.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, July 6, 2014

ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்து வரும் முஸ்லிம் சிறுபான்மையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்

                                    
இறைவனால் இறக்கிவைக்கப்பட்ட இயற்கை மார்க்கமான இஸ்லாம் இன்று உலகில் பல்வேறு பகுதிகளிலும் துரிதமாக வளர்ந்து வருகின்றது. இஸ்லாம் ஐரோப்பாவில் இருந்து வெளியேற்றப்பட்டதும் அங்கு முஸ்லிம்களின் தொகை  குறைந்து விட்டது. ஆனால் இன்று ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாத்தில் நுழைவோர் தொகை கூடிக்கொண்டே வருகின்றது.

'சில நாடுகளில் சிறுபான்மைகளாகவும் சில நாடுகளில் பெரும்பான்மைகளாகவும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இன்னும் சில நாடுகளில் முஸ்லிம்களின் தொகையை சரியாகப் பெற முடியாதுள்ளது' என்று muslim council of  Britain அறிக்கையொன்று குறிப்பிட்டுள்ளது.இங்குள்ள சில முக்கிய நாடுகளில் இஸ்லாத்தின் தற்போதய நிலைப்பாட்டை ஆராயலாம் என நினைக்கின்றேன்.


பிரான்ஸ்
கத்தோலிக்கக் கறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு பிரான்ஸ். இங்கு வாழும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அல்ஜீரியா, டியூனிசியா, மொரோக்கோ, எகிப்து, லெபனான், சிரியா, ஆபிரிக்கா, துருக்கி போன்ற அறபு நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களே அதிகம். பாரிஸ், ரோனே, ஆல்பஸ், லோர்ரைன், புரோவின்ஸ், கோடே, கோர்ஸியா போன்ற நகர்களிலேயே அதிகமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு 30 லட்சம் முஸ்லிம்களே வாழ்ந்தார்கள்.பாரிஸில் 10 பெரிய பள்ளிவாசல்கள் காணப்பட்டது. ஆனால் இன்று பிரான்சிலுள்ள முஸ்லிம்களின் தொகை அதிகரிப்பால் அதன் தலைநகர் மற்றும் சில பகுதிகளில் பள்ளிவாசல்கள் நிரம்பி முஸ்லிம்கள் வீதிகளில் தொழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க அரசு பயன்படுத்தப்படாத கட்டடங்களை தொழுகை நடாத்த வழங்கியுள்ளது. அத்தோடு பிரஞ்சு மொழியில் இஸ்லாமிய நூல்கள், அல்குர்ஆன் மொழிபெயர்ப்புக்கள் என்பன காணப்படுகின்றன.

ஐரோப்பாவிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரான்ஸில் இன்று 100-150 பள்ளிகள் கட்டப்பட்டு வருகின்றது. சில பள்ளிகள் வடிவமைப்பிலும் சில பள்ளிகள் முடியும் நிலையிலும் உள்ளதாக பிரான்ஸ் முஸ்லிம் கவுன்சில் தலைவர் மொஸாயி குறிப்பிட்டுள்ளார். இஸ்லாத்தில் நுழைவோர்கள் முழுமையாக இஸ்லாமிய வழி முறைகளைப் பின்பற்றுகின்றனர். இதனால் குற்றச் செயல்கள் பிரான்ஸில் குறைந்து வருகின்றது. மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்து வருகின்றது.

இதன் தென் பகுதியில் மாதா கோயில்களை விட பள்ளிகள் அதிகமாக காணப்படுகின்றன. 2011 ஜனவரி 'பிவ் போம்' எனும் சர்வதேச தொகை மதிப்பீட்டு நிறுவனம் 4.7 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாகக் குறிப்பிட்டது. இங்கு 5 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாக சில அறிக்கைகள் குறிப்பிடும் அதேவேளை 7 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாகவும் குறிப்பிடப் படுகின்றது.(தகவல்-பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள்) தற்போதுள்ள மக்கள் தொகையில் பொதுவாக 20 வயதுக்குக் கீழுள்ள இளைஞர்களும், சிறுவர்களும், குழந்தைகளும் 30 சதவிகிதம் பேர் காணப்படுகின்றனர். இன்னும் நைஸ், மர்ஸில்ஸ், பாரிஸ் போன்ற நகர்களில் இவ்வெண்ணிக்கை 40 சதவிகிதம் ஆக உள்ளது. ஆராய்ச்சிகளின் கணக்குப்படி பிரான்ஸில் உள்ள மக்களில் 5இல் ஒருவர் முஸ்லிமாக இருப்பார். மேலும் 39 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. உலகில் உள்ள அனைத்துக் கொள்கைகளையும் மிகைத்து உலகின் அதிகாரத்தை இஸ்லாம் கைப்பற்றி விடுமோ என்று பிரான்ஸ் அரசு அச்சம் கொள்ளும் அளவிற்கு இஸ்லாம் அங்கே பரவி வருகின்றது.

ஜேர்மன்
இங்கு வாழும் முஸ்லிம்களில் அதிகமானோர் துருக்கி, ஆசியா, ஆபிரிக்கப் பகுதிகளை சேர்ந்தவர்கள். மேற்கு பேர்ளின், பிராங்பர்ட், வடக்கு ரைன்,பவேரியாவின் தென்பகுதி, மூனச் ஸ்டுட்கர்ட், ஹாம்பேர்க் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியின் இஸ்லாமிய மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஜேர்மனியில் வாழ்ந்து வரும் 3.4 மில்லியன் முஸ்லிம்களில் 15ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இங்கு இஸ்லாத்தில் நுழைகின்றவர்களுள் பெரும்பாலானோர் பெண்கள் என்றும் குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறாக இஸ்லாத்தை ஏற்கும் பெண்கள் இஸ்லாமியக் கலைகளைக் கற்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 40 பள்ளிகளே காணப்பட்டன. ஆனால் இன்று சுமார் 2200க்கும் அதிகமான பள்ளிகள் காணப்படுகின்றன. ஜேர்மன் அரசின் அறிவிப்பின் படி மக்கள் தொகைச் சுருக்கத்தை இனி ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது. இங்கு 4 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஜேர்மன் அரசு இனிவரும் 2050ஆம் ஆண்டு ஜேர்மன் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் ஜேர்மனிய ஊடகவியலாளர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை பயங்கரவாதமாக சித்திரிக்கின்றனர். இங்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து ஜேர்மனிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கருத்து வெளியிடுகையில் '2007ம் ஆண்டில் மாத்திரம் ஆயிரம் ஜேர்மனியர்கள் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். இது ஜேர்மன் அரசை பீதியடையச் செய்துள்ளது' என்றார்.

 இங்கிலாந்து
கி.பி.1890இல் இங்கு முதலாவது பள்ளி அமைக்கப்பட்டது. கல்வி பயிலச் சென்ற மாணவர்களுக்கான பரிசாக அது அமைந்தது. ஆனால் இன்று ஆயிரக்கணக்கான பள்ளிகளும் தற்காலிக வணக்கஸ்தலங்களும்  காணப்படுகின்றன. இங்கு பர்மிங்ஹாம், பிராட்போரட், லண்டன், கிளாஸ்கோ, மான்செஸ்டர் ஆகிய நகர்களில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இங்கு யூதர்களைவிட முஸ்லிம்கள் அதிகம். 2030இல் இங்கிலாந்து ஒரு கிரிஸ்தவ நாடாக இருக்காது என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து 'டெய்லி மெயில்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஓவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் நம்பிக்கையாளர்களை கிரிஸ்தவ மதம் இழந்து வருகின்றது. ஆண்டுக்கு 7,50,000 பேர் என்ற அளவுக்கு இறை நம்பிக்கை அற்றவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என அப்பத்திரிகை குறிப்பிடுகின்றது. முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த 06 ஆண்டுகளில் 39 சதவிகிதம் உயர்ந்து 30 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த 06 ஆண்டுகளில் கிரிஸ்தவர்களின் எண்ணிக்கை 49 சகவிகிதம் குறைந்துள்ளதாக பிரிட்டனின் அமைச்சர் கேரி ஸ்டிரீட்டர் செய்தி வெளியிட்டுள்ளார்.

The Independent  எனும் பத்திரிகையிலும் பின்வரும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பிரான்ஸைக் காட்டிலும் இங்குதான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதாகவும் 2001-ல் எடுக்கப்பட்ட தகவலின் படி இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை 14,000-25,000 வரை இருக்கலாம்  எனவும் குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போதைய தகவலின் படி 100,000க்கு மேற்பட்டவர்கள் முஸ்லிமாக மாறியுள்ளார்கள் என 'faith matters' என்ற அமைப்புத் தெரிவிக்கின்றது. தற்போது இங்கு ஆண்டுக்கு 5000 பேர் இஸ்லாத்தை ஏற்கின்றார்கள்.

பெல்ஜியம்
இந்நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 சதவிகிதம் முஸ்லிம்கள். இன்னும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதத்தினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறக்கின்றனர். பெல்ஜியம் அரசின் கூற்றின் படி இன்னும் 17 வருடங்களில் ஐரோப்பாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம் குடும்பங்களிலேயே பிறப்பார்கள்.

இத்தாலி
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முழுக்க முழுக்க வாழ்ந்த நாடு இத்தாலி. ஆனால் இன்று 4,00000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ரோமன் கத்தோலிக்க இனக் கிரிஸ்தவர்கள் 10000க்கு மேற்பட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்று அந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இங்கு முஸ்லிம்கள் இரண்டாவது மதமாக வாழ்கின்றார்கள். இத்தாலிய நாளிதலான ' lg messagero ' இத்தகவலை வெளியிட்டுள்ளது.

ரஷ்யா
ஒரு காலத்தில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ரஷ்யாவில் தற்பொழுது மொத்தம் 2.3 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இது 5 ரஷ்யர்களில் ஒருவர் முஸ்லிம் என்ற விகிதத்தில் காணப்படுகின்றது. மேலும் இன்னும் சில வருடங்களில் 40 சதவிகிதம் ரஷ்யப்படை வீரர்கள் முஸ்லிம்களாக இருப்பார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. பள்ளிகளின் எண்ணிக்கையும் துரிதமாக அதிகரித்து வருகின்றது.

மேலும் சில நாடுகள்
ஆட்சியாளன் பிரான்கோவின் ஆட்சிக்காலம் முடியும் வரை ஸ்பைனில் இஸ்லாம் தடை செய்யப்பட்ட ஒரு மதமாகவே இருந்தது. 5 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தற்பொழுது மீண்டும் இஸ்லாம் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. ஸ்பைனில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது பள்ளிகள் அனைத்தும் உடைக்கப்பட்டது. ஆனால் அங்கு தற்போது முஸ்லிம் நாடுகளின் தூதரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இங்கு முஸ்லிம்கள் வாழ்வதோடு தொழுகைப் பள்ளிகளும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பழமையான ஒரு சில மஸ்ஜித்கள் முஸ்லிம்களால் மீட்டெடுக்கப் பட்டுள்ளது. இஸ்லாமிய பல்கலைக்கழகங்களும் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு மாநாடுகள் நடாத்தப்படுகின்றன. லாம், அலிப், அந்தலூஸ் போன்ற சஞ்சிகைகள் வெளியிடப்படுகின்றன. ஐரோப்பாவிலே காணப்படுகின்ற பெரிய இஸ்லாமிய நிலையம் கூட ஸ்பைனில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

மேலும் அல்பேனியா 2.6 மில்லியன், பல்கேரயா 0.6 மில்லியன், ஒல்லாந்து 0.4 மில்லியன், போலாந்து 0.3 மில்லியன், கிரேக்கம் 0.19 மில்லியன், சைப்பிரஸ்0.2 மில்லியன் ,சுவிட்சர்லாந்து 0.1 மில்லியன், ரூமேனியா 0.7 மில்லியன், டென்மார்க் 0.4 மில்லியன், சுவீடன் 0.4 மில்லியன், நோர்வே 0.35 மில்லியன், போன்ற அளவுகளில் இந்த நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள்.

ஐரோப்பாவில் இஸ்லாமியப் பரவல் பற்றி மேற்குலகமே அச்சம் கொள்கின்றது. கத்தோலிக்க மதத்தலைவராக உள்ள போப் ஆண்டவர் கூட 'உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்'. உலக மக்கள் தொகையில் 17.5 சதவிகிதத்தினர் கிறிஸ்தவர்களென்றால் அதில் 19 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பாவில் 52 மில்லயன் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். மேலும் ஜேர்மனி அரசின் கூற்றின் படி இந்த மக்கள் தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன்களாக அடுத்த 20 ஆண்டுகளில் ஆகிவிடும்.இவ்வாறாக முஸ்லிம்களின் தொகை அதிகரிப்பைப் போன்றே ஐரோப்பாவில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதிகரித்து வருகின்றன.

தற்போது ஐரோப்பிய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் சனத்தொகைப் பற்றாக்குறையாகக் காணப்பட்டது. இதனால் வேலைகளுக்காக கீழைத்தேய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மக்கள் அழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கான குடியுரிமையும் வழங்கப் பட்டது. ஐரோப்பாவில் காலப்போக்கில் சனத்தொகை அதிகரித்து சிறுபான்மை சமூகமாக முஸ்லிம்கள் மாறினார்கள். 1960இன் பின்னர் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு குடியேறியுள்ளனர். ஆனால் தற்போது அங்கிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் சமயத்திலும் கலாச்சாரத்திலும் வேறுபட்டு இருப்பினும் ஐரோப்பிய சமூகத்தோடு ஒன்றி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் காணப்படுகின்றனர். தற்போது ஐரோப்பாவில் முஸ்லிம்களின் தொகை அதிகரித்து வருவதால் மதச் சுதந்திரம், கலாச்சாரப் பன்மைத்துவம் என்பன பற்றிப் பேசும் மேற்கில் முஸ்லிம்களுக்கெதிரான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சில நீண்ட காலத் திட்டங்களை ஐரோப்பா ஏற்படுத்தி வருகின்றது. இதனால் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
அவ்வாறான பிரச்சினைகள் கீழே...

1.சமய,கலாச்சார ரீதியான பிரச்சினை
  • சில நாடுகளில் மதச் சுதந்திரம் வழங்கப்படவில்லை. அரசும் மத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முஸ்லிம்களின் மத ஆசாரப்படி வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. சில இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகளைப் புதுப்பிக்க அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் மக்கள் சொந்த நாடுகளை விட்டு பிரான்ஸ், ஜேர்மன், ஹாலந்து போன்ற பிரதேசங்களில் குடியேறியுள்ளார்கள். உம்-பெல்கிரேட்.
  • உணவு வகைகளில் பன்றியின் கொழுப்பு கலக்கப்படுகின்றது.
  • அன்னியக் கலாச்சாரத் தாக்கம். ஆண் பெண் கலப்பு.
  • சில பிரதேசங்களில் மத வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றனர். வீடுகளில் வழிபாடுகள் நடாத்தப் பட்டால் மரண தண்டணை வழங்கப்பட்டது. -ம் கிழக்குத் துருக்கிஸ்தான்
  • ஓலி பெருக்கி மூலம் அதான் கூற முடியாத நிலையில் சில நாட்டினர் காணப்படுகின்றனர். -ம் இங்கிலாந்து.
  • மஸ்ஜித்களில் மினாராக்களைக் கட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. -ம் சுவிட்சர்லாந்து.
  • ஜும்ஆப்பிரசங்கங்கள் நடாத்தும் போது அரபு மொழி தவிர்க்கப் பட்டு பிரதேச மொழிகளிலேயே மேற்கொள்ளப் பட வேண்டும் என ஐரோப்பிய அரசுகளில் சில கட்டளை இட்டுள்ளது. -ம் பிரான்சில் பிரஞ்சு மொழியில் பிரசங்கம் நடாத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
  • நாத்திக வாதக் கொள்கைகள் புகுத்தப் படுகின்றன. உம்-அல்பேனியா. இங்கு ஹோக்லா என்பவரால் நாத்திக வாதக் கொள்கை பரப்பப்பட்டது.
  • முஸ்லிம் சிறார்களுக்கு விருத்தேசனம் (சுன்னத்) செய்வது பல்கேரியா போன்ற நாடுகளின் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
  • முஸ்லிம் பெயர்களையும் தேசியப் பெயர்களாக மாற்றிக் கொள்ளும்படி முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.
  • முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப் படுகின்றன. உம்- பிரான்ஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸி தடை விதித்ததைக் குறிப்பிட முடியும் மேலும் இத்தாலி, ஜேர்மன் போன்ற நாடுகளிலும் அவ்வாறே. சுவிட்சர்லாந்திலும் பெண்கள் முகமூடி அணிவது தடை செய்யப்பட்டிருக்கின்றது. 20 வயது முஸ்லிம் யுவதி ஒருவர் வலைப்பந்தாட்டத்தில் தொடர்ந்து பங்கு பற்ற வேண்டுமானால் தனது ஹிஜாபைக் களைய வேண்டும் எனக்கோரப்பட்டுள்ளார். 2009இல் இருந்து அவர் இக்காரணத்தினால் விளையாடாமல் இருக்கின்றார். மேலும் டென்மார்க்கிலும் பர்தா அணிய முடியாது.
  • பிரான்ஸ் போன்ற நாடுகளில் சில பள்ளிவாசல்களுக்கு முன்னால் பன்றியின் தலைகள் வீசப்பட்டிருந்ததுடன் பிரான்சின் ஆரஸ் மைதானத்தில் 148 மையத்துகள் தோண்டி எடுக்கப்பட்டு வெளியே வீசப்பட்டிருந்தன.


2.அரசியல் ரீதியான பிரச்சினை
  • அரசியலில் மதம் முக்கியம் பெறுவதால் சிறுபான்மைக்கு உரிமைகள் வழங்கப் படுவதில்லை. சில அரசுகள் மத எதிர்ப்புக் கொள்கையைக் கொண்டுள்ளன.
  • முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்த போதிலும் திட்டமிட்ட குறைக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளால் முஸ்லிம்களின் சரியான தொகை வெளிக்காட்டப் படாமை. இதற்கு முக்கியமாக அரசுகள் அனுசரனை வழங்குகின்றமை.
  • முஸ்லிம்கள் ஷரீஅத் சட்டத்தைப் பின்பற்ற முடியாத நிலையில் உள்ளார்கள். ஐரோப்பிய நாடுகளின் சிவில் சட்டங்களையே பின் பற்ற வேண்டிய நிர்ப்பந்த நிலையில் உள்ளனர்.
  • அரசியல் விவகாரங்களிலும் அரசிலும் பிரதிநிதித்துவங்கள் குறைவு. பெரும்பாலும் கிடைப்பதில்லை.
  • முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை அரசு கண்டு கொள்ளாமை.
  • இவைகள் ஜனநாயக நாடுகளாகவும் அதனை அங்கீகரிக்கும் நாடுகளாகவும் இருந்த போதிலும் இந்த நாடுகளில் ஜனநாயக அரசியல் முறைகள் ஒழுங்காகப் பேணப்படாமை. இதனால் பின்வரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
  1. வளப்பற்றாக்குறை
  2. வறுமை
  3. பிரிவினைவாதம்
  4. அதிகார அரசியல்
  5. இராணுவத்தலையீடு
  6. கலாசாரம்
இவை அனைத்தாலும் கூடுதலாகப் பாதிக்கப் படுவது சிறுபான்மை முஸ்லிம்களே என்பது குறிப்பிடத் தக்கது
  • அரசியல் வேறு மதம் வேறு என்ற கொள்கை புகுத்தப் படுகின்றமை.
  • திட்டமிட்ட அடிப்படையில் இனப்படுகொலைகள் செய்யப்படுகின்றன.


3.கல்வி ரீதியான பிரச்சினை
  • குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைப் புகட்டுவதில் பிரச்சினை காணப்படுகின்றது. ஏனெனில் ஐரோப்பியக் கலாச்சாரமும் கல்வியும் புகட்டப்படும் நாட்டில் முஸ்லிம் குழந்தைகளை இஸ்லாமிய வழியில் நடாத்துவது கடினமாக உள்ளது. இங்கு வாழும் முஸ்லிம் குழந்தைகளுக்காக தனியான மார்க்கக் கல்வி நிலையங்களை அமைத்து  பாடங்கள் நடாத்த முடியாத நிலையில் உள்ளனர்.
  • பாடசாலைகளில் சீருடைப் பிரச்சினையும் காணப்படுகின்றது. ஆங்கிலப் பாடசாலைகளில் மேற்கத்தேய செல்வாக்கே மிகுந்து காணப்படுகின்றது. முஸ்லிம் பெண் பிள்ளைகளும் அதே ஆடைகளை அணியும் நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.
  • முஸ்லிம்களுக்கான தனியான கல்விக் கூடங்களை அமைக்க முடியாத நிலைகளும் உருவாகியுள்ளன.
  • பாடசாலைகளில் காலை ஆராதனைகள் கிரிஸ்தவ முறைப்படியே நடைபெறுகின்றன.
  • முஸ்லிம் மாணவர்களுக்கு மொழிப்பிரச்சினை காணப்படுகின்றது. அரபு, உருது போன்ற மொழிகளைக் கற்பதில் தடைகள் காணப்படுகின்றது. ஆங்கில மொழியிலேயே கற்க வேண்டும்.
  • இஸ்லாமியப் பாடத்திட்டங்களில் நவீன அல்லது மேற்கத்தேய சிந்தனைகளின் தாக்கம்.
  • பாடசாலைகள் பல்கலைக்கழகங்களின் நேரசூசிகள் அடிப்படை வணக்க வழிபாடுகளுக்குத் தடையாகக் காணப்படுகின்றமை.
  • இஸ்லாம் அல்லாத கல்விச் சூழல் காணப்படுகின்றது. 

4.மேலும் சில பொதுவான பிரச்சினைகள்
  • இஸ்லாம் பற்றிய அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அடிப்படை வாதிகள், தீவிர வாதிகள், இரத்த வெறியர்கள் என்ற சாயம் பூசப்படுகின்றது. பொது மக்களிடம் இஸ்லாத்தை சென்றடைய விடாமல் தடுக்கின்றார்கள். முஸ்லிம்களை கொச்சைப் படுத்துகின்றனர். டென்மார்க் பத்திரிகையில் வந்த கேலிச்சித்திரம் இதற்கு உதாரணமாகும். டென்மார்க் பிரதமர் இதைக் கருத்து வெளியிடும் சுதந்திரம் என்றார். இத்தாலி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேலிச்சித்திரம் பிரசுரிக்கப்பட்ட டீசேர்ட்டை அணிந்து பாராளுமன்றம் சென்றார்.
  • முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே உட்கூறுகள் சமய அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டு வருகின்றது. மித வாதிகள், தீவிர வாதிகள் என்று முஸ்லிம்கள் பிரிக்கப் பட்டுள்ளனர். இஸ்லாத்திற்கும் மேற்கிற்கும் இடையில் தீவிரவாதத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
  • கிரிஸ்தவ மதத் தலைவர்கள் முஸ்லிம்கள் மீதான இனவெறியையும் துவேசத்தையும் ஏற்படுத்துகின்றனர், தூண்டுகின்றனர்.
  • முஸ்லிம்கள் தஃவாவில் ஈடுபட முடியாத நிலைகள் தோன்றுகின்றன. அவ்வாறு ஈடுபடும் போது அதற்கான தடை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
  • சில நாடுகளில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. -ம். கொஸோவா. இவர்கள் சேர்பியாவின் இன ஒதுக்கல் காரணமாக தனி நாடு கோரினார்கள். இங்கு வாழ்ந்த மக்களை ஊடகங்கள் முஸ்லிம்கள் என்று கூறாமல் கொஸோவா, அல்பேனிய இனத்தவர்கள் என்றே கூறுகின்றது.
  • பொருளாதாரத்தில் வட்டி கலக்கக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.
  • வேலை செய்யும் இடங்களில் ஆண் பெண் கலப்பு அதிகம் காணப்படுவதால் பெண்கள் சுதந்திரமாக வேலை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இவ்வாறாக ஐரோப்பிய வாழ் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர் நோக்குகின்றனர்.
  • அத்தோடு சில தனிப்பட்ட நபர்களின் நடவடிக்கைகள் இஸ்லாத்தின் மீதான வெறுப்புக்களை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. -ம்.நோர்வேயில்  ப்ரீவிக் என்பவன் 77 முஸ்லிம்களைக் கொன்றான். இவ்வாறு செயற்பட்டதற்கான காரணம் அவரிடம் வினவப்பட்ட போது ஐரோப்பாவை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பது தனக்குப் படிக்கவில்லை என்று கூறினார்.
  • மேலும், இஸ்லாத்தின் வளர்ச்சியைக்கண்ட மேற்குலகம், அதன் ஆட்சியாளர்கள், அறிவு ஜீவிகள், உலகின் மிகப் பெரும் ஊடகங்கள், செய்தித் தாள்கள், டெலிவிஷன், சாட்டைச் சேனல்கள் போன்றன முஸ்லிம்களை, முஸ்லிம்களுடைய தனித்துவத்தை இளக்கச் செய்யும் வகையில் செயற்படுகின்றன. நபி(ஸல்) அவர்களை கேவலப்படுத்திய படங்கள் கேலிச்சித்திரங்கள் வரைந்து உலக அரங்கில் பரப்பி விட்டனர். -ம். innocence of muslims    என்ற படம், சல்மான் ருஸ்தியின் 'சாத்தானிய வசனங்கள்' எனும் நூல் பிரிட்டனில் திரைப்படமாக வெளியிடப்பட்டது. நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்தி சுமார் 20 கேலிச் சித்திரங்களை வெளியிட்டது.
  • மேலும் டென்மார்க்கில் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இங்கிலாந்து விரைவில் கிரிஸ்தவ நாடு என்ற நிலையில் இருந்து மாறிவிடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கறது என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். டென்மார்கின் ஆரஸ் நகரில் நூற்றுக் கணக்கானோர் திடீரெனத் திரண்டு இஸ்லாத்திற்கெதிராக ஊர்வலம் சென்றனர். இவ்வாறெல்லாம் நடந்த போதிலும் இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறெல்லாம் அவதூறுப் பிரச்சாரங்களின் விளைவாக ஒரு சிந்தனைப் புரட்சி மக்களிடம் ஏற்பட்டது. இதற்குப் பிறகுதான் இஸ்லாத்தில் நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இவைகளுக்குப் பிறகுதான் அல்குர்ஆன் மொழியாக்கங்கள், இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் ஐரோப்பாவில் அதிகம் விற்பனையாகத் தொடங்கின. முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இவர்களால் முடியவில்லை.அதை பின்வரும் வரைபடம் தெளிவுபடுத்துகின்றது.

                                   

இரவு பகல் சென்றடையும் பிரதேசங்களையெல்லாம் இம்மார்க்கம் நிச்சயம் சென்றடையும். மதர் வபர் ஆகிய எந்தப் பிரதேசத்தையும் இறைவன் விட்டு வைக்க மாட்டான். அவற்றிலும் இந்த தீனை அல்லாஹ் நுழைவிப்பான் -(முஸ்னத் அஹ்மத்). அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி)அனைத்து விட நாடுகின்றனர். ஆனால், காபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்'. (அல்குர்ஆன்)

ஐரோப்பாவில் தற்போது  இஸ்லாம் பரவி வரும் வேகத்தைப் பார்த்தால் நபி(ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைகளின் உண்மைகள் மிகத் தொலைவில் இல்லை. இஸ்லாமே உலகை ஆழும். தற்போது அதற்கான பணிகள் இஸ்லாமிய உலகில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. உலகு மறுமையை நோக்கி வேகமாகப்  பயணித்துக் கொண்டிருக்கின்றது. இனிவரும் காலங்களில் அல்லாஹ்வின் வலிமையையும் அவனது சொல்லின் உண்மையையும் மேற்குலகம் காணத்தான் போகின்றது.

உசாத்துணைகள்
  1. Jawad ul haq siddiqui.  “United States of  Islam”,firs usl publication,Karachi.p;230-232.
  2.  ரிபாயி.A.K., '21 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மார்க்கம்'
  3. குலாம்முஹம்மது.மு., “கிலாபத்'(2001)” ,இலக்கியச்சோலை,26,பேரக் சாலை,பெரியமேடு,சென்னை. 
  4. சர்வதேசப்பார்வை.  'பிரான்ஸ் சிறுபான்மை முஸ்லிம் சமூகம்' ,ஜுன்-ஒகஸ்ட்.2012.
  5. இஸ்லாமிய சிந்தனை, 'அரசியல் கோட்பாடும் இஸ்லாத்தின் எதிர்காலமும்' ,ஏப்ரல்-ஜுன்,2008. Naleemiah Bureau of Islamic Publications.
  6. அழைப்பு, 'உலகமெங்கும் இஸ்லாத்தின் எழுச்சி', இதழ்-21,செப்டம்பர்-2012. இலங்கை தௌஹீத் ஜமாஅத்.
  7. அல்ஹசனாத், 'இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்'பெப்ரவரி 2011.இலங்கை ஜமாதே இஸ்லாமி.
  8. அல்ஹஸனாத், 'மேற்குலகில் விலங்குடைத்து எழுச்சி பெறும் இஸ்லாம்'.மே-2008.இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி.
  9. அல் ஜாமிஆ,1995, 'நவீன இஸ்லாமிய எழுச்சி'. நளிமிய்யா வெளியீட்டுப்பணியகம்.
  10. வைகறை,2012-ஜனவரி, ' The headscarf girl',:40.
  11. www.suvanathendral.com
  12. www.islamicpopulation.com
  13. www.thoothuonline.com
  14. www.innerram.com
  15. www.infoplease.com
  16. www.pewforum.org



A.S. Navahira
B.A Special in Islamic Civilization
South Eastern Unversity Of Sri Lanka

No comments:

Post a Comment