இறை வேதமான அல்குர்ஆனில், இந்த உறுப்புகளின் உண்மையான செயல்பாடு குறித்து மூன்று முக்கிய வசனங்கள் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் மனிதனின் பொறுப்புணர்வையும், விழிப்புணர்வையும் ஆழமாகத் தொடுகின்றன.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
"நிச்சயமாக நாம் நரகத்திற்கென ஜின்களிலும் மனிதர்களிலும் பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு இதயங்கள் உள்ளன; ஆனால் அவற்றால் (உண்மையை) விளங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உள்ளன; ஆனால் அவற்றால் (சத்தியத்தைக்) காண மாட்டார்கள். அவர்களுக்குக் காதுகள் உள்ளன; ஆனால் அவற்றால் (நல்லுரையைக்) கேட்க மாட்டார்கள். இவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள்; மாறாக, அவற்றிலும் மிகவும் வழிகெட்டவர்கள். இவர்கள்தான் (நம்முடைய அறிவுரைகளைப்) புறக்கணித்தவர்கள்." (அல்குர்ஆன் 7:179)
இந்த வசனம் நமக்குக் கற்றுத்தரும் பாடம் மிக ஆழமானது. உடலியலாகக் கண்கள், காதுகள், இதயம் இருப்பதும், அவற்றின் உண்மையான பணியைச் செய்வதும் வேறு வேறு. கண்கள் இருந்தும் சத்தியத்தைக் காண மறுப்பது, காதுகள் இருந்தும் நல்லுரையைக் கேட்க மறுப்பது, இதயம் இருந்தும் இறைவனின் அறிகுறிகளைச் சிந்தித்துப் புரிந்து கொள்ள மறுப்பது – இதுவே உண்மையான அழிவுக்குக் காரணம்.
கால்நடைகள் புற்களை மேய்ந்து கொண்டே இருக்கும், அவற்றுக்கு சிந்திக்கும் திறன் இல்லை. ஆனால் மனிதனுக்கு அந்தத் திறன் இருக்கின்றது, அதைப் பயன்படுத்தாமல் இருப்பது கால்நடைகளை விட மோசமான நிலையாகும். இன்று நாம் காணும் போதைப் பழக்கங்கள், வன்முறை, உண்மையை மறுப்பது, வெறுப்புணர்வு இன்மை போன்ற அனைத்திற்கும் அடிப்படை, இந்த உறுப்புகளைத் தவறான பாதையில் பயன்படுத்துத வதே ஆகும்
"அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? அப்பொழுது (சத்தியத்தை) விளங்கிக் கொள்ளக் கூடிய இதயங்கள் அல்லது (நல்லுரையைக்) கேட்கக் கூடிய காதுகள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஏனெனில், நிச்சயமாக கண்கள் குருடாகிவிடுவதில்லை; ஆனால் நெஞ்சங்களிலுள்ள இதயங்கள்தாம் குருடாகிவிடுகின்றன." (அல்குர்ஆன் 22:46)
இங்கு ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்: புறக்கண்கள் குருடாக முடியும், ஆனால் அது பெரிய இழப்பு அல்ல. மெய்யான குருட்டுத்தன்மை என்பது இதயத்தின் குருட்டுத்தன்மைதான்.
இதயம் (உண்மையை உணரும், சிந்திக்கும், விவேகம் பெறும் உள்ளுணர்வு) செயலிழந்துவிட்டால், கண்கள் எவ்வளவு திறந்திருந்தாலும் அவை உண்மையான பார்வையைப் பார்க்க முடியாது. ஒரு மனிதன் தனது இதயத்தை இறைநினைவு, சிந்தனை, பக்குவம் ஆகியவற்றால் தூய்மைப்படுத்திக் கொள்ளாவிட்டால், அவன் உலக விஷயங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பான். மறுமையின் உண்மைகள், இறைவனின் அடையாளங்கள், நீதி, நேர்வழி ஆகியவை அவனுக்குத் தென்படாது.
நாம் அன்றாட வாழ்வில் எவ்வளவு நேரத்தை இதயத்தைத் தூய்மைப்படுத்துவதற்காகச் செலவிடுகிறோம்? தொழுகை, தியானம், அல்குர்ஆன் ஓதுதல், நல்லவர்களுடன் அமர்தல் ஆகிய அனைத்தும் இதயத்தின் பார்வையைத் திறப்பதற்கான வழிகளாகும்.
"(இணை கற்பித்தல் போன்ற) எதைப்பற்றி உமக்கு அறிவு இல்லையோ அதைப் பின்பற்றாதீர். நிச்சயமாக செவி, பார்வை, இதயம் ஆகிய ஒவ்வொன்றும் (மறுமையில்) கேள்வி கணக்குக்கு உள்ளாகும்." (அல்குர்ஆன் 17:36)
இந்த வசனம் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு நேரடியான பாடத்தைத் தருகிறது: நாம் கேட்கும் ஒவ்வொரு வார்த்தை, பார்க்கும் ஒவ்வொரு காட்சி, இதயத்தில் உருவாகும் ஒவ்வொரு எண்ணமும் பதிவாகிக் கொண்டிருக்கின்ற. மறுமையில் அவை ஒவ்வொன்றாக விசாரிக்கப்படும்.
நாம் இன்று சமூக வலைத்தளங்களில் எதைப் பார்க்கிறோம்? எதைக் கேட்கிறோம்? நம் இதயத்தில் எத்தகைய எண்ணங்களை வளர்க்கிறோம்? கோபம், பொறாமை, வெறுப்பு, ஆசாபாசங்கள் ஆகியவற்றை நாமே உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுத்து நம் இதயத்தில் இடம் கொடுக்கிறோம். அல்லது, பொறுமை, நன்றி, இறைநம்பிக்கை, சத்தியத் தேடல் – இவற்றைத் தேர்ந்தெடுக்கிறோம். இவை அனைத்துக்கும் நாமே பொறுப்பாவோம்.
கண்கள் இருந்தும் உண்மையைக் காணத் தயங்குவது, காதுகள் இருந்தும் நல்லறிவுரையைக் கேட்காதது, இதயம் இருந்தும் சிந்திக்காதது – இவை அனைத்தும் நம் விருப்பத்தில்தான் அமைகின்றன. நம் உறுப்புகளை நல்லதில் பயன்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு நம் சுற்றுச்சூழலையும், நாம் தேர்ந்தெடுக்கும் தகவல்களையும், நம் நண்பர்களையும் நாம் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒருவரது பௌதிகக் கண்கள் குருடானாலும், இதயம் திறந்திருந்தால் அவர் இறையருளை அடையலாம். ஆனால் இதயம் குருடானால், கண்கள் பார்த்தும் பயனில்லை. எனவே நம் இதயத்தைச் சுத்தப்படுத்துவதே முதன்மையான கடமை. இதற்கு இறைவனை அதிகம் நினைவுகூருதல், பாவங்களிலிருந்து விலகுதல், மன்னிப்புக் கோருதல், நல்லோருடன் இணைதல் ஆகியவை அவசியம்.
"உமக்கு அறிவு இல்லாததைப் பின்பற்றாதீர்" எனும் வசனமானது, வதந்திகள், ஆதாரமற்ற செய்திகள், அவதூறுகள், தவறான கருத்துகள் ஆகியவற்றைப் பரப்புவதைத் தடுக்கிறது. ஒவ்வொரு தகவலையும் ஆய்வு செய்து, உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அதை நம்பவோ பகிரவோ வேண்டும். ஏனெனில் கேட்டது, பார்த்தது, இதயத்தில் எடுத்துக் கொண்டது என அனைத்தும் விசாரணைக்கு உட்பட்டவையாகும்.
இன்றைய உலகில் தகவல்களின் வெள்ளத்தில் மிதக்கும் நாம், அல்குர்ஆனின் இந்த மூன்று வசனங்களையும் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் அவசியம். நமது கண்கள், காதுகள், இதயம் ஆகியவை இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடைகள். அவற்றை நாம் சரியான பாதையில் பயன்படுத்தி, நம்மை மேன்மையாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல், அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை நாமே சந்திக்க நேரிடும்.
அல்லாஹ் நமது கண்களுக்கு உண்மையைக் காணும் பார்வையையும், காதுகளுக்கு நல்லுரையைக் கேட்கும் திறனையும், இதயத்துக்கு உண்மையை உணரும் விளக்கத்தையும் அருள்வானாக.
இதன் மூலம் தஜ்ஜாலை பின்பற்றுவதில் இருந்து எம்மை பாதுகாப்பானாக

No comments:
Post a Comment