.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, August 20, 2026

ரூட் மாபியா - Root Mafia: பொய்களால் ஆளப்படும் உலகம்

இருபத்தொறாம் நூற்றாண்டின் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று, சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியிருப்பதாகும். காலையில் எழுந்ததும் நாம் முதலில் பார்ப்பது செய்தித்தாள்களையோ அல்லது தொலைக்காட்சியையோ அல்ல, மாறாக நம் கைப்பேசிகளில் வந்துள்ள WhatsApp செய்திகள், Facebook பதிவுகள், Twitter (X) ட்வீட்டுகள் மற்றும் YouTube காணொளிகள் என்பதை மறுப்பதற்கு வழியில்லை. இந்த டிஜிட்டல் புரட்சி நமக்குத் தகவல்களை அணுகும் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒவ்வொரு வரமும் ஒரு சாபத்தையும் சுமந்து வருகிறது. இவ்வாறன ஒரு சாபத்தின் பெயர்தான் ‘ரூட் மாபியா’ (Root Mafia).

“ரூட் மாபியா” என்பது ஒரு குறிப்பிட்ட தனி அமைப்பின் பெயர் அல்ல. மாறாக, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மக்களின் எண்ணங்களை கட்டுப்படுத்த முயலும் டிஜிட்டல் உத்திகளை குறிக்கும் சொல்லாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது சமூக வலைத்தளங்களில் போலிக் கணக்குகள் (Fake Accounts) மற்றும் தானியங்கி கணக்குகள் (Bot Accounts) மூலம் பொதுக் கருத்தைச் செயற்கையாக மாற்றியமைக்கும் ஒரு தந்திரத்தைக் குறிக்கும் பெயராகும்.

“ரூட்’ (Root) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு “வேர்” என்று பொருள். ஒரு மரத்தின் வேரை அறுத்தால் மரம் விழுந்துவிடும் என்பது போல, இவர்கள் சமூக வலைத்தளங்களின் அடித்தளத்தையே (Root Level) கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். மேலும், உங்கள் மனதில் பொய்யான நம்பிக்கைகளை வேரூன்றச் செய்கிறார்கள். இதனால்தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது.

“மாபியா” என்பது, இவர்கள் ஒரு கும்பல் போல ஒழுங்கமைக்கப்பட்டு, ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

இதன்படி, ரூட் மாபியா மூலம் பின்வரும் முக்கிய செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன,

·         தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்புதல்

·         அரசியல் எதிரிகளை அவதூறு செய்வது

·  ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது சிந்தனையை ஆதரிக்கும் போலியான பிரச்சாரங்களை உருவாக்குதல்

·         மக்களிடம் பயம், கோபம் அல்லது வெறுப்பை தூண்டுதல்

·         குறிப்பாக இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வன்மங்களை  பரப்புதல்

இவ்வாறான செயல்கள் சமூகத்தில் ஒரு விடயம் பற்றிய உண்மையான  தகவல்கள் சென்றடைவதை தடுப்பதுடன், குழப்பங்களையும், வன்முறைகளையும் மற்றும் நம்பிக்கையின்மையையும் உருவாக்குகின்றன.

மக்கள் இவ்வாறான தகவல்களை எளிதில் நம்புவதற்கான முக்கிய காரணங்களாக பின்வருவன காணப்படுகின்றன.

·         சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவுவது

·         உண்மையை சரிபார்க்காமல் தகவல்களை உடனே பகிர்வது

·         உணர்ச்சியை தூண்டும் தலைப்புகள்

·         பல கணக்குகள் ஒரே தகவலை பகிர்வது

இவை அனைத்தும் “இது உண்மைதான்” என்ற மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றன.

ரூட் மாபியா’வின் செயல்பாட்டை நான்கு படிகளில் புரிந்துகொள்ளலாம்:

படி 1: ஆயிரக்கணக்கான போலிக் கணக்குகளை உருவாக்குதல்

ஒரு சிலர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கி மென்பொருள்களைப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான போலிக் கணக்குகளை உருவாக்குகிறார்கள். இந்தக் கணக்குகளுக்கு உண்மையான நபர்களைப் போலப் பெயர்கள், படங்கள், சுயவிவரங்கள் இருக்கும். ஒரு சாதாரணப் பயனரால் இவை போலி எனக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

படி 2: ஒருங்கிணைந்த செய்திப் பரப்புகை

ஒரு குறிப்பிட்ட செய்தியை (பெரும்பாலும் பொய்யானதாகவோ அல்லது மிகைப்படுத்தப்பட்டதாகவோ இருக்கும்) இந்த ஆயிரக்கணக்கான கணக்குகளும் ஒரே நேரத்தில் பதிவிடத் தொடங்குகின்றன. இது டிரெண்டிங் (Trending) ஏற்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குகிறது.

படி 3: மாய உண்மை விளைவு (Illusory Truth Effect)

உளவியல் ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு தகவல் எவ்வளவு அதிகமாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக அது உண்மையாகத் தோன்றும். இதைத்தான் “மாய உண்மை விளைவு (Illusory Truth Effect)”  என்கிறார்கள்.

போலிக் கணக்குகள் ஒரே செய்தியை நூறு முறை, ஆயிரம் முறை பதிவிடும்போது, அதனை பார்ப்பவர்களின் மனதில் அது உண்மையாகவே பதிகிறது. அவர்கள் அதைச் சரிபார்க்கக் கூட நினைப்பதில்லை.

படி 4: உண்மைப் பயனர்களைத் தூண்டுதல்

இந்தப் போலிப் பதிவுகளைப் பார்த்த மக்களும் அந்தச் செய்தியைப் பகிரத் தொடங்குகிறார்கள். இப்போது, போலியாக உருவாக்கப்பட்ட ஒரு செய்தி, உண்மையைப் போல பரவுகிறது.

எனவே இவ்வாறு பரப்பப்படும் போலிச் செய்திகள் மூலம் செயற்கையாக விருப்பங்கள் உருவாக்கப்படுகிறது, கோபம், வெறுப்புகள் தூண்டப்பட்டு மக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர் மற்றும் உண்மையான தகவல்கள் மறைக்கப்பட்டு, பொய்யான தகவல்கள் பரப்புகின்றன.

உதாரணமாக ஒரு தேர்தலில் 100 வாக்காளர்கள் உள்ளனர் என வைத்துக்கொள்வோம். உண்மையில், 55 பேர் கட்சி A க்கும், 45 பேர் கட்சி B க்கும் ஆதரவாக இருக்கிறார்கள். தேர்தலுக்கு முன், மேற்கூறியரூட் மாபியா’ செயற்பாட்டின் மூலம் கட்சி A இன் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்பப்படுகிறது. இதனால் அந்த 55 பேரில் 15 பேர் தங்கள் மனதை மாற்றிக் கொள்கிறார்கள். இப்போது, கட்சி B க்கு 60 வாக்குகள் கிடைக்கின்றன. இது உண்மையான மக்கள் விருப்பமில்லை. மாறாக போலிக் கணக்குகளால் உருவாக்கப்பட்ட செயற்கையான வெற்றியாகும்.

கடந்த காலங்களில் ரூட் மாபியா செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இவற்றுக்கான சான்றுகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. உதாரணமாக,

1. மியான்மார் இராணுவத்தின் Facebook மூலம் ஒருங்கிணைந்த போலிப் பிரச்சாரம்: 2018ஆம் ஆண்டு Facebook, மியான்மர் இராணுவத்துடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட பல போலி மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்குகள், Pages மற்றும் Groups-ஐ நீக்கியது. சில கணக்குகள் தங்களை சுயாதீனமான செய்தி, பொழுதுபோக்கு மற்றும் சமூகப் பக்கங்களாகக் காட்டி இராணுவத்திற்கு ஆதரவான கருத்துகளைப் பரப்பியதாக Meta தெரிவித்தது. 2019ஆம் ஆண்டிலும் Facebook, மியான்மரில் 89 accounts, 107 Pages, 15 Groups மற்றும் 5 Instagram accounts கொண்ட மற்றொரு வலையமைப்பை அகற்றியது; அவற்றில் சில மியான்மர் இராணுவத்துடன் தொடர்புடையதாக விசாரணையில் கண்டறியப்பட்டன.

2. அசர்பைஜானில் ஆயிரக்கணக்கான போலிக் கணக்குகள்: 2020ஆம் ஆண்டு Meta வெளியிட்ட அறிக்கையில், அசர்பைஜானில் 589 Facebook accounts, 7,665 Pages மற்றும் 437 Instagram accounts கொண்ட ஒரு வலையமைப்பு அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வலையமைப்பு அந்நாட்டின் New Azerbaijan Party Youth Union உடன் தொடர்புடையதாக Meta கண்டறிந்தது; fake engagement மற்றும் ஒருங்கிணைந்த போலி நடவடிக்கைகளுடன் இது தொடர்புபட்டிருந்தது

3. பிரான்சஸ் ஹாஜெனின் முறைப்பாடு: 2021 ஆம் ஆண்டு, பேஸ்புக்கின் முன்னாள் தரவு விஞ்ஞானி Frances Haugen, அமெரிக்கப் பங்குச் சந்தை ஆணையத்தில் (SEC) ஒரு முறைப்பாட்டினை பதிவு செய்தார். அதில், பேஸ்புக்கின் உள் ஆவணங்களை மேற்கோள் காட்டி, “RSS பயனர்கள் குழுக்கள் மற்றும் பக்கங்கள்” மத வெறுப்பையும், இன வெறுப்பையும் தூண்டும் விதமாகப் போலிக் கணக்குகளை இயக்குவதாகக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, முஸ்லிம்களை பன்றிகள் மற்றும் நாய்கள் என ஒப்பிட்டு அவமானப்படுத்தும் பதிவுகள், முஸ்லிம்களின் புனித நூலான அல்-குர்ஆன் மீதான பொய்ப் பிரச்சாரம் மற்றும் அல்-குர்ஆன் தந்தையரை தங்களது குடும்ப பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஊக்குவிப்பதாகப் பொய்  பிரச்சாரம் போன்றவற்றை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இங்கு மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால், பேஸ்புக்கிற்கு இது நன்கு தெரிந்திருந்தும், அரசியல் உணர்வுகள் காரணமாக நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்கியதாக அந்த உள் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

4. Tek Fog விவகாரம் : 2022 ஆம் ஆண்டு “The Wire” ஊடகம் வெளியிட்ட அறிக்கையில், “Tek Fog” என்ற மென்பொருள் மூலம் ஒரே கிளிக்கில் இயக்க முடியுமான ஆயிரக்கணக்கான போலிக் கணக்குகள் இயக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதாவது Tek Fog என்ற பெயரில் ஒரு அதிநவீன மென்பொருள் உருவாக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவின் ஆளும் கட்சியான பா.ஜ.க வின் ஐ.டி. அணியுடன் (BJP IT Cell) இணைக்கப்பட்டு, முஸ்லிம்கள், பெண் பத்திரிகையாளர்கள் போன்றோரை இணையத்தில் பழி தூற்றவும், வலது சாரி தீவிரவாத செய்திகளைப் பரப்பவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த மென்பொருளுக்கு, பல்லாயிரக்கணக்கான போலிக் கணக்குகளை ஒரே கிளிக்கில் இயக்கும் திறன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

5. அஸ்ஸாம்ரூம் 501’: 2026 ஆம் ஆண்டு இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பாஜகவின் “அடல் பிஹாரி வாஜ்பாய் பவன் (Atal Bihari Vajpayee Bhawan)’ என்ற கட்சி அலுவலகத்தில், ‘501’ என்ற அறையில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட போலிச் சமூக வலைத்தளக் கணக்குகள் இயக்கப்பட்டதாகப் முறைப்பாடுகள் எழுந்தன. இது தொடர்பில் ‘Assam Jatiya Parishad’ (AJP) கட்சி தேர்தல் ஆணையத்திற்கு முறையிட்டும் இருந்தது. இந்தக் கணக்குகள் அவர்களது அரசியல் எதிரிகளை இலக்கு வைத்து அவதூறு பரப்பவும், பொதுக் கருத்தைப் பாதிக்கவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

6. ஜார்கண்ட் Shadow Accounts விவகாரம்: இந்தியாவின் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் (Hemant Soren) ஐ அவதூறு செய்யும் நோக்கில், ’ராஞ்சி செளபால்’ (Ranchi Chaupal) மற்றும் ‘ஜார்கண்ட் செளபால்’ (Jharkhand Chaupal) என்ற பெயர்களில் Shadow Accounts இயக்கப்பட்டன. ஒரு மாதத்திற்குள், இந்தக் கணக்குகளுக்காக சுமார் 72 இலட்சம் ரூபாய்க்கு மேல் விளம்பரச் செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு கணக்கெடுப்புக்கள் கூறுகிறன.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள், சில நேரங்களில் நிஜ வன்முறையில் கூட முடிகின்றன. உதாரணமாக 2025 ஆம் ஆண்டு, டெல்லியின் சீலம்பூர் (Seelampur) பகுதியில் நடந்த கொலை சம்பவம் ஒன்றை, BJP-RSS இணைந்த அமைப்புகள் (Bajrang Dal, Vishwa Hindu Parishad) முஸ்லிம் எதிர்ப்பு வெறியாக மாற்ற முயன்றதாக ‘Janhastakshep’ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது, சமூக ஊடகங்களில் ‘முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டும்’, ‘இந்து மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்’ எனும் வதந்திகளைப் பரப்பி, பதற்றச் சூழலை ஏற்படுத்த முயற்சித்தன. இந்தச் செய்திகள், ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான போலிக் கணக்குகள் மூலம் வைரலாகப் பரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றைப் போல் அண்மைக்காலங்களில் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்மத்தை பரப்பும் நோக்கில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பலபோலியான முகநூல் கணக்குகள் மற்றும் YouTube பக்கங்கள் செயற்பட்டு வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது. இதேவேளை இங்கு இஸ்ரேல் மற்றும் இந்தியாவுக்கு ஆதரவாக இவ்வாறான பல முகநூல் கணக்குகள் செயற்பட்டு வருகின்றமையையும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இவை தொடர்பில் தெளிவான விளக்கங்களைப் பெற்றிப்பதும், தேவையான மாற்று முன்னெடுப்புக்களை முன்னெடுக்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

ரூட் மாபியாவிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறைகள்

· சமூக வலைத்தளங்களில் வரும் ஒவ்வொரு செய்தியையும் உண்மை என்று உடனே நம்பிவிடாதீர்கள். முதலில் அது உண்மையா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இந்தவகையில் எப்போதும் இது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதா?, இதைச் சொல்பவருக்கு என்ன இலாபம்? இதற்கு நம்பகமான ஆதாரம் உள்ளதா? போன்ற கேள்விகளை மனதில் வையுங்கள்:

·  ஒரு செய்தியைப் பகிர்வதற்கு முன், அதன் மூலத்தைச் சரிபார்க்கவும்: இந்தச் செய்தியை நம்பகமான செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதா? இந்தக் கணக்கு உண்மையான நபருடையதா? எத்தனை காலமாகச் செயல்படுகிறது?, இதே தகவலை வேறு சுயாதீன ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றனவா?

·   உண்மை சரிபார்ப்பு (Fact-Check) இணையதளங்களைப் பயன்படுத்துங்கள்: ஒரு சந்தேகமான செய்தியை நீங்கள் இந்த இணையதளங்களில் தேடிப் பார்க்கலாம். இவை ஏற்கனவே பல போலிச் செய்திகளை அம்பலப்படுத்தியுள்ளன.

·  ஒரு அதிர்ச்சியான செய்தியைப் பார்க்கும்போது, அதை உடனே பகிர வேண்டும் என்ற மனப்பாங்கை மாற்றி நிதானத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயற்படும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

·  மத வெறியைத் தூண்டும், பொய்யான தகவல்களைப் பரப்பும், வெறுப்புப் பேச்சுகளைக் கொண்ட பதிவுகளைக் கண்டால், சமூக வலைத்தளங்களில் ‘Report’ (புகார்) செய்யுங்கள். ஒவ்வொரு புகாரும் அந்த இடுகை நீக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

·   நம்பகமான ஊடகங்களைப் பின்பற்றுங்கள். அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் மற்றும் நம்பகமான ஊடகங்களை மட்டுமே நம்புங்கள்.

·     குடும்பத்தினருக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை வழங்குங்கள் குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போலிச் செய்திகள் பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.

· உண்மையைத் தேடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதுடன், ஒவ்வொரு தகவலையும் சிந்தித்து அணுக பழகிக்கொள்ளுங்கள்.

ரூட் மாபியா என்பது வெறும் சில போலிக் கணக்குகளின் கூட்டம் மட்டும் அல்ல. அது நம் சிந்திக்கும் சக்தியையே இலக்கு வைக்கும் ஒரு ஆயுதம். அது நம் மனதில் பயத்தையும், கோபத்தையும், வெறுப்பையும் விதைத்து, நாம் தெளிவாகச் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்கிறது.

எனவே விழிப்புணர்வுள்ள மக்களாக நாம் செயல்பட்டால் மட்டுமே, டிஜிட்டல் உலகின் போலிச் செய்திகள் மற்றும் மோசடிகளிலிருந்து எம்மையும், ஏனையவர்கையும் பாதுகாக்க முடியும்.

 

No comments:

Post a Comment