.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, March 7, 2026

பசியின் பின்னால் மறைந்திருக்கும் பலன்கள்: ரமழான் நோன்பின் அதிசயங்கள்

ரமழான் மாதம் என்பது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஆன்மீகப் பரிசுத்தத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்துக்கொள்ளும் ஒரு புனிதமான காலப்பகுதியாகும். இந்த மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் நோன்பானது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும். அதிகாலை  முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு, பானம், இச்சை மற்றும் சில உலகியல் விருப்பங்களைத் தவிர்த்து, அல்லாஹ்வின் திருப்தியை நாடுவது இதன் அடிப்படை நோக்கமாகும்.

இந்த ரமழான் மாதம் ஓர் உன்னதமான பயிற்சிக் களமாகும். இதன்படி இம்மாதத்தில் புனித நோன்பு நோற்பதன் மூலம் எம்மால் உடலியல், உளவியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த பல்வேறு வகையான பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கின்றது. அவை பற்றி இங்கு சற்று விரிவாக நோக்குவோம்.

அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியான சான்றுகளின் (Scientific & Medical Evidence) அடிப்படையில்,

உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக கிடைக்கும் பயன்கள்

1) உயிரணு சுத்திகரிப்பு: (ஆட்டோபேஜி Autophagy - செல்கள் சுத்தம் செய்யப்படல்) : 2016 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற யோஷினோரி ஓசுமி (Yoshinori Ohsumi)  அவர்களின் ஆராய்ச்சியானது, நோன்பின் மருத்துவ மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது. இதன்படி 12-14 மணி நேர உண்ணாமலிருப்பது, எமது உடலில் பழுதடைந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கத் தூண்டுகிறது. இது ஆட்டோபேஜி (Autophagy) செயன்முறை என அழைக்கப்படுகிறது. இச்செயன்முறையில் நடைபெறுவதானது எமது உடலில் புற்றுநோய் மற்றும் நரம்பு மண்டல நோய்களைத் தடுக்க உதவுகிறது.


2) வளர்சிதை மாற்றம் மேம்படல் : 11 மாதங்கள் இடைவிடாமல் வேலை செய்யும் எமது வயிறு, ரமலானில் 29-30 நாட்கள் ஓய்வு பெறுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்துகிறது.


3) இதயம் ஆரோக்கியமடைதல் : Journal of the American Heart Association 2019 இல் மேற்கொண்ட ஆய்வின் படி, ரமழான் நோன்பாளிகளின் கெட்ட கொழுப்பு (Low-Density Lipoprotein - LDL) 8-15% குறைந்து, நல்ல கொழுப்பு (High-Density Lipoprotein - HDL)  10-20% உயர்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.


4) மூளையின் செயல்பாடு அதிகரித்தல் மற்றும் நரம்பில் நோய்களை கட்டுப்படுத்தப்படல் : National Institutes of Health (NIH) the nation's medical research agency, USA இன் ஆய்வின் படி, நோன்பானது மூளையில் BDNF (Brain-Derived Neurotrophic Factor) எனும் புரதத்தை அதிகரிக்கிறது. இது நினைவாற்றலையும், கற்றல் திறனையும் மேம்படுத்துகிறது. அத்துடன் பார்கின்சன் (Parkinson), அல்சைமர் (Alzheimer) போன்ற நரம்பு மண்டல நோய்களையும் நோன்பு கட்டுப்படுத்துகிறது என்பது கணிடறியப்பட்டுள்ளது.


5) எடைக் கட்டுப்பாடு : டுபாய் மருத்துவக் கல்லூரி 2022 இல் 100 நோன்பாளிகளை வைத்து மேற்கொண்ட ஆய்வில், சராசரியாக ஒருவரின் இடை 2.5 Kg அளவு குறைந்ததுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி அதிக இடை உள்ளவர்கள் தமது இடையை குறைக்க நோன்பு வழிசெய்கின்றமை தெளிவாகின்றது. இதனால்தான் தொடர்ச்சியான நோன்பு அல்லது உண்ணாவிரதம் (Intermittent Fasting) மேற்கத்திய நாடுகளில் இன்று பிரபலமாகவுள்ளது.

6) மன அழுத்தம் குறைதல் : இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக (Cambridge university) 2013 இல் மேற்கொண்ட ஆய்வின் படி, நோன்பானது அல்லது பசித்திருத்தலானது மூளையில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை (Cortisol) குறைத்து, மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோனான செரோடோனின் (Serotonin) அளவை அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.


7) மனப் பக்குவம் ஏற்படல் : நோன்பின் போது உண்டாகும் பசியால் வரும் எரிச்சலைக் கட்டுப்படுத்தக் நாம் கற்றுக்கொள்வதன் மூலம், மனதின் மீதான நமது கட்டுப்பாடு அதிகரிக்கிறது.

 

பொருளாதாரப் பயன்கள்

1) நுகர்வுப் பண்பாடு கட்டுப்பாடு : நோன்பு நமக்கு தேவைக்கும், ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கற்றுத் தருகிறது. வெறும் வயிற்றுத் திருப்தியிலிருந்து நம்மை விடுவித்து, பொருளாதாரச் சிக்கனத்தைக் கற்பிக்கிறது.

2) சேமிப்புப் பழக்கம் : பகல் முழுவதும் உணவு மற்றும் தின்பண்டங்களைத் தவிர்ப்பதால், இயற்கையாகவே உணவுக்கான செலவு குறைந்து, மறைமுக சேமிப்பு அதிகரிக் நோன்பு வழிசெய்கிறது.

3) உணவு விரயம் குறைப்பு : ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organization of the United Nations) மற்றும் எகிப்திய உணவு வங்கி இணைந்து 2023 ஆம் ஆண்டு ரமழானுக்காக நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கையின் படி, ரமழான் மாதத்தில் உணவு விரயம் 30-40% குறைகிறது. நோன்பு திறக்கும் நேரத்தில் எளிமையான உணவுகளை உண்ணும் பழக்கம் இதற்குக் காரணமாகும்.


4) ஏழைகளுக்கான உதவிகள் கிடைக்கப்பெறல் : 'பசியின் ருசியை அறிந்தவனே இறைவனின் அருட்கொடையின் மதிப்பை உணர்வான்' கூற்றிற்கு ஏற்ப, பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்கு செல்வம் சுழல்வதை அல்லது சென்றடைவதை தூண்டுகின்ற ஒரு சந்தர்ப்பமாக நோன்பு மாதம் காணப்படுகின்றது. அத்துடன் ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் 'சகாத்' மற்றும் 'ஸதகா' போன்ற தானங்களை அதிகமாக வழங்குகின்றனர். இது சமூகத்தில் செல்வம் சீராகப் பகிரப்பட உதவுவதுடன், ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்வடையவும் வழிசெய்கிறது. நோன்பு காலத்தில் பல நாடுகளிலும் ஏழைகளுக்கு குறிப்பிட்ட அளவாவது உணவு மற்றும் ஏனைய உதவிகள் கிடைக்கின்ற முக்கிய காலப்பகுதியாக ரமழான் மாதம் காணப்படுகிறது

5) சமூத்தில் பொருளாதாரச் சுழற்சி ஏற்படல் : ரமழான் காலத்தில் உணவு, ஆடை, பரிசுகள் போன்றவற்றின் விற்பனை அதிகரிக்கிறது. இது சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருமான வாய்ப்புக்களை உருவாக்குகிறது. குறிப்பாக பெருநாள் பண்டிகையை முன்னிட்டு சந்தைச் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன.

 

சமூகப் பயன்கள்

1) சமத்துவ உணர்வு : அரசனும்-அடிமையும், பணக்கரனும்-ஏழையும் ஒரே பசியை உணரும்போது, சமூகத்தில் காணப்படும் வர்க்க மற்றும் இதர வேறுபாடுகள் இல்லாமலாக வழிசெய்யப்படுகின்றது. இந்தவகையில் குறிப்பாக இஃப்தார் நேரமானது உலகின் மிகப் பெரிய சமத்துவ விருந்துக்கான வாய்ப்பாக அமைகின்றது.

2) குடும்ப உறுதிப்பாடு : அமெரிக்காவின் பிவ் ஆராய்வு மையம் (Pew Research Center) 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவிலள்ள முஸ்லிம்களை வைத்து மேற்கொண்ட ஆய்வில், ரமழான் மாதத்தில் நபர்கள் தமது குடும்பத்தின்ருடன் செலவழிக்கும் நேரமானது வழிமையை விட 50% அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்தது. அத்துடன் கூட்டாக சஹர் செய்தல், கூட்டு இஃப்தார் மற்றும் கூட்டுத் தொழுகை போன்ற குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துகிறது என்பதும் கண்டறியப்பட்டது.


3) சகவாழ்வு & பரோபகாரம் : அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 2021 இல் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, நோன்பானது மூளையின் அமிக்டாலா (Amygdala) பகுதியின் செயல்பாட்டை மாற்றியமைத்து, கோபம், ஆக்ரோஷத்தைக் குறைத்து, அனுதாப உணர்வை அதிகரிக்கிறது என்பதை கணிடறிந்துள்ளது. இதனால் சமூகத்தில் முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, சகவாழ்வு ஏற்பட வழிசெய்கிறது.

4) சமூகக் கட்டுப்பாடு : பொய் பேசுதல், புறம் பேசுதல், கோபப்படல் போன்ற மோசமான செயற்பாடுகள் நோன்பின் நோக்கத்தையே பாழாக்கிவிடும் என்பதால் நோன்பாளிகள் அவற்றை தவிர்த்துக்கொள்கின்றனர். இது நன்னடத்தை மற்றும் நல்லொழுக்கமிக்க சமூகம் உருவாக வழிசெய்கிறது.

5) மனவுறுதி ஏற்படல் மற்றும் போதை ஒழிப்புக்கு வழிசெய்தல் : நோன்பு காலத்தில் பகல் முழுவதும் உண்ணாமல் இருக்கும் பழக்கமானது, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீளுவதற்கும், தங்களை சுயகட்டுப்பாட்டுக்கு பழக்கப்படுத்திக் கொள்வதற்கும் உதவக்கூடியதாக அமைகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல உளவியல் ஆய்வுகள், நோன்பு காலங்களில் மக்கள் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றன.

6) குற்றங்களின் அளவு குறைவடைதல் : சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளில் உள்ள காவல்துறையின் புள்ளிவிவரத் தரவுகளின் படி, அங்கு ஏனைய காலப்பகுதிகளை விட ரமழானில் குற்றங்கள் 40-60% வரை குறைகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

 

ஆன்மீக ரீதியான பயன்கள்

1) இறையச்சம் (தக்வா) மற்றும் இறைவனுடனான தொடர்பு அதிகரித்தல் : நோன்பின் முக்கிய நோக்கமே இறையச்சத்தை வளர்ப்பதாகும். உணவும் நீரும் கிடைத்திருந்தும், அல்லாஹ்வின் கட்டளைக்காக அதைத் தவிர்ப்பது, இறைவனின் கண்காணிப்பு உணர்வை உள்ளத்தில் பதியச் செய்கிறது. இதனால் மனிதன் தனிமையிலும் தவறுகளைத் தவிர்க்கும் பண்பை பெற்றுக்கொள்கிறான். அத்துடன் நோன்பு காலத்தில் நாம் வணக்க வழிபாடுகளில் அதிகம் ஈடுபாடுகிறோம். இதனால் எமக்கு மத்தியில் படைப்பாளனான இறைவன் மீதான கவனம், பற்றுதல் மற்றும் அன்பு என்பன அதிகரிக்கிறது.

2) சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் : நோன்பு எமக்கு சுய கட்டுப்பாட்டை கற்றுத் தருகிறது. நோன்பு நோற்பதன் மூலம் உணவு, கோபம், ஆசைகள், தீய சொற்கள் மற்றும் செயல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பயிற்சி எமக்கு கிடைக்கிறது. இது மனிதனை நல்லொழுக்கிமிக்க வாழ்க்கைக்கு வழிநடத்துகிறது.

3) அல்-குர்ஆன் உடனான தொடர்பு மற்றும் வணக்க வழிபாடுகள் அதிகரித்தல் : ரமழான் மாதம் அல்-குர்ஆன் அருளப்பெற்ற மாதமாகும். எனவே முஸ்லிம்கள் அதிகமாக குர்ஆன் ஓதுதல், தொழுகையில் ஈடுபடுதல், தான தர்மங்களை வழங்குதல் போன்ற ஆன்மீக செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் உள்ளம் சுத்தமடைந்து இறைவனுடன் உறவு வலுவடைகிறது. அத்துடன் தேவையற்ற விடயங்களில் ஈடுபாடு குறைவடைந்து, மனதும் அமைதியடைகிறது.

4) கருணை மற்றும் சமூக உணர்வு : பசியையும் தாகத்தையும் அனுபவிக்கும் போது, ஏழைகளின் நிலையை உணர முடிகிறது. இதனால் மனதில் இரக்கம் பெருகுகிறது. இவ்வுணர்வு மனிதனை தர்மங்கள் செய்ய தூண்டுகிறது. இதனால் குற்றங்கள் குறையவும் சகோதரத்துவ உணர்வு வலுப்பெறவும் வழியேற்படுகிறது.

5) நன்றியறிதல் ; இறைவன் எங்களுக்கு எவ்வளவு அருட்களை வழங்கியுள்ளான் என்பதை உணர்ந்து, சாதாரண வரங்களுக்கும் நன்றி செலுத்தப் பழகுகிறோம்.

6) பாவமன்னிப்பு மற்றும் உளச் சுத்திகரிப்பு : அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸின் போதனைகளின் அடிப்படையில், நோன்பு பாவங்களை மன்னிக்கச் செய்யும் ஒரு வழிமுறையாகக் காணப்படுகிறது. இதனால் நாம் செய்து பிழைகளை, பாவங்களை உணர்ந்து, அவற்றுக்காக பாவமன்னிப்புக் கோரி திருந்தி வாழ வழி கிட்டுகின்றது. அத்துடன் எமது உள்ளம் மற்றும் உடல் சுத்தமாகி, ஒரு புதிய வாழ்க்கை தொடங்க வாய்ப்புக் கிடைக்கிறது.


தொகுத்து நோக்குகின்ற போது, ரமழான் நோன்பு என்பது வெறும் பட்டினி கிடப்பது மாத்திரம் அல்ல. அது மனிதனை முழுமையாக மாற்றும் ஆன்மீக மற்றும் சமூகப் புரட்சியாகும். இதன்படி நோன்பானது உடலையும் உள்ளத்தையும் சுத்தம் செய்யும் மருத்துவமாகவும், பொருளாதாரத்தை சீர்செய்ய வழிசெய்யும் பொருளாதாரக் கொள்கையாகவும், குடும்பத்தையும் சமூகத்தை ஒன்றிணைக்கும் சமூக அரங்கமாகவும் மற்றும் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் ஆன்மிகப் பயிற்சிக் களமாகவும் காணப்படுகிறது. ஆன்மீக ரீதியாக அது உள்ளத்தை சுத்திகரித்து இறைவனுடன் உறவை வலுப்படுத்துகிறது. பொருளாதார ரீதியாக அது சிக்கனத்தை, சேமிப்பை, சமூக நலனைக் கொண்டுவருகிறது.

எனவே ரமழான் நோன்பானது ஒவ்வொரு தனிநபரையும், சமூகத்தையும் சீர்ப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் ஒரு உயரிய அரிய வாய்ப்பாகும். அதை உணர்வோடும், புரிதலோடும் மற்றும் பேணுதலோடும் கடைப்பிடித்து அதன் பலன்களை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.


M.S.M. Naseem  (SLTS )   Visiting Lecturer & Master Teacher (NIE)   




No comments:

Post a Comment