திக்கப்படுகின்றன.

  • ஆசிரியரின் கற்பித்தல் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத மாணவர்கள், கற்றலுக்கு மேலதிகமாக ஏனைய துறைகளிலும் ஈடுபடுவதால் வகுப்புக்களை தவறவிடும் மாணவர்கள் மற்றும் வகுப்புக்களுக்கு தொடர்ந்தும் வரமுடியாமல் போகும் மாணவர்கள் போன்றோருக்கான ஒரு சிறந்த மாற்று வழியாகக் காணப்படுகின்றது.

  • நாட்டில் குழப்ப நிலைகள், அனர்த்தங்கள் மற்றும் நோய்த்தொற்றுக்கள் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றபோது அதிகமான பாடசாலை நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்களது கல்விச் செயற்பாடுகள் தடைப்படுகின்றன. இம்முறையானது அதற்கான சிறந்த ஒரு மாற்றுத் தீர்வாகக் காணப்படுகின்றது.

  • மாணவர்களின் திறன் மற்றும் வேகத்திற்கு ஏற்ப அவர்களால் தங்களது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க வழிசெய்கின்றது.

  • படிக்கவேண்டிய பாடங்களை மாணவர்கள் பள்ளிக்கு வெளியே ஈடுபாட்டுடன் கற்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

  • மாணவர்களது ஓய்வு நேரங்களை பிரயோசனமான வழியில் செலவிட வழி செய்கின்றது.

No comments:

Post a Comment