.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, July 14, 2014

பின் கீழைத்தேயவாதிகளும் இஸ்லாத்திற்கு எதிரான சதி முயற்சிகளும்.


நபி ஆதம் அலை அவர்கள் தொடக்கம் தோற்றம் பெற்ற இஸ்லாம் இன்று வரைக்கும் நிலைத்துக் கொண்டு வருகையில் அதனை வேரோடு பிடிங்கி எடுப்பதற்கான முயற்சிகளும் காலா காலம் இடம் பெற்ற வண்ணமே உள்ளன. குறிப்பாக சிலுவை யுத்தத்தில் தோல்வியடைந்த கிறிஸ்தவர்கள் இன்றைக்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பூண்டோடு அளிக்கவே முயற்சி செய்த வண்ணமே இருக்கிறார்கள். இந்த சதிமுயற்சியில் அதிகம் ஈடுபடுபவர்களாக கிறிஸ்வர்களும், யூதர்களுமே காணப்படுகிறார்கள். இவர்களில் சிலரே கீழைத்தேயவாதிகள் என அழைக்கப்படுகிறார்கள்.
பொதுவாக கீழைத்தேயவாதத்தை இரண்டு விதமாக நோக்க முடியும்
1.            காலனித்துவத்திற்கு முற்பட்ட கால கீழைத்தேயவாதம்
2.            காலனித்துவத்திற்கு பிற்பட்ட கால கீழைத்தேயவாதம்

இந்த காலனித்துவத்திற்கு பிற்பட்ட கால கீழைத்தேயவாதத்தை தான் நாங்கள் பின் கீழைத்தேயவாதம் என்று அழைக்கின்றோம். குறிப்பாக 19ஆம் நூற்றாண்டின் பின்னரான காலப்பகுதியையே இது குறித்து நிற்கின்றது. இக்காலப்பகுதியிலேயே முஸ்லிம் கீழைத்தேய வாதிகளும் தங்கள் ஆதிக்கத்தை இஸ்லாத்தின் மீது பிரயோகித்தார்கள் என்பதே வேதனைக்குரிய விடயமாகும்.

பின் கீழைத்தேயவாதம் என்றால் என்ன?
அந்தவகையில் பின் கீழைத்தேயவாதம் என்பது காலனித்துவ ஆட்சியிலிருந்தது  விடுபட்ட முஸ்லிம் நாடுகளின் மக்களினது சமய நம்பிக்கைகள், மொழி, வரலாறு, நாகரிகம், கலாசாரம் பற்றிய மேற்கை சேர்ந்தவர்களின் ஆய்வே பின்கீழைத்தேயவாதம் என்று வரைவிலக்கணப்படுத்தலாம். அதனடிப்படையில்

பின்கீழைத்தேய வாதிகளாக தாஹா ஹுஸைன், தௌபீக் மூஸா, அஹ்மத் அமீன், சல்மான் ருஷ்தி, தஸ்லிமா நஸ்ரின், முஸ்தக்பதுல் தகாபா பீ மஜ்ர், அப்துல்லாஹ் பின் சபா, முஸ்தபா கமால் அதாதுர்க், அல்பர, தரஜிஉ, பாறூக் கதாலி, போன் ஜரூல், பேணி சீனக், தக்து நாளத் போன்றோர்களை எடுத்துக்காட்டுக்காக கூறமுடியும்.

இவர்கள் இக்காலத்தில் சிந்தனைத்துறையையே பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள். காரணம் 19ஆம் நூற்றாண்டில் எழுத்துத்துறை மிகவும் வேகமாக வளர்ச்சி பெற்றகாலமாகையால் அவற்றினூடாக சிந்தனைத்துறையின் மூலமே முஸ்லிம் சமூகத்தை ஆராய்ச்சி செய்து அவர்களது மார்க்கத்தை அழிக்க அரசியல், பொருளாதார, சமூக, சமய ரீதியாக சதித்திட்டங்களை மேற்கொண்டார்கள்.

கத்தியின்றி, இரத்தமின்றி, துப்பாக்கியின்றி, ரவைகளின்றி இலை மறை காயாய் ஒரு யுத்தம் நடைபெறுகின்றது. இலகுவில் எவரும் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் கன கச்சிதமாய் இப்போரை அவர்கள் நடாத்தி வருகிறார்கள். இவர்கள் பின் கீழைத்தேயவாதிகளாவர். இதில் எதிர்பார்க்கப்படும் பரப்பு மிக விசாலமாயினும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவிர அங்கே அவர்கள் பெரியளவில் எதனையும் தடைக்கற்கலாகக் காணவில்லை. எனவே அவர்களின் முதல் எதிரி இஸ்லாம். முதல் நோக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுப்பதே!

18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மேற்கொண்ட காலனித்துவ ஆதிக்கத்தின் தொடர்ச்சியாகவே இதனையும் நோக்க வேண்டும். அதுதான் இன்றைய மூன்றாம் உலக மகா யுத்தமாகக் கருதப்படும் மூன்றாம் மண்டல நாடுகள் மீதான மேற்குலகின் சிந்தனா ரீதியான படையெடுப்பாகும். உலகலாவிய ரீதியில் தங்களது தலைமையை கைவிடக்கூடாது என்ற நப்பாசையும் வல்லரசுஎன்ற நாம மந்திரம் கைவிட்டுப் போகக்கூடாது என்ற பேராசையுமே இவ்வாரான யுத்தத்திற்கு ஊண்டு கோலாய் அமைந்துள்ளது. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே வளர்முக நாடுகளை அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக மேற்குலகு அடிமைப்படுத்தி வந்தது. எனினும் உலகம் விளித்து கொண்டதனால் அதன் தொடர்ச்சியை சிந்தனைப் படையெடுப்பினூடாக மறைமுகமாக மேற்கொள்கிறது.

இஸ்லாத்தை துடைத்தொழிப்பதில் யூத ஸியோனிஸ்டுகளினதும் செயற்பாடு இன்றுநேற்று ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. வரலாற்றில் தொடராக இது வளர்ந்து கொண்டிருக்கிறது. மக்காவிலிருந்து நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்றது முதல் பிற்பட்ட கலீபாக்கள், உமையாக்கள், அப்பாஸியயாக்கள், உஸ்மானியர்கள் காலம் தொடக்கம் இன்று வரை இந்தச் செயற்பாடுகள் தொடர்வதனை வரலாற்றில் காணலாம்.

பின் கீழைத்தேயவாதிகளின் ஆய்வின் நோக்கங்கள்
  1. மேற்கின் கலாசார நாகரிகங்களின் பால் முஸ்லிம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தல்.
  2. வரையறைகளின்றி அவர்கள் மத்தியில் ஆபாசக் குப்பைகளைக் குவித்தல்.
  3. இஸ்லாம் பற்றிய சந்தேகங்களைக் கிளப்பி தப்பபிப்ராயங்கள் ஏற்படுத்தி மேற்கு அறிஞர்களின் கொள்கை கோட்பாடுகளை முன்வைத்தல்.
  4. இஸ்லாத்தை வரையறையின்றிக் கொச்சைப்படுத்தல்.
  5. தம்மை பலசாலிகளாகக் காட்டி ஏனையோர் தம்மை நம்பியே வாழவேண்டும் என்ற பிரம்மயை ஏற்படுத்தல்.
  6. முஸ்லிம்களின் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களை உருவாக்கி அவர்களை தங்களது காலனித்துவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துதல்.
  7. முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி அவர்களை தங்களது ஸ்தாபனங்களுக்கு அழைத்து அங்கு கல்வி பயிலவைத்து அவர்கள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தல்.
  8. இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்குள் கீழைத்தேயவாதிகள் ஊடுருவல் செய்கின்ற நோக்கில் ஆராய்ச்சி நிறுவனங்களை ஆரம்பித்தல்.
  9. முஸ்லிம் நாடுகளில் அவர்களது கல்வி நிறுவனங்களை அமைத்தல். (உ-ம்)  எகிப்தில் பிரான்ஸிய கல்வி நிலையம், நத்வதுல் கதாப், தாருஸ்ஸலாம், அமெரிக்க பல்கலைக்கழகம், லெபனானில் மதகுரு யூசுப் பல்கலைக்கழகம், சிறியாவில் லைக் பாடசாலைகள், தாருஸ்ஸலாம் போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

பின்கீழைத்தேயவாதிகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள்
18ஆம் நூற்றாண்டில் தான் மேற்கு நாடுகள் அரபு நாடுகளின் பொருளாதாரத்தில் கைவைத்தது. சில யூத மதகுருமார்கள் பொருளாதார ரீதியான சஞ்சிகைகளை வெளியிட ஆரம்பித்தனர். இதற்காக அரபிகளிடமிருந்து குறைவான விலைக்கு நூல்களை வாங்கினார்கள். 19ஆம் நூற்றாண்டில் தான் சுமார் 25 ஆயிரம் புத்தகக் கழஞ்சியங்கள்  திருடப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் தான் அரசியல் ரீதியான படையெடுப்பு, அரபு மொழியை கற்றல் போன்ற செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டனர். கி.பி. 19ஆம் நூற்றாண்டில் தான் பாரிஸில் கீழைத்தேயவாதிகளின் முதலாவது மாநாடு நடைபெற்றது. இத்தகைய மாநாடுகள் இன்றுவரை நடைபெறுவதைக் காணலாம்.

பின்கீழைத்தேயவாதிகளின் சிந்தனைத்துறை சார்ந்த நூல்கள், சஞ்சிகைகள், ஊடகம், மகாநாடுகள்.

நூல்கள்:- தாயிரத்துல் மஆரிபில் இஸ்லாமியா, முஃஜிசுல் தாயிரதுல் மஆரிபில் இஸ்லாமியா, திராசா பித்தாரிக், தர்ஜூமதுல் குர்ஆன், அல் – இஸ்லாம், தஃவா மஃதனா.

சஞ்சிகைகள்:- இஸ்லாமிய உலகு, கிழக்கு கற்றைகளின் ஜமியாவின் சஞ்சிகை, மத்திய கிழக்கின் விவகாரம், மத்திய கிழக்கு அமெரிக்க அரசியல்,  குர்ஆனில் சாட்சி, உண்மையின் அழிவு,  கிந்தி புத்தகம், நேர்வழியின் புத்தகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஊடகம்:- வத்திக்கானில் டெலிவிசன், சர்வதேச ஒலிபரப்பு நிலையம்.

மாநாடுகள்:- கிறிஸ்தவ மதமாற்றத்தின் மாநாடு, அட்டன் பரா மாநாடு, முஸ்தஃமர் லக்னோ மாநாடு, மூஃதமர் பல்வதினோ போன்றவைகளைக் குறிப்பிட முடியும்.

பின் கீழைத்தேயவாதிகளின் செயற்பாடுகள். சிந்தனாரீதியானவை
19ம் நூற்றாண்டிற்குப் பிறகு தோற்றம் பெற்ற பின் கீழைத்தேயவாதிகள் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் பல சதித்திட்டங்களை மேற் கொண்டு வருகின்றனர். அவற்றை நோக்குவோம்.

1.மேற்கின் சித்தாந்தங்களை விதைத்தல்
மேற்கின் சிந்தனைப் படையெடுப்பில் முதற்கட்டமாக முஸ்லிம்களிடத்தில் இஸ்லாம் குறித்து சிந்தனைச் சிக்கல்களையும் தப்பபிப்பிராயங்களையும் ஏற்படுத்தி அவர்களின் நவீன அறிஞர்களின் கோட்பாடுகளையும், சிந்தனைகளையும் அலங்காரமாக முன்வைக்கின்றனர். இதனால் ஒரு முஸ்லிம் மூளைச்சலவை செய்யப்படுகின்றான். அதிக சம்பளங்களை வழங்கி முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதும், உயர்படிப்புக்காக அதிக வாய்ப்புக்களை முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கி அங்கு அவர்களின் சிந்தனை மாற்றத்தை உண்டுபண்ணுவதும் இதன் படிக்கற்களாகும். இதனை கீழைத்தேய ஆய்வுகள் என்ற பெயரில் இலாவகமாகச் செய்து வருகின்றது.

அத்தோடு இத்துறையில் உயர்படிப்பை முடித்தவர்களுக்கு உயர் பதவிகளும், தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்படுகிறது. இந்தக் கீழைத்தேய வாதம் இஸ்லாத்தின் வரலாற்றைத் திரிவுபடுத்துவதோடு அதன் அடிப்படைக் கொள்கைகளிலும், நோக்கங்களிலும், இலட்சியங்களிலும் களங்கத்தை ஏற்படுத்தி அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வழிவகைகளையும் செய்கின்றது.

2.எழுத்து ஊடகம்
இவை மாத்திரமன்றி 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் ஐரேப்பா இவ்வழிமுறையைக் கையாண்டுள்ளது. ஷெக்ஸ்பியர் எழுதிய சில நாடகங்களில் நபியவர்கள்குறித்து மிகவும் மோசமாக எழுதப்பட்டுள்ளது.  அவ்வாறே Haratisme என்பவன் தனது நாடகம் ஒன்றில் நபியவர்களின் கண்ணியத்தைக் கொச்சைப்படுத்தும் முகமாக கற்பனைகளைப் புணைந்துள்ளான்.

அவ்வாறே 1889 இல்; Heri vicomte be Bermier என்ற நாடகம் இஸ்லாத்தைத் தாழ்த்தியும், கிறிஸ்துவத்தை உயர்த்தியும் சித்திரிக்கின்றது. அதுமட்டுமன்றி 19ஆம் நூற்றாண்டில் இவ்வாறான நூல்கள் வெளிவந்தன. 1906இல் மேரிஸா என்பவர் எழுதிய லதீபாஎன்ற நாவல், 1929இல் முஆனது இன்ஸான்என்ற நாவல், ‘1977இல் வெளியாகிய ஆசிக்என்ற நாவல், 1985இல் வெளியாகிய “ஹிமாயா” என்ற நாவல், அதே காலப்பகுதியில் வெளியாகிய குர்பா முக்லகாஎன்ற நாவல்.

அதே போன்று லஜ்ஜாஎன்ற தஸ்லிமா நஸ்ரினின் நாவல் சைத்தானிய வசனங்கள்என்ற சல்மான் ருஸ்தியின் நாவல் என்பன முஸ்லிம்களை கொடூரமானவர்களாகவும், இரத்தப்பிரியர்களாகவும், பெண்ணுரிமையை மறுப்பவர்களாகவும், முஸ்லிம் பெண்கள் தரம் கெட்டவர்களாகவுமே சித்தரிக்கின்றன. இவை முஸ்லிம்களின் மீதான மேற்குலகின் துவேஷத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் பிரதிபலிக்கின்றன.

3.மிசனரிகள் நிறுவப்பட்டு கிறிஸ்தவ கொள்கைகள் பரப்பப்படல்
பின் கீழைத்தேயவாதத்திற்கு முன்னர் மிஸனரிகளை தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் நிறுவி பாடபோதனைகள் நடாத்திய போதும் 19ஆம் நூற்றாண்டின் பின்னர் அதன் வளர்ச்சி உச்ச நிலையை அடைந்தது. இலங்கையிலும் இத்தகைய மிஷனரிகள் நிறுவப்பட்டு கிறிஸ்தவக் கொள்கைகள் பரப்பப்பட்ட போது அதனை எதிர்த்து அநகாரிக தர்மபால, ஹிக்கடுவ சுமங்கலத்தேரர், அறிஞர் சித்திலெப்பை போன்றோர் அயராது பாடுபட்டு தங்கள் சுதந்திர மதத்தைப் பாதுகாத்தார்கள் என்றால் மிஷனரிகளின் செயற்பாடு எந்தளவு இருந்திருக்கும் என்பதை எமக்கு காட்டுகின்றது.

4.சினிமா ஊடகம்
முஸ்லிம்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தை உலகில் விதைக்க மேற்குலகு கையாண்டு வரும் நவீன ஊடகம்தான் சினிமாவாகும்.  அனைவரினதும் கவனம் சினிமாவினால் அதிகம் ஈர்க்கப்படுவதனால்  இதனைப் பயன்படுத்துகின்றனர். மேற்கின் திரைப்படங்கள் இஸ்லாத்தின் தூய்மையைக் கலங்கப்படுத்தி வருகின்றன. செப்படம்பர் 11 தாக்குதலின் பின்பு மேற்கின் ஹொலிவூட்களின் ¾ திரைப்படங்கள் அரபிகளை காட்டுமிரான்டிகலாகவும், தீவிரவாதிகலாகவும் சித்தரிக்கின்றன. இதே தோரனையில் முஸ்லிம்களின் இபாதத் நேரங்களை சரியாக அடையாளம் கண்டு அந்நேரத்தில் சுவாரசியமான நாடகங்கள், படங்களை இன்று ஒலிபரப்புச் செய்வதன் மூலம் தொலைக்கபட்சிக்கு முன்னால் முஸ்லிம் சமூகத்தை அடிபணியவைத்திருக்கிறது. இதில் அதிகமான முஸ்லிம்கள் தங்கள் நேரத்தை செலவிட்டு. அந்ந நடிகன் வாழ்வதைப்போல முஸ்லிமும் வாழப் பழகிக்கொண்டான்.

5.பெண்ணிலை வாதம்
அதேபோன்று பெண்ணிலை வாதத்தை முஸ்லிம் சமூகத்தில் விதைப்பதற்கான அவர்களது செயற்பாடுகளாக இன்றைய தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இந்திய தயாரிப்புக்களை உள்வாங்கிய இலங்கையும் இதில் மும்முரமாக ஈடுபடுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.

முழுக்க முழுக்க பெண்களை கதாநாயகிகளாகவும், வில்லர்களாகவும் அவ்வாறே குடும்பத்தையும், தொழில் நிறுவனங்களையும் வழிநடாத்துபவர்களாகவும், கணவன்மார்களை அடக்கி ஆள்பவர்களாகவும், கொலைகளை திட்டமிடுபவர்களாகவும் இறுதியில் வாழ்க்கையின் சவால்கள் அனைத்தையும் எதிர் கொண்டு வெற்றிபெறுபவர்களாகவும் பெண்களின் பாத்திரம் கட்டமைக்கப்படுகின்றன. எத்தனையோ தஸ்லிமா நஸ்ரின்கள் எமது வீடுகளுக்குள் உருவாக்கப்படுகிறார்கள். என்பதை நாம் அறியாமல் இருக்கின்றோம்.

6.முஸ்லிம் தலைவர்களுக்கு மூளைச்சலவை செய்தலும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதும்
இஸ்லாமிய நாடுகளினை ஆட்சி புரியும் அரபுத்தலைவர்களின் சூனியமான இஸ்லாமிய அறிவினைப் பயன்படுத்தி மேற்கத்தைய அரசியல் சிந்தனைகளின் தார்ப்பரியத்தை செறிகிவிடுவதன் மூலம் சர்வதேச நாடுகளில் வெறும் அரேபிய பொம்மைகளாக அவர்களை உட்கார வைக்கவேண்டும். என்பதே மேற்குலகின் அவாவாகும். ஐ. நா வில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளில் 50க்கு மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் காணப்படினும் கூட எந்த விதமான கூட்டு அரசியல் நடவடிக்கைகளையோ அமுல்படுத்த முடியாத அளவுக்கு இன்றைய மேற்கு அரபுத்தலைவர்களை ஆக்கியுள்ளது.

அது மட்டுமன்றி அரசியல் மாற்றங்களின் மூலம் நாட்டின் தலைவிதிகளை மாற்றியமைத்து குர்ஆனிய யாப்பினை புறம் தள்ளிவிட்டு மேற்கத்தைய சிந்தனைக்கு விளைபோகும் ஆட்சியாளர்களே இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களாக அமர்த்தப்படுகிறார்கள்.

7.இஸ்லாமிய ஆட்சி சுயமாக பலம்பெருவதை தடைசெய்தல்
எதிர்காலத்தில் ஆட்சி பலம் பெறும் எனக்காணுகின்ற வழிகளை மூடிவிடல், பலத்தினை முடியுமான அளவு குன்றச் செய்தல், அதற்காக எதிரி நாடுகளுடன் துணைபோதல் தேவையேற்படின் ஐ. நா வின் அமைதிகாக்கும் படைகளின் மூலம் (untag, unifil, uniprofor) போன்ற ஆரம்ப அமைதிகாக்கும் படையணிகள் உத்தியோக பூர்வமாக இஸ்லாமிய போராளிகளின் இயக்கங்களை கட்டுப்படுத்த எத்தனித்தல் போன்ற பணிகளை இன்றைய பின் கீழைத்தேயவாத அமைப்புக்கள் செய்து வருகின்றன.

ஈரானிய அணுஉலைத் தொழிற்சாலையை தடை செய்தல், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வேரறுக்கச் முயலுதல், காஷ்மீரிய விடுதலைப் போராட்டத்தை காட்டுமிராண்டித் தனமாக எதிர்த்தல் போன்ற எத்தனையோ விடயங்கள் தெட்டத்தெளிவான உதாரணங்களாக உள்ளன.

8.மேற்கத்தைய மூளைசாலிகள் உருவாக்கப்படல்
இஸ்லாமிய உம்மத்திற்கு எவ்வகையிலும் துணைபோகாத அதன் நாகரிகத்திற்கே கரிபூசக்கூடிய சடவாத சிந்தனைகளை பூஜிக்கும் தலைசிறந்த அறிவாளிகளை நீரூற்றி வளர்க்கும் முயற்சியில் இன்றைய மேற்குலகம் ஈடுபட்டுள்ளது. தாஹா ஹுஸைன், தௌபீக் மூஸா, அஹ்மத் அமீன், போன்றோரும் தற்காலத்தில் சல்மான் ருஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்றோரும் இதற்கு உதாரணமாக கூற மிகப் பொருத்தமானவர்கள். தாஹா ஹுஸைன், மூஸா போன்றோர் அரபு மொழியினை குறைகூறும் அதேவேளை அல்குர்ஆனிய மொழி நடையினை குறை கூறுமளவுக்கு நடந்து கொண்டனர். இதே பின்னணியில் உலகில் பேசப்பட்ட ஸல்மான் ருஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்றோரும் மேற்கத்தைய சாயலுக்கே நிறமூட்டும் பணியினைச் செய்துள்ளனர். 1994 மே 9ம் திகதி கல்கத்தா The statesman இதழுக்கு தஸ்லிமா நஸ்ரின் அளித்த பேட்டியிலே நான் அல்குர்ஆனில் சிறிய சில திருத்தங்களே செய்யப்பட வேண்டும் என்று கூறவரவில்லை. மாறாக அது முழுமையாக பிழை நீக்கி எழுதப்படவேண்டும் என்றே கூறுகின்றேன்.எனக் கருத்துத் தெரிவித்தார்.

சாத்தானிய வசனங்கள்உட்பட பல சிறுகதைகளும் படைப்பக்களும் இஸ்லாமிய வெறுப்புணர்வுகளையே சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. The prophet’ Hair என்ற சிறுகதையில் நபிகளாரின் தலைமயிரை தன் தொப்பியில் வைத்துக் கொண்டு அதன் மகிமையால் கொள்ளையடித்து வாழ்ந்த ஹாஷிம்என்ற பெயரில் ஒரு பாத்திரம் படைத்து இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த சல்மா ருஷ்தி முயன்றுள்ளார். இவ்வகையினர் எல்லோரும் முஸ்லிம் பெயர் தாங்கி இஸ்லாத்தை அவமானப்படுத்தும் மேற்கத்தேய ஊது குழல்களே!.

அதுமாத்திரமன்றி மேற்கத்தைய சிந்தனைவாதப் பெண்கள் அமைப்புக்களை உலகெங்கும் பரப்பி அவர்களுக்கு இஸ்லாம் எனும் போர்வையில் மேற்கத்தேய  கீழ்தரமான சிந்தனைகளை கீழைத்தேயத்திற்கு விற்கும் வியாபாரத்தை இன்று மேற்குலகம் செய்து வருகின்றது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…….

உசாத்துணைகள்.
1.இஸ்மியா பேகம்,எம்.எஸ்.,(2013) “இஸ்லாமிய நாகரிகமும் பிற நாகரிகங்களும்”, இஸ்லாஹியா வெளியீட்டு மையம், மாதம்பை. ப.ப.113- 124.
2.ஹபீபுல்லாஹ், எம்.டி.,(2005), “இஸ்லாமிய உலகும் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்களும்”,ஐ.எஸ்.ஏஸ், கிண்ணியா.
3.அப்துல் ஹமீது, எம். ஏஸ்.,(2000) “தேசியவாதமும் இஸ்லாமும்”, இலக்கியச் சோலை 26 உரோம் ரோட், சென்னை.

MLM. Hilfan
Reading BA Faculty in Islamic Civilization 
South Eastern University of Sri Lanka

1 comment:

  1. A.alaikum sir
    I want some help form you because some assignment works. Sir my topic is موافق المشتسركين من الإيمان و رسول. Plz sent notes

    ReplyDelete