.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, July 9, 2014

இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் விலங்கியல்


நாம் வாழும் இந்த பூமியில் இறைவன் பல கோடி உயிரினங்களைப் படைத்திருக்கிறான். அந்தவகையில் அவனால் படைக்கப்பட்ட அதிசயமிக்க படைப்பே விலங்குகளாகும். இந்த விலங்குகளை மனிதனின் தேவைக்காகவும்,  இறைவனின் அத்தாட்சிக்காகவும் படைத்திருக்கிருக்கிறான். இந்த விலங்கியல் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தை அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸின் நிழலில் ஆராய்வதையிட்டு பெரும் மகிழ்சியடைகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்!


நான் இந்த கட்டுரையை வரைவதன் நோக்கம் இறைவனின் படைப்பான விலங்குகளை  மனிதன் அறிந்து கொண்டு அதன் மூலம் இறைவனின் வல்லமையை  புரிந்து அவனுக்கு நன்றியுள்ளவனாக இறுதி மூச்சுவரை வாழவேண்டும் என்ற நோக்கிலேயாகும். எனவே விலங்கியல் பற்றி இஸ்லாத்தின் கண்ணோட்டத்தை நோக்குவோமாயின்.

விலங்கினங்களை அல்லாஹ் தன்னைத் துதி செய்வதற்காகவும், மனிதனுக்காகவும்  படைத்துள்ளதாக கூறுகின்றான். அந்தவகையில்  வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வை துதி செய்து கொண்டிருக்கின்றன.” (64:01) என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அது போல் மற்றொரு இடத்தில் கால் நடைகளை மனிதர்களுக்காகவே படைத்தோம்” (16:05) என்றும் குறிப்பிடுகின்றது.

அல்லாஹ் விலங்குகளைப் படைத்து அதனை ஆய்வு செய்து தன்னையும் தன் ஆற்றலையும் பற்றி படிப்பினை பெறுமாறு கூறுகிறான். அந்தவகையில் அல்குர்ஆன் நபியே நீர் கூறும் பூமியில் நீங்கள் சுற்றித்திருந்து அவனது சிருஷ்டிகளை எவ்வாறு உற்பத்தி செய்கின்றான் என்பதை பார்ப்பீராக” (29:20) என்று கூறி விலங்கு போன்ற சிருஷ்டிகள் பற்றி அறிவைத் தேடிப் பெறுமாறு வலியுறுத்துகிறது.

இஸ்லாம் விலங்குகள் அனைத்தையும் நீரில் இருந்து படைத்ததாகக் கூறுகின்றது. மேலும் அல்லாஹ் அனைத்து உயிர் பிராணிகளையும் தண்ணீரிலிருந்து படைத்தான். எனவே அவற்றில் சிலவற்றின் மீது ஊர்ந்து நடப்பவை இன்னும் அவற்றில் சில இரு கால்களில் நடப்பவை, இன்னும் அவற்றுல் சில நான்கு கால்கள் கொண்டு நடப்பவை இவ்வாறு அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கின்றான்…”(24:45) என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

இதனை ஆய்வு செய்து விஞ்ஞானங்கள் இன்றுதான் அதன் உண்மை நிலையை வெளியிடுகின்றன. இதன்படி 50% -90% வரை விலங்குகள் தண்ணீரையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. என்று நவீன ஆய்வுகள் கூறுகின்றன. 14ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே விலங்குகள் பற்றி இஸ்லாம் தெளிவுபடுத்திய உண்மையே அவைகளாகும். இது போலவே விலங்குகள் உருப்பெருவது பற்றிய இன்றைய விஞ்ஞானக் கருத்து அல் -குர்ஆனுடன் இணைந்து செல்வதைக் அவதானிக்கலாம். இது பற்றி ஆய்வாரள் வென்பர்கூறுகின்ற போது பின்வருமாறு கூறுகின்றார்.

வேறுபட்ட பிராணிகளின் கருக்களை நான் வேறுபட்ட கட்டங்களில் தனித்தனியாக கண்ணாடிக் குழாயில் ஆய்வு செய்தேன். ஊர்வன, பறப்பன,முளையூட்டிகள் முதலியவற்றின் கருவளர்ச்சி ஆரம்பக் கட்டங்களை நான் அவதானித்த போது அவற்றை என்னால் பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. நடுக்கட்ட கரு வளர்ச்சியும் இவ்வாறே இடம் பெறுகின்றது. இறுதிக் கட்டத்திலேயே அவை தமக்கான அமைப்பைப் பெற்றுக் கொள்கின்றனமனிதனுக்கும் இவ்வாறே இடம்பெறுகின்றது எனக் குறிப்பிட்டார்.

இக்கருத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் மிகச் சுருக்கமாகக் கூறியது. இதுபற்றி அல்குர்ஆன் கூறுகின்ற போது திட்டமாக முதல் மனிதனை களிமண் மூலத்திலிருந்து படைத்தோம். பின்னர் பாதுகாப்பான இடத்தில் அவனை விந்தாக ஆக்கினோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக்கட்டியாகப் படைத்தோம். பின்னர் அதை சதைத்துண்டுகளை எழும்புகளாகப் படைத்தோம்.  பின்னர் அவ்வெலும்புகளை சதையாக அணிவித்தொம். பின்னர் வேறொரு படைப்பாக உண்டாக்கினோம்.என்று கூறுகின்றது. (23: 12-14)
இவ்வாறு விலங்குகளின் தோற்றம் பற்றிய உண்மை நிலையை தெளிவுபடுத்தும் இஸ்லாம் விலங்குகளைச் சிறப்பிக்கும் வகையில் புனித அல்-குர்ஆனில் சில அத்தியாயங்களுக்கு விலங்குகள் சிலவற்றின் பெயர்களை தலைப்பாக இட்டுள்ளது. அந்தவகையில் சூறா பகரா- பசு, சூறதுல் அன்ஆம்- கால்நடைகள், சூறத்துன் நஹ்ல்- தேனி, சூறதுன் நம்ல்- எறும்பு, சூறதுல் அன்கபூத்- சிலந்திப் பூச்சி, சூறத்துல் பீல்- யானை போன்ற அத்தியாயங்கள் விலங்குகளை பெயராக் கொண்டனவாகும்.

இந்த அத்தியாயங்களில் மட்டுமன்றி வேறு சில அத்தியாயங்களிலும் விலங்குகளைப பற்றி அல்குர்ஆன் பேசுகின்றது. அல்குர்ஆன் பல்வேறு விலங்குகள் பற்றி கூறியதுடன் இதன் மூலம் விலங்குகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பறவைகள், கால்நடைகளான ஒட்டகை, ஆடு, மாடு, கழுதை, கோவேறுகழுதை, மந்தை, யானை, பூச்சி வகையான எறும்பு, தேனி, சிலந்தி, தவளை, வெட்டுக்கிளி, பாம்பு, போன்ற பல விலங்குகள் பற்றிக் கருத்துக் கூறி அவற்றை ஆய்வு செய்யுமாறும் அதன் மூலம் அல்லாஹ்வின் மான்புகளை தெளிவுபெறுமாறும் கூறுகின்றது.

அந்தவகையில் அல்குர்ஆன் பறவை பற்றிக் குறிப்பிடும் போது அவை விலங்குகளுடனான ஒரு சமூகம் என்று குறிப்பிடுகின்றது. இதனை அல் குர்ஆன் பூமியில் ஊர்ந்து திரிபவைகளும், தமது இறக்கைகளால் பறந்து திரிபவைகளும் உங்களைப் போன்ற ஒரு இனமே அன்றி வேறில்லை. இவை எதையும் நாம் எமது குறிப்பேட்டில் குறிப்பிடாமல் இல்லை. பின்னர் அவை ஒன்று திரட்டப்படும்.” (6:38) இதன்படி விலங்குகளும் பறவைகளும் ஒரு சமூககக் கூட்டமைப்பில் வாழ்ந்து வருவதுடன் அவை தங்களை ஒன்றாக இணைத்தும் பணி புரிகின்றன.

பறவைகளின் இயக்கம் பற்றி அல்குர்ஆன் கூறும் போது அவர்களுக்கு மேல் இறக்கைகளை விரித்த நிலையிலும் மடித்த நிலையிலும் பறக்கும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர வேறு எவரும் அவை கீழே விழாமல் தடுத்துவைக்கவில்லை. நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் பார்க்கக் கூடியவன்.” (67:19) என்று கூறுகிறது.

அல்குர்ஆன் தேனி பற்றியும் பல உண்மைகளைக் கூறுகிறது. சூறா நஹ்லில் உம்முடைய இறைவன் தேனிக்கு வஹி அறிவித்தான். மலைகளிலும், மரங்களிலும், பந்தல்களிலும், கட்டிடங்களிலும் கூடுகளைக் கட்டிக்கொள். மேலும் அனைத்துப் பழங்களினதும் சாற்றை உறிஞ்சிக்கொள். உம் இறைவன் சீராக அமைத்துத் தந்த பாதையில் சென்று கொண்டிரு.” (16:68-69)

இவை மட்டுமன்றி சிலந்திப் பூச்சி பற்றியும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) அவர்களது காலத்தில் குறைசிக் காபிர்கள் முஹம்மதின் இறைவன் ஈயையும், சிலந்திப்பூச்சியையும் மேற்கோள்காட்ட தவறவில்லை என்று இழிந்து கூறினர். அச்சமயம் அவர்கள் இழிந்து பேசிய  சிலந்திப் பூச்சியையே அவர்களுக்கு உவமானமாக பின்வரும் வசனம் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அன்றி வேறு தெய்வங்களை வணங்குவோருக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியைப் போன்றது ஆகும். அது ஒருவீட்டை அமைத்துக் கொண்டது நிச்சயமாக வீடுகளில் மிகப்பலவீனமானது சிலந்தி வீடே ஆகும். அவர்கள் அறிந்திருந்தால் சிலைகளை வணங்கமாட்டார்.” (29:41)

இது போன்று எறும்புகள் பற்றியும் பல அறிவியற் கருத்துக்களை அல்குர்ஆன் கூறுகின்றது. சுலைமான் நபி எறும்புகள் வசித்திடும் ஓடையை நெருங்கிய போது ஒரு பெண்(தலைவி) எறும்பு எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குல் நுழைந்துவிடுங்கள் சுலைமானும் அவரது படையினரும் உணராது உங்களை மிதித்துவிடக் கூடும். எனக்கூறியது. இதைக் கேட்ட சுலைமான்(அலை) புன்முறுவல் செய்தார்கள்” (27:18-19) இவ்வசனம் மூலம் எறும்புகள் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுகின்ற விதம் காட்டப்பட்டுள்ளது.

கால் நடைகள் பற்றியும் இஸ்லாம் கூறுகின்றது. அவற்றில் பல வகை இருப்பதனையும் அவற்றினை ஆய்வு செய்து அறிவினைப் பெறுமாறும் இஸ்லாம் தூண்டுகின்றது. அந்தவகையில் ஒட்டகம், ஆடு, மாடு போன்றவை பற்றியும் யானை, குதிரை, கழுதை, கோவேறுகழுதை போன்றவை பற்றியும் இஸ்லாம் கூறுகின்றது. மனிதர்களிலும், ஜீவராசிகளிலும், ஆடு, மாடு, ஒட்டகை முதலிய கால்நடைகளிலும் இவ்வாறே பல வண்ணங்கள் இருக்கின்றன” (35:27) என்ற வசனம் இதற்கு போதிய சான்றாகும். இன்னும் விலங்குகளை ஆராயுமாறு அல்குர்ஆன் போதிக்கின்றது. தங்களது ஒட்டகையையாவது அந்நிராகரிப்பாளர்கள் ஆராய வேண்டாமா?” “ஒட்டகை அது எவ்வாறு சிறுசிஸ்டிக்கப்பட்டுள்ளது என ஆராய வேண்டாமா?” போன்ற வசனங்களில் ஆராயுமாறு தூண்டுகிறான்.

இஸ்லாம் விலங்குகளை சிறப்பித்ததுடன் அவற்றின் மீது அன்பு காட்ட வேண்டும் என மனிதனைப் பணிக்கின்றது. இஸ்லாத்திற்கு மாற்றமான ஜாஹிலிய சமூகம் இதற்கு மாற்றமாகவே நடந்து கொண்டது. ஜாஹிலிய அரேபியர்கள் விலங்குகளை சித்ரவதை செய்வதை பொழுது போக்காகக் கொண்டிருந்தனர். சுமை தூக்கும் பிராணிகளது காதுகளைச் சீவி துண்டாக வெட்டிவிடுவர், மழைவேண்டி மாட்டின் வாலில் தீ வைத்தல், இறந்த ஒரு மனிதருக்காக அவனது ஒட்டகையை அவனது சமாதியில் கட்டிவைப்பார்கள் அது அப்படியே இறந்துவிடும். அம்பெறிந்து விலங்குகளைக் கொன்று வேடிக்கை பார்த்தார்கள். இத்தகைய மிருகவதை செயற்பாடுகளில் மூழ்கியிருந்த ஜாஹிலிய மக்களை இஸ்லாம் விலங்கியல் பற்றிய தெளிவான போதனைகள் மூலம் விலங்குகள் மீது அன்பு செலுத்துவோராக மாற்றியது. இவர்கள் பிற்காலத்தில் விலங்கியல் அய்வின் முன்னோடிகளாக திகழ்கின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் விலங்கியல் மீது அன்பு காட்ட பல போதனைகளை முன்வைத்தார்கள். அந்தவகையில் மண்ணிலுள்ளவற்றின் மீது இரக்கம் காட்டுங்கள் விண்ணில் உள்ளோர் உங்களுக்கு இரக்கம் காட்டுவர்.(அல் ஹதீஸ்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது மனித உயிர்கள் ஜீவராசிகள், பிராணிகள் போன்ற அனைத்தையும் குறிக்கின்றது.

ஒருவன் விலங்குகளோடு நடந்து கொள்ளும் முறை கூட அவனது சுவர்கத்தையும், நரகத்தையும் தீர்மானிக்கின்றது. என்பது இஸ்லாமியக் கருத்தாகும். நபி(ஸல்) அவர்களது மிஃராஜ் யாத்திரையின் போது வீட்டில் வளர்த்த ஒரு பூனைக்கு உரிய வேளையில் உணவளிக்காமல் துன்பப்படுத்தியதன் காரணமாக நரகுச்சுச் சென்ற ஒரு பெண்மணி காட்டப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்குக் அதைக் கூறி எச்சரித்தார்கள். பூனையை வளர்த்ததால் தனது ஸஹாபி ஒருவரை அபூ {ரைராஎன்று நபி (ஸல்) அவர்கள் அழைத்துச் சிறப்பித்தார்கள். இவ்வாறு விலங்குகளை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
விலங்குகளில் சிலவற்றை வளர்க்கத்தூண்டும் இஸ்லாம் வேறு சிலவற்றைத் தடை செய்கின்றது. இதற்கு பன்றி, நாய் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நாயும், உருவப்படமும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்” (அல் ஹதீஸ்)
மனிதனால் உணரமுடியாத சில விடயங்களை சில விலங்குகள் அறிந்த கொள்வதாக இஸ்லாம் கூறுகின்றது. அந்தவகையில் பின்வரும் ஹதீஸ் இது பற்றிக் குறிப்பிடுகின்றது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் இரவு நேரங்களில் நாய் குறைப்பதையும், கழுதை கத்துவதையும் செவிமடுத்தால் அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்புத் தேடுங்கள். ஏனெனில் நீங்கள் பார்க்காதவற்றை அவை பார்க்கின்றன. (அல் ஹதீஸ்) இதன் பிண்ணனியில்தான் இன்று நாய்போன்ற விலங்குகள் குற்றவியல் துறையில் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்லாம் இது பற்றி எப்போதே கூறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விலங்குகளை கண்ணியப்படுத்திய இஸ்லாம் உணவுக்காக அதனை அறுக்கும் போது பல ஒழுக்கங்களைப் பின்பற்றுகின்றது. சித்ரவதை செய்யாது அறுத்தல், அறுக்கும் ஆயுதம் கூர்மையாக இருத்தல், விட்டு விட்டு அறுக்காது நிறுத்தாமல் அறுத்தல், அறுக்கும் முன் அதற்கு நீர் புகட்டுதல், பிராணிக்கு எதிரில் கத்தியைத் தீட்டாது இருத்தல், ஏனைய பிராணிகளுக்கு முன் அறுக்காது இருத்தல் என பல சிறந்த வழிமுறைகளை இஸ்லாம் கற்றுத்தருகின்றது.

இஸ்லாத்தில் வுழூச் செய்வதற்கு சிறிது நீர் கிடைத்து ஒரு பிராணிக்கு நீர் கிடைக்காத போது அந்நீரை பிராணிக்குப் புகட்டி தயமம் செய்ய வேண்டும். இவ்வாறு இஸ்லாம் விலங்குகள் மீது அன்பு காட்டுவதை முதன்மைப்படுத்தியுள்ளது.

மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்ககளைக் கூட துன்புறுத்தாது ஒரேயடியாகக் கொல்ல இஸ்லாம் பணிக்கின்றது. இவ்வாறு விலங்குகளுடன் கண்ணியமாக நடப்பதில் நபி(ஸல்) அவர்கள் முன்மாதிரியாக திகழ்ந்தார்கள். ஒரு முறை இரு கழுதைக் குட்டியையும் ஒரு பெண் கழுதையிடமிருந்து பிரித்த ஒருவரைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் அவரைக் கண்டித்து அவற்றை தாயுடன் சேர்த்தார்கள்.”(அறிவிப்பவர் ஹஸ்ரத் அப்துர் ரஹ்மான்)
பக்தாதில் இருந்த எறும்புப் புற்றொன்றுக்கு தீயிட்டு எரித்ததைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கண்டித்ததுடன் நெருப்பைக் கொண்டு வேதனை செய்ய அல்லாஹ்வே போதுமானவன் எனக் கூறினார்கள்.” (அல்ஹதீஸ்)

இன்னும் விலங்குகள் மூலம் பல பயன்கள் உண்டு எனவும்  அவை மனிதனுக்காக படைக்கப்பட்டுள்ளது என்றும் இஸ்லாம் கூறுகின்றது. அந்தவகையில் விலங்ககளிலிருந்து பால், இறைச்சி, எரிவாய்வுக்கான மூலங்கள், சவாரி செய்தல், சுமை சுமத்தல், நிலத்தைப் பன்படுத்த உதவுதல் போன்ற பயன்களை மனிதர்களுக்கு பெற்றுத் தருகின்றது.

இன்று விஞ்ஞானம் கொடி கட்டிப்பறக்கும் காலம் என்று வாய்விட்டுப் பேசுகின்றோம். இவ் விஞ்ஞானக் காலத்தில் மாட்டிலிருந்து உற்பத்தியாகும் பசும் பாலைப் பார்க்கவில்லையா? விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி தூய பாலை உற்பத்தி செய்ய எந்த விஞ்ஞானியால் முடியும். உதாரணமாக பசு புல் மேய்கின்றது. அதன் விளைவாக இறைவனின் அருள் கொண்டு பால் தருகின்றது. இதே புல்லை விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி அதனை அரைத்து தூய பாலை பெற்றுத்தர முடியுமா? முடியவே முடியாது. பசும் பாலுக்குப் பதிலாக பச்சை நிறமுள்ள சாரே எமக்குக் கிடைக்கம். மாறாக இறைவனே சானத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து எவ்வித துர்நாற்றமும் இல்லாத தூய பாலை வெளியாக்குகின்றான் என்றால் அவன் எப்படி சக்தி மிக்கவன் என எம்மால் விளங்க முடிகின்றது.

ஆகவே இறைவன் மனிதனை ஆறறிவுடன் படைத்ததன் நோக்கமே அவன் படைப்பை விளங்கி அவனுக்கு வழிப்படுவதற்கே ஆகும். மனிதன் இறைவனின் படைப்புகளை நன்கு ஆழமாக சிந்திக்க வேண்டும் அவன் நாளுக்கு நாள் கடலிலும், கரையிலும் மிக பிரமாண்டமான சிறிய, பெரிய படைப்புக்களைப் படைத்த வண்ணமே இருக்கிறான். விலங்குகளைப் படைத்திருப்பது எங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இருந்தாலும். விலங்குகளின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அவற்றிக்கான உணவு, வாழ்விடம், மருத்துவம் போன்றவைகளை உரிய முறையில் கொடுக்க வேண்டும். இத்தேவைகள் மனிதர்களுக்கு எவ்வாறு அசியம் என்று கருதி அதனை பூர்த்தி செய்ய முயலுகின்றோமோ அவ்வாறே விலங்குகளின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு பூர்த்தி செய்யும் போது அந்த விலங்குகளிலிருந்து பயனையும், இறை திருப்தியையும் பெறலாம். மாறாக விலங்குகளின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் வெறுமனே அதன் மூலம் நாங்கள் பிரயோசனப் படுவோமானால் அந்த விலங்குகள் மூலம் நாங்கள் நரகை அடைய நேரிடும் என்பதில் ஐயமில்லை.

எனவே விலங்குகள் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தை ஆழமாக விளங்கி அவைகளை நல்ல முறையில் பராமரித்து அதன் மூலம் நாங்களும்,  எங்கள் மூலம் அவைகளும் பிரயோசனப்பட்டு மனிதர்களாகிய நாம் இறை திருப்த்தியோடு இனிய சுவனம் அடைய அனைவரும் முயல்வோம்.
தொடரும்

உசாத்துணைகள்
1.            டாக்டர் ஜாகிர் நாயக், 2007, குர்ஆனும் நவீன விஞ்ஞானமும், ஸாஜிதா புக் சென்டர் 248, தம்புச் செட்டித் தெரு, சென்னை. ப.ப. 51-58.
2.            தர்ஜூமதுல் குர்ஆன்.

M.L.M. Hilafan
Reading BA Special in Islamic Civilization
South Eastern University Of Sri Lanka
mlhelfan@gmail.com 

1 comment: