.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, August 10, 2024

கல்வியும் வேலை உலகும்

கல்வியானது பல்வேறு வகையான நோக்கங்களைக் அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி சமகால நவீன உலக முறைமையில் தனிமனித, சமூக மற்றும் நாடுகளின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்ற மிக முக்கிய காரணியாக கல்வி காணப்படுகின்றது. இதனால் இன்றைய உலகில் கல்விக்கு மிக உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் கல்வியின் சமகால முக்கிய வகிபங்குகளாக பின்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.

நபர்களின் சிறந்த வருமானத்திற்கும் தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கும் வழிவகுத்தல் : சமகாலத்தில் அதிக கல்வியறிவு உடையவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுவதால் இது அவர்களுக்கு சிறந்த முதலீடாகவும் தங்களை முன்னேற்றிக்கொள்வதற்கான காரணியாகவும் அமைகிறது. உதாரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த கல்வியறிவுடைய பலர் இன்று ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக வருமானம் பெறுகின்ற உயர் பதவிகளில் இருப்தைக் குறிப்பிடலாம்.

நாடுகளின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தல் : தற்கால உலகில் நாடுகள் பல துறைகளிலும் அபிவிருத்தி அடைவதற்கு அங்குள்ள மக்களின் கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு விகிதம் என்பன அதிகமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் பல்வேறு துறைகளிலும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை மேற்கொள்கின்ற மற்றும் தொழினுட்பங்களை கையாளுகின்ற ஆற்றல்களைப் பெற்று தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்ல முடியுமாக இருக்கிறது. இதன்படி நாட்டின் வளர்ச்சியிலும் நாட்டின் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. சமகால  உலகில் காணப்படும் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் கல்வியறிவு மட்டமானது மிக உயர்ந்த நிலையில் காணப்படுவதை இதற்கு உதாரணமாக எடுத்தக்காட்டலாம்.

சுகாதார ரீதியான பாதுகாப்பிற்கு வழிவகுத்தல் : கல்வி மனிதர்களை உடல், உள ரீதியாக வலுப்படுத்தக் கூடியதாகவும் ஆரோக்கியமாகன வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியதாகவும் காணப்படுகிறது. இதனால் பல வகையான நோய்களிலிருந்து விடுபட முடிவதுடன் வீனாண செலவுகளும் தவிர்க்கப்படுகின்றன. கல்வியறிவு கூடிய நாடுகள் சுகாதார ரீதியாக சிறந்த நிலையில் உள்ளமையை இதற்கு ஆதாரமாக எடுத்துக்காட்டலாம்.

சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் : கல்வியானது மக்களுக்களிடையே பல்வேறு விடயங்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும், அவர்களை மூட நம்பிக்கைகளிலிருந்து விலக்கக் கூடியதாகவும் காணப்படுகிறது. உதாரணமாக சமகாலத்தில் கல்வியில் முன்னேற்றமடைந்த சமூகங்களில் அறிவியலில் நாட்டம் மற்றும் ஜனநாயம் தொடர்பான தெளிவுகள் அதிகமாகக் காணப்படுவதையும் அஞ்ஞான மூட நம்பிக்கைகள் மிகக் குறைவாகக் காணப்படுவதையும் குறிப்பிடலாம்.

இவற்றுடன் சமூகத்தில் நேர்மறையான அணுகுமுறையை வளர்க்கக் கூடியதாகக் காணப்படல், சமூக ரீதயாகவும் அரசியல் ரீதியாகவும் அமைதியையும் செழிப்பையும் நிலைநாட்ட உதவுதல், தனிநபர்களின் முன்னேற்றத்துக்கு பங்களிப்புச் செய்தல், சமூகப் பெயர்ச்சிக்கு வழிசெய்தல், தரமிக்க வாழ்க்கைக்கான ஒரு தகுதியாகக் காணப்படல், வறுமையை ஒழிப்பதற்கான ஒரு சிறந்த ஆயுதமாகக் காணப்படல் மற்றும் நபர்களின் கௌரவத்தினை பெற்றுக்கொடுத்தல் என சமகாலத்தில் பல்வேறு முக்கிய வகிபங்குகளையும் ஆற்றக் கூடியதாகக் கல்வி காணப்படுகிறது. 

உண்மையான கல்வி என்பது வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிரான காப்பீடாக இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கூற்றிற்கு எற்ப வேலை உலகிற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்துவதில் கல்வி மிக முக்கிய பங்கினை ஆற்ற வேண்டியுள்ளது. எனவேதான் குறிப்பிட்ட வேலைகள் அல்லது தொழில்களுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், வேலை உலகு தொடர்பாக தேவையான அறிவினையும், பயிற்சிகளையும் வழங்கக் கூடியதாகக் கல்வி முறை காணப்பட வேண்டியது அவசியமாகும்.

அப்போதுதான் ஒவ்வொருவரும் தமது வாழ்வதாரத்திற்கு தேவையானவற்றை போதுமான அளவு சம்பாதிக்க முடியுமாக இருப்பதுடன்,  சிறப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொள்ள முடியுமாக இருக்கும். அவ்வாறில்லாத போது, அவர்களால் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்வினை வாழ முடியாது போகும்.

எனவே கல்வியானது சமகால உலகில் சமூகங்களின் முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்கக்கூடியதாகவும் பல துறைகள் சார்ந்த வெற்றிக்கான ஒரு திறவுகோலாகவும் காணப்படுகிறது என்பதை இவற்றின் மூலம் எடுத்துக்காட்டலாம்.

 

வேலை உலகு

தொழில்கள் / வேலைவாய்ப்புகள் காணப்படும் சூழலை வேலை உலகு என எளிமையாகக் குறிப்பிடலாம். இன்னொரு வகையில் குறிப்பிடுவதாயின் ஒரு சமூகத்தில் இருக்கும் அனைத்து வகையான வேலைகள் மற்றும் தொழில்களின் தொகுப்பாக வேலை உலகை அடையாளப்படுத்தலாம்.

'தனிநபர் ஒருவர் தனது தொழிலுக்கும் தினசரி நிறைவேற்றும் உண்மையான செயற்பாடுகளுக்கும் இடையிலான தொடர்பே வேலை உலகாகும்' -  Teichler

வேலை உலகைப் பொருத்தமட்டில் ஒருவரின் ஆற்றல்கள், திறன்கள், விருப்பங்கள், கல்வி மட்டம், வாய்ப்பக்கள் மற்றும் அனுபவங்கள் என்பவற்றுக்கு ஏற்ப தொழில்கள் தீர்மானிக்கப்படுகிறது. அத்துடன் தொழிநுட்ப வளர்ச்சி, சமூக மாற்றங்கள், உலக மயமாக்கல் மற்றும் சனத்தொகை வளர்ச்சி போன்ற பல காரணிகளின் விளைவாக வேலை உலகானது தொடர்ந்தும் மாறிக்கொண்டே இருக்கிறது. இதன்படி பல புதிய தொழில் வாய்ப்புக்களும் உருவாகிக் கொண்டு இருக்கின்றன.

இம்மாற்றமானது பல புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கின் கொண்டிருப்பதுடன், பல்வேறு தேவைகள் மற்றும் சவால்களையும் ஏற்படுத்திவருகின்றன. எனவே இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறிவருகின்ற, போட்டித் தன்மைமிக்க வேலை உலகுக்கு ஏற்ற திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்களாக நாம் காணப்படுகின்றோம்.

இந்தவகையில் வேலை உலகிற்கு மாணவர்களை தயார்படுத்துவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வியின் மூலம் அவர்களுக்கு தேவையான அறிவு, திறன்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே பாடசாலைக் கலைத்திட்டமானது வேலை உலகுக்கு தேவையான திறமைகளை / தேர்ச்சிகளை மாணவர்களிடத்தில் விருத்தி செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறில்லாத போது, கல்விக்கும் வேலை உலகிற்கும் இடையிலான இடைத்தொடர்பு குறைந்துவிடும். இது எதிர்காலத்தில் பாரிய சிக்கல் நிலையை ஏற்படுத்தும்.

எனவேதான் கல்வியின் மூலம், எதிர்காலத்தில் பொருத்தமான வேலைகளை செய்யக்கூடிய மாணவர்களை உருவாக்ககும் வகையில் அவர்களுக்குத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்குகள் மற்றும் பயிற்சிகள் வளர்க்கப்பட வேண்டும். அத்துடன் மாறிவரும் வேலை உலகிற்கு ஏற்ப கல்விச் செயன்முறையும் மாற்றமடைய வேண்டும்.


வேலை உலகத்துடன் கல்வியை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம்

இன்றைய போட்டி நிறைந்த வணிக உலகில் ஊழியர்கள் நிலைத்து நிற்பதற்கு அவர்கள் பல்வேறு ஆற்றல்களை பெற்றிருக்க வேண்டியுள்ளது. இதற்கு பொருத்தமான கல்வியறிவு மற்றும் பயிற்சி என்பன தொடர்ச்சியாகவும் பொருத்தமானதாகவும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்தவகையில் வேலை உலகுடன் கல்வி ஒருங்கிணைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே பின்வரும் அறிஞர்களின் கருத்துக்களும் அமைந்துள்ளன.

'பொருள் உற்பத்தியைப் பொறுத்தவரையில் மிகவும் சக்தி வாய்ந்த கருவியாக விளங்குவது அறிவாகும். அறிவைக் கொண்டே நாம் இயற்கையைக் கட்டியாண்டு எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்' - Alfred Marshall. Principles of Economics.

'நில வளத்துக்கு ஒரு வரம்புண்டு. எனவே அதிகரித்துச் செல்லும் உலக சனத்தொகைக்குத் தேவையான உணவை தொடர்ந்தும் உற்பத்தி செய்வதென்பது நிலத்தால் முடியாததாகும். எனவே மனிதன் தனது அறிவாலும் விவேகத்தாலும் ஆற்றலாலும் நிலத்திலும் மரபு வழி விவசாயத்திலும் தங்கியிருக்கும் நிலைமையைத் தவிர்த்துக்கொள்ள முடியும்' - Schultz, T. W.  The Economics of Being Poor.

அண்மைக்கால ஆய்வுகளின்படி பண்ணை நிலத்தின் பொருளாதார முக்கியத்துவம் குறைந்து வருவதுடன், மனித மூலதனத்தின் பொருளாதார முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அத்துடன் சிறந்த கல்வித் தகுதிகளைப் பெற்றவர்கள் அதிக வருமானத்தைப் பெறக்கூடிய தொழில் வாய்ப்புக்களை பெறுகின்றனர். உதாரணமாக அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வுகள் தனியாட்களின் வருமானங்கள் அவர்களின் கல்வித் தகுதிகளுக்கேற்ப வேறுபடுவதை எடுத்துக்காட்டியுள்ளன.

இஸ்ரேல், ஜப்பான், சீனா போன்ற அபிவிருத்தியடைந்த மற்றும் மிகவேகமாக முன்னேறிவருகின்ற நாடுகள் தமது கல்வி முறைமையை வேலை உலகுடன் ஒருங்கிணைந்த வகையிலேயே முன்னெடுத்துச் செல்கின்றன. இதனால் அவை அபிவிருத்தி நோக்கிய பாதையில் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருப்பதை அவதாணிக்க முடிகின்றது.

இன்று உலகளில் மனித அபிவிருத்திச் சுட்டென்னில் முன்னணியிலுள்ள அநேகமான நாடுகள் தமது கல்வி முறைமையை வேலை உலகுடன் ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுத்துச் செல்லக் கூடியவைகளாகவே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சுவிட்சர்லாந்து, நோர்வே, ஐஸ்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் டென்மார்க் போன்றவற்றைக் குறிப்பிடலாம். (HDI 2021, worldpopulationreview.com)

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கல்வியறிவு மட்டமும் கல்வியறிவுடையவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகக் காணப்படுகின்றபோதும், அதிகமான பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருப்பதுடன், இந்நாடுகளின் மனித அபிவிருத்திச் சுட்டென்னும் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றது. இவை தமது கல்வி முறைமையை போதுமான அளவில் வேலை உலகுடன் ஒருங்கிணைக்காமையே இதற்குக் காரணமாகும்.

இன்றைய பொருளாதார உலகில் பல தறைகளிலும் அறிவியல், தொழினுட்ப மற்றும் நடைமுறை ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்;கின்றன. உதாரணமாக புதிய கருவிகளினதும் தொழிநுட்பங்களினதும் பயன்பாட்டைக் குறிப்பிடலாம். அத்துடன் சமகால உலகில் உயர் வருமானத்தையும், அதிகமான வேலை வாய்ப்புக்களையும் பெற்றுத்தரக்கூடிய துறைகளாக தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்றன மாறியுள்ளன.

எனவே இவ்வாறான தொழிநுட்பங்களை கையாள்வதற்கான திறன்களையும் பயிற்சி;களையும் பெறுவதற்கும், அதிக தொழில் வாய்ப்புக்களையும் வருமானங்களையும் பெறுவதற்கும், மற்றும் நபர்களினதும் நாட்டினதும் அபிவிருத்திக்கும் வேலை உலகுடன் கல்வி ஒருங்கிணைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.


தற்கால வேலை உலகு

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட மூன்றாம் கைத்தொழில் புரட்சி மற்றும் உலகமயமாக்கம் என்பவை டிஜிட்டல் யுகம் மற்றும் கணினிமயமாக்கலுக்கு அடித்தளமாக அமைத்தது. இதனால் முன்னர் காணப்பட்ட வேலை உலகானது பாரிய மாற்றத்திற்கு உள்ளாகியது.  

தற்போது நாம் மூன்றாம் கைத்தொழில் புரட்சியிலிருந்து நான்காம் கைத்தொழில் புரட்சியின் காலகட்டத்தில் நுழைந்துள்;ளோம். நான்காம் கைத்தொழில் புரட்சியானது டிஜிட்டல், இயற்பியல் (பௌதீகவியல்) மற்றும் உயிரியல் முறைமைகளை இணைப்பதன் மூலம் தொழிநுட்ப ஒருங்கிணைப்பை உயர் மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

நான்காம் கைத்தொழில் புரட்சியானது அதி நவீன தொழிநுட்பங்கள், தானியக்க முறைகள் (Automation), செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் வகைப்படுத்தப்படுகிறது. இவ்வொருங்கிணைப்பானது  வேலை உலகையும், தொழில்களின் பரப்பையும் பாரியளவில் மாற்றமடையச் செய்துள்ளது. இதன்படி இங்கு வேலைகளின் வகிபாகங்கள், தேவையான திறன்கள், வேலை ஏற்பாடுகள் மற்றும் மனிதர்களுக்கும் தொழிநுட்பத்துக்கும் இடையிலான உறவுகள் என்பன மாற்றமடைந்துள்ளன. 

இதன்படி இங்கு அறிவார்ந்த மற்றும் திறமையான பல கைத்தொழில் துறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி தற்காலத்தில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (ICT), தரவுப் பகுப்பாய்வு (Data Analysis), நிரலாக்கம் (Programming), செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாடு, ரொபோட்டிக் பராமரிப்பு (Robotics Maintanace), இணையப் பாதுகாப்பு (Cyber Security) மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு தொடர்பான திறன்களுக்கு தேவைகள் அதிகரித்து வருகின்றன. எனவே தொழிலாளர்கள் இவை தொடர்பான தமது திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. 

மேலும் இது மக்கள் உலகின் எப்பாகத்திலிருந்தும் வேலைகளைச் செய்ய அனுமதிக்கப்படும் வகையில் தொலைதூர வேலைகளின் (Remote Work) விரிவு, சர்வதேச ரீதியான கூட்டிணைவு மற்றும் கலப்பக் கலாச்சாரத் திறன்களின் (Cross-Cultural Skills) தேவையை ஏற்படுத்தல் என்பவற்றுக்கும் வழிவகுத்துள்ளது.

எனவே இவற்றை உள்வாங்கிக் கொள்வதும், தேவையான திறன்களைப் பெற்றுக்கொள்வதும், மாறிவரும் வேலை உலகில் தனிநபர்கள் தாக்குப் பிடிக்கவும், வெற்றிபெறவும் இன்றியமையாததாகும்.


மாற்றமடைந்தள்ள சமகால வேலை உலகினை எதிர்கொள்ளக்கூடிய எதிர்கால தொழிலாளர்களை உருவாக்க  பாடசாலைகளில் முன்னெடுக்க முடியுமான உத்திகள்


  • சிறுவயதிலிருந்தே டிஜிட்டல் கல்வியறிவை வழங்குதல் 
  • பாடசாலைகளில் குறயீட்டு (Coding) மற்றும் நிரலாக்கக் (Programming) முறைகளை அறிமுகப்படுத்தல்
  • STEAM  போன்ற கலப்புக் கல்வி முறைமையை முன்னெடுத்தல்
  • விமர்சன சிந்தனை மற்றும் பிரச்சினை தீர்த்தலை ஊக்குவித்தல் 
  • தரவுப் பகுப்பாய்வு மற்றும் தரவு விளக்கங்களை உள்ளடக்கிய தரவு எழுத்தறிவுத் திறன்களைக் கற்பித்தல் 
  • மென் திறன்களை (Soft Skills) விருத்தி செய்தல் (தொடர்பாடல், ஒத்துழைப்பு)
  • தொழிநுட்பத்தோடு தொடர்பான இணைப்பாட விதானச் செயற்பாடுகளை ஊக்குவித்தல் : Coding Clubs, Robotics Clubs, …
  • இணையப் பாதுகாப்பு தொழிநுட்பங்கள் தொடர்பான வழிகாட்டல்களை மேற்கொள்ளல் : தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்தல், Cyber Security, Digital Safety
  • தானியக்க முறை (Automation), செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய தெளிவூட்டல்களை வழங்கள் 
  • புதுமையான சிந்தனைகள் (Innovative Thinkings)  மற்றும் புதிய வாய்ப்பக்களை உருவாக்கும் திறன்களை மேம்படுத்தும் வகையில் தொழில் முனைவோர் கல்வியை ஊக்குவித்தல் 
  • செயற்றிட்ட அடிப்படையிலான கற்றலை (Project Base Learning) முன்னெடுத்தல்
  • தொழில் வழிகாட்டல்களை மேற்கொள்ளல் 
  • ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கள் 
  • தொழில் துறையினருடன் கூட்டினைந்த வகையிலான கல்வியை முன்னெடுத்தல்.
  • வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான மனநிலையை ஊக்குவித்தல்
  • உள்ளடக்கக் கல்வியை உறுதி செய்தல் 
  • தொழிநுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பான ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களை போதித்தல்.

M.S.M. Naseem   (SLTS)

BA (Hons)  (SEUSL),   MA in Political Science (Pera),   PGDE (OUSL),   M. Ed ® (OUSL),  

Dip. in Educational Psychology  






No comments:

Post a Comment