கல்வி என்பது உண்மையைத் தேடுகின்ற, வாழ்க்கையில் நீடித்த ஒரு செயன்முறையாகும். இது சாந்தமான பண்புகளை வளர்க்கக் கூடியதாகவும், ஒழுக்கத்தை விருத்தி செய்யக் கூடியதாகவும், சமூகத்தினதும் சூழலினதும் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படக் கூடியதாகவும், சமூக வாழ்க்கைக்கு தேவையான பயிற்சிகளை வழங்கக் கூடியதாகவும் மற்றும் சகலருக்கும் சமமான வகையில் கிடைக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும். கல்வியானது முன்பள்ளிக் கல்வி, பொதுக் கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி, வளர்ந்தோர் கல்வி, சமூகக் கல்வி, பாலியல் தொடர்பான கல்வி என பல்வேறு வகையான பிரிவுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.
சமகால நவீன உலக முறைமையில் தனிமனிதன், சமூகம் மற்றும் நாடுகளின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்ற மிக முக்கிய காரணியாக கல்வி காணப்படுகின்றது. இதனால் இன்றைய உலகில் கல்விக்கு மிக உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் கல்வியின் சமகால முக்கிய வகிபங்குகளாக பின்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.
நபர்களின் சிறந்த வருமானத்திற்கும் தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கும் வழிவகுத்தல். சமகாலத்தில் அதிக கல்வியறிவு உடையவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுவதால் இது அவர்களுக்கு சிறந்த முதலீடாகவும் தங்களை முன்னேற்றிக்கொள்வதற்கான காரணியாகவும் அமைகிறது. உதாரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த கல்வியறிவுடைய பலர் இன்று ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக வருமானம் பெறுகின்ற உயர் பதவிகளில் இருப்தைக் குறிப்பிடலாம்.
நாடுகளின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தல். தற்கால உலகில் நாடுகள் பல துறைகளிலும் அபிவிருத்தி அடைவதற்கு அங்குள்ள மக்களின் கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு விகிதம் என்பன அதிகமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் பல்வேறு துறைகளிலும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை மேற்கொள்கின்ற மற்றும் தொழினுட்பங்களை கையாளுகின்ற ஆற்றல்களைப் பெற்று தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்ல முடியுமாக இருக்கிறது. இதன்படி நாட்டின் வளர்ச்சியிலும் நாட்டின் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. சமகால உலகில் காணப்படும் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் கல்வியறிவு மட்டமானது மிக உயர்ந்த நிலையில் காணப்படுவதை இதற்கு உதாரணமாக எடுத்தக்காட்டலாம்.
சுகாதார ரீதியான பாதுகாப்பிற்கு வழிவகுத்தல். கல்வி மனிதர்களை உடல், உள ரீதியாக வலுப்படுத்தக் கூடியதாகவும் ஆரோக்கியமாகன வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியதாகவும் காணப்படுகிறது. இதனால் பல வகையான நோய்களிலிருந்து விடுபட முடிவதுடன் வீனாண செலவுகளும் தவிர்க்கப்படுகின்றன. கல்வியறிவு கூடிய நாடுகள் சுகாதார ரீதியாக சிறந்த நிலையில் உள்ளமையை இதற்கு ஆதாரமாக எடுத்துக்காட்டலாம்.
சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. கல்வியானது மக்களுக்களிடையே பல்வேறு விடயங்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும், அவர்களை மூட நம்பிக்கைகளிலிருந்து விலக்கக் கூடியதாகவும் காணப்படுகிறது. உதாரணமாக சமகாலத்தில் கல்வியில் முன்னேற்றமடைந்த சமூகங்களில் அறிவியலில் நாட்டம் மற்றும் ஜனநாயம் தொடர்பான தெளிவுகள் அதிகமாகக் காணப்படுவதையும் அஞ்ஞான மூட நம்பிக்கைகள் மிகக் குறைவாகக் காணப்படுவதையும் குறிப்பிடலாம்.
இவற்றுடன் சமூகத்தில் நேர்மறையான அணுகுமுறையை வளர்க்கக் கூடியதாகக் காணப்படல், சமூக ரீதயாகவும் அரசியல் ரீதியாகவும் அமைதியையும் செழிப்பையும் நிலைநாட்ட உதவுதல், தனிநபர்களின் முன்னேற்றத்துக்கு பங்களிப்புச் செய்தல், சமூகப் பெயர்ச்சிக்கு வழிசெய்தல், தரமிக்க வாழ்க்கைக்கான ஒரு தகுதியாகக் காணப்படல், வறுமையை ஒழிப்பதற்கான ஒரு சிறந்த ஆயுதமாகக் காணப்படல் மற்றும் நபர்களின் கௌரவத்தினை பெற்றுக்கொடுத்தல் என சமகாலத்தில் பல்வேறு முக்கிய வகிபங்குகளையும் ஆற்றக் கூடியதாகக் கல்வி காணப்படுகிறது.
எனவே கல்வியானது சமகால உலகில் சமூகங்களின்
முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்கக்கூடியதாகவும் பல துறைகள் சார்ந்த வெற்றிக்கான
ஒரு திறவுகோலாகவும் காணப்படுகிறது என்பதை இவற்றின் மூலம் எடுத்துக்காட்டலாம்.
மனித அபிவிருத்தி
மனித அபிவிருத்தி என்பது மனித மூலதனம் பற்றிய ஒரு எண்ணக்கருவாகவும், மக்களின் விருப்பங்களை விரிவுபடுத்தும் ஒரு செயல்முறையாகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிடும் ஒரு அளவீடாகவும் காணப்படுகிறது. இவ்வளவீடானது ஒரு நாட்டில் வாழும் மக்களின் கல்வியறிவு, வாழ்க்கைத்தரம், ஆயுள் எதிர்பார்ப்பு, தனிநபர் வருமானம், மனித உரிமைகள், முதியோர் பராமரிப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்லின் தரம் போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்ளடக்கியதாகும். இதன்படி மனித அபிவிருத்தியின் முக்கிய கூறுகளாக பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன.
1. உற்பத்தித்திறன் (Productivity): மக்கள் தமது உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், வருமானம் ஈட்டுதல், ஊதிய வேலைவாய்ப்பு
செயன்முறைகளில் முழுமையாக பங்கேற்கவும் வாய்ப்பளிக்கப்படல் வேண்டும்.
2. சமத்துவம் (Equity): மேற்கூறிய விடயங்களில் அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.
3. நிலைத்தன்மை (Sustainability): மக்கள் தமக்கென நிலையானதொரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்வதுடன், எதிர்கால தலைமுறையினருக்கும்
அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
4. அதிகாரமளித்தல் (Empowerment): அதிகாரமளித்தல் என்பது ஏழைகள், பின்தங்கியோர் மற்றும் பெண்கள் போன்ற ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கும் அடிப்படை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கின்ற செயற்பாடாகும்.
1990ஆம் ஆண்டின் மனித அபிவிருத்தி அறிக்கையானது மனித அபிவிருத்தியை வருமானத்தை மட்டும் வைத்து அளவிடாது, சுகாதார மற்றும் கல்வி ரீதியான அடைவுகளையும் உள்ளடக்கியே அளவிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இதன்படி மனித அபிவிருத்திச் சுட்டியை (HDI) அளவிட ஆயுள் எதிர்பார்ப்பு, வயது வந்தோர் கல்வியறிவு மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பொருட்களை வாங்கும் திறன் ஆகிய தொகுதியாக்கப்பட்ட மூன்று குறிகாட்டிகள் பயன்படுத்துகிறது.
கல்வியும் மனித அபிவிருத்தியும்
கல்விக்கும் அபிவிருத்திக்கும் இடையிலான உறவானது பன்முகத்தன்மை கொண்டதும், சிக்கலானதாகக் காணப்படுகின்ற போதும், தனிநபர்களினதும், சமூகங்களினதும் பொருளாதார, சமூக மற்றும் இதர வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த உறவை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
- மனித அபிவிருத்தி
- சமூக அபிவிருத்தி
- பொருளாதார அபிவிருத்தி
- சுற்றுச்சூழல் நிலைத்தன்மை
- உலகளாவிய அபிவிருத்தி
இவ்வகைப்பாடுகளுக்குள் உள்ளடங்கும் முக்கிய அம்சங்களாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்
மனித அபிவிருத்தி
- தனிநபர்களின் அறிவு, விமர்சன சிந்தனைத் திறன் மற்றும் படைப்பாற்றல் என்பவற்றை விரிவுபடுத்துவதன் மூலம் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு பங்களித்தல்
- மனித வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ள அறிவையும், திறன்களையும் பெற்றுக்கொள்ள வழிசெய்தல்.
- நபர்கள் தமது வாழ்க்கை பற்றிய நிலையறிந்து முடிவுகளை எடுப்பதற்கான திறன்களை வழங்குதல்.
- விமர்சன சிந்தனை, பிரச்சினை தீர்த்தல், பகுப்பாய்வு போன்று உயர் சிந்தனைத் திறன்களை வளர்க்க உதவதல்.
- பொருளாதார ரீதியான அடைவுகளுக்கு தேவையான அறிவ, திறன்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கள்.
- சகபாடிகள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் ஏனைய தரப்பினர்களுடனான தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம் சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல்.
- தனிநபர்களது உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உதவுதல்.
- தனிநபர்கள் பல்வேறு கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் விழுமியங்களை புரிந்துகொள்ளவும் மதிக்கவும் உதவுதல்.
- நபர்களிடையே அமைதி மற்றும் மோதல் தீர்வுக்கான மனநிலையை மேம்படுத்துதல்.
- மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனிநபர்களை வாழ்நாள் நீடித்த கல்வியைத் தொடர ஊக்குவித்தல்.
சமூக அபிவிருத்தி
- சமூக இயக்கத்திற்கும், பெயர்ச்சிக்கும் வழிசெய்தல்.
- கலாசாரப் புரிதல் மற்றும் சகிப்புத்தன்மையை ஊக்குவித்தல்.
- வலிமையான பங்கேற்பு ஜனநாயகத்தை ஏற்படுத்த உதவுதல்.
- சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் சமூக உள்ளடக்கத்தை மேம்படுத்தவும் உதவுதல்.
- சமூகத்தில் வறுமையைக் குறைக்க உதவுதல்.
- தனிநபர்கள் தமது சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுதல்.
- சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் செயலூக்கமிக்க பிரஜைகளை உருவாக்குதல்.
- சமூகங்களின் கலாச்சார அடையாளங்களை பாதுகாத்து, பராமரிக்கும் பண்புடைய பிரஜைகளை உருவாக்க உதவுதல்.
- பரஸ்பர புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை மற்றும் மோதல் தீர்க்கும் திறன்கள் என்பவற்றை ஊக்குவிப்பதன் மூலம் மோதல் தவிர்க்கவும், சமாதானத்தைக் கட்டியெழுப்பவும் வழிசெய்தல்.
- சிக்கலான சமூக சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களைக் கொண்ட தனிநபர்களை உருவாக்குதல்.
- சமூகத்திற்குள் பகிரப்பட்ட மதிப்புகள், நெறிமுறைகள் மற்றும் உறவுகளை ஏற்படுத்துவதன் மூலம் சமூக ஒற்றுமையை ஊக்குவித்து, சமூக ஒருங்கிணைப்புக்கு வழிசெய்தல்.
- தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கான அறிவு மற்றும் திறன்களை வழங்குதல்.
- பாலின சமத்துவமின்மையை குறைக்க உதவுதல்.
- சமூகத்தினரது உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உதவுதல்.
பொருளாதார அபிவிருத்தி
- மனித மூலதனத்தை அபிவிருத்தி செய்தல்.
- தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரித்தல்.
- புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் திறன்கொண்ட தொழிலாளர்களை உருவாக்கல்.
- வேலை வாய்ப்புகள் மற்றும் வருமானத்தை அதிகரிப்பதனூடாக வறுமையைக் குறைத்தல்.
- தொழில் வழிகாட்டல் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களுக்குத் தேவையான திறன்களை வழங்குதல்.
- சமூகத்தில் வருமான சமத்துவமின்மையைக் குறைக்க உதவுதல்.
- சமூகத்தில் வறுமையைக் குறைக்க உதவுதல்.
- சமூக ஸ்திரத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த நிலையை ஏற்படுத்த உதவுதல்.
- உலகளாவிய போட்டித்திறனுடைய உயர் கல்வியறிவுடைய பணியாளர்களை உருவாக்குதல்.
- மாறிவரும் பொருளதாரத்திற்கு ஏற்ப வாழ்நாள் கற்றலை வழங்குதல்.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பேணுதல்
- சுற்றுச்சூழல் பற்றிய முக்கியத்துவத்தை விளக்குதல்.
- சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை முன்வைத்தல்.
- சுற்றுச்சூழல் உணர்வுள்ள பிரஜைகளை உருவாக்குவதற்கு பங்களித்தல்.
- சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் அதன் நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- சுற்றுச்சூழல் தொடர்பான பிரஜைகளின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை ஊக்கவித்தல்.
அறிவுப் பொருளாதாரத்திற்கு தனிநபர்கள் விருத்தி செய்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய திறன்கள்
தற்காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு அடிப்படையாக அறிவுப் பொருளாதாரம் வலியுறுத்தப்படுகின்றது. பொருட்களையும் பணத்தையும் போலவே அறிவும் பொருளாதாரத்துக்கு அடிப்படையாகக் காணப்படுகிறது என்பதே அறிவுப் பொருளாதாரம் என்பதன் கருத்தாகும். 'அறிவுசார் மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட நுகர்வு மற்றும் உற்பத்தி முறையே அறிவுப் பொருளாதாரமாகும். இது அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியில் முதலீடு செய்யும் திறனைக் குறிக்கிறது' - Investopedia
அறிவுப் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறை உத்திகளாக கல்வி முறையை சமூக வாழ்க்கை முறையுடன் இணைத்தல், கல்வியின் முக்கியத்துவத்தைத் திட்டமிடலும் அதனை நடைமுறையுடன் இணைத்தலும், கல்வி மூலாதாரங்களை மறுபகிர்வு செய்தலும் ஒழுங்குப்படுத்துதலும் மற்றும் கல்வியை பொருளியல் உற்பத்திக்கு ஏற்றதாக்குதல் போன்றவை காணப்படுகின்றன.
இந்தவகையில் அறிவுப் பொருளாதாரத்திற்கு தனிநபர்கள் விருத்தி செய்துகொள்ள வேண்டிய அத்தியாவசிய திறன்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
மனித மூலதனத் திறன் : ஒவ்வொருவரும் கல்வியறிவுடையவர்களாகவும் திறன் படைத்தவர்களாகவும் காணப்படுவதுடன், அவற்றை தொடர்ந்தும் மேம்படுத்தும் உளப்பாங்குடையவராகவும் இருத்தல் வேண்டும். தொடர்ச்சியான கற்றல் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நபர்கள் தொடர்ந்து தங்களது பல்துறைசார்ந்த திறன்களையும் அறிவினையும் புதுப்பிக்க முடியும்.
புத்தாக்கம் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் திறன் : அறிவினைப் பயன்படுத்தி சந்தைத் தேவைகளை உள்வாங்கி புதிய யோசனைகள், தொழினுட்பங்கள் மற்றும் உற்பத்திகளை படைக்கின்ற திறனை தனிநபர்கள் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் ஏனையவர்களிடமிருந்து புதிய யோசனைகள், தொழினுட்பங்கள் மற்றும் பரிசோதனைகளை எடுத்துக்கொள்கின்ற ஆற்றலையும் கொண்டிருக்க வேண்டும்.
தொடர்பாடல் திறன் : சிறந்த தொடர்பாடலின் மூலம் யோசனைகள், தொழினுட்பங்கள் மற்றும் நுண்ணறிவுகளை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் திறம்பட தொடர்பு கொள்வதற்கும், சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், புதிய வாய்ப்புக்கள், உறவுகள் மற்றும் வலையமைப்புக்களை உருவாக்குவதற்கும் தொடர்பாடல் திறன் அவசியப்படுகிறது.
பிரச்சினை தீர்க்கும் திறன் : பொருளாதாரத்தைப் பொருத்தவரை காலத்துக் காலம் பல்வேறு பிரச்சினைககள் காணப்படுவதுடன், புதிய பிரச்சினைகள் உருவாகிக் கொண்டிருப்பதனையும் காணமுடிகின்றது. இவை அதன் முன்னேற்றத்துக்கும் அபிவிருத்திக்கும் தடையை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே இப்பிரச்சினைகளை கையாள்வதற்கும் தீர்ப்பதற்குமான திறனையும் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
தொழினுட்பத் திறன் : பொருளாதாரம் சார்ந்த பல்வேறு தேவைகளுக்கு தொழினுட்பத்தை பயன்படுத்தும் ஆற்றலை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வகையில் தரமான உற்பத்திகளை விரைவாக செய்ய முடிவதுடன், போட்டிமிக்க தற்கால சூழலில் நிலைத்து நிற்கவும் முடியுமாக இருக்கும்.
பகுப்பாய்வுத் திறன் : பொருளாதார செயற்பாடுகளின்போது உற்பத்தியளவு, சந்தை நிலவரங்கள், போட்டியாளர்கள், விநியோகம், கடந்தகால அனுவங்கள், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் நுகர்வுத்திறன் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக பகுப்பாய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளதால் அதற்கான திறனையும் பெற்றிருக்க வேண்டியதும் அவசியமாகும்.
தலைமைத்துவ ஆற்றல் : தற்காலத்தில் பெரும்பாலான தொழில் முயற்சிகள் குழுவாகவே மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இங்கு பல வகையான தொழிற்பிரிப்புக்களும் காணப்படும். இதனால் பல்வேறு மட்டங்களில் தலைமை தாங்குகின்ற பொறுப்புக்களை ஏற்கும் வகையில் தலைமைத்துவ திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் மனித அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கு பாடசாலை இடைநிலைக் கல்வியில் நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கிய மாற்றங்கள்
இலங்கை மனித
அபிவிருத்திச் சுட்டெண்ணில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இதன்படி 2021/2022
புள்ளிவிபரத் தரவுகளின்படி இலங்கை 0.782 புள்ளிகளுடன் 191 நாடுகளில் 73வது இடத்தில்
காணப்படுகிறது. எனவே நாட்டினதும் மக்களினதும் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு இதனை
மேம்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. இதன்படி பாடசாலையின் இடைநிலை மட்டத்தில் பின்வரும்
மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையில் மனித அபிவிருத்தியை ஊக்குவிக்க முடியும்.
வேலை உலகுடன்
கல்வியை ஒருங்கிணைக்கும் வகையில் கலைத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருதல் : பொருத்தமான
பாடங்கள் மற்றும் பயிற்சிகளை உள்ளடக்கியவாறு, சமகால வேலை உலகுக்கு தேவையான திறனுள்ள
தொழிலாளர்களை உருவாக்கும் வகையில் இடைநிலைக் கலைத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருதல்.
உதாரணம் : செயற்கை நுண்ணறிவுப் (AI) பாடத்தை உள்ளீர்த்தல்.
பயிற்சியுடன்
கூடிய தொழிற் பாடங்களை பாடத்திட்டத்தில் உள்ளீர்த்தல் : தேசிய மற்றும் சர்வதேச ரீதியில்
காணப்படும் தொழிலாளர்களின் கேள்வி மற்றும் நாட்டில் காணப்படும் வளங்களுக்கேற்ப பொருத்தமான
பயிற்சியுடன் கூடிய தொழிற்பாடங்களை பாடத்திட்டத்தில் உள்ளடக்கி முன்னெடுத்துச் செல்லல்.
உதாரணம் : விவசாயம் மற்றும் கடல் சார்ந்த உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்ட பயிற்சியுடன்
கூடிய பாடங்கள்.
ஆரோக்கியமான
பழக்கவழக்கங்களுக்கு வழிசெய்யக்கூடிய விடயங்களை உள்ளடக்கல் : மனித அபிவிருத்திக்கு
அவசியமான ஒரு காரணி என்றவகையில், மாணவர்களிடத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கட்டியெழுப்பத்
தேவையான அறிவுகள், பயிற்சிகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள்
கலைத்திட்டத்தில் உள்ளக்கப்படல் வேண்டும். மாணவர்கள் இவற்றை முறையாக பின்பற்றுவதை உறுதிப்படுத்தும்
வகையில் பொறிமுறை ஒன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பொதுப் பரீட்சைகளில்
சித்தியடையத் தவருகின்ற மாணவர்களுக்கான விசேட தொழிற் கற்கைகளை முன்னெடுத்தல் : க.பொ.த
சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடையத் தவறுகின்ற மாணவர்களை வேலை உலகுக்கு
தயார்படுத்தும் வகையில் பாடசாலைகளில் அல்லது பொருத்தமான இடத்தில் தொழில்களுக்கு பயிற்சியளிப்பதற்கான
முறைமையை முறையான பொறிமுறையினூடாக அறிமுகப்படுத்தல். உதாரணமாக தற்போது நடைமுறையிலுள்ள
13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வியை பொருத்தமான வகையில் மீளொழுங்கு செய்து முன்னெடுத்துச்
செல்லல்.
இவற்றுடன்,
- தகவல் தொழிநுட்பப் பாடத்தை கட்டாயமாக்குதல்.
- கற்கின்றபோதே தொழிற் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கல்.
- கல்வித்தரத்தை மேம்படுத்தல்.
- சிறந்த நீண்டகால கல்விக் கொள்கைகளை உருவாக்குதல்.
போன்ற விடயங்களையும் மேற்கொள்வதினூடாக இலங்கையில் மனித அபிவிருத்தை ஊக்குவித்து மேம்படுத்த முடியும்.
M.S.M. Naseem (SLTS)
BA (Hons) (SEUSL), MA in Political Science (Pera), PGDE (OUSL), M. Ed ® (OUSL),
Dip. in Educational Psychology
crhj;Jizfs;
Adam Hayes. (2021,
January 22). What Is the Knowledge
Economy? : Definition, Criteria, and Example
https://www.investopedia.com/terms/k/knowledge-economy.asp
Alexander Osipov.
(2022, August 9). How to thrive in the Knowledge Economy?. https://medium.com/@shuraosipov/how-to-thrive-in-the-knowledge-economy-eecceffb36c8
Human
Development Index (HDI) by Country 2023. https://worldpopulationreview.com/country-rankings/hdi-by-country
Ivana Maric, Petra
Barisic & Ivana Jurjevic. (2012). Knowledge and skills needed in knowledge
economy. Faculty of Economics and Business, University of Zagreb, Croatia. https://www.researchgate.net/publication/333852570
Khalid Ada. (2020).The
Contemporary Educational Agenda _ Education And Reality. University of Texas
Rio Grande Valley. https://www.researchgate.net/publication/343090374
Santhi, S. (2020). Educational
Philosophy of Mahatma Gandhi. Alagappa University, Tamil Nadu, India. https://www.researchgate.net/publication/340827069
Walter, W. P. & Kaisa
Snellman. (2004). The Knowledge Economy. School of Education and Department of
Sociology, Stanford University, Stanford, California. https://www.researchgate.net/publication/234838566
சசிகலா குகமூர்த்தி.
(2012, ஒக்டோபர்). அறிவுப் பொருளாதாரத்தில் கல்வி. அகவிழி.
மத்திய வங்கி ஆண்டறிக்கை (2010), பொருளாதார
மற்றும் சமூக உட்கட்டமைப்பு, அத்தியாயம் 3,
பக்கம் 80, இலங்கை மத்திய வங்கி.
No comments:
Post a Comment