.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, July 12, 2014

பலஸ்தீன் போராட்டமும் அதன் வரலாற்றுப் பின்னனியும்


முழு உலகமும் அறிந்த ஓரு உண்மைதான் பலஸ்தீன் மீதான யூத-ஸியோனிச இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பும், கொலை வெறியாட்டமும். இந்த பலஸ்தீன் பிரச்சினை என்பது பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையாகும். தற்போது கூட ஆக்கிரமிப்பு இஸ்ரேலினால் அப்பாவி பலஸ்தீனர்கள் தாக்கப்பட்டு கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை ஊடகங்கள் மூலம் கண்டு கொள்ளலாம். எனவேதான் இந்தப் பிரச்சினை பின்னனி பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

பலஸ்தீன் முஸ்லிம்களின் மூன்றாவது புனித பூமியாகும். அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா முஸ்லிம்களின் முதல் கிப்லாவும், வரலாற்றோடு மிக நெருக்கமான தொடர்பினைக் கொன்ட ஒரு பிரதேசமுமாகும். நபி மூஸா(அலை) முதல் நபி முஹம்மத்(ஸல்) வரையுள்ள நபிமார்களின் வாரிசுகள் வாழ்ந்த நிலம் அது. இங்கிருந்து தான் நபி(ஸல்) அவர்கள் புனித மிஃராஜ் சென்றார்கள். அதேவேலை அல்லாஹ்வினால் அருள் புரியப்பட்ட பிரதேசம் என புனித அல்-குர்ஆன் குறிப்பிடும் இடமும் இதுவாகும்.  
இவ்வாறான முக்கியத்துவமிக்க இந்த பலஸ்தீனின் பெரும்பகுதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுக்காணப்படுவதுடன், இன்னும் அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைளும், பலஸ்தீன் பூர்வீகக் குடிகளான அப்பாவி முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டே இருப்பதைக் காணலாம். அந்தவகையில் இதன் பின்னனியை ஆரம்ப கட்டத்திலிருந்து நோக்குவோம்.

யூத தேசத்தின் தேவை உணரப்படல்

கி.பி 1896இல் ஒஸ்திரியாவைச் சேர்ந்த தியோடர் ஹேர்ஸல்என்ற யூத எழுத்தாளன் யூத தேசம்”( The Jewish Stat) எனும் நூலை எழுதி யூத தேசத்தின் தேவையை வழியுறுத்தினான். இதனடிப்படையில் 1897.08.29-31 சுவிட்சர்லாந்தின் பேர்ஸ் நகரில் இந்த ஹேர்சலின் ஏற்பாட்டில் சர்வதேச சியோனிஸ காங்கிரஷ் தலைவன் வைஸ்மனின்தலைமையில் சில யூத அறிஞர்கள் ஒன்று கூடி இரகசிய மாநாடு ஒன்றை நடத்தி அதில் 100பக்க அறிக்கைகள் கொண்ட பல நாசகரமான தீர்மானங்களை எடுத்தனர். இதன் பின்னர் அவர்கள் அடிக்கடி ஒன்று கூடி பல திட்டங்களைத் தீட்டிக்கொண்டனர். அந்தவகையில் 1906ம் ஆண்டு தமது 5வது மாநாட்டில் இந்த யூத அறிஞர்கள் மற்றும் தனவந்தர்கள் தமக்கான தாயகம் பலஸ்தீனில் அமைய வேண்டுமென தீரமானித்தனர். 50வருடங்களுக்குள் இதை அடையவேண்டுமென கால எல்லையையும் வகுத்துக் கொண்டனர். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த யூதர்களின் தேசிய நிதி”( Jewis National Fund) எனும் அமைப்பையும் உருவாக்கிக் கொண்டனர்.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் உதவிகள்

1917இல் முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்று பலஸ்தீன் பிரிட்டனின் ஆளுகைக்குக் கீழ் வந்தது. அவ்வாண்டில் பிரிட்டன்பெல்பர்பிரகடனத்தை வெளியிட்டது. அதின் உள்ளடக்கம் வருமாறு:

யூதர்களுக்கு பலஸ்தீனில் ஒரு தேசிய தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து மிகவும் பரிவுடன் கவனிக்கிறது. இதனை ஏற்படுத்த எல்லா முயற்சிகளையும் இங்கிலாந்து மேற்கொள்ளும் அதேவேளை, இப்போது அங்கு குடியிருக்கும் யூதர்கள் அல்லாத மக்களின் பொதுவான, மத உரிமைகளுக்கு பங்கம் வராது பார்த்துக் கொள்ளும்.

இந்த பிரகடனம் பலஸ்தீன பூர்விகக் குடிகளான முஸ்லிம்களை இரண்டாம் தரப் பிரஜை என்ற நிலைக்குத் தள்ளியது.

1922இல் அமெரிக்கா அதன் இரு சபைகளிலும் யூதர்களுக்கான ஒரு நாடு பலஸ்தீனில் அமைவதற்கு ஆதரவாக கூட்டுத்தீர்மானங்களை நிறைவேற்றியது.

இதைத் தொடர்ந்து பிரிட்டனின் பூரன உதவியுடனும், படை பட்டாலத்துடனும் யூதர்கள் பல நாடுகளிலிருந்து வரவளைக்கப்பட்டு  குடியேறலாயினர். இவர்கள் தோற்றுவித்த இர்கம், ஹகானாத்என்ற இரு யூத பயங்கரவாத அமைப்புக்களும் பலஸ்தீன் பூர்வீகக் குடிகளான முஸ்லிம்களை தாயகத்கை விட்டும் விரட்டுவதையும், நிலங்களை அபகரிப்பதையும் இலக்காகக் கொண்டு செயற்பட்டன.

1948 ஆகும்போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான 400க்கும் அதிகமான கிராமங்கள் அநியாயமாக அபகரிக்கப்பட்டு யூத-ஸியோனிஸ்டுக்கள் வசமாயின. அவற்றில் வாழ்ந்த பெரும்பாலான அப்பாவி முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டனர். எதிர்த்தோர் கொல்லப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் துரோகம்

ஐ.நா 1947.11.29ம் திகதி அதன் பொதுச்சபையில் நிறைவேற்றிய 181(11) தீர்மானத்திற்கேற்ப மொத்த பலஸ்தீன் பூமியில் 45.53% அதன் பூர்வீகக் குடிகளான பலஸ்தீனர்களுக்கும், 56.47% எங்கோ இருந்து வந்த யூதர்களுக்கும் இடையில் பிரித்துக் கொடுப்பதை அங்கீகரித்தது. அத்துடன் ஜெரூஸலம் நகர் சர்வதேசமயமாய் அமைய வேண்டும் என்றும் அத்தீர்மானம் கூறியது.

இவ்வாறான பல சதித்திட்டங்களின் பின்னர் 1948.05.14 இரவு 10மணியளவில் யூத தேசிய சபை மற்றும் ஸியோனிச பொதுச் சபை இரண்டும் இனைந்து இஸ்ரேல்என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டுள்ளதாக உலகுக்கு அறிவித்தன.

இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு உருவாகி சில நிமிடங்களில் அதை அமெரிக்கா அங்கீகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏராளமான சர்வதேச பொருளாதார அமைப்புக்களில் ஐ.நா சபை, அமெரிக்கா, பிரிட்டன் போன்றவற்றின் சிபாரிசுடன் அங்கத்துவம் வளங்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 63நாடுகள் இதற்கு அங்கீகாரம் வழங்கின.

இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் அடாவடித்தனங்களும்
  • 1967 அரபு-இஸ்ரேல் போர்.
  • 1970,1977ல் இஸ்ரேலிய படை வீரர்களால் மஸ்ஜிதுல் அக்ஸாவின் கீழான தென்பகுதி தோண்டப்பட்டது. இதனால் மஸ்ஜிதின் பல பகுதிகள் சிதைவடைந்தன.
  • 1982ல் உலகையே உறைய வைத்த ஷப்ரா-ஷாதிலாஎனும் இரு பெரும் அகதி முகாம்கள் மீது இஸ்ரேலிய இராணுவமும், லெபனான் இராணுவத்தின் கிறிஸ்தவ படைப் பிரிவினரும் இணைந்து நடத்திய மிகக் கொடூரமான தாக்குதல். இதில் சுமார் 3000பேர் வரை கொல்லப்பட்டனர்.
  • 1982ல் மஸ்ஜிதுல் அக்ஸாவை குண்டு வைத்து தகர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • 1982ல் இஸ்ரேலிய படை வீரரால் அக்ஸாவில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1990ல் அக்ஸாவில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது இஸ்ரேலிய பொலிஸார் செய்த துப்பாக்கிச் சூடு. இதில் 22பேர் கொலை செய்யப்பட்டனர்.
  • 1994ல் ஹிப்ரோன் நகரிலுள்ள இப்ராஹீம்பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது யூதப் பயங்கரவாதி செய்த துப்பாக்கிச் சூடு. இதில் 60பேர் கொலை செய்யப்பட்டனர். 200பேர் காயம். இந்நிகழ்வுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் சுட்டதில் 23பேர் கொள்ளப்பட்டனர்.
  • 1996ல் மஸ்ஜிதுல் அக்ஸாவில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட வேலையில் ஏற்பட்ட கலவரத்தில் 57 பலஸ்தீனர்கள் கொள்ளப்பட்டனர்.
  • 1984,1990,1996,1997,2000,2007 ஆகிய அனைத்து ஆண்டுகளிலும் மஸ்ஜிதுல் அக்ஸாவை சிதைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
  • 2002ல் ஜெனின் முகாம் முற்றுகையிட்டு தாக்கப்பட்டது. இதில் 52பேர் கொள்ளப்பட்டனர்.
  • 2003.09.06ல் அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸின் மீது நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதல்.
  • 2004.03.22ல் அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸின் இஸ்ரேலின் ரொக்கட் தாக்குதலில் கொல்லப்படல்.
  • 2004.04.18ல் அப்துல் அஸீஸ் ரன்தீசி இஸ்ரேலின் ரொக்கட் தாக்குதலில் கொல்லப்பட்டது.
  • 2008 ஜனவரியில் காஸாவுக்கான மின் வினியோகத்தை தடை செய்தது.
  • 2008 மார்ச்-ஏப்ரலில் காஸாவை அழிப்பதற்கான போர் எனக் கூறி 120 பலஸ்தீன் சிறுவர்களை இஸ்ரேலிய இராணுவம் கொலை செய்தது.

இவ்வாறு இன்னும் அதிக நிகழ்வுகளை அடுக்கிக் கொண்ட போகலாம்.

ஹமாஸின் தோற்றமும் வளர்ச்சியும்
அடுத்த கட்டுரையில் தொடரும்


உசாத்துனைகள்
  1. காஸா இரத்தம் கசியும் ஈமானிய தேசம்,(2009), சுதந்திர பலஸ்தீனத்துக்கான மையம்,கொழும்பு-10.
  2. AIM(Annual Magazine),Volume:01(June/2008), Islahiyya Arabic Collage-Madampe
  3. www.Aljazeera.com
  4. https://en.wikipedia.org
  5. https://electronicintifada.net
  6. www.Haaretz.com
  7. www.Imemc.org

MSM. Naseem
BA(Hones)

No comments:

Post a Comment