இலங்கை தென் ஆசியாப்
பிராந்தியத்தில் அமைந்துள்ள பன்மைத்துவ சமூக அமைப்பைக் (plural
communities status) கொண்ட ஒரு நாடாகும். இங்கு சிங்களவர், இந்துக்கள், முஸ்லிம்கள், கிரிஸ்தவர்கள் போன்ற இனக் குழுமங்கள் வாழ்ந்து வருகின்றன.
ஒவ்வொரு இனமும் இந்நாட்டில் தொன்மை வரலாற்றினைக் கொண்டு காணப்படுவது அடையாளமிட்டுக்
கூறப்படவேண்டிய சிறப்பம்சமாகும். முஸ்லிம்கள் இந்நாட்டில் பூர்வீக வரலாற்றைக் கொண்ட
சமூகம் என்பதையும் இத்தேசத்தை சகல விதத்திலும் கட்டியெழுப்புவதில் தொன்மைக் காலம் முதல்
இற்றை வரை பாரிய பங்களிப்புக்களை ஆற்றி வருகின்றனர் என்பதும் வரலாற்று சான்றாதாரங்களின்
பின்னணியில் நிரூபனமான ஒன்றாகும்.
கண்டெடுக்கப்பட்ட மீஸான் கட்டைகள் மீது எழுதப்பட்ட
அச்சரங்கள், தொன்மையியல் தொர்பான
ஆய்வுகள், நூல்கள் ,சஞ்சிகைகள் என்பன முஸ்லிம்களின் தொன்மையையும் அவர்களின்
பங்களிப்புக்களையும் சான்றுபகர்கின்றன. அண்மைக்காலமாக இனத்துவ அடையாளம் பூசிக்கொண்ட
சிலர் முஸ்லிம்களின் தொன்மை வரலாற்றின் இருப்பை மறுதளித்தும் மலினப்படுத்தும் நடவடிக்கைகளிலும்
ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவளையுடன் நினைவு கூறப்படவேண்டியதாகும்.
தேசத்தைக்கட்டியெழுப்புவதில்
முஸ்லிம்களின் பங்களிப்புக்கள்
ஆரம்பகால எமது முன்னோடிகளான
முஸ்லிம்கள் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்பி அதன் புகழை சர்வதேசமயப்படுத்துவதில் பாரியளவிலான
பங்களிப்பினை புரிந்துள்ளனர். இலங்கை முஸ்லிம்களின் தொன்மைக்கால வாழ்வியல் வரலாற்றின்
தொடக்கத்தினை வரையறுத்து மட்டுப்படுத்துவதில் ஒருமுகப்பட்ட கருத்துக்கள் நிலவாத போதிலும்
உடன்பாடு எய்யப்பட்ட சான்றாதாரங்களின் பின்புலத்தை நோக்குமிடத்து முஸ்லிம்கள் ஆரம்பகால
முதலே இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பாரிய பங்களிப்புக்களை செய்துள்ளனர் என்பது
புலனாகும்.
வியாபாரத்தை பிரதானமான
தொழிலாகக் கொண்டிருந்த இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் தேசத்திற்கு
ஆற்றிய பாங்களிப்பினைக் கருத்திற் கொண்டு அப்போதிருந்த பண்டுகாபயன் (கி.மு.377-307)
தனது ஆட்சிக்காலப் பகுதியில்
அனுராதபுற தலைநகரில் பிற நாட்டு வணிகக்காரர்களுக்கென சில பிரசேசங்களை ஒதுக்கி இருந்தான்
என்றும் அங்கு யவனர்களுக்கென தனியான இடம் ஒன்று ஒதுக்கப்பட்டு இருந்தது என்றும் மகாவம்சம்
குறிப்பிட்டிருந்தது. மகாவம்சம் குறிப்பிடும் யவனர் என்ற பதம் அறபு மக்களையே குறிப்பிதாக
மகாவம்சத்தை ஆராய்ந்து மொழிபெயர்த்த “கைக்கர்” குறிப்பிடுகின்றார்.
முஸ்லிம்கள் ஆரம்பத்தில்
வியாபாரிகளாகவும் மார்க்கத்தைப் பரப்பும் நோக்கிலும் அரேபியாவில் நிலவிய அரசியல் அராஜகத்தை
பொறுக்காத நிலையிலும் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பல நாடுகளிலும் குடியேறி வாழ்ந்து
வந்தது போல இலங்கையிலும் குடியேறி வாழ்ந்து வந்தனர். இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழ்ந்த
பௌத்த இந்து மக்களுடனும் இணைந்து புரிந்துணர்வுடன் சுமூகமாக வாழ்ந்தனர். அவர்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளிலும்
ஈடுபடவில்லை. தேசத்தில் வாழ்ந்த சமூகங்களின் ஒருமைப்பாட்டை பேணிப்பாதுகாக்கும் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டனர்.
எந்தவொரு தேசத்தின்
வளர்ச்சியிலும் உயர்விலும் முக்கிய அம்சமாக விளங்குவது சமூக ஒருமைப்பாடும் சகவாழ்வு
நிலைத்தருப்பதும் ஆகும். இப்பண்புகள் சமூக்த்தில் காணப்படும் போதே தேசத்தை கட்டியெழுப்புவது
சாத்தியமானதாக இருக்கும். ஆரம்பத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் மற்ற இனங்களுடன் புரிந்துணர்வுடனும்
சகவாழ்வைப் பேணியும் ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர். மன்னர்களின் அரண்மனைகளில் காவலர்களாகவும்
எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் நுளைவதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்களாகவும் விளங்கினர் என்பதை
நாம் அறியலாம். இதன் மூலம் எந்தளவு மன்னர்களுடனும் நாட்டு மக்களுடனும்
முஸ்லிம்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
முஸ்லிம்களின் நன்நடத்தை
வியாபார நேர்மை நாணயம், நம்பிக்கை மற்றவர்களுக்கு
உதவுதல், சகவாழ்வு போன்ற பண்புகளுடன்
முஸ்லிம் மக்கள் வாழ்ந்ததால் மற்றவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டதுடன்
இலங்கை மன்னனின் விருப்பத்துடன் இஸ்லாமிய சாம்ராஜியத்தை ஆட்சிசெய்த கலீபா ஹாரூன் ரஷீதினால்
ஹிஜ்ரி 300 இல் அனுப்பப்பட்ட
இஸ்லாமிய போதகர் காலித் பகாயா இலங்கையில் இஸ்லாமியப் பிரசாரத்தில் ஈடுபட்டு பள்ளிவாயல்
ஒன்றையும் தலைநகரில் கட்டி சுதந்திரமாக செயற்பட மன்னன் அனுமதி வழங்கினான். அப்போதைய
இலங்கை மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சில கிராமங்களை அன்பளிப்பாக வழங்கியும் சிங்களப்
பெண்களையும் மணமுடித்துக் கொடுத்தார்கள். ஏனைய சமூகத்துடன் புரிந்துணர்வுடனும் சக வாழ்வுடனும்
வாழுதல் என்ற நிலை இன்று வரை நீடித்ததாகவே விளங்குகிறது. சில இனத்துவ மற்றும் சுயநலம் நோக்கம் கொண்டவர்களால் சில போது இனவிரிசல்களை
உண்டாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் அவை பாரியளவு வெற்றியளிக்கவில்லை
என்றே கூறவேண்டும். சமூக நாட்டு அபிருத்தி என்பன உட்பட அரசாங்கம் முன்னெடுக்கும் சகல
நன்மைபயக்கும் நடவடிக்கைகளுக்கும் இற்றைவரை முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியே
வருகின்றனர். எனினும் பொதுவாக இலங்கையில் இனங்களிடையே நிலவும் நடைமுறை சார்ந்த சில
முரண்பாடுகள் சுமூகமாக எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டும். சமூகத்திலுள்ள நடுநிலை
கொள்கை வகுப்பாளர்களிடம் இவை செல்வாக்குச் செலுத்தாத போதிலும் சமூகத்தின் அடிமட்ட நிலை
நிலையில் உள்ளவர்களிடம் சில போது இக்குறைபாடு காணப்படுவதுண்டு. இது எமது நாட்டை அடிமைப்படுத்தியிருந்த
காலனித்துவத்தின் தாக்கமாகவே வரலாற்று பின்புலத்தில் பார்க்கவேண்டியுள்ளது.
மேலும் முஸ்லிம்கள்
பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆரம்ப காலம் முதல் இற்றைவரை பல பாரிய
பங்களிப்புக்களைப் புரிந்து வருகின்றனர். வியாபாரிகளாக இந்நாட்டில் வந்த அறபு முஸ்லிம்கள்
பொருளாதாரத்தை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதில் ஆரம்ப கால அறபு முஸ்லிம்கள்
இலங்கையின் உற்பத்திப் பொருட்களை அறபு உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தி இலங்கையின் கீர்த்தியை
உயர்ந்தோங்கச் செய்து நிறைந்த வருமானத்தையும் ஈடுட்டிக் கொடுத்தனர். அறபியே மகா கவி
எனப்போற்றப்பட்ட இம்ராஉல் கைஸ் முஅல்லக்காத் கவிதைத் தொகுப்பில் 'கற்பூறம், இஞ்சி, கராம்பு போன்ற வாசனைத் திரவியங்கள் பற்றிய குறிப்பு இலங்கையில் இருப்பதை விளக்குவதுடன்
இதன் மூலம் இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னரே அறபு வர்த்தகர்கள் இலங்கையில் வியாபாரத்தில்
ஈடுபட்டுள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. ஆரம்ப கால முஸ்லிம்கள் புதிய பொருளாதார
உற்பத்திகளையும் இலங்கையில் அறிமுகப்படுத்தினார்கள். உதாரணமாக விவசாயம் செய்யும் முறை,
கருவிகள், உர வகைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். தற்போதைய
சூழலிலும் முஸ்லிம்கள் பெரும் வர்தக மையங்களின் உரிமையாளர்களாக இருந்து நாட்டின் வளர்ச்சிப்
பாதைக்கும் அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பினைச் செய்து வருகின்றனர். நாட்டின் கைத்தொழில்
பேட்டைகள் கம்பனிகள் என்பவற்றை உருவாக்கி நாட்டு மக்களுக்கு உதவிகளையும் வேலைவாய்ப்புக்களையும்
வழங்கி உதவுகின்றனர்.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பின்
நிமித்தம் முஸ்லிம்கள் பலர் சென்று பணிபுரிந்து அந்நிய செலவானிகளை இலங்கைக்கு ஈட்டிக்கொடுத்து
நாட்டைக் கட்டியெழுப்புவதில் முனைப்புடன் செயல்படுத்தினார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகத்தின் தகவலின் படி மத்தியகிழக்கு வேலைவாய்ப்புகளுக்கு செல்லும் பணியாளர்களில்
57 வீமானோர் முஸ்லிம்களாக உள்ளனர்
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில்
இஸ்லாமிய மற்றும் சமூக நெறிமுறைகளுக்கு புறம்பாக வாழ்பவர்களால் சிலபோது ஏற்படுகின்ற
புறவய செயற்பாடுகளினால் மொத்தமாக முஸ்லிம் சமூகத்தை நோக்கி மாற்று சமூகங்களால் எரிச்சலுடனான
பார்வை திரும்புவதுண்டு. இத்தகைய கண்ணோட்டம் பிழையானதும் எதிர்காலத்தில் இத்தகைய புறவய
செயற்பாடுகள் திருத்தப்படடு மீள் சீரமைப்பில் அனைவரும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில்
பொறுப்பு வாயந்தவர்களாலும் முன்னெடுக்கப்பபடுவது காலத்தின் தேவையாகும்.
மேலும் சமூக மேம்பாடு
அபிவிருத்தி ஒழுக்க விழுமியங்கள் நன்னெறி போன்றவற்றை கட்டியெழுப்புவதில் முஸ்லிம்களின்
பணி மகத்தானது எனலாம். ஏனெனில் மார்க்கமான இஸ்லாத்தின் தூதானது மனித குலத்திற்கு பொதுவானதாகும்.
அல்குர்ஆன் குறிப்பிடுகையில் 'நபியே உம்மை முழு
உலகத்தாருக்கும் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம்.'
இதன்படி இஸ்லாத்தின்
பார்வையில் படைப்புக்கள் யாவும் அல்லாஹ்வின் குடும்பத்தினர் ஆவர். அவர்களில் இறைவனுக்கு
விருப்பத்திற்குறியவர் அவர்களுடன் அன்பாக நடந்து கொள்பவரே ஆவார் என இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இஸ்லாத்தின் இச்சிந்தனைகளைப் பின்பற்றியே ஆரம்பகால முஸ்லிம்கள்
அனைவரும் மனிதப் புரிதலுடன் நோக்கி மனித நேயத்துடன் பரஸ்பர உதவி புரிதல் மூலமும் தன்னை
ஈடுபடுத்தினர்.
மன்னர்களுடன் இணைந்து
ஒழுக்கவிழுமியங்களைக் கட்டியெழுப்பும் பணிகளில் முழுமையான பங்காளிகளாக தம்மை ஆக்கி
செயற்பட்டனர். வாய்மை, வாக்கு மாறாமை,
நேர்மை, நாட்டுப்பற்று, விசுவாசம் போன்ற சிறந்த பண்புகளைக் கொண்டவர்களாகக்
முஸ்லிம்கள் காணப்பட்டார்கள். இத்தகைய பண்பாடுகள் நெறிமுறைகள் பெரும்பாலான முஸ்லிம்களால்
தொன்றுதொட்டு இற்றை வரையிலும் அதிகமாக
நடைமுறைகளில் காணமுடிகின்றது. நாட்டின் பல இடங்களில் மற்ற சமூகத்துடன் கலந்து வாழும்
முஸ்லிம்கள் சிறந்த இஸ்லாமிய பண்புகளை பேணிவாழ்வதுடன் சிலபோது அச்சமூகங்களின் கலாச்சார
மரபுகளை பின்பற்றி தமது தனித்துவ இஸ்லாமிய கலாசார விழுமியங்களை தொலைத்துவிட்ட அபாக்கிய
நிலையையும் காணப்படுவது துயருடன் நோக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
மூடிய சமூகமாக அல்லது
அடர்த்தியாக (Closed community status) வாழும் முஸ்லிம் பிரதேசங்களில் மற்ற சமூகத்துடனான
தொடர்பு அரிதாக காணப்படுவதால் சிலபோது மனித நேயத்திற்கு அப்பால் நின்று நோக்கும் நிலையும்
தோன்றலாம். எனினும் அவை இன்று சீர்திருத்த சமூக நிறுவனங்களின் பங்கேற்பினால் குறைந்து
வருகின்றது என தைரியமாக குறிப்பிடலாம். பன்மைத்துவ சமூக அமைப்பில் வாழ்வியல் மற்றும்
பொதுவான விவகாரங்கள் தொடர்பான இஸ்லாத்தின் நெறிமுறைகள் பொதுமைப்படுத்தி காட்டல் உடனடி
சீர்தருத்தமாக (Radical reform) அமைய வேண்டும் என்ற கலாநிதி தாரிக் றமழானின் கருத்து அழுத்தமாக நடைமுறைப்படுத்த
தேவையுள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்பும் விடயத்தில் பொதுமைப்படுத்தலின் ஊடாக கூட்டான
அனுகூலங்களை அடைய இது வாய்ப்பாக அமையும் என்பதுடன் இச்சிந்தனையின் பால் முஸ்லிம்களை
வழிநடாத்துவதுடன் அடிப்படைகளில் நெகிழாப் போக்கை மிகக் கவனத்டன் கடைப்பிடிப்பதுடன்
முன்நடவடிக்கையையும் (Alternative ) சமாந்தரமாக நோக்க வேண்டும்.
எனினும் அண்மைக்காலமாக
இலங்கை வாழ் சமூகங்களிடையே உள்ள சிலரிடம் வளர்ந்து வரும் இனத்துவ வெறி மேலோங்கி பாரிய
சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இவை நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் பின்னடைவைத் தோற்றுவித்துள்ளது.
இணைந்து தனித்துவ அடையாளத்தை தொலைக்காது சுமூகமாக அனைவருடனும் வாழ்தல் என்ற விடயத்தில்
இஸ்லாம் தெளிவான சிந்தனைகளையும் முன்மாதிரிகளையும் முன்வைததுள்ளது. நபி (ஸல்) அவர்களின்
முன்மாதிரிகளை அதிகமாக அவர்களின் வாழ்வியல் போக்குகளிருந்து நாம் அறியலாம்.'
மனிதர்களில் சிறந்தவர் மற்ற
மனிதர்களுடன் சேர்ந்து வாழ்பவரே ஆவார்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் குறிப்பிடும்போது 'பூமியில் உள்ளவர்கள் மீது அன்பு காட்டுங்கள் வானத்தில்
உள்ளவர்கள் உங்கள் மீது அன்பு காட்டுவார்கள்' எனவும் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கதாகும்.
இந்த நபி மொழிகளை நாம் அவதானித்துப் பார்த்தால் மற்ற சமூகத்துடன் பரஸ்பரம் அன்பாக நடந்து
கொள்வதையும் எமக்கு வலியுறுத்துகின்றன.இஸ்லாம் கூறும் இத்தகைய பண்பியல் சார்ந்த கோட்பாடுகளை
ஏனைய சமூகத்திடமும் கொண்டு செல்லுவது இன்றைய காலத்தின் தேவை எனலாம்.
மேலும் தேசத்தை பாழ்படுத்தும்
நடவடிக்கைகளான சுரண்டல், மேலாதிக்கம்,
காலனித்துவம், அநியாயம் என்பவற்றிலிருந்து பாதுகாத்து அதனைக் கட்டியெழுப்புவதிலும்
முஸ்லிம்கள் பாரிய முன்னெடுப்புக்களை புரிந்துள்ளனர் என்பதை வரலாற்றின் நீரோட்டத்தில்
நாம் காணலாம். மன்னர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த ஆரம்பகால அறபு முஸ்லிம்கள்
கி.பி 1505 ஆம் ஆண்டு காலனித்துவ
ஆதிக்கம் இலங்கையை தமது கட்டுப்பாட்டில் வைத்து நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்த
மன்னர்களையும் அழித்தொழித்து நாட்டின் வளங்களையும் சுரண்டும் நடவடிக்கைகளில் இறங்கிய
போது அவற்றை எதிர்க்க வேண்டும் என்ற சிந்தனையை முன்வைத்து அதனைத் தூண்டியவர்களாக முஸ்லிம்கள்
காணப்பட்டனர். இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் அறிஞர் சித்திலெப்பை, ரீ.பீ. ஜாயா போன்றோர் முக்கிய பங்காளிகளாக விளங்கினர்.
அவ்வாறே காலனித்துவ ஆட்சிக் காலப்பகுதியில் எகிப்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட
ஒராபி பாஷா, மஹ்மூத் ஸாமி அல்பாரூதி
போன்றோர்களும் இலங்கையின் சுதந்திரத்தின் முக்கிய புருஷர்களாக விளங்குகின்றனர்.
போர்த்துக்கீஷரின்
காலனித்துவக் காலப்பகுதியில் இலங்கையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களாக முஸ்லிம்களே
காணப்பட்டனர். மன்னரைப் பாதுகாப்பதற்காக தங்களது உயிரையும் தியாகம் செய்து நாட்டைப்
பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமை அடையாளமிட்டு கூறப்படவேண்டிய அம்சமாகும். நாட்டை
சூரையாடும் அந்நியர்களுக்கு எதிராகப் போராடி, நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆரம்ப முஸ்லிம் முன்னோடிகள்
பாரியளவு பங்களிப்புச் செய்திருப்பதைப்போன்று பின்னால் வந்த காலப்பகுதியிலும் அவர்களின்
பங்களிப்பு தொடர்ந்து கொண்டிருப்பதையும் காணலாம். எனவே இலங்கை தேசத்தை கட்டியெழுப்பும்
பணியில் முஸ்லிம்கள் ஆரம்ப காலம் முதல் தற்காலம் வரை பாரிய பங்களிப்புகளை ஆற்றி வருகின்றனர்
என்பதை இதனூடாக நாம் அறிந்து கொள்ளலாம்.
மௌலவி எம்.ரீ.ஹபீபுல்லாஹ் (றஹ்மானி)
BA (Hones -SL), MA (SL), MA (Sudan)
உதவி விரிவுரையாளர்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்
No comments:
Post a Comment