குறிப்பாக, COVID-19
பெருந்தொற்றுக் காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் இணையவழிக் கல்வியை விரிவாக
அறிமுகப்படுத்தின. இதன் மூலம் மாணவர்கள் தமது வீடுகளில் இருந்துகொண்டே பாடங்களைக்
கற்கவும், ஆசிரியர்களுடன்
தொடர்புகொள்ளவும், மின்னணுப்
பாடநூல்களைப் (E textbooks) பயன்படுத்தவும்
வாய்ப்புக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து டிஜிட்டல் தொழில்நுட்பமே எதிர்காலக்
கல்வியின் பிரதான அடித்தளம் என்ற கருத்தும் வலுப்பெற்றது.
எனினும், தொழில்நுட்ப
வளர்ச்சி கல்வியில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியிருந்தாலும், அது
மாணவர்களின் வாசிப்புப் புரிதல்,
நினைவாற்றல், கவனக்குவிப்பு, சுயசிந்தனை மற்றும்
கற்றல் பழக்கங்களில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள்
எழுந்துள்ளன. குறிப்பாக,
டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு உண்மையில் மாணவர்களின் கல்வி
அடைவுகளை மேம்படுத்துகின்றதா அல்லது சில சந்தர்ப்பங்களில் அவர்களின் அடிப்படைக் கற்றல்
திறன்களைப் பாதிக்கின்றதா என்ற விவாதம் சர்வதேசக் கல்வி அரங்கில் முக்கியத்துவம்
பெற்றுள்ளது.
இந்தப்
பின்னணியில், சுவீடன், பின்லாந்து, டென்மார்க், நோர்வே, பிரான்ஸ் போன்ற
ஐரோப்பிய நாடுகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கல்வியில் பயன்படுத்துவது தொடர்பாகத்
தமது கொள்கைகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள், கையெழுத்துப்
பயிற்சிகள், நேரடி
ஆசிரியர் வழிகாட்டல் மற்றும் ஆழமான வாசிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் மீண்டும்
வலியுறுத்தப்படுகின்றது.
இதனை வெறுமனே
தொழில்நுட்பத்திலிருந்து பாரம்பரியக் கல்விக்கான பின்னோக்கிய பயணமாகக் கருத
முடியாது. மாறாக, தொழில்நுட்பத்தின்
நன்மைகளையும் பாரம்பரியக் கற்றல் முறைகளின் வலிமைகளையும் ஒருங்கிணைத்து
மாணவர்களின் முழுமையான அறிவு வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான புதிய கல்விச்
சிந்தனையாகவே இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
1. ஐரோப்பிய
நாடுகளில் உருவாகிவரும் புதிய கல்வி விழிப்புணர்வு
கல்வித்துறையில்
உலகளாவிய முன்னுதாரணங்களாகக் கருதப்படும் சில ஐரோப்பிய நாடுகள், டிஜிட்டல்
சாதனங்களின் பயன்பாட்டை முழுமையாக நிராகரிக்காமல், அவற்றின் பயன்பாட்டை வயது, பாடத்துறை,
கற்றல் நோக்கம் மற்றும் மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தும்
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
1.1 சுவீடன்:
டிஜிட்டல்
கல்வியை மிக விரைவாக ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகளில் சுவீடனும் ஒன்றாகும்.
அந்நாட்டின் பாடசாலைகளில் கணினிகள் மற்றும் டெப்லெட்கள் பரவலாகப்
பயன்படுத்தப்பட்டன. ஆனால்,
சிறுவர்களின் வாசிப்புத் திறன்,
எழுத்தறிவு மற்றும் அடிப்படைக் கணிதத் திறன்கள் தொடர்பாக எழுந்த பிரச்சினைகளைத்
தொடர்ந்து, கல்வியில்
அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் கொள்கை
மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக, முன்பள்ளிக்
கல்வியில் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கியிருந்த அணுகுமுறை
மறுபரிசீலனை செய்யப்பட்டது. சிறுவர்கள் ஆரம்பக் கல்விப் பருவத்தில் புத்தகங்களை
நேரடியாக வாசிப்பதற்கும்,
கைகளால் எழுதிப் பழகுவதற்கும்,
ஆசிரியர்களுடன் நேரடியாகச் செயல்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட
வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது.
மேலும், அச்சிடப்பட்ட
பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் பெருமளவிலான நிதியை
ஒதுக்கி, பாடசாலைகளில்
புத்தகங்களின் கிடைப்புத்தன்மையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இதன்
அடிப்படையான நோக்கம், தொழில்நுட்பத்தை
முற்றிலும் அகற்றுவது அல்ல
மாறாக, சிறுவர்களின்
அடிப்படை எழுத்தறிவு மற்றும் வாசிப்புத் திறன்களை வளர்ப்பதில் அச்சிடப்பட்ட
புத்தகங்களுக்கு உரிய இடத்தை மீண்டும் வழங்குவதாகும்.
1.2 பின்லாந்து
உலகின் சிறந்த
கல்வி அமைப்புகளில் ஒன்றாகப் பின்லாந்து நீண்டகாலமாகப் புகழ்பெற்று வருகின்றது.
மாணவர் மையக் கற்றல், சமத்துவமான
கல்வி வாய்ப்புகள், ஆசிரியர்களின்
தொழில்முறைத் தகைமை மற்றும் சுயசிந்தனையை ஊக்குவிக்கும் கற்பித்தல் முறைகள் ஆகியவை
அதன் கல்வி வெற்றிக்கான முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.
எனினும், அண்மைக்காலங்களில்
மாணவர்களின் வாசிப்புத் திறன் மற்றும் கல்வி அடைவுகள் தொடர்பாக எழுந்துள்ள கவலைகள், டிஜிட்டல்
சாதனங்களின் பயன்பாடு தொடர்பான விவாதங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
குறிப்பாக, டிஜிட்டல் திரைகளில்
நீண்ட நேரம் வாசிப்பது,
இணையத்தில் பல்வேறு தகவல்களுக்கு இடையில் மாறிமாறிச் செல்வது, சமூக
ஊடகங்களால் ஏற்படும் கவனச்சிதறல்கள் போன்றவை மாணவர்களின் ஆழமான வாசிப்புப்
பழக்கத்தைப் பாதிக்கக்கூடும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.
இதனால், டிஜிட்டல் கற்றலுடன்
அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள்,
நூலக வாசிப்பு, கையெழுத்துப்
பயிற்சி மற்றும் நேரடி ஆசிரியர் வழிகாட்டல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் வழங்க
வேண்டியதன் அவசியம் அங்கு வலியுறுத்தப்படுகிறது.
1.3 பிரான்ஸ்:
கல்வியில்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அளவுக்கு மீறிய பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும்
நடவடிக்கைகளில் பிரான்ஸ் முக்கியமான எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
2018ஆம் ஆண்டு
முதல் பிரான்சின் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் கீழ்நிலை இடைநிலைப் பாடசாலைகளில்
மாணவர்கள் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு பொதுவான தடை அமுலில் இருந்து
வருகின்றது. பின்னர் 2025ஆம்
ஆண்டில் பாடசாலைகளில் கைப்பேசிகளை ஒதுக்கி வைக்கும் “Portable en pause” திட்டம் (பிரான்ஸ்
நாட்டின் பள்ளிகளில் மாணவர்களின் மொபைல் போன் பயன்பாட்டை முழுமையாகத் தடை
செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம்) விரிவுபடுத்தப்பட்டது.
மேலும், 2026ஆம்
கல்வியாண்டு ஆரம்பத்திலிருந்து இந்தக் கட்டுப்பாடு உயர்நிலைப் பாடசாலைகளுக்கும்
விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி,
பாடசாலைகளின் உள்விதிகளுக்கு ஏற்ப மாணவர்கள் தமது கைப்பேசிகளைப்
பயன்படுத்தாமல் ஒதுக்கி வைக்க வேண்டும்.
இந்த
நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களாக மாணவர்களின் வகுப்பறைக் கவனத்தை அதிகரித்தல், சமூக
ஊடகங்களால் ஏற்படும் கவனச்சிதறல்களைக் குறைத்தல், இணையவழித் தொல்லைகள் மற்றும்
பொருத்தமற்ற உள்ளடக்கங்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாத்தல், மாணவர்களுக்கிடையிலான
நேரடி சமூக உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் கற்றலுக்கு ஏற்ற அமைதியான சூழலை
உருவாக்குதல் என்பன காணப்படுகின்றன.
1.4 டென்மார்க்:
டிஜிட்டல்
தொழில்நுட்பத்தை கல்வியில் விரிவாகப் பயன்படுத்திய நாடுகளில் டென்மார்க்கும்
ஒன்றாகும். இருப்பினும்,
மாணவர்களின் வாசிப்புப் பழக்கம்,
கவனக்குவிப்பு மற்றும் அடிப்படைக் கற்றல் திறன்கள் தொடர்பாக எழுந்துள்ள
கவலைகள் காரணமாக, பாடசாலைகளில்
திரைப் பயன்பாட்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான விவாதங்கள்
அதிகரித்துள்ளன.
டிஜிட்டல்
சாதனங்களைப் பயன்படுத்தும்போது மாணவர்கள் பாடத்துடன் தொடர்புடைய தகவல்களை மட்டுமன்றி, விளையாட்டுகள், சமூக ஊடகங்கள்
மற்றும் ஏனைய இணைய உள்ளடக்கங்களையும் அணுகக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதனால், கற்றல்
நடவடிக்கைகளிலிருந்து அவர்களின் கவனம் திசைதிரும்புவதற்கான வாய்ப்புகள்
அதிகரிக்கின்றன.
உதாரணமாக, ஒரு மாணவர் மடிக்கணினியில்
வரலாற்றுப் பாடத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போது, சமூக ஊடக விளம்பரன்று தோன்றினால், அவர்
பாடத்திலிருந்து கவனத்தை மாற்றக்கூடும். இவ்வாறான தொடர்ச்சியான கவன மாற்றங்கள்
ஆழமான கற்றலுக்குத் தடையாக அமையலாம்.
எனவே, அச்சிடப்பட்ட
பாடப்புத்தகங்கள், கையெழுத்துப்
பயிற்சிகள் மற்றும் நூலக வாசிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் மீண்டும்
வலியுறுத்தப்படுகின்றது.
1.5 நோர்வே:
நோர்வேயிலும்
டிஜிட்டல் கல்வி தொடர்பான அணுகுமுறைகள் மீளாய்வு செய்யப்படுகின்றன. குறிப்பாக, மாணவர்களின்
வாசிப்புத் திறன் மற்றும் கற்றல் அடைவுகளை மேம்படுத்துவதற்காக அச்சிடப்பட்ட
பாடப்புத்தகங்களுக்கும் நேரடி வாசிப்புப் பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம்
வழங்கப்பட வேண்டுமென்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
மாணவர்கள்
டிஜிட்டல் திரைகளில் தகவல்களை விரைவாகத் தேடிக் கண்டுபிடிக்கும் திறனைப்
பெற்றிருப்பது பயனுள்ளதாக இருந்தாலும்,
நீண்ட கட்டுரைகளை வாசித்து அவற்றின் மையக்கருத்தைப் புரிந்துகொள்ளுதல், கருத்துக்களை
ஒப்பிட்டு ஆராய்தல், விமர்சன
ரீதியாகச் சிந்தித்தல் போன்ற திறன்கள் தனியான பயிற்சிகளை வேண்டுகின்றன.
உதாரணமாக, ஒரு மாணவர்
இணையத்தில் ஒரு வரலாற்றுச் சம்பவம் தொடர்பான பத்து வரிகளை வாசித்துவிட்டு அடுத்த
தகவலுக்குச் செல்லலாம். ஆனால்,
அச்சிடப்பட்ட புத்தகத்தில் அதே சம்பவம் தொடர்பான விரிவான அத்தியாயத்தை
வாசிக்கும்போது, அதன்
காரணங்கள், விளைவுகள்
மற்றும் வரலாற்றுப் பின்னணியை ஆழமாக ஆராய்வதற்கான வாய்ப்புக் கிடைக்கலாம்.
இதனால், டிஜிட்டல் வாசிப்புடன்
அச்சிடப்பட்ட புத்தக வாசிப்பையும் இணைத்துக் கற்பிப்பது முக்கியமானதாகக்
கருதப்படுகின்றது.
2. ஏன் உலகம்
மீண்டும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது?
மேற்குறிப்பிட்ட
நாடுகளின் கல்வி அணுகுமுறைகளில் காணப்படும் மாற்றங்களுக்குப் பின்னால் பல்வேறு
கல்வியியல், உளவியல்
மற்றும் நரம்பியல் சார்ந்த காரணிகள் உள்ளன.
2.1 வாசிப்புப்
புரிதல் மற்றும் ஆழமான கற்றல்
கல்வியின்
அடிப்படை நோக்கம் மாணவர்கள் தகவல்களை மனப்பாடம் செய்வது மட்டுமல்ல. மாறாக, அவற்றைப்
புரிந்துகொண்டு, பகுப்பாய்வு
செய்து, புதிய சூழல்களில்
பயன்படுத்தக்கூடிய திறனை வளர்ப்பதாகும்.
இந்த
நோக்கத்தில் வாசிப்புப் புரிதல் (Reading
Comprehension) மிக முக்கியமானதாகும்.
அச்சிடப்பட்ட
புத்தகத்தில் ஒரு கட்டுரையை வாசிக்கும்போது,
மாணவர் பக்கத்தின் அமைப்பு,
பந்திகள், தலைப்புகள்
மற்றும் பக்கங்களின் தொடர்ச்சி ஆகியவற்றை இயல்பாக உணர முடிகின்றது. குறிப்பிட்ட
தகவல் எந்தப் பக்கத்தில் இருந்தது,
எந்தப் பந்தியில் விளக்கப்பட்டது என்பதையும் இடவியல் அடிப்படையில்
நினைவுகூருவதற்கு இது உதவக்கூடும்.
மறுபுறம், டிஜிட்டல்
திரையில் நீண்ட ஆவணங்களை வாசிக்கும்போது தொடர்ந்து மேலே, கீழே
நகர்த்துதல் (Scrolling),
பல Windows
அல்லது பக்கங்களுக்கு இடையில்
மாறுதல் மற்றும் அறிவிப்புகளால் ஏற்படும் கவனச்சிதறல்கள் வாசிப்பின் தொடர்ச்சியைப்
பாதிக்கக்கூடும்.
2021ஆம் ஆண்டில் Review of Educational Research ஆய்விதழில்
வெளியிடப்பட்ட "A Comparison of Children's Reading on Paper Versus
Screen: A Meta-Analysis"
எனும் ஆய்வில்,
ஒரே உள்ளடக்கத்தை அச்சு வடிவிலும் டிஜிட்டல் வடிவிலும் வழங்கிய சில சூழல்களில்
அச்சுப் புத்தகங்களை வாசித்த சிறுவர்கள் சிறந்த புரிதல் மதிப்பெண்களைப்
பெற்றிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவ்வாய்வு 1,812 சிறுவர்களை உள்ளடக்கிய 39 ஆய்வுகளைப் பகுப்பாய்வு செய்திருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும். எனினும்,
பொருத்தமான ஊடக அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் புத்தகங்களும் சில
சூழல்களில் சிறந்த விளைவுகளை வழங்கியுள்ளன.
எனவே, அச்சுப்
புத்தகங்கள் எல்லாச் சூழல்களிலும் டிஜிட்டல் புத்தகங்களை விடச் சிறந்தவை என்று
பொதுமைப்படுத்த முடியாது. இருப்பினும்,
குறிப்பாகச் சிறுவர்களின் அடிப்படை வாசிப்புப் புரிதலை வளர்ப்பதில் அச்சுப்
புத்தகங்களுக்கு முக்கியமான பங்கு இருப்பது ஆய்வுகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2.2 கையெழுத்துப்
பயிற்சியும் நினைவாற்றல் வளர்ச்சியும்
கையால்
எழுதுதல் என்பது வெறுமனே எழுத்துக்களை உருவாக்கும் செயல்முறை மட்டுமல்ல. அது மூளை, கண்கள், விரல்கள்
மற்றும் உடல் இயக்க ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலான கற்றல்
நடவடிக்கையாகும்.
ஒரு மாணவர்
ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தைத் தனது கொப்பியில் எழுதும்போது, அவர் கேட்கும்
தகவல்களைப் புரிந்துகொள்ளவும்,
முக்கியமான கருத்துக்களைத் தெரிவுசெய்யவும், அவற்றைத் தனது சொந்த மொழியில் சுருக்கமாகப் பதிவு செய்யவும்
வேண்டியுள்ளது. இந்தச் செயல்முறை தகவல்களைச் சிந்தித்துப் புரிந்துகொள்ள
உதவுகின்றது.
கல்லூரி
மாணவர்கள் விரிவுரைகளின்
போது மடிக் கணினி
மூலம் குறிப்புகளைத் தட்டச்சு
செய்வதா அல்லது பேனாவால் கையால்
எழுதுவதா சிறந்தது? என்பது பற்றிய 2024ஆம் ஆண்டில் Educational Psychology Review ஆய்விதழில்
வெளியிடப்பட்ட Flanigan
மற்றும் ஏனைய ஆய்வாளர்களின் ஆய்வு,
கையால் எழுதப்பட்ட குறிப்புகளை மீளாய்வு செய்வது கல்லூரி மாணவர்களின் கல்விச்
சாதனைக்கு சாதகமாக இருந்ததைக் வெளிப்படுத்தியது.
உதாரணமாக, ஒரு
ஆசிரியர் அரசியல் விஞ்ஞானப் பாடத்தில் 'ஜனநாயகம்' என்ற தலைப்பைக்
கற்பிக்கின்றார் எனக் கருதுவோம். மாணவர் ஆசிரியர் கூறும் அனைத்தையும் கணினியில்
அப்படியே தட்டச்சு செய்வதற்குப் பதிலாக,
ஜனநாயகத்தின் வரைவிலக்கணம்,
அடிப்படைக் கோட்பாடுகள்,
பண்புகள் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைத் தனது சொந்த மொழியில் கொப்பியில்
எழுதினால், அவர்
பாடக்கருத்துக்களைச் சிந்தித்துப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பைப் பெறுகின்றார்.
எனவே, ஆரம்பக் கல்வி
முதல் உயர்கல்வி வரை கையெழுத்துப் பயிற்சிக்கு உரிய இடம் வழங்கப்படுவது
அவசியமாகும்.
2.3 கவனக்குவிப்பு
மற்றும் மன ஒருமைப்பாடு
டிஜிட்டல்
சாதனங்களின் முக்கியமான சவால்களில் ஒன்று அவை ஏற்படுத்தக்கூடிய கவனச்சிதறலாகும். குறிப்பாக, கையடக்கத்
தொலைபேசிகளில் தோன்றும் சமூக ஊடக அறிவிப்புகள், குறுஞ்செய்திகள்,
விளையாட்டு அறிவிப்புகள் மற்றும் காணொளிப் பரிந்துரைகள் மாணவர்களின் கவனத்தைத்
திசைதிருப்பக்கூடும்.
உதாரணமாக, ஒரு மாணவர் 30 நிமிடங்கள்
கணிதப் பாடத்தைப் படிப்பதற்காகக் கணினியின் முன்னால் அமர்ந்திருக்கின்றார் எனக்
கொள்வோம். அந்த நேரத்தில் அவர் அடிக்கடி இணையப் பக்கங்களை மாற்றிப் பார்ப்பதோ
அல்லது சமூக ஊடகங்களைப் பார்ப்பதோ செய்தால்,
அவர் செலவிடும் நேரத்தின் பெரும்பகுதி உண்மையான கற்றலுக்குப்
பயன்படுத்தப்படாமல் போகலாம்.
இதற்கு மாறாக, பாடப்புத்தகம், கொப்பி மற்றும்
பேனா ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பாடத்தை வாசிக்கும் போது
தேவையற்ற அறிவிப்புகள் மற்றும் இணையக் கவனச்சிதறல்கள் குறைவாக இருக்கும்.
இதனால், மாணவர் ஒரு
குறிப்பிட்ட பாடப்பகுதியில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பைப்
பெறுகின்றார்.
2.4 கண்
ஆரோக்கியமும் உடல் நலமும்
தொடர்ச்சியாக
நீண்ட நேரம் டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பது மாணவர்களிடம் கண் சோர்வு, கண் வறட்சி, தலைவலி மற்றும்
பார்வை அசௌகரியம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, திரையைப்
பார்க்கும்போது கண் இமைக்கும் எண்ணிக்கை குறையக்கூடும். இதனால் கண்களில் வறட்சி
மற்றும் சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
மேலும், நீண்ட நேரம்
ஒரே நிலையில் அமர்ந்து மடிக்கணினி அல்லது டெப்பினை பயன்படுத்துவது கழுத்து, தோள்பட்டை
மற்றும் முதுகுப் பகுதிகளில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இரவு நேரங்களில்
அதிகமாகத் திரைகளைப் பயன்படுத்துவது தூக்கத்தையும் பாதிக்கக்கூடும்.
எனவே அச்சிடப்பட்ட
புத்தகங்களை பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான பாதிப்புக்களிலிருந்து விடுபட
முடியுமாக இருக்கும்.
2.5 கற்பனைத்
திறன் மற்றும் படைப்பாற்றல் வளர்ச்சி
அச்சிடப்பட்ட
புத்தகங்களை வாசிப்பது மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பதற்கும் உதவுகின்றது.
உதாரணமாக, ஒரு மாணவர் ஒரு
கதையை வாசிக்கும்போது அதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், இடங்கள், சம்பவங்கள்
மற்றும் உணர்வுகளைத் தனது மனதில் கற்பனை செய்து கொள்கின்றார்.
ஆனால், காணொளி வடிவில்
அதே கதையைப் பார்க்கும்போது காட்சிகள் ஏற்கனவே உருவாக்கப்பட்ட நிலையில் அவருக்கு
வழங்கப்படுகின்றன.
இதனால், வாசிப்பு
நடவடிக்கை மாணவர்களுக்குத் தமது சொந்த மனக்காட்சிகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை
வழங்குகின்றது. குறிப்பாக இலக்கியம்,
வரலாறு, சமூகவியல்
மற்றும் அரசியல் விஞ்ஞானம் போன்ற பாடங்களில் இது முக்கியத்துவம் பெறுகின்றது.
3. டிஜிட்டல்
கல்வியின் நன்மைகளை முற்றாக நிராகரிக்க முடியுமா?
டிஜிட்டல்
தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அதனை முற்றாக
நிராகரிப்பது சரியான கல்வி அணுகுமுறையாக அமையாது. ஏனெனில், நவீன உலகில்
தொழில்நுட்ப அறிவு என்பது மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் திறன்களில்
ஒன்றாக மாறியுள்ளது.
இதன்படி, டிஜிட்டல்
கல்வியால் பல நன்மைகளும் கிடைக்கக்கூடியதாகவே உள்ளது. அவற்றில் முக்கியமானவையாக
பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. தகவல்களை
விரைவாகப் பெற்றுக்கொள்ளுதல்: இணையத்தின் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில்
காணப்படும் தகவல்களையும் ஆய்வுகளையும் மாணவர்கள் குறுகிய நேரத்தில் பெற்றுக்கொள்ள
முடியும்.
2. காட்சிவழிக்
கற்றல்: அணுக்களின் கட்டமைப்பு,
மனித உடலின் செயற்பாடுகள்,
சூரியக் குடும்பம் போன்ற பல விடயங்களை முப்பரிமாணக் காட்சிகள் மற்றும்
அனிமேஷன்கள் மூலம் விளக்க முடியும்.
3. தொலைதூரக்
கல்வி: புவியியல் ரீதியாகத் தொலைவில் வாழும் மாணவர்களும் இணையவழிக் கற்றல் மூலம்
தரமான கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
4. தனிப்பட்ட
கற்றல்: மாணவர்களின் கற்றல் வேகம் மற்றும் திறன்களுக்கு ஏற்ப காணொளிகள், பயிற்சிகள்
மற்றும் டிஜிட்டல் கற்றல் வளங்களைப் பயன்படுத்த முடியும்.
5. உலகளாவிய
அறிவைப் பெற்றுக்கொள்ளுதல்: சர்வதேச நூலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வுத் தரவுத்தளங்களை அணுகுவதன்
மூலம் மாணவர்கள் தமது அறிவை விரிவுபடுத்த முடியும்.
உதாரணமாக, இலங்கையில்
உயர்தரத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்கும் மாணவர் ஒருவர் அமெரிக்காவின் சமஷ்டி அரசாங்க
முறையைப் புரிந்துகொள்ள விரும்பினால்,
அமெரிக்க காங்கிரஸின் இணையத்தளம்,
அரசியலமைப்புச் சட்ட ஆவணங்கள்,
கல்வி விளக்கக் காணொளிகள் மற்றும் சர்வதேச ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றைப்
பயன்படுத்த முடியும்.
எனவே, டிஜிட்டல்
தொழில்நுட்பம் கல்வியின் முக்கியமான துணைக் கருவியாகத் தொடர்ந்து இருக்க வேண்டும்.
ஆனால், அது
அடிப்படையான வாசிப்பு, எழுத்து
மற்றும் சிந்தனைத் திறன்களுக்கு மாற்றாக அமையக்கூடாது.
4. சர்வதேச
ஆய்வுகள் உணர்த்தும் முக்கியமான பாடங்கள்
அச்சிடப்பட்ட
புத்தகங்களுக்கும் டிஜிட்டல் வாசிப்புக்கும் இடையிலான வேறுபாடுகள் தொடர்பாகப்
பல்வேறு சர்வதேச ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கியமான ஆய்வு
முடிவுகள் பின்வருமாறு:
அ. 2019ஆம் ஆண்டின்
ஆய்வு
Virginia Clinton மேற்கொண்ட
Reading from Paper
Compared to Screens: A Systematic Review and Meta-analysis என்ற
ஆய்வு, காகிதத்தில்
வாசிப்பதற்கும் திரையில் வாசிப்பதற்கும் இடையிலான வேறுபாடுகளை ஆராய்ந்தது.
குறிப்பாக, தகவல்
சார்ந்த நீண்ட உரைகளை வாசிக்கும் போதும்,
குறுகிய நேரத்தில் தகவல்களைப் புரிந்துகொள்ள வேண்டிய சூழல்களிலும் காகித
வாசிப்புக்குச் சாதகமான விளைவுகள் இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டியது.
ஆ. 2021ஆம் ஆண்டின்
சிறுவர்களுக்கான வாசிப்பு ஆய்வு
சிறுவர்கள்
புத்தகங்களை வாசிக்கும்போது,
பாரம்பரிய அச்சுப் புத்தகங்கள்
மற்றும் டிஜிட்டல் புத்தகங்கள் ஆகிய இரண்டிற் இடையே அவர்களின் கற்றல் மற்றும் புரிதலில் என்னென்ன வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்பது பற்றி, Furenes, Kucirkova மற்றும்
A.G.
Bus ஆகிய
ஆய்வாளர்கள் மேற்கொண்ட "A Comparison of Children’s Reading Experience Across
E-Books and Paper Books: A Meta-Analysis" எனும் ஆய்வு , சிறுவர்களின்
கற்றலில் அச்சுப் புத்தகங்களுக்கும் டிஜிட்டல் புத்தகங்களுக்கும் இடையிலான
வேறுபாட்டை ஆராய்ந்தது. இதன்படி, ஒரு புத்தகத்தின் அச்சு வடிவத்தை அப்படியே
எந்தவித மாற்றமும் இல்லாமல் டிஜிட்டல் வடிவமாக மாற்றிச்
சிறுவர்களிடம் வாசிக்கக் கொடுத்தபோது,
அச்சுப் புத்தகங்களை வாசித்த சிறுவர்களுக்கே கதையின் புரிதல் திறன் மிகச்
சிறந்ததாக இருந்தது.
இ. 2024ஆம் ஆண்டின்
கையெழுத்துப் பயிற்சி ஆய்வு
Abraham E. Flanigan மற்றும்
அவர்களது குழுவினர் 2024
ஆம் ஆண்டு Educational
Psychology Review இதழில் வெளியிட்ட "Typed Versus Handwritten Lecture Notes and College
Student Achievement: A Meta-Analysis" என்ற ஆய்வு, கையால்
எழுதப்பட்ட குறிப்புகளைப் பயன்படுத்தி மீளாய்வு செய்வது கல்லூரி மாணவர்களின்
கல்விச் சாதனைக்கு உதவுவதாகக் குறிப்பிட்டது.
ஈ. 2024ஆம் ஆண்டின்
காகிதம் மற்றும் டிஜிட்டல் வாசிப்பு ஆய்வு
37 பரிசோதனை
ஆய்வுகளை உள்ளடக்கிய (Paper vs. Digital Reading: A Meta-Analysis - 2024) எனும் ஆய்வு, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது காகித வாசிப்புக்கும்
டிஜிட்டல் வாசிப்புக்கும் இடையில் எல்லாச் சூழல்களிலும் ஒரே மாதிரியான குறிப்பிடத்தக்க
வேறுபாடு இல்லை எனக் குறிப்பிட்டது. அதேவேளை, வாசகர்களின் வயது,
வாசிப்பு உள்ளடக்கம் மற்றும் வாசிப்புச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இரு
முறைகளினதும் பயன்கள் மாறுபடுகின்றன என்றும் விளக்கியது.
இந்த ஆய்வுகள்
அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது,
கல்வியில் ஒரு குறிப்பிட்ட கற்றல் முறையை மட்டும் சிறந்தது எனக் கூறுவதைவிட, கற்றல்
நோக்கத்திற்கு ஏற்ற ஊடகத்தைத் தெரிவுசெய்வதே அறிவியல் ரீதியான அணுகுமுறையாக
அமைகின்றது.
5. இலங்கை கல்வி
முறைக்கு இம்மாற்றம் உணர்த்தும் பாடங்கள்
இலங்கை தற்போது
கல்வி மறுசீரமைப்பு, டிஜிட்டல்
கல்வி விரிவாக்கம் மற்றும் மாணவர்களின் திறன் அடிப்படையிலான கற்றல் போன்ற பல்வேறு
மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்றது.
இத்தகைய
சூழலில், ஐரோப்பிய
நாடுகளின் அனுபவங்கள் இலங்கைக்கும் பல முக்கியமான பாடங்களை வழங்குகின்றன.
5.1 ஆரம்பக் கல்வியில்
அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு முன்னுரிமை
ஆரம்பக்
கல்விப் பருவம் என்பது குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்புத்
திறன், மொழித்திறன்
மற்றும் எண்ணறிவுத் திறன் உருவாகும் முக்கியமான காலப்பகுதியாகும்.
எனவே, முதலாம்
வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையான ஆரம்பக் கல்வியில் அச்சிடப்பட்ட
பாடப்புத்தகங்கள், பயிற்சிக்
கொப்பிகள், கையெழுத்துப்
பயிற்சிகள் மற்றும் நூலக வாசிப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட
வேண்டும்.
உதாரணமாக, முதலாம்
வகுப்பு மாணவர் ஒருவர் எழுத்துக்களை டெப்பில் விரலால் அடையாளம் காண்பதைவிட, பென்சிலைப்
பயன்படுத்தி கொப்பியில் எழுதி,
அவற்றை வாசித்துப் பழகுவது அடிப்படை எழுத்துத் திறனை வளர்ப்பதற்கு
உதவக்கூடும்.
5.2 பாடசாலை
நூலகங்களை வலுப்படுத்துதல்
இலங்கையின்
பாடசாலைகளில் நூலக வசதிகளை மேம்படுத்துவது மிக முக்கியமானதாகும். ஒவ்வொரு
பாடசாலையிலும் மாணவர்களின் வயது மற்றும் கல்வி நிலைக்கு ஏற்ற நூல்கள்
கிடைக்கக்கூடிய வகையில் நூலகங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அத்துடன், வாராந்தம்
கட்டாய வாசிப்பு நேரம் ஒன்றை அறிமுகப்படுத்தலாம்.
உதாரணமாக, வாரத்தில்
ஒரு பாடவேளையை நூலக வாசிப்புக்காக ஒதுக்குதல், மாதாந்தம் ஒரு புத்தகத்தை வாசித்து
அதன் சுருக்கத்தை எழுதச் செய்தல், வாசித்த நூல் தொடர்பாக மாணவர்களிடையே
கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல் மற்றும் சிறந்த வாசிப்பு மற்றும் நூல்
விமர்சனத்திற்குப் பரிசுகள் வழங்குதல்.
இவ்வாறான
நடவடிக்கைகள் மாணவர்களிடம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய வாசிப்புப் பழக்கத்தை
உருவாக்க உதவும்.
5.3 கையெழுத்துப்
பயிற்சியை மீண்டும் வலுப்படுத்துதல்
இன்றைய
மாணவர்கள் பலரும் தட்டச்சு செய்வதற்குப் பழக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கையெழுத்துப்
பயிற்சி என்பது அடிப்படைக் கல்வியின் இன்றியமையாத அங்கமாகும். குறிப்பாக, இலங்கையின்
தேசிய மொழிகளான தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் எழுத்துக்களைச் சரியாக எழுதுதல், சொற்களைப்
பிழையின்றி அமைத்தல், வாக்கியங்களை
உருவாக்குதல் மற்றும் கருத்துக்களைத் தொடர்ச்சியாக எழுதுதல் போன்ற திறன்கள்
கையெழுத்துப் பயிற்சியின் மூலம் மேம்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, க.பொ.த. சாதாரண
தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் நீண்ட விடைகளை எழுத வேண்டிய மாணவர்களுக்கு
கையெழுத்துப் பயிற்சி மிகவும் அவசியமானதாகும்.
5.4 ஆசிரியர்களின்
கற்பித்தல் முறைகளில் சமநிலையை உருவாக்குதல்
ஆசிரியர்கள் கற்பித்தல்
நடவடிக்கைகளில் டிஜிட்டல் கருவிகளையும் பாரம்பரியக் கற்பித்தல் கருவிகளையும்
பொருத்தமான முறையில் பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக, வரலாற்றுப்
பாடத்தில் இரண்டாம் உலகப் போரைப் பற்றிக் கற்பிக்கும்போது, போரின் முக்கிய
நிகழ்வுகளை விளக்குவதற்கு காணொளிகளைப் பயன்படுத்தலாம். ஆனால், அதே பாடத்தின்
காரணங்கள், விளைவுகள், சர்வதேச
அரசியல் மாற்றங்கள் மற்றும் வரலாற்று மதிப்பீடுகள் போன்றவற்றை மாணவர்கள்
அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களின் ஊடாக வாசித்து, குறிப்புகள் எழுதி,
கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளையும் வழங்க வேண்டும்.
இதன் மூலம்
காட்சிவழிக் கற்றல், வாசிப்புப்
புரிதல், பகுப்பாய்வுச்
சிந்தனை மற்றும் எழுத்துத் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்க முடியும்.
5.5 பெற்றோர்களின்
பொறுப்பும் குடும்ப வாசிப்புப் பழக்கமும்
மாணவர்களின்
கற்றல் வளர்ச்சியில் பாடசாலைகளைப் போலவே குடும்பங்களுக்கும் முக்கியமான பங்கு
உண்டு. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு விலையுயர்ந்த டிஜிட்டல் சாதனங்களை
வழங்குவதுடன் மட்டும் தமது பொறுப்பு நிறைவடைந்துவிட்டதாகக் கருதக்கூடாது. அவர்களுக்குப்
புத்தகங்களை வாங்கிக் கொடுத்தல்,
தினமும் குறிப்பிட்ட நேரத்தை வாசிப்புக்காக ஒதுக்குதல், பிள்ளைகளுடன்
இணைந்து கதைகளை வாசித்தல் மற்றும் வாசித்த விடயங்களைப் பற்றி உரையாடுதல் போன்ற
நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஒரு
குடும்பத்தில் தினமும் இரவு உணவுக்குப் பின்னர் 20 நிமிடங்கள் அனைவரும் கைப்பேசிகளை ஒதுக்கிவைத்துவிட்டு
புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கலாம். இவ்வாறான சிறிய நடைமுறைகள்
குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தில் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
எதிர்காலக்
கல்வி எவ்வாறு அமைய வேண்டும்?
எதிர்காலக்
கல்வியானது முழுமையான டிஜிட்டல் கல்வியாகவோ அல்லது முழுமையான பாரம்பரியக்
கல்வியாகவோ அமைவது சாத்தியமற்றது. மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு
மற்றும் ஆளுமை வளர்ச்சியை முழுமையாகக் கட்டியெழுப்ப இவ்விரு அமைப்புகளின்
நன்மைகளையும் ஒருங்கிணைத்த ஒரு சமநிலையான அணுகுமுறையே அவசியமாகிறது.
கற்றல்
செயற்பாடுகளின் தன்மையைப் பொறுத்து பொருத்தமான அணுகுமுறையைப் பயன்படுத்துவது
வகுப்பறைச் சூழலை மேலும் திறம்பட மாற்றும்:
அடிப்படை
அறிவும் ஆழமான வாசிப்பும்: ஆரம்ப எழுத்தறிவு,
கையெழுத்துப் பயிற்சி மற்றும் ஆழமான வாசிப்புப் பழக்கம் ஆகியவற்றுக்கு அச்சுப்
புத்தகங்களும் அச்சிடப்பட்ட நூல்களுமே முதன்மையானவை. இவை மாணவர்களின் கவனக்
குவிப்பையும் சிந்தனை திறனையும் வளர்க்கின்றன.
கருத்துப்
பகுப்பாய்வும் கணிதப் பயிற்சியும்: கணிதப் பயிற்சிகளுக்குக் கொப்பிகளுடன்
தேவைக்கேற்ப டிஜிட்டல் கருவிகளையும்,
கருத்துப் பகுப்பாய்வுக்கு வாசிப்பு,
குறிப்பெழுதுதல் மற்றும் நேரில் கலந்துரையாடும் முறைகளையும் பயன்படுத்துவது
சிந்தனை ஆழத்தை அதிகரிக்கும்.
அறிவியல்
மற்றும் தகவல் தேடல்: அறிவியல் விளக்கங்களை எளிதாகப் புரிந்து கொள்ள
புத்தகங்களுடன் அனிமேஷன் மற்றும் காட்சி ஊடகங்கள் உதவுகின்றன. அதேவேளை, தகவல்
தேடலுக்கு இணையம் மற்றும் மின்னணு நூலகங்கள் விரைவான ஆதாரங்களை வழங்குகின்றன.
டிஜிட்டல்
திறன்: நவீன உலகிற்குத் தேவையான கணினிப் பயன்பாடு, இணையம் மற்றும் கல்விச் சார்ந்த மென்பொருள்களைக் கையாளும்
திறனை வளர்ப்பது இன்றியமையாததாகும்.
இவ்வாறான
ஒருங்கிணைந்த கற்றல் அணுகுமுறையே மாணவர்களைத் தொழில்நுட்ப அறிவோடு, பகுத்தறிவு
மற்றும் சமூக ஆளுமை மிக்கவர்களாக உருவாக்கி எதிர்கால உலகின் சவால்களை எதிர்கொள்ள
முழுமையாகத் தயார்படுத்தும்.இவ்வாறான ஒருங்கிணைந்த அணுகுமுறையே மாணவர்களை எதிர்கால
உலகின் சவால்களை எதிர்கொள்ளத் தயார்படுத்தும்.
தொகுத்து
நோக்குகின்றபோது, கல்வித்துறையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த
முடியாது. அதனைத் தடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், தொழில்நுட்ப
வளர்ச்சி என்பது கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரே அளவுகோல் அல்ல என்பதை
உலகின் கல்வி அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
எனவே, நமது கல்வி
முறையில் தொழில்நுட்பத்தையும் பாரம்பரியக் கற்றல் முறைகளையும் ஒன்றுக்கொன்று
எதிரானவையாகப் பார்க்காமல்,
ஒன்றையொன்று பூர்த்திசெய்யும் கருவிகளாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, குழந்தைகளின்
ஆரம்பக் கல்வியில் புத்தக வாசிப்பு,
கையெழுத்துப் பயிற்சி,
மொழித்திறன் மற்றும் சுயசிந்தனை ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
ஏனெனில், கல்வியின்
உண்மையான நோக்கம் மாணவர்களின் கைகளில் சாதனங்களை வழங்குவது மட்டுமல்ல; அவர்களின்
மனங்களில் அறிவையும், சிந்தனையையும், பகுத்தறிவையும்
வளர்ப்பதாகும்.
“தொழில்நுட்பம்
அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான கதவுகளைத் திறக்கலாம். ஆனால், அந்த அறிவைப்
புரிந்துகொண்டு, சிந்தித்து, வாழ்க்கையில்
பயன்படுத்தக்கூடிய ஆற்றலை வளர்ப்பதில் வாசிப்பும் எழுத்தும் ஆழமான பங்காற்றுகின்றன.
டிஜிட்டல் திரைகள் நவீன உலகின் தேவையாக இருக்கலாம்; ஆனால் அச்சிடப்பட்ட புத்தகங்கள் அறிவார்ந்த தலைமுறையை
உருவாக்குவதற்கான அடிப்படைத் துணையாகத் தொடர்ந்து இருக்க வேண்டும்.”
கட்டுரை ஆசிரியர்: MSM. Naseem - Visiting Lecturer (NIE)
உசாத்துணை
ஆய்வுகள் மற்றும் தகவல் மூலங்கள்
1) Furenes, M. I., Kucirkova, N., & Bus, A. G. (2021). A Comparison of Children's Reading on Paper Versus Screen: A Meta-Analysis. Review of Educational Research. DOI:10.3102/0034654321998074
2) Clinton, V. (2019). Reading from Paper Compared to Screens: A Systematic Review and Meta-Analysis. Journal of Research in Reading.
3) Flanigan, A. E. et al. (2024). Typed Versus Handwritten Lecture Notes and College Student Achievement: A Meta-Analysis. Educational Psychology Review. DOI:10.1007/s10648-024-09914-w
4) Which Reading Comprehension Is Better? A Meta-analysis of the Effect of Paper Versus Digital Reading in Recent 20 Years (2024). DOI:10.1016/j.teler.2024.100142
5) Reading from Paper Compared to Screens: A Systematic Review and Meta-Analysis. DOI:10.1111/1467-9817.12269
6) France’s Mobile Phone Ban ("Pause Numérique" / "Portable en Pause"). https://www.theguardian.com/world/article/2024/aug/27/france-to-trial-ban-on-mobile-phones-at-school-for-children-under-15
7)
Sweden’s Policy Shift Toward Paper Books (Sweden's Return
to Paper Books). https://www.theguardian.com/world/2023/sep/11/sweden-says-back-to-basics-schooling-works-on-paper

No comments:
Post a Comment