.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, August 8, 2024

பிள்ளைகளின் ஆளுமைச் சீராக்கத்தில் சமூகத்தினதும் ஆசிரியர்களினதும் வகிபங்கு

ஆளுமையைக் குறிக்கும் Personality எனும் ஆங்கிலச்சொல், மறைப்பு / முகமூடி எனும் கருத்தையுடைய persona எனும் இலத்தீன் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும். இதன்படி ஆளுமை என்பது ஒருவர் அணிந்திருக்கும் முகமூடி என்னும் கருத்தினை வெளிப்படுத்துகிறது. உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகள், அவை தோற்றுவிக்கும் நடத்தைகள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளைக் குறிக்கிறது. 

பொதுவான நோக்கில் ஓவ்வொரு தனிமனிதனுக்குமுரிய மனவெழுச்சி, திறன், நுண்ணறிவு, புலக்காட்சி, இயல்பூக்கம், அனுபவம், நினைவாற்றல், படைப்பாற்றல், எண்ணங்கள் மற்றும் பழக்கங்கள் போன்ற தனித்துவமான பண்புகளின் தொகுதியை ஆளுமை எனலாம். ஆளுமையில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளாக பரம்பரை மற்றும் சூழல் காணப்படுவதுடன், ஆளுமையின் அளவுகோள்களாக உடற்கட்டு, பேச்சு, நடத்தை, எழுத்து, ஆக்கங்கள் போன்றன காணப்படுகின்றன. 


ஆளுமை வளர்ச்சி தொடர்பான கோட்பாடுகளின் அடிப்படைத் தத்துவங்கள்

சிக்மன் புரொய்டின் உளப்பகுப்புக் கோட்பாட்டின்படி, ஆளுமையானது குழந்தைப் பருவத்தில் உருவாகத் தொடங்கி படிப்படியாக மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இதன்படி ஆளுமை இட், ஈகோ (அகம்) மற்றும் சுப்பர் ஈகோ (அதியகம்) ஆகிய மூன்று கட்டமைப்புகளுக்கூடாக மெருகூட்டப்படுகின்றது. 

இவை ஒவ்வொன்றின் செயலும் தனிப்பட்டவையாகக் காணப்படுகின்ற போதும், ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டும், இடைவினையாற்றியும் நடத்தையைக் கட்டுப்படுத்துகின்றன. ஆளுமையின் அடித்தளமான இட் இலிருந்து பின்னர் ஈகோ மற்றும் சுப்பர் ஈகோ ஆகியன எழுகின்றன. இவையே ஒருவரது சிந்தனை, செயல் மற்றும் இவற்றினடிப்படையில் உருவாகும் ஆளுமையை நிர்ணயிக்கின்றன. 

இங்கு சுயநலத் தன்மை கொண்ட இட் இயல்பூக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதில் தடைகள் ஏற்படுகின்றபோது, அது குழந்தைகளின் நடத்தைகளையும் ஆளுமை வளர்ச்சியையும் பாதிக்கின்றது. இதன்படி வாழ்க்கையின் ஆரம்பப் பருவங்களில் அனுபவிக்கின்ற இன்பம், கிடைக்கின்ற அனுபவங்கள் அல்லது பாலியல் சக்தியே ஒருவரின் ஆளுமை விருத்தியை தீர்மானிப்பதில் முக்கியமானவைகளாக காணப்படுகின்றன. எனவே குழந்தைப் பருவத்திலிருந்தே அவை முறையாக வழிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். 

மாஸ்லோவின் மானிடவாதக் கோட்பாட்டின்படி ஒரு குழந்தையானது வளர்ச்சி, விருத்தி மற்றும் தன்னிறைவடைதல் போன்றவற்றிற்கு இட்டுச் செல்கின்ற உள்ளார்ந்த தேவைகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இத்தேவைகள் கீழே காட்டப்பட்டுள்ளவாறு ஒருங்கிணைந்த அடுக்கமைப்பு படிமுறையில் காணப்படுகின்றன. 


இங்கு கீழ் மட்டத்தில் உள்ள தேவைகளில் திருப்தியடைந்ததன் பின்னரே உயர் மட்டத் தேவைகள் எழுகின்றன. எனவே இத்தேவைகள் முறையாக நிறைவேற்றப்படுகின்ற போது, அது குறித்த பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவுவதுடன், அவற்றில் தடைகள் ஏற்படுத்தப்படுகின்ற போது அவர்களின் ஆளுமையைப் பாதிக்கப்படுகின்றது. 

இவற்றின் அடிப்படையில் நோக்குகின்ற போது ஒருவரின் ஆளுமை வளர்ச்சியானது அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே உருவாக ஆரம்பிக்கின்றது என்பது தெளிவாகின்றது. எனவே இப்பருவத்திலிருந்தே அவர்களது ஆளுமை தொடர் கவனம் செலுத்தப்பட்டு அவை கட்டங்களாக கட்டியெழுப்பப்படவும் விருத்தி செய்யப்படவும் வேண்டியது அவசியமாகும் என்பது தெளிவாகின்றது. 


எரிக் எரிக்சனின் உளவியல் சமூக வளர்ச்சியின் நிலைகள் பற்றிய கோட்பாடும்  அதன்  முக்கியத்துவமும்

எரிக்சனால் முன்வைக்கப்பட்ட உளச் சமூக கோட்பாடு ஒருவரின் வாழ்வு முழுதும் இடம்பெறும் ஆளுமை விருத்தி பற்றிக் குறிப்பிடுகிறது. இங்கு 8 ஆளுமை விருத்திப் பருவங்கள் காணப்படுவதோடு, அப்பருவங்களில் எதிரெதிரான ஒரு சோடி மனப்பாங்குகள் (பரிமாணங்கள்) ஆதிக்கம் செலுத்துகின்றன. 

1. முன் குழந்தைப்பருவத்தில் (பிறப்பு முதல் 1 வயது வரை) ஒரு குழந்தை போதுமான பராமரிப்பையும் அன்பையும் பெற்றுக்கொள்கின்ற போது, அது பாதுகாப்பை உணர்வதுடன், நம்பிக்கையும் அதனிடம் வளர்ச்சியடைகிறது. கிடைக்காத போது, பெரியவர்கள் பற்றிய அவநம்பிக்கையை உணருகிறது. உதாரணம்: உணவுத் தேவை 

2. பின் குழந்தைப்பருவத்தில் (1 - 3 வயது வரை) குழந்தையின் தேவைகளில் சுதந்திரம் வழங்கப்படுகின்ற போது, அது தன்னாட்சி மற்றும் பாதுகாப்பு உணர்வினைப் பெறுவதுடன், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத போது அவமானம் மற்றும் சந்தேகத்தை உணருகின்றது. உதாரணம் : கழிப்பறைத் தேவை 

3. முன் பிள்ளைப்பருவத்தில் (3 - 5 வயது) உளவியல் வளர்ச்சி காரணமாக புதிய விடயங்களை முயற்சிக்கத் தொடங்குகின்றனர். இவை ஆதரிக்கப்படும் போது தொடர்ந்தும் புதிய முயற்சிகளுக்கு ஊக்கப்படுத்தப்படுகின்றனர். இல்லாதபோது குற்ற உணர்வு, சுய சந்தேகம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர். உதாரணம்: கருவிகளைப் பாவித்தல் 

4. மத்திய பிள்ளைப்பருவத்தில் (6 - 11 வயது) பிள்ளைகளின் செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படும் போது அவர்கள் சாதனைகளை எதிர்பார்த்து தமது திறன்களை விருத்தி செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். அவ்வறில்லாத போது அவர்கள் தாழ்வுச் சிக்கலை உணர்கின்றனர். உதாரணமாக விளையாட்டு 

5. கட்டிளமைப் பருவத்தில் (12 - 18 வயது) பிள்ளைகள் தமது அடையாத்தை அறிந்து சுய உணர்வுகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் உற்சாகத்தையும் வலுவூட்டலையும் பெறுகின்றனர். உதாரணம்: சமூக உறவு. இதில் உறுதியற்றவர்கள் குழப்பமடைந்தவர்களாகவும், தமது எதிர்காலம் பற்றிய பாதுகாப்பற்ற நிலையை உணரக்கூடியவர்களாகவும் காணப்படுவர். இது அவர்களின் பின்தங்கிய நிலைக்கு வழிவகுக்கும். 

6. முன் முதிர்ப்பருவத்தில் (18 - 35 வயது வரை) வெற்றிகரமான ஒருவர் காதல், நட்பு போன்றவற்றின் மூலம் நெருக்கமான, நீடித்திருக்கின்ற மற்றும் பாதுகாப்பான உறவுகளை உருவாக்குகின்றார். உதாரணம்: காதல். அவ்வாறு முடியாதவர் தனிமை மற்றும் மனத் தளர்ச்சி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றார். 

7. நடு முதிர்ப்பருவத்தில் (35 - 55 வயது) ஒருவர் குடும்பம், அந்தஸ்த்தை மையமாகக் கொண்டு இன, பொருளாதார விருத்தியில் ஆர்வத்துடன் ஈடுபடுவார். இதனை அடைய முடியாதவர்கள் சலிப்பு, கவலையுடையவர்களாக தேக்க நிலை காணப்படுவர். 

8. பின் முதிர்ப்பருவத்தில் (55 வயதிற்குப் பின்) தங்கள் வாழ்வின் நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்பர். இதன்போது வெற்றியாளர்கள் தமது சாதனைகள் குறித்து பெருமைப்படுபவர். தோல்வி அடைந்தவர்கள் தங்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது என்று நினைத்து வருத்தங்களை அனுபவிப்பதுடன் விரக்தியையும் சோர்வையும் உணர்வர். 

மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியில் எரிக்சனின் மேற்கூறப்பட்ட உளவியல் சமூக வளர்ச்சி நிலைகள் முக்கியத்துவமிக்கதாகக் காணப்படுகின்றன. இதன்படி, 

பிள்ளைகள் பாடசாலைச் சூழலுக்குள் உள்வாங்கப்பட முன்னர் அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புக்கள் மற்றும் விருப்புகள் எவை?, அவர்களுக்குத் தேவையான ஆளுமைகள் எவை?, இவற்றை எவ்வாறு ஏற்படுத்தலாம்? என்பது பற்றி அறிந்துகொள்ள இது உதவுகின்றது.

இதற்குப் பின்னரான ஒவ்வொரு கட்டங்களிலும் அவர்களது ஆளுமைகள் வளர்ச்சியடைய உதவுகின்ற காரணிகள் எவை?, அவற்றைப் பாதிக்கின்ற காரணிகள் எவை? போன்றவற்றை அறிந்து கொள்ளவும், அதற்கு தேவையான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் உதவுகின்றது. 

மேற்கூறப்பட்ட தேவைகள் மற்றும் விருப்புகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறைவேற்றப்படுகின்றபோது அவை மாணவர்களிடத்தில் என்ன வகையான ஆளுமை விருத்திகளுக்கும், முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றது?. இதனால் அவருக்கும், ஏனையவர்களுக்கும் என்ன பயன்கள் கிடைக்கப்பெறும் என்பது தொடர்பான தெளிவை வழங்குகிறது.

அதேபோல், இவை நிறைவேற்றப்படாத போது அவர்களின் ஆளுமை, கற்றல் செயற்பாடுகள் மற்றும் சமூக வாழ்க்கை போன்றவற்றில் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகிறது? என்பது பற்றிய விழிப்புணர்வையும் வழங்குகின்றது.

இவ்வாறு இக்கோட்பாடு ஒரு மாணவனது ஆளுமை வளர்ச்சி தொடர்பான அறிவையும், தெளிவையும் வழங்குகின்றது. இவற்றைக் கருத்திற் கொண்டு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தினர் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு தேவையான பங்களிப்புக்களை முறையாக திட்டமிட்டு, மேற்கொள்வதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கலாம். 


ஆளுமை வளர்ச்சியில் சமூக வகிபங்கின் முக்கியத்துவம்

ஒருவரின் ஆளுமை வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்துகின்ற முக்கிய ஒரு காரணியாக சமூகம் காணப்படுகின்றது. இது குடும்பம், நண்பர்கள், பாடசாலை, சம வயதினர், ஊடகங்கள், சமய நிறுவனங்கள் என பலவற்றை உள்ளடக்கியதாகும்.

பெற்றோரின் நடத்தைகள், பிள்ளையுடனான இடைத்தொடர்பு, கல்வி மட்டம், சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார நிலை என்பன சிறந்த முறையில் அமைகின்ற போது, அவை பிள்ளையின் ஆளுமை வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. குடும்ப அங்கத்தவர்களின் பிரிவு, வீட்டு வன்முறை, கவனிப்பின்மை, அடக்குமுறை, அன்பு, ஆதரவின்மை என்பன அவர்களின் ஆளுமையில் பாதிக்கின்றன.

ஆசிரியர்களின் ஆளுமை, ஆசிரியர்-மாணவர் இடைத்தொடர்புகள், பாடசாலையில் வழங்கப்படும் கல்விசார் இயலுமைகள், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மற்றும் பாடசாலையின் ஒழுங்குவிதிகள் போன்றனவும் ஒருவரின் ஆளுமை வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. ஆசிரியர்களின் கடினமான தண்டனைகள், பாதகமான கல்விச் சூழல் போன்றன ஒருவரின் ஆளுமையில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

ஒருவர் வாழும் சுற்றுச் சூழலானது சிறந்த முறையில் அமைகின்ற போது அது அவரது ஆளுமை வளர்ச்சிக்கு பங்களிப்பதுடன், எதிர்நோக்கும் இடப்பெயர்வு, யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், கலாச்சார சீரழிவு போன்றன ஒருவரை உடலியல், உளவியல், ஆளுமை ரீதியாக பாதிக்கின்றது.

ஒருவர் விசேடத்துவமான அனுபவங்களை விருத்தி செய்யக்கூடிய மற்றுமொரு காரணி சமவயதுக் குழுக்களாகும். தனக்கென ஒரு நண்பர்கள் குழாத்தினரை கொண்டிருப்பதும் குழுவில் தொடர்புகளை கொண்டுள்ளோம் என்ற உணர்வும் ஒருவருக்கு மனநிறைவை அளிப்பதோடு, அது தன்னிறைவு மற்றும் தன்னம்பிக்கை என்பவற்றை விருத்தி செய்துகொள்வதற்கு உதவுகின்றது (Reitz, 2014). பால்நிலை வேறுபாடுகளும் தனியாளின் ஆளுமைகளைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றது (Sincero, 2012). 

ஒருவரின் கலாசாரம் அவரது நம்பிக்கைகள், விழுமியங்கள் சார்ந்த ஆளுமை வளர்ச்சிக்கு பங்களிப்பதுடன், அது அவரது நடத்தையிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது.

இவ்வாறு சமூகக் காரணிகள் ஒருவருக்கு சிறந்ததாகவும், சாதகமானதாகவும் அமைகையில், அது அவரது ஆளுமையில் வளர்ச்சியினை ஏற்படுத்துவதுடன், நேர்மாறாக அமைகின்றபோது பாதிப்பினை ஏற்படுத்துகிறது.


குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியும் பாடசாலையின் வகிபங்கும்

பிள்ளைகளுக்கு பல்வேறு சமூகப் பாத்திரங்களை வழங்கி அவர்களிடம், ஆளுமை வளர்ச்சியினை ஏற்படுத்தக்கூடிய முக்கிய ஒரு இடமாக பாடசாலை காணப்படுகிறது. 

பல்வேறுபட்ட சமூகப் பின்னணிகளிலிருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்கள் வேறுபட்ட திறன்களைப் கொண்டிருப்பர். எனவே அவர்களது திறன்களுக்கேற்ப, தனியாள் வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்குப் பொருத்தமான கற்பித்தல் முறைகளை மேற்கொள்வதும், அதன் மூலம் அவர்களது சீரான ஆளுமை வளர்ச்சிபெற உதவுவதும் ஆசிரியரது முக்கிய பொறுப்பாகும்.

சிறந்த இடைத்தொடர்புகளின் மூலம் மாணவர்களின் மனக்குறைகள், பலவீனங்கள், தேவைகள் மற்றும் விருப்புகள் என்பனவற்றை ஆசிரியர்கள் சரியாக இணங்கண்டு பொருத்தமான ஆலோசனைகள், வழிகாட்டல்களை வழங்குவதனூடாக அவர்களது ஆளுமை வளர்ச்சிக்கு உதவலாம்.

குழுச் செயற்பாடுகள் மூலம் கூட்டாக இணைந்து இயங்குவதற்கு வழிசெய்வதன் மூலம் சமூகத்துடன் ஒன்றிணைந்து தனது தேவைகளையும், செயற்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கான ஆளுமையை அவர்களிடம் வளர்க்க முடிகின்றது.

வகுப்புத் தலைவர், மாணவத் தலைவர், குழுக்களின் தலைவர் போன்ற தலைமைத்துவ வாய்ப்புக்களை ஏற்கச் செய்வதன் மூலம் தலைமைத்துவ ஆளுமைகளை அவர்களிடம் வளர்க்க முடியும்.

சிறந்த கற்றல்-கற்பித்தலினூடாக தேவையான அறிவையும், பயிற்சிகளையும் வழங்குவதன் மூலம், அவர்களது அறிவு விருத்திக்கும், பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும், தொழில் தயார்படுத்தலுக்கும் தேவையான ஆளுமைகளையும், அத்துடன் இணைப்பாட விதானச் செயற்பாடுகள் மூலம் ஏனைய துறைசார்ந்த ஆற்றல்களை விருத்தி செய்துகொள்வதற்கும் உதவலாம்.

பாடசாலையின் ஒழுங்குவிதிகள், ஒழுக்க விழுமியங்களை பின்பற்றி நடக்கச் செய்வதன் மூலம் நட்டுச் சட்டங்களை மதித்துச் செயற்படுகின்ற சிறந்த பிரஜைகளாகவும், நல்லொழுக்கமும் முன்மாதிரியுமிக்க நபர்களாக திகழ்வதற்கு தேவையான ஆளுமைப் பண்புகளை விருத்திசெய்ய உதவலாம். 


ஆளுமைச் சீராக்கம் 

பொதுவாக ஆளுமைச் சீராக்கம் என்ற சொல் தனிப்பட்ட தகுதி, சுய நிறைவு மற்றும் உளவியல் முதிர்ச்சி ஆகியவற்றை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சூழ்நிலையில் அவரது தனிப்பட்ட பண்புகளுக்கு ஏற்ப ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. அகம் மற்றும் சூழல் சார்பான ஒருங்கிசைவை மேற்கொள்ளல், நேரிய சிந்தனைகள், சீரிய செயற்பாடுகள், முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் போன்றவை தீவிரமாக்கப்படும்பொழுது ஒருவரது ஆளுமை சீராக்கம் பெறுகின்றது.

ஆளுமைச் சீராக்கம் பின்வரும் மூன்று படிவங்களில் நிறைவேற்றப்படலாம்.

1) தனிமனித உள்ளத்தில் எழும் போராட்டங்களை இனம் காணுதல்.

2) அப்போராட்டங்களுக்கான காரணிகளை உய்த்தறிதல்.

3) அவற்றை வெற்றி கொள்ளும் மாற்றுத்திட்டத்தை வகுத்தல். 

ஆளுமைச் சீராக்கமுடையவர்கள் மற்றவர்களின் கவலைகளை அடையாளம் காணும் திறன், மற்றவர்களுடன் அன்பான தன்னலமற்ற உறவு, உணர்ச்சிப் பாதுகாப்பு, தன்னைப் பற்றிய யதார்த்தமான அறிவு, பொருத்தமான தீர்மாணமெடுத்தல், வாழ்க்கையின் நோக்கம் மற்றும் பொருள் பற்றிய நிலையான பார்வை ஆகிய பண்புகளை வெளிப்படுத்துகின்றனர் (Allport, 1937). 

இதன்படி ஒருவருடைய பலவீனங்களையும் குறைபாடுகளையும் நீக்கி அவரது பண்புகளை மேம்படுத்தும் செயற்பாட்டை ஆளுமைச் சீராக்கம் எனலாம். 

நன்கு ஆளுமைச் சீராக்கம் செய்யப்பட்ட ஒரு நபர் சில பண்புகளைக் கொண்டவராக அல்லது வெளிப்படுத்தக் கூடியவராக காணப்பட வேண்டும். இப்பண்புகள் ஒரு தனிநபரின் சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் காணப்பட வேண்டும். அவை பின்வருமாறு,

சூழ்நிலையைப் புரிந்து செயற்படல். சமூகத்தின் அங்கத்தவர் எனும் வகையில் நாம் ஒவ்வொருவரும் எமது பல்வேறு தேவைகளுக்காக ஏனைவர்களுடன் தொடர்புகளை பேணக்கூடியவர்களாகவே காணப்படுகிறேம். இதன்படி இச்சந்தர்ப்பத்தில் ஆளுமைச் சீராக்கம் செய்யப்பட்ட ஒருவர் ஏனையவர்கள் பற்றிய புரிதலையும், அவர்களின் உணர்வுகளையும் அறிந்து தனது செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற ஆற்றலைக் கொண்டவராக இருப்பார். 

அத்துடன் தனது பல்வேறு செயற்பாடுகளின் போதும் இட் இன் தாக்கத்திற்குட்பட்டு ஏனைவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் சுயநலமிக்கவராகச் செயற்படாமல் ஏனையவர்களுடன் நெருக்கமான, தன்னலமற்ற உறவுகளைப் பேணக்கூடியவராகவும், சுற்றியுள்ள மற்றும் பிற நபர்களுடன் நன்றாகவும் எளிதாகவும் பொருந்தக்கூடியவராகவும் காணப்படுவார்.

உணர்ச்சி சமநிலை பேணக்கூடியவராக இருத்தல். ஆளுமைச் சீராக்கம் செய்யப்பட்ட ஒருவர் தனது வாழ்க்கையில் இழப்பு, தோல்வி போன்றவற்றை எதிர்நோக்குகின்ற சந்தர்ப்பங்களில் துக்கம், கோபம், விரக்தி மற்றும் கவலை போன்றவற்றை வெளிப்படுத்தி உணர்ச்சிவசப்படாமலும், தேக்கமடையாமலும் அவற்றைக் கட்டுப்படுத்தி தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பவர்களாகக் காணப்படுவர். அதேபோல் மகிழ்ச்சியான வேளைகளில் எல்லைகளை மீறிச் செல்லாதவர்களாக தமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மையையும் கொண்டிருப்பர்.

தன்னைப் பற்றிய யதார்த்தமான புரிதலைக் கொண்டிருத்தல். ஆளுமைச் சீராக்கம் செய்யப்பட்ட ஒருவர் தனது ஆற்றல்கள், திறன்கள் எவை?, தன்னிடம் காணப்படும் இயலாமைகள் மற்றும் பலவீனங்கள் எவை? போன்றவை தொடர்பான தெளிவான சுய அறிவைக் கொண்டவராகக் காணப்படுவார். இதனால் அவரால் தனது திறன்களை வளர்த்துக் கொள்ளவும், இடர்கள் மற்றும் பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ளவும் முடியுமாக இருக்கும். இது அவரது சுமூகமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

பொருத்தமான தீர்மாணம் மேற்கொள்ளல். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சூழ்நிலைகளை சரியாக ஆராய்ந்து, தெளிவான சிந்தனையுடன் பிரச்சினைகளை சரியான முறையில் இனங்கண்டு, முறையான வகையில் தீர்மாணம் மேற்கொள்ளக்கூடிய ஆளுமைகளைக் கொண்டவராக இருப்பார். 

ஆளுமைச் சீராக்கம் செய்யப்பட்ட ஒருவர் தனது வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அர்த்தம் பற்றிய நிலையான பார்வையைக் கொண்டிருப்பதுடன், அதனடிப்படையில் செயற்படக் கூடியவராகவும் மற்றும் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனைக் கொண்வராகவும் காணப்படுவார்.

அத்துடன் தனது தனிப்பட்ட திறமைகள் மற்றும் திறன்களை ஆக்கபூர்வமாகவும் வெற்றிகரமாகவும் பயன்படுத்தும் ஆற்றலை உடையவராகவும், தன்னிலும் ஏனையோரிலும் காணப்படும் திறமைகளுக்கும், நற்பண்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படக்கூடியவராகவும் இருப்பார்.

இவற்றுடன் ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஆர்வத்தோடு ஈடுபடல், தனது ஆற்றல்களை நினைவு கூர்ந்து தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளுதல், பிறரைப்பற்றி அனாவசியமாக குறைகூறும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக் கொள்ளுதல், நேர அட்டவணைப்படி தனது வாழ்க்கை நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல், சிறந்த வாழ்க்கைத் தத்துவங்களை அன்றாடம் நினைவு கூருதல் போன்ற பண்புகளையும் கொண்டிருப்பார்.

இப்பண்புகள் ஒருவரது வாழ்வில் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு அளவுகளில் வெளிப்படும். இப்பண்புகளை வளர்த்துக் கொள்பவர்கள் வெவ்வேறு மோதல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தம்மை சரிசெய்து கொள்கின்றனர். 


கற்பித்தல் கற்றல் செயல்முறையின் போது மாணவர்களின் ஆளுமைச் சீராக்கத்திற்கு ஆசிரியர்கள் எவ்வாறு உதவலாம் 

சிக்மன் புரொய்டின் உளப்பகுப்புக் கோட்பாட்டின்படி, இட், ஈகோ மற்றும் சுப்பர் ஈகோ ஆகிய மூன்று கட்டமைப்புக்களே ஒருவரது சிந்தனை, செயல் மற்றும் இவற்றினடிப்படையில் உருவாகும் ஆளுமையை நிர்ணயிக்கின்றன. இவற்றில் அடிப்படையானதாகக் காணப்படுகின்ற இட் ஆனது ஏனைவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய சுயநலமிக்க இயல்புகளை தூண்டக் கூடியதாகும். எனினும் இவ்வியல்பூக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதில் தடைகள் ஏற்படுகின்றபோது, அது அவர்களின் ஆளுமை வளர்ச்சியை பாதிக்கிறது.

எனவே ஏனையவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாயப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பவராகவும், பிள்ளைகளின் உளப் பிர்ச்சினைகளை அறிந்து தேவையான அறிவுரைகள், வழிகாட்டல்களை வழங்கக் கூடியவர்களாகவும் ஆசிரியர்கள் காணப்பட வேண்டும்.

பண்டூராவின் சமூகக் கற்றல் கோட்பாட்டின்படி, ஒரு நபர் தனது நடத்தையை அவதானித்து, மதிப்பீடு செய்து, ஒழுங்குபடுத்தும் அறிவாற்றல் செயல்முறைத் தொகுப்பின் விளைபொருளே ஆளுமையாகும்.

குழந்தைகள் தமது சமூக சூழலிலுள்ள நபர்களின் நடத்தைகளைக் கவனிக்கிறார்கள். இந்நடத்தைகளில் அவர்கள் வலுவூட்டப்பட்டால், அதனைப் பின்பற்றுவதுடன் அவற்றை தமது ஆளுமையிலும் இணைத்துக்கொள்கின்றனர்.

இதன்படி ஆசிரியர்கள் என்றவகையில் கற்பித்தல்-கற்றல் செயற்பாடுகளின் போதும், மாணவர்களுடனான இடைத்தொடர்புகளின் போதும் மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் அவர்களை கவரத்தக்க வகையில் சிறந்த சீராக்கப்பட்ட ஆளுமை ரீதியான முன்மாதிரிகளை வெளிப்படுத்துகின்றபோது, அதனை பிள்ளைகள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்வர். இந்நிலை பிள்ளைகளில் ஆளுமைச் சீராக்கம் ஏற்பட வழிவகுக்கும்.

மாஸ்லோவின் மானிடவாதக் கோட்பாட்டின்படி, பிள்ளைகள் பல தேவைகளை உடையவர்களாகக் காணப்படுகின்றனர். இவற்றை உடலியல் தேவைகள், பாதுகாப்பத் தேவைகள், அன்புத் தேவை, கணிப்புத் தேவை, சுயதிறனியல் தேவை, சுயதிருப்தித் தேவை என வகைப்படுத்தலாம். இவை படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டியதாகும். இத்தேவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படுவதற்கேற்ப, பிள்ளைகளின் ஆளுமையும் வளர்ச்சியடைகிறது.

எனவேதான் நாம் இத்தேவைகளை சரியாக அடையாளங்கண்டு படிப்படியாக பிள்ளைகள் அவற்றை அடைவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும், விழிப்புணர்வூட்டுவதன் மூலமும் அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும், சீராக்கத்திற்கும் பங்களிக்க முடியும்.

கோர்டன் ஓல்போர்டின் குணப்பண்புக் கோட்பாட்டின்படி, மனவெழுச்சி ரீதியில் ஆரோக்கியம் கொண்ட மக்கள், நியாயபூர்வமாகவும் மனச்சாட்சியின் அடிப்படையிலும் செயற்படுவர். அத்துடன் அவர்களை ஊக்குவிக்கும் சக்திகள் பற்றி அவர்கள் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதோடு அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டிருப்பர். ஆளுமை அனைவருக்கு பொதுவான ஒன்றல்ல. அது ஒரு தனியாளுக்கு குறிப்பானதும் விசேடமானதுமான பரம்பரை மற்றும் சூழல் என்பவற்றினால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

எனவே ஆசிரியர்கள் பிள்ளைகள் கொண்டிருக்கின்ற விசேடமான, தனித்துவமான திறன்கள், ஆற்றல்கள் மற்றும் ஆளுமைகளை சரியாக இனங்கண்டு தேவையான பயிற்சிகள், நெறிப்படுத்தல்கள் மற்றும் வழிப்படுத்தல்களை வழங்கி அவர்களின் ஆளுமை விருத்திக்கு பங்களிப்புச் செய்ய முடியும் இவ்வாறான செயற்பாடுகள் மற்றும் வழிமுறைகள் மூலம் ஆசியர்களால் பிள்ளைகளிடத்தில் ஆளுமைச் சீராக்கத்தினை ஏற்படுத்த முடியுமாக இருக்கும். 

M.S.M. Naseem   (SLTS)

BA (Hons)  (SEUSL),   MA in Political Science (Pera),   PGDE (OUSL),   M. Ed ® (OUSL),  

Dip. in Educational Psychology  



 உசாத்துணைகள் 
 

Albert Bandura. wikipedia. https://static.hlt.bme.hu/semantics/external/pages/John_McCarthy/en.wikipedia.org/wiki/Albert_Bandura.html  

 

Boeree, C. G. (2006). Sigmund Freud. Personality Theories, 1-19. https://bempsiunisba.com/wp-content/uploads/2016/10/pt_freud.pdf

 

Drapela, V. J. (1969). Personality Adjustment and Religious Growth. Journal of Religion and Health, 8(1), 87–97. http://www.jstor.org/stable/27504951

 

Doncaster, G. H. (1942). Personality and Adjustment, The Journal of Psychology 13(1), 109-134. https://doi.org/10.1080/00223980.1942.9917084

 

Havighurst, R. J. (1973). History of developmental psychology: Socialization and personality development through the life span. In Life-span developmental psychology, 3-24. Academic Press. https://doi.org/10.1016/B978-0-12-077150-9.50007-1

 

Kesavelu, D., Sheela, K., & Abraham, P. (2021). Stages of psychological development of child-an overview. Int J Curr Res Rev13(13), 74-8. http://dx.doi.org/10.31782/IJCRR.2021.131320

 

Sciences, I. J. O. L. a. S. (2021, December 11). Socialization’s Effect on Personality Development. Indian Journal of Law and Social Sciences. https://www.ijlss.cslr.in/2021/11/socializations-effect-on-personality.html#:~:text=While%20biological%20and%20cognitive%20elements,required%20for%20society%20to%20function.

 

Ventegodt, S., Merrick, J., & Andersen, N. J. (2003). Quality of life theory III. Maslow revisited. The scientific world journal3, 1050-1057. https://doi.org/10.1100/tsw.2003.84

 

rutzf;Fkhu;> V. Mu;. (2019). fy;tp cstpay;. rhd;yhf;]; gjpg;gfk;> kJiu 3. https://www.researchgate.net/publication/340082807




.


No comments:

Post a Comment