.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, August 7, 2022

மோதலும் மோதல் தீர்த்தலும் (அலகு 06)

மோதல் மற்றும் மோதல் தீர்வு என்பது மிக முக்கியத்துவமிக்க ஒரு விடயமாக காணப்படுகின்றது. இன்று மனிதனது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கப்பட முடியாத ஒரு அம்சமாக மோதல் என்பது மாறியுள்ளது. சமூகங்களிடையே காணப்படும் மாறுபட்ட கலாசாரபண்பாட்டு அம்சங்கள்பழக்கவழக்கங்கள்இனபிரதேச ரீதியான வேறுபாடுகள் மற்றும் பாகுபாடுகள்வளங்களில் காணப்படும் சமமற்ற பலம்வளப்பங்கீட்டில் காணப்படும் பாரபட்சம் போன்றவற்றுடன் வேகமாக அதிகரித்துள்ள மனிதனது தேவைகள் மற்றும் கௌரவம் போன்றவை இதற்கான அடிப்படைக் காரணிகளாகக் காணப்படுகின்றன.

இந்தவகையில் சட்டம்அரசறிவியல்சர்வதேச தொடர்புகள்சமூகவியல் மற்றும்  முகாமைத்துவம் போன்ற பல துறைகளிலும் கற்பிக்கப்படக் கூடிய ஒரு பல்துறைசார் கற்கையாக மோதல் மற்றும் மோதல் தீர்வுக் கற்கையானது இன்று மாறியுள்ளது. எனவேதான் மோதல் மற்றும் மோதல் தீர்வு பற்றிய தெளிவைப் பெற்றுக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

மோதல் என்ற சொல்லினைக் குறிக்கின்ற ‘Conflict’ எனும் ஆங்கிலச் சொல்லானது‘Confligeve’ எனும் இலத்தீன் மொழிச் சொல்லிருந்து தோற்றம் பெற்றதாகும். இதன் கருத்து 'ஒன்றாகப் போராடுஎன்பதாகும். அரசறிவியலின் ஏனைய எண்ணக்கருக்களைப் போன்று மோதல் என்பதற்கும் பல அறிஞர்களாலும் பல வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுள் முக்கிய சிலவற்றை இங்கு நோக்குவோம்.

  • ஒவ்வாத இலக்குகளை கொண்டுள்ள ழச கொண்டுள்ளதாக நம்பப்படுகின்ற இரண்டு ழச பல தரப்பினருக்கிடையிலான ஒரு உறவு நிலையே மோதலாகும்” - Christopher Mitchel
  • போட்டா போட்டியான அபிலாஷைகள்பல்வேறுபட்ட தனித்துவங்கள் மற்றும் மனப்பாங்கு மாற்றங்கள் காரணமாகஆட்களுக்கு அல்லது குழுக்களுக்கு இடையே உருவாகும் எதிர்ப்பை மோதல் எனலாம்”  -  James A. Schellenberg
  • இரண்டு or பல தரப்பினர் குறைபாடாக உள்ள வளங்களை ஒரே சூழ்நிலையில் அடைய முயற்சிக்கும் போது ஏற்படும் நிலையே மோதலாகும்” -  Peter Wallenstein
  • மோதல் என்பது தாங்கள் பொருத்தமில்லாத குறிக்கோள்களை கொண்டுள்ளோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் இரண்டு or இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் or  குழுக்கள் இடையே நிலை கொண்டுள்ள ஓர் சமூக முரண்பாடாகும்' - Louis Krisberg

பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினர்களுக்கிடையே ஏற்படுகின்ற கருத்து வேற்றுமை அல்லது ஒருமித்த தன்மை இன்மையே மோதல் எனலாம்”. இன்னொருவகையில் கூறுவதாயின் ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள்குழுக்கள்நிறுவனங்கள் மற்றும் அரசுகளுக்கிடையில் காணப்படுகின்ற ஒரு வகையான உறவு நிலையினை மோதல் எனலாம்”.

மோதல் என்பது சமூகத்தின் சகல படித்தரங்களிலும் காணப்படும் ஒரு சமூகத் தோற்றப்பாடாகும். ஆட்களின் ஆசைகள்தேவைகள்குறிக்கோள்கள்,  பெறுமானங்கள் மற்றும் அங்கீகாரங்கள் என்பவற்றில் காணப்படும் பல்வகைமையே மோதல்களாக வெளிக்காட்டப்படுகின்றன. மோதலானது சமூக நடத்தையின்போது ஆக்கபூர்வமானதாகவோ அல்லது அழிவுப்பூர்வமானதாகவோ இருப்பதுடன் சமூக இயக்கத்தன்மையின் ஒரு முக்கிய சக்தியாகவும் காணப்படுகின்றது. பொதுப் பிரயோகத்தில் இதற்கு மோதல் (Conflict) எனும் பதம் மட்டுமன்றி பிணக்கு (Dispute),  நெருக்கடி (Crisis), சண்டை (Fight) மற்றும் வன்முறை (Violence) போன்ற பதங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

 

மோதலின் செயற்பாடுகள்

மோதலைப் பொருத்தமட்டில் மோதலினால் ஏற்படும் சாதகமான செயற்பாடுகள் மற்றும் மோதலினால் ஏற்படும் பாதகமான செயற்பாடுகள் என இரண்டு வகையான பிரதான செயற்பாடுகள் காணப்படுவதை அறிஞர்கள் விளக்குகின்றனர்.

இந்தவகையில்ஜேர்மனியைச் சேர்ந்த சமூகவியல் துறைசார்ந்த அறிஞரும்எழுத்தாளருமான ஜோர்ஜ் சீமெல் (George Simmel) தனது மோதலின் சமூகவியல்” (The Sociology of Conflict -  1904) எனும் நூலில் மோதலின் சாதகமான செயற்பாடுகள் அல்லது விளைவுகள் பலவற்றை விளக்குகின்றார். அவற்றில் பின்வருவனவற்றை பிரதானமானவைகளாக எடுத்துக்காட்டலாம்.

  • மோதலானது சமூகம் வளர்ச்சியடையாமல் ஒரே இடத்தில் இருப்பதை தவிர்க்கின்றது.
  • சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றைத் தீர்ப்பதற்கான தேவையை வலியுறுத்துகின்றன.
  • நபர்களும் சமூகமும் மாற்றமடைவதற்கான பங்களிப்பினை வழங்குகின்றது.
  • சமூகக் குழுக்களின் ஒற்றுமைத்தன்மையினை வலுப்படுத்துகின்றது.

மேலும்ஜேர்மனிய-அமெரிக்க சமூகவியல் துறை அறிஞரான லூயிஸ் அல்பிரட் கோசரின் (Lewis Alfred Coser) சமூக மோதலின் செயற்பாடுகள் (The Functions of Social Conflict - 1956)” என்ற கட்டுரையில்மோதலின் சாதகமான செயற்பாடுகளாக அல்லது விளைவுகளாக பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • சிறப்பாக ஒழுங்கமையாத சமூகக் குழுக்களுக்கிடையில் காணப்படும் சஞ்சல நிலையினை (மன அழுத்தத்தினை) தீர்த்துக் கொள்ள மோதல் கை கொடுப்பதால்அவை சமூகக் குழுக்களுக்கிடையில் ஒற்றுமைத்தன்மையினை உறுதிப்படுத்தத் துணை நிற்கும்.
  • மார்க்சிய கருத்தின்படிசமூக வரலாற்றின் முன்னோக்கிய பயணத்தின் உந்து சக்தியாக காணப்படுவது வர்க்க மேதலேயாகும்.
  • ஒன்றுக்கொன்று நேரெதிரான சமூக வர்க்கங்களுக்கிடையே வரலாறு முழுவதும் ஏற்பட்டுள்ள எதிர்வாதங்கள் மற்றும் மோதல்கள்காரணமாக சமூகமானது வரலாற்று நிலைமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.

இவ்வாறு மோதலானது பல சாதகமான செயற்பாடுகளை அல்லது விளைவுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துக் கூடியதாகக் காணப்படுகின்றது. எனினும் மோதல்களினால் பலவகையான பாதகமான அல்லது எதிர்மறையான செயற்பாடுகள் மற்றும் விளைவுகள் ஏற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. இவற்றில் பின்வருபவை முக்கியமானவைகளாகும்.

  • நிம்மதியற்ற வாழ்க்கை மற்றும் அச்ச நிலைகள்
  • வன்முறைகள் மற்றும் யுத்தங்கள்
  • மனிதன் மற்றும் ஏனைய விலங்குகளின் உயிரிழப்புக்கள்
  • உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புக்கள்;
  • பொருளாதார மற்றும் சமூக ரீதியான அழிவுகள்

முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகா யுத்தங்கள்இந்தியா-பாகிஸ்தான் போர்அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகள் மற்றும் இலங்கையின் இன மோதல் போன்றவற்றால் ஏற்பட்ட விளைவுகளை இவற்றிற்கு உதாரணங்களாக எடுத்துக்காட்ட முடியும்.

இன்று சர்வதேச அளவில் பரவியுள்ள மற்றும் பரவிவருகின்ற போராட்டங்கள்பிரிவினைகள்பயங்கரவாதச் செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தங்கள் போன்றவற்றால்மனித வர்க்கம் அனுபவித்த மோதல் தொடர்பான எதிர்மறை விளைவுகளின் தாக்கமேமோதல் தீர்வு மற்றும் இணக்கப்பாடு தொடர்பில் அரசியல் மற்றும் கற்கைக்கான தூண்டுதல்களையும் வழங்குவதற்கான அடிப்படையாகக் காணப்பட்டன.

 

மேதலின் இயல்புகள்

  • எதிர்த்தரப்பு காணப்படல் - பரஸ்பர எதிர்ப்புத்தன்மை கொண்ட எதிரான இருவர்  அல்லது இரு தரப்பினர் அல்லது அதற்கு மேற்பட்டோர் காணப்படுதல்.
  • எதிர்ப்பில் ஈடுபடல் - இரு தரப்பினரும் பரஸ்பரம் எதிரான வழிமுறைகளில் ஈடுபடல்.
  • பாதிப்புசேதம்அழிவை ஏற்படுத்துவதை நோக்காக் கொண்டிருத்தல் - இவர்களது நடத்தையானது எதிர்த்தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்சேதத்தை ஏற்படுத்துதல் மற்றும் அழிவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
  • வெளிப்படையானதாகவும்மதிப்பிடக் கூடியதாகவும் காணப்படல் - இவர்களது பரஸ்பரத் தொழிற்பாடானது வெளிப்படையானதாக இருப்பதுடன்வெளித்தரப்பினருக்கு அதனை மதிப்பிடவும் முடியுமாகவும் காணப்படும்.
  • ஆக்கபூர்வமான அல்லது அழிவுபூர்வமான தன்மையைக் கொண்டிருத்தல் - மோதலின் தன்மைக்கேற்ப அது ஆக்கபூர்வமானதாகவோ அல்லது அழிவுபூர்வமானதாகவோ அமையலாம்.
  • வளத்தட்டுப்பாடு அல்லது நிலைமைகளின் விகித சமமின்மை காரணமாக இப்பரஸ்பர மோதல் உருவாதல்.

 

மோதலின் வகைகள்

மோதலானது பல அறிஞர்களாலும் பல வகையாக வகைப்படுத்தப்பட்டு விளக்கப்படுகின்றது. அவற்றில் சில முக்கிய வகைப்படுத்தல்களாக பின்வருவனவற்றினை அடையாளப்படுத்தலாம்.

1. எளிய வகைப்படுத்தல்

எளிய வகைப்படுத்தலின் அடிப்படையில் மோதலானது நான்கு வகையாயகப் பிரித்து நோக்கப்படுகின்றது.

I. ஆளக மோதல் (Intrapersonal Conflict) - ஒவ்வொரு நபரினதும் உள்ளத்தினுள் ஏற்படுகின்ற மோதல்கள்இவ்வகையில் அடங்குகின்றன. வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நோக்கங்கள் மற்றும் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளத்தில் மோதல்கள் ஏற்படுவது மனிதனின் இயற்கை அனுபவமாகும்.

II. ஆளிடை மோதல் (Inter Personal Conflict)  - நபர்களுக்கிடையில் ஏற்படும் ஆளிடை செயற்பாடுகளின்போது இரு நபர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையில் ஏற்படும் போட்டிவேற்றுமை மற்றும் எதிர்க்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் மோதல்களை இது குறிக்கின்றது.

III. குழுவினுள்ளான மோதல் (Intra group conflict) - இவை சமூக குழுக்களுக்கிடையில் பல்வேறு நோக்கங்கள் மற்றும் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் மோதல்களாகும்.

IV. குழுக்களுக்கிடையிலான மோதல் (Inter Group conflict) - இரண்டு குழுக்கள் அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களுக்கிடையில் ஏற்படும் மோதல்களை இது குறிக்கின்றது.

 

2செயற்பாட்டுவாத வகைப்படுத்தல் (மோதலின் விளைவை அடிப்படையாகக் கொண்டு)

இது மோதல்களினால் சமூகத்தில் ஏற்படுகின்ற செயற்பாடுகளின் சாதக-பாதக விளைவுகளின் அடிப்படையிலான வகைப்படுத்தலாகும். அதாவது மோதலின் இறுதி பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்துவதாகும். இந்த அடிப்படையின் கீழ் அமெரிக்க சமூக உளவியலாளரான மோர்டன் டோய்ச் மோதலை இரண்டாக வகைப்படுத்துகின்றார்.

I. ஆக்கபூர்வமான (நேர்கணிய) மோதல்கள் (Constructive Conflicts)  

மோதலின் இறுதிப் பெறுபேறானது ழச விளைவானதுசாதகமானதாக அல்லது நன்மை பயக்கக் கூடியதாகக் காணப்படுமாயின் அது ஆக்கபூர்வமான மோதலாகும். இங்கு மோதலில் பங்கெடுக்கும் தரப்பினர் தங்களுக்கு இதன்மூலம் நேர்கணிய பெறுபேறு கிடைத்தது என்றே சிந்திக்கின்றனர். இதனால் இவர்கள் மோதலின் விளைவுகள் மீது திருப்தி அடைகின்றனர். இது மோதலின் நேர்கணிய முடிவொன்றினை ஏற்படுத்தக் கூடியதாகவும்சாதகமான நிறைவினை பெற்றுத்தரக் கூடியதாகவும்அழிவுகளற்ற ஆக்கப்பூர்வமானதாகவும் காணப்படும்.

மேதலுக்கு பங்ளித்த காரணிகளை தீர்த்துக்கொள்ள ஒற்றுமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயற்படுவதற்கு தரப்புகளுக்கு வாய்ப்புதிறமை மற்றும் அர்ப்பணிப்பு என்பன கிடைக்கின்றமை இவ்வகை மோதலொன்றில் காணப்படும் ஆக்கப்பூர்வமான விடயமாகும். உதாரணம் : முகாமையாளர் ஊழியரின் குறைந்த திறமை தொடர்பாக முரண்படல்.

 

II. அழிவுப்பூர்வமான (எதிர்மறையான) மோதல்கள் (Destructive Conflicts)

அழிவுப்பூர்வமான or எதிர்மறையான பெறுபேறுகளை அல்லது விளைவுகளை ஏற்படுத்துகின்ற மோதல்கள் அழிவு பூர்வமான மோதல்களாகும். இங்கு மோதல் தரப்பினர் தங்களுக்கு பாதகமான பெறுபேறுகள் கிடைத்துள்ளது என்றே சிந்திப்பதுடன்மோதல் தொடர்பில் திருப்தியின்றியும் காணப்படுவர். இதனால் இங்கு நேர்கணிய மோதல்கள் போன்று மோதல் முடிவுக்கு வராமல்அது மேலும் பரவலடைய வாய்ப்பேற்படுகின்றது.

இவ்வாறான மோதல்கள் தொடர்கின்றபோது அவை பல துறைகளிலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும்விரக்தி போன்ற உளவியல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியதாகக் காணப்படும். உதாரணம் : இலங்கையின் இன மோதல்

 

3. அரசியல் ரீதியான வகைப்படுத்தல்

I. அரசக மோதல்கள் (Intra - State Conflicts) - ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்ட வகையில் நடக்கின்றசர்வதேச அளவில் தாக்கம் செலுத்துகின்ற மேதல்களை இது குறிக்கின்றது. உதாரணம் : சிரியா - ISIS யுத்தம்

II. அரசுகளுக்கு இடையேயான மோதல்கள் (Inter - Sate Conflicts) - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையில் இடம்பெறுகின்ற மேதல்களை இது குறிக்கின்றது. உதாரணம் : இந்தியா - பாகிஸ்தான் யுத்தம்

III. அரச உருவாக்க /  நிர்மான மோதல்கள் (Sate Formation Conflicts) - அரசொன்றினுள் வாழும் மக்களில் குறிப்பிட்ட பிரிவினர் இனமதகொள்கை ரீதியான காரணங்களுக்காக புறக்கனிக்கப்படுகின்றோம் அல்லது ஒடுக்கப்படுகின்றோம் என்று உணர்வதன் மூலம் அல்லது வேறு காரணங்களுக்காகதமக்கான தனியான அரசொன்றை உருவாக்கும் நோக்கில்அரசின் எல்லைக்குற்பட்ட நிலப்பகுதியில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வதற்காக அரசுடன் மோதலில் ஈடுபடுவதை இது குறிக்கின்றது.

தற்காலத்தில் உலகத்தின் பெரும்பாலான பல்லின அரசுகளில் காணப்படும் பிரதேச அடையாளம்அதிகாரத்தைப் பகிர்ந்துக்கொள்வது போலவே பிரிந்து செல்வதையும் நோக்காகக் கொண்டு செயற்படும் இன வர்க்க அரசியல் இயக்கங்கள் மற்றும் அந்நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் காணப்படும் மோதல்கள் அரச நிர்மாண மோதல்களாகும். உதாராணம் : இந்தியாவில் காஷ்மீர் மக்களின் போராட்டம்சீனாவில் ஹொங்கொங் மற்றும் உய்குர் மக்களின் போராட்டம்.

 

4. மோதலின் பாதிப்பின் அளவினை அடிப்படையாகக் கொண்ட வகைப்படுத்தல்

I. சிறிய அளவிலான மோதல்கள் - இவை பெரிய அளவில் சமூகத்தை பாதிக்காத வகையிலும்மனித உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தாத வகையிலும் காணப்படும் மோதல்களாகும். இதற்கு உதாரணமாக தனிநபர்கள்குழுக்கள்நிறுவனங்கள் போன்றவற்றுக்கிடையிலான மோதல்களைக் குறிப்பிடலாம்.

II. பாரியளவிலான மோதல்கள் - இவை பெரிய அளவில் சமூகத்தை பாதிக்கக் கூடியதாகவும் உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதங்களை உண்டு பன்னக்கூடியதாகவும் காணப்படுகின்ற மோதல்களாகும். இவ்வகையான மோதல்கள் பெரிய நிலப்பிரதேசத்தையும்பாரியளவான இராணுவ மற்றும் ஆயுத பலத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுபவையாகக் காணப்படும்.

இதற்கு உதாரணமாகபல்லின சமூக அமைப்பைக் கொண்ட ஒரு நாட்டில் அல்லது பிரதேசத்தில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெறும்  இன மோதல்கள் (இலங்கை அரசு - LTT மோதல்) மற்றும் இரு நாடுகளுக்கிடையில் அல்லது நாடுகள் இரு குழுவாகப் பிரிந்து அல்லது ஒரு நாட்டிற்கு எதிராக சில நாடுகள் சேர்ந்த வகையில் இடம்பெறும் சர்வதேச மோதல்கள் (பாகிஸ்தான் - இந்தியா யுத்தம்அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஈராக்கிற்கு எதிரான யுத்தம்) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

 

5. மோதல் தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தல்

I. சமச்சீரான மோதல்கள் (Symmetric Conflicts) - மோதலில் ஈடுபடுகின்ற தரப்பினர் ஆயுதங்கள்எண்ணிக்கை, ... போன்றவை ரீதியாக சமமான பலத்ததைக் கொண்ட வகையில் காணப்படும் மோதல்கள்  இவ்வகையில் அடங்கும். உதாரணம் : ஈரான் - ஈராக் யுத்தம்பாகிஸ்தான் - இந்தியா யுத்தம்

II. சமச்சீரற்ற மோதல்கள் (Asymmetric Conflicts) - மோதலில் ஈடுபடுகின்ற தரப்பினர் சமமற்ற பலத்ததை அல்லது தன்மையினை கொண்டவர்களாக காணப்படும் மோதல்கள்  இவ்வகையில் அடங்கும். உதாரணம் : இலங்கை இராணுவம் - LTT மோதல், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்

 

6. மோதலின் எதிர்பார்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தல்

I. ஆசைகள் தொடர்பான மோதல்கள் - நிலங்கள் மற்றும் வளங்களை மையப்படுத்திய காரணிகளினால் தோன்றும் மோதல்கள்  இவ்வகையில் அடங்குகின்றன.

உதாரணம் : பாகிஸ்தான்-இந்தியா எல்லைப்பிரச்சினைகனியவளங்களை பெற்றுக்கொள்வதற்கான அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அத்து மீறிய யுத்தம்.

II. பெறுமானங்கள் தொடர்பான மோதல்கள் - கலாச்சாரம்மதக் கருத்துக்கள்அபிப்பிராயங்கள் சார்ந்த காரணிகள் அல்லது இனத்துவம் காரணமாக தோன்றும் மோதல்கள் இவ்வகையில் அடங்குகின்றன.

உதாரணம் : இந்திய - மாவோயிஸ்டுக்கள் மோதல்இலங்கை அரசு - LTT மோதல்.

III. தொடர்பு தொடர்பான மோதல்கள்; - இரு தப்;பினருக்கிடையிலான தொடர்பு ரீதியான காரணிகளால் ஏற்படும் மேதல்கள் இவ்வகையில் அடங்கும். அதாவது சிறுபான்மை -பெறும்பான்மைஆளும் - ஆளப்படும் தரப்பினர்குடியேற்றப் பிரஜைகள் - குடியேற்றவாத ஆளும் தரப்பு போன்ற தரப்பினருக்கிடையிலான தொடர்பின் விளைவாக ஏற்படும் மோதல்கள்;.

உதாரணம் : தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் நிறவெறிக்கெதிரான போராட்டம்

 

மோதல்கள் தோன்றுவதற்கான அடிப்படைகள்

மோதல்கள் தொடர்பாக நீண்ட ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்களில் ஒருவரான Michael Brown எனும் அறிஞர் மோதல்கள் தேன்றுவதற்கான அடிப்படைக் காரணிகளாக நான்கு தொகுதிகளை அடையாளப்படுத்துகின்றார். அவையாவன,

1. அமைப்பு ரீதியிலான அம்சங்கள் - ஒரு அரசு பலவீனமானதாகக் காணப்படுகின்ற பட்சத்தில்அவ்வரசின் உள்வாரியான பாதுகாப்பு மற்றும் அரசியல் நிறுவனங்கள் போன்றவையும் பலவீனமாகக் காணப்படும். இந்நிலையில் அங்கு காணப்படும் சமூக அல்லது இனக் குழுக்கள் தமது பாதுகாப்பிற்கான முன்னெடுப்புக்களை தாமாகவே செய்ய ஆரம்பிக்கும். இச்செயற்பாடானது அவர்கள் மத்தியில் மோதலினை உருவாக்கும்.

2. அரசியல் ரீதியான அம்சங்கள் - பாரபட்சமான அரசியல் நிறுவனங்கள்பிரத்தியோகமான தேசிய கருத்தியல்கள்குழுக்களுக்கிடையிலான அரசியல் கருத்துக்கள்உயர் குலாத்தினரின் அரசியல் செல்வாக்கு மற்றும் அபிப்பிராயங்கள் புறக்கணிக்கப்படல் போன்ற அரசியல் காரணிகளால் பாதிக்கப்படுகின்ற சமூகத்தினர் அல்லது பிரிவினர் உப தேசியவாதம் மற்றும் பிரிவினைகளைக் கோரி  போராட்டங்களை முன்னெடுக்கின்றபோது அவை மோதலினை தோற்றுவிக்கும்.

3. பொருளாதார மற்றும் சமூக ரீதியான அம்சங்கள் - பொருளாதார முறைமையில் இடம்பெறும் புறக்கணிப்புகள்வளப்பங்கீட்டில் காணப்படும் பாரபட்சங்கள்உற்பத்திப் பொருட்களது தரங்களிலுள்ள வேறுபாடுகள்வேகமான பொருளாதார அபிவிருத்திநவீனமயமாக்கலின் செல்வாக்கு மற்றும் தொழிநுட்பப்போக்கு போன்றவை துரித சமூக மாற்றித்தினை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக முறைமைக்கு தடையாகக் காணப்படுவதுடன்மேதல்களையும் தோற்றுவிக்கின்றது.

4. கலாச்சாரத்தை விளங்கிக் கொள்ள தொடர்பான அம்சங்கள் - கலாச்சாரத்துடன் தொடர்பான விளங்கிக் கொள்ளல் மற்றும் தவறான புரிதல்கள் போன்றவற்றினால் கலாச்சாரத்தினை அடிப்படையாகக் கொண்டு மோதல்கள் தோற்றம் பெறுகின்றன. குறிப்பாகசிறுபான்மை சமூகங்கள் பின்பற்றுகின்ற கலாசாரங்களுக்கு எதிரான செயற்பாடுகள்கலாசார ரீதியான ஓரங்கட்டல்கள்மொழிப் பயண்பாடுஅவை மீதான கட்டுப்பாடுகள்மிகைப்படுத்தப்பட்ட வரலாற்றுக் குறிப்புக்கள்சமயச் சுதந்திரம் மீதான தடைகள் மற்றும் புறக்கனிப்புக்கள் போன்றவற்றால் ஏற்படுத்தப்படும் பாரபட்சங்கள் போன்றவை மோதல்களை தோற்றுவிக்கின்றன.

இதேவேளை ஒரு மோதலை உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்திக் காட்டலாம்.

  • தேவைகள்
  • விருப்பங்கள்
  • பெறுமானங்கள்
  • நிலைமைகள்
  • தொடர்பாடல் முறிவடைதல்
  • அதிகாரத்துவம் மற்றும் வளங்களுக்கான போட்டி
  • குறிக்கோள் வேறுபாடுகள்
  • வேறுபாடான எண்ணக்கருக்கல்

 

ஜொஹான் கல்தூனின் மோதல் முக்கோனி (Conflict Triangle)

1930 ஆம் ஆண்டு  நோர்வேயின் ஒஸ்லோ நகரில் பிறந்த ஜொஹான் கல்தூன் பிரபலமான சமூகவியலாளரும் கணிதவியலாளருமாவார். 1973 முதல் 2000 ஆண்டு வரை பல பல்கலைக்கழகங்களில் மோதல் கற்கைகள் பிரிவின் பேராசிரியராக கடமையாற்றிய இவர் சமாதானம் மற்றும் மோதல் கற்கைகளின் நிறுவுனராகவும் கருதப்படுகிறார். இவரால் முன்வைக்கப்பட்ட மோதல் மாதிரி மிகப்பிரபலமான ஒன்றாகக் காணப்படுகின்றது. அந்தவகையில், 1960 களின் இருதியில் ஜொஹான் கல்தூன் ஒரு செல்வாக்குச் செலுத்தும் மோதல் மாதிரியை அறிமுகம் செய்தார். அதை இங்கு நோக்குவோம்.

 


ஒத்த நலன்கள் மற்றும் வேறுபட்ட நலன்கள் கொண்ட மேதல்களை (Symmetric Asymmetric Conflict) சூழ்ந்து கொண்ட ஒரு மோதல்மாதிரியை அவர் அறிமுகம் செய்தார். இவர் மோதல் முக்கோன வடிவில் தோற்றம் பெரும் என்றார். அதாவது அதன் முனைகளில் சூழமைவு (Context), உளப்பாங்கு (Attitude) மற்றும் நடத்தை (Behavior) என்பன இருக்கும் என்றார்.

இங்கு சூழமைவு (Context) மோதலுக்கு அடிப்படையாக அமையும் விடயத்தைக் குறிக்கின்றது. அதாவது இரு மோதல் தரப்புக்களிடையே உள்ள உண்மையான அல்லது காணக்கூடியஅடைய முடியாத இலக்குகளை இது உள்ளடக்குகிறது. ஓத்த நலன் கொண்ட தரப்புக்களிடையேயான மோதலில் சூழமைவு என்பது அவர்களின் நலன்கள்நலன்களுக்கிடையேயான மோதல்கள்  என வரையறுக்கலாம். எதிர் நலன் கொண்ட இரு தரப்பினர்களுக்கிடையிலான மோதலில் அவர்களின் உறவுஉறவிலுள்ள நலன்கள் குறித்த முரண்பாடே சூழமைவாகும்.

இங்கு உளப்பாங்கு (Attitude) என்பது தரப்பினருக்கிடையேயான அபிப்பிராயம்தப்பவிப்பிராயம் ஆகியவற்றை குறிக்கின்றது. இது சார்பானதாக அல்லது எதிரானதாக இருக்கலாம். ஆனால் வன்முறை கொண்ட மோதலில் பயம்கோபம்வெறுப்புபகைமைஇனங்கிப் போகாமை போன்றவைகளால் உளப்பாங்கு செல்வாக்கிற்கு உற்படும்.

நடத்தை (Behavior)) என்பது கூட்டறவு அல்லது கட்டாயப்படுத்தலில் இனைவதைக் காட்டும் சைகைபகைமை என்பவற்றைக் கொண்டிருக்கும் வன்முறை சார்ந்த மோதல் நடத்தைஎச்சரிக்கை செய்தல்பாரபட்சம் காட்டுதல், கட்டாயப்படுத்தல்சமூக வேறுபடுத்தல்கள்குழப்பம் உண்டாக்கும் தாக்குதல்கள் போன்றவற்றை பண்பாகக் கொண்டிருக்கும்.

ஒரு முழு மோதலில் இந்த மூன்று அம்சங்களும் ஒன்றாக இருக்கும் என்று ஜொஹான் கல்தூன் சுட்டிக்காட்டுகின்றார். இங்கு Attitude அல்லது Behavior ஐ வெளிப்படுத்தாத மோதல் கட்டமைப்பு என்பது முதிர்வுராத அல்லது மறைந்திருக்கும் மோதல் என்கிறார். இவர் மோதலை மனோநிலை மற்றும் நடத்தை என்பன எப்போதும் இடைவிடாது ஒன்றன்மீது மற்றது செல்வாக்குச் செலுத்துகின்ற ஓர் இயக்கவிசைச் செயற்பாடு என விளக்குகின்றார்.

 

லூவிஸ் கிறிஸ்பேர்க்கின் மோதல் வாழ்க்கைச் சக்கரம் (Conflict Life Cycle)

தனிநபர்கள் தொடங்கி நாடுகளுக்கிடையிலான மோதல்கள்வரைஅதிகமான மோதல்களில் ஒருவகையான வாழ்க்கைச் சக்கரம் காணப்படுகின்றது என்பது மோதல் மற்றும் மோதல் தீர்வு தொடர்பில் அண்மைக்கால ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒரு முக்கிய விடயமாகும். இந்தவகையில்மோதல் கற்கையின் முன்னோடிகளில் ஒருவரான லூவிஸ் கிறிஸ்பேர்க்” என்ற அமெரிக்க அறிஞர் இந்தக் கருத்தினை வெளியிட்ட முக்கிய ஒரு ஆய்வாளராவார்.

இவர் மோதலானது நிலையானதல்ல. மாறாக அது ஆரம்பித்து பின்னர் காணாமல் போகக் கூடியதாகும். இந்தவகையில்ஆரம்பத்தில் அமைதியற்றுக் காணப்படும் மோதல்கள் பின்னர் பல்வேறு கட்டங்களைத் தாண்டிச் செல்லும் போது மிகவும் அமைதியடைந்த நிலைக்கு வரும் என்று விளக்குகின்றார். மேலும்இவ்வாறு பல்வேறு கட்டங்களை தாண்டி பயணிக்கும் மோதலின் பெறுபேற்றால் புதியதோர் மோதல் தோற்றம் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு எனவும் குறிப்பிடுகின்றார்.




கிறிஸ்பேக்கின் இந்தக் கருத்தானது மோதல் வாழ்க்கைச் சக்கரம்” என்ற கருத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை காணக்கூடியதாக உள்ளது. இதனை பின்வருமாறு விளக்கலாம்.

1. வெளிப்படா மோதல்கள்  / மேதலிற்கான காரணி (Laten Conflict)

இது ஒரு மோதலின் ஆரம்ப நிலையாகும். இதன் பிரதான குணாம்சம் ஒரு மோதல் ஏற்படுவதற்கான காரணிகள் காணப்பட்டாலும்அவை பெரும்பாலும் அடையாளம் காணப்படாமல் இருப்பதாகும். அவ்வாறு அடையாளம் காணப்பட்டாலும் அவை மோதலினை ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக் கொள்ளாமலிருத்தலாகும். அவற்றை ஏற்றுக் கொண்டு ஆரம்பத்திலேயே தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் மோதலொன்று ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

2. மோதல் ஏற்படல் / மேலெலல் (Conflict Emergence)

இக்கட்டத்தில் சமப்படுத்த முடியாத எதிர்பார்ப்புக்கள் மற்றும் நோக்கங்கள் உருவாக்கல் நடைபெறும். இவை முதல் கட்டத்தில் காணப்பட்ட குறைகள் அல்லது மனக்குறைகள் மற்றும் அதற்குக் கிடைக்கும் எதிர்மறை விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்.

3. மோதல் தீவிரமடைதல் (Conflict Escalation)

மோதல் தீவிரமடைதல் என்பது மோதலின் பரிமானம் மற்றும் தீவிரத்தன்மை ஆகிய இரண்டும் பண்புரீதியாக புதியதொரு படிநிலைக்கு மாற்றமடைவதாகும். நிலை இவ்வாறு தீவிரமடையும் போது மோதலானது வன்முறையாக யுத்த நிலைக்கு வரும். இதனால் அதிக மரணங்கள்சொத்து மற்றும் இதர அழிவுகள் போன்றவையும் ஏற்படும். அத்துடன் இங்கு மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் ஒருதலைப்பட்சமாக யுத்த ரீதியான தீர்விலேயே அதிக அக்கறை செலுத்தும் நிலையும் காணப்படும்.

 பொதுவாக நாடுகளின் உள்ளக மோதல்களின் போது இந்தப் படிநிலையானது ஒப்பீட்டளவில் நீண்ட காலத்தைக் கொண்டதாகக் காணப்படும். அத்தோடு இக்கட்டத்தில் மோதலை அரசியல் கலந்துரையாடல் வழிமுறையில் தீர்த்துக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளும் மிகவும் குறைவாகும்.

4. மோதலின் தீவிரநிலை குறைவடைதல் (Conflict De- Escalation)

மோதலொன்று தீவிர படிநிலைக்கு இட்டுச் செல்லப்படினும் அத்தீவிரத்தன்மை குறைவடையும் போக்கும் மோதலில் உண்டு. அதன் தீவிரத்தன்மையை குறைத்துக்கொள்ளும் சமிக்சைகள் இரு தரப்புக்குமிடையில் பரிமாற்றிக் கொண்டதன் பின்னர் மோதலொன்றின் தீவிரத்தன்மை குறைவடைதல் ஆரம்பிக்கும்.

இந்நிலையானது பல்வேறு விடயங்களின் பெறுபேறுகளின் விளைவாக அடையப்படலாம்.  அவற்றில்மோதலினை தொடர்ந்தும் முன்னெடுத்தச் செல்வதற்கான வளங்கள் மற்றும் திறன்கள் என்பன மோதல் தரப்பினரினரிடம் பலவீனமடைதல்சர்வதேச அழுத்தங்கள்மோதலை முன்னெடுப்பதற்கு தேவையான மக்களின் ஒத்துழைப்பில் ஏற்படும் வீழ்ச்சிமோதல் தரப்பினரினர் மோதலினாலேயே கலைப்படைதல் மற்றும் இதனால் ஒருதலைப்பட்சமாக தீர்வுகளை தேடும் திடசங்கற்பம் கீழ்நிலையடைதல் போன்றன முக்கியமான விடயங்களாகும்.

வில்லியம் ஏ. சார்ட்மனின் அந்யோன்ய ரீதியிலான காயப்படுத்தும் தேக்க நிலை (Mutually Hurting Stalemate) என்ற எண்ணக்கருமோதலொன்றின் தீவிரத்தன்மை உயர்வடைவதிலிருந்து குறைவடையும் வரை அதன் மோதலின் பரிமாற்றத்தை தெளிவுப்படுத்தும் கோட்பாட்டு சூத்திரமாகும். மோதலொன்றின் தீவிரநிலை நீண்டகாலத்திற்கு நீடிக்கும்போதுயுத்த ரீதியாக ஒருதலைப்பட்சமாக தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கான திறன் இல்லாது போகும் என்பது தரப்புகளுக்கு விளங்கும் என்பதையே சார்ட்மன் இதன் மூலம் எடுத்துக் காட்டினார்.

இங்கு எத்தரப்புக்கும் ஒருதலைப்பட்சமாக வெற்றியை பெற்றுக்கொள்ள முடியாதமுன் பின் செல்ல முடியாத சிறைப்படுத்தலுக்கு மோதல் தரப்புகள் ஆளாகியிருக்கும். இது இரு தரப்புகளுக்கும் தீமைகளையும் பாரிய நட்டங்களை பெற்றுத்தருவதாகும். இச்சந்தர்ப்பத்திலேயே தரப்புகள் ஒருதலைப்பட்சமான தீர்வுகளையன்றி,  இரு தரப்புகளும் இணைந்து தேட வேண்டிய இருதரப்பு கலந்துரையாடல் முறையிலான தீர்வுகளை தேட தயாராகும். இதை மோதலின் தீவிரத்தன்மையினை குறைப்பதற்கு தேவையான அதிமுக்கிய நிபந்தனையாக சார்ட்மன் குறிப்பிடுகின்றார்.

மோதலை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்வதற்கு மூன்றாம் தரப்பொன்று மத்தியஸ்தர்களாக பங்கு கொள்வதற்கான வாய்ப்பு இந்நிலையிலேயே கிடைக்கும்.

 

5. மோதலினை முடிவுக்கு கொண்டுவரல் (Termination)

சர்வதேச அளவில் அல்லது நாடொன்றினுள் காணப்படும் மோதலானது யுத்தமாக மாறிஅதனால் நீண்டு சென்றுள்ள மோதலை முடிவுக்கு கொண்டுவருதலானது நீண்டகால செயற்பாட்டின் விளைவாகக் காணப்படுகின்றது. இந்தவகையில்ஒரு மோதலை பிரதானமாக இரண்டு வகைகளில் முடிவுக்கு கொண்டுவர முடியும்.

ஒன்று மோதலின் விளைவாக யுத்தத்தில் ஈடுபடுவோரில் ஒரு தரப்பினருக்கு வெற்றி கிடைத்தலுடன் (Win - Lost) மோதலானது முடிவுக்கு வருகின்ற நிலையாகும். இதன்N;பாது பொதுவாக தோல்வியுற்ற தரப்பினர் அழிவடைவதோடுஅவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்கும் பூரண உரிமை (எதிர்மறை அதிகாரம்) வெற்றி பெற்ற தரப்பினருக்கு கிடைக்கின்றது.

இரண்டாவதுமோதலில் ஈடுபடும் இரு தரப்பினரும் அல்லது சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் (Win - Win) வகையிலான கலந்துரையாடல் மூலம் தீர்வுக்கு அல்லது மோதலை முடிவுக்கு கொண்டு வருகின்ற நிலையாகும். இது பொதுவாக 'சமதான உடன்படிக்கைமூலம் இடம்பெறும். மூன்றாவது தரப்பினரின் மத்தியஸ்தமானது  இங்கு முக்கியமானதொரு பங்கினை வகிக்கக் கூடியதாகக் காணப்படும். இதுவே நிலையான மோதல் தீர்வை ஏற்படுத்த வழிசெய்யக் கூடியதாகக் காணப்படும்.

மோதலுடன் தொடர்புடைய தரப்பினர்கள் ஆரம்பத்தில் வெற்றி கொள்ள எண்ணிய ஒருதலைப்பட்சமான (Unilateral) மற்றும் உச்ச (Maximalist) இலக்குகளை கைவிட்டுஇரு தரப்பினரும் அல்லது சகல தரப்பினரும் உடன்படக்கூடிய வகையிலான இலக்குகளை தெரிவு செய்வதே இங்கு பெரும்பாலும்  சாமாதான உடன்படிக்கையின் மூலம் நடைபெறுகின்றது. இதன்படி கலந்துரையாடல் மூலமான சமாதான உடன்படிக்கையின் மூலம் மோதல் முடிவுக்கு கொண்டவரப்படல்மோதல் தரப்புக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கிடையில் நடைபெறும் அந்யோன்ய விட்டுக்கொடுப்பு (Mutual Accommodation) மற்றும் சமரச சமாதானம் (Compromise) என்பன இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

 

மோதல்களின் போது செய்ய வேண்டியவை

மோதல் ஒன்று தோன்றுகின்றபோது அல்லது காணப்படுகின்றபோதுகுறித்த மோதலினை தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இந்தவகையில் மோதல்களைத் தீர்த்துக்கொள்வதற்கு,  குறித்த மேதல்களை சாதகமானதும்a, ஆக்கபூர்வமானதுமான தீர்வொன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவற்றில் பிரவேசிக்க  வேண்டியது அவசியமாகும்.

மோதல்களுக்கு காரணமாக அமைந்த காரணிகளை (Underlying Causes) அடையாளங்கண்டு அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதானது இதற்கான சிறந்த பிரவேசமாகவும் மற்றும் மோதல் தீர்வு தொடர்பான கற்கையால் இதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையாகவும் காணப்படுகின்றது.

சைமன் பிஸர் என்ற அறிஞரின் குழு 2000 ஆம் ஆண்டில் வெளியிட்ட மேதலோடு பணிபுரிதல்செயற்பாடுகளுக்கான திறன்கள் மற்றும் உபாயமுறைகள் (Working With Conflict, Skills and Strategies for Action)” என்ற நூலில்மோதல் தொடர்பில் செயற்படும்போது பயன்படும் பல்வேறு அணுகுமுறைகளை விபரிக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறைகள் மோதல் தீர்வு கற்கையில் பல்வேறு ஆய்வாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டவைகளாகும். அவை,

1, சமூக உறவுசார் அணுகுமுறை (Community Relations Approach)

மோதலானது சமூகங்களுக்கிடையில் தொடர்புகள் அற்றுப்போவதால் அல்லது உறவுகளில் விரிசல் ஏற்படுவதால் தோன்றுகின்றது” என்பதே இவ்வணுகுமுறையின் பிரதான கருத்தாகும். சமூகக் குழுக்களுக்கிடையில் ஏற்படும் நம்பிக்கையீனம்விரோதம்அச்சம் மற்றும் அந்நியமாதல் என்பன இதன் பண்புகளாகும்.

எனவே இவ்வகையான மோதல்களுக்கு தீர்வினை பெற்றுத்தர செயற்படுகின்றபோது பின்வரும் விடயங்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

  • மோதலுடன் தொடர்புடைய தரப்புகளுக்கிடையில் சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை விருத்தி செய்தல்.
  • மோதல் தரப்பினரிடத்தில் சமூகஇனத்துவகலாசார ... ரீதியான  சமூகப் பல்வகைமையினை மதித்து அவற்றை ஏற்றுக் கொள்வதற்கும் அனுசரித்தச் செல்வதற்கும் தேவையான மனோ நிலையினையும்திறன்களையும் விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 

2. மனிதத் தேவைகள் அணுகுமுறை (Human Needs Approach)

மனிதனின் அடிப்படை தேவைகளான லௌகீகசமூக மற்றும் உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையே” மோதல்கள் ஏற்படுவதற்கான காரணம் என மோதல் தொடர்பான மனிதத் தேவைகள் கோட்பாடு குறிப்பிடுகின்றது. அதாவது பாதுகாப்புஅடையாளம்ஏற்றுக்கொள்ளல்கௌரவம்அரசியல் பங்குப்பற்றல்சுதந்திரம்மற்றும் மத கலாசாரங்களை கடைபிடித்தல் போன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையால் ஏற்படும் விரக்தியே இவ்வாறான மோதல்கள்ஏற்படக் காரணமாகும்.

எனவே மனிதத் தேவைகளோடு தொடர்புடைய இவ்வாறான மோதல்களைத் தீர்க்கும்போது  பின்வரும் விடயங்களை கையள வேண்டும்.

  • தம்மால் செய்யப்படாத மானுட தேவைகளை அறிந்து கொண்டு அவற்றை ஈடு செய்து கொள்வதற்குள்ள மாற்று வழிமுறைகளை தேடுவதற்கு மோதல் தரப்புகளைத் தூண்டுதல்.
  • அனைத்துத் தரப்பினருக்கும் அடிப்படை மனிதத் தேவைகளை ஈடு செய்து கொள்ளக்கூடிய வகையிலான உடன்பாடுகளுக்கு வருவதற்கு தரப்புகளுக்கு உதவியளித்தல்.


3. அடையாளத் தேவைகள் அணுகுமுறை (Identity Needs Approach)

"சமூகக் குழுக்களுக்கிடையிலான அடையாளம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்ற உணர்வினாலேயே மோதல்கள்; தோன்றுகின்றன" என்பதே அடையாளத் தேவைகள் கோட்பாட்டின் கருத்தாகும். அதாவது ஒரு இனத்தின் அல்லது ஒரு மதத்தினரின் அல்லது ஒரு சமூகப்பிரிவினரின் தனித்துவங்களான அல்லது அடையாளங்களான இருப்பு, மதஸ்தலங்கள், முக்கிய இடங்கள், கலாசார பாரம்பரியங்கள் மற்றும் சின்னங்கள் போன்றவை அழிக்கப்படுவதனால் அல்லது சேதப்படுத்தப்படுவதனால் மோதல்கள் தோன்றுகின்றன.

எனவே இவ்வாறான மோதல்களைத் தீர்ப்பதற்கு,

  • மோதல் தரப்பினரிடத்தில்தங்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் பயங்கள் என்னவென்பதை கண்டுபிடிப்பதற்கான உதவிகளைச் செய்துஅவர்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மீள் இணக்கத்தை அல்லது சமரசத்தை (Reconciliation) கட்டியெழுப்ப உதவி புரிய வேண்டும்.
  • அத்துடன் அனைத்து தரப்புகளினதும் அடிப்படை அடையாளங்கள் மற்றும் தேவைகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் கூட்டு உடன்பாட்டினை ஏற்படுத்திக்கொள்ளவும் உதவ வேண்டும்.

 

4. கலாசார தொடர்பாடல் அணுகுமுறை (Cultural Communication Approach)

ஒவ்வொரு தரப்பினரதும் கலாசாரத் தொடர்பாடல் மாதிரிகளுக்கிடையில் காணப்படும் வேற்றுமைகளே மோதல்கள் தோன்றக் காரணமாக அமைகின்றது” என்பதே கலாசார தொடர்பாடல் கோட்பாட்டில் மூலம் கருதப்படுகின்றது. அதாவது வேறுபட்ட கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் அல்லது பிரதேசங்களில் ஏனைய பிரிவினரின் கலாச்சாரங்கள் பற்றிய தெளிவின்மைஅவை பற்றிய பிழையான புரிதல்கள் மற்றும் தமது கலாசாரமே முதன்மை பெறவேண்டுமென்ற எண்ணப்பாடு ஆகிய காரணங்களாலேயே மோதல்கள் ஏற்படுகின்றது என்று குறிப்பிடப்படுகின்றது.

எனவே இவ்வாறான மோதல்களை தீர்ப்பதற்கு,

  • மோதலுடன் தொடர்புடைய தரப்புக்களுக்கிடையில் காணப்படும் பாதகமான மற்றும்  பிழையான புரிதல்களை அல்லது எதிர்மறைச் சிந்தனைகளை நீக்கிக் கொள்ள வழி செய்தல் வேண்டும்.
  • அவர்களுக்கிடையில் கலாசாரம் தொடர்பான  புரிதல்களையும் புரிந்துணர்வையும் அதிகரிக்கச் செய்தல் வேண்டும்.
  • கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடலை வலுப்படுத்தல் வேண்டும்.


5. மோதல் நிலைமாற்ற அணுகுமுறை (Conflict Transformation Approach)

சமூககலாசாரபொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளில் ஏற்படும் அசமத்துவம்பாரபட்சம் மற்றும் அநீதி போன்றவற்றின் விளைவாகவே மோதல்கள்ஏற்படுகின்றனஆகவே இக்கட்டமைப்புக்களின் தன்மையை (மோதல் காரணிகளை அல்லது மோதல் தன்மையை) நிலை மாற்றுவதின் மூலம் மேதல்களைத் தீர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும் என்று இவ்வணுகுமுறை குறிப்பிடுகின்றது.

எனவே இவ்வாறான மோதல்களை தீர்ப்பதற்கு,

  • அசமத்துவம்பாரபட்சம் மற்றும் அநீதி என்பவை ஏற்பட அடிப்படையாக அமையும் கட்டமைப்புகள்கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்க வேண்டும்.
  • மோதல் தரப்பினரிடையே நீண்டகாலத்துக்கு நிலைத்து நிற்கக் கூடிய வகையில் ஆக்கபூர்வமான மற்றங்களையும் புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும்.
  • மக்களை சமாதானம்நியாயத்தன்மைமன்னிப்பு வழங்கல்சமத்துவத்தைப் பேனல் மற்றும் நல்லினக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விடயங்களில் வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். 

 

6. பிரச்சினை தீர்த்தல் அணுகுமுறை (Problem Solving Approach)

மோதல் தரப்பினருக்கிடையில் காணப்படும் ஒவ்வாத அல்லது மாறுபாடான நோக்கங்கள் காரணமாகவும்மோதல் தொடர்பில் தாம் மட்டுமே சரிதமக்கு மட்டுமே எல்லா வெற்றிகளும் கிடைக்க வேண்டும்,  எதிர்த்தரப்பு முற்றாக தோல்வியடைய அல்லது அழிவடைய வேண்டும் என்ற பூச்சிய விருத்தி - Zero Sum (வெற்றி - தோல்வி) உளப்பாங்கு காரணமாகவுமே மோதல்கள் ஏற்படுகின்றது” என்பதுவே இவ்வணுகுமுறையின் கோட்பாட்டு அடிப்படையாகும். இதனால் ஏற்படும் மேதல்களைத் தீர்ப்பதே  இதன் நோக்கமாகும்.

எனவே இவ்வாறான மோதல்களை தீர்ப்பதற்கு,

  • முதலில் மோதல் தரப்பினர் மோதலுக்கான பிரச்சினைகளை தேற்றுவிக்கின்ற மூலக் காரணிகளை இனங்கண்டுஅவற்றை களைவதன் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும்.
  • ஒரு தரப்பு மட்டுமின்றி அனைத்து தரப்புக்களும் வெற்றிக் கொள்ளும் (வெற்றி - வெற்றி) உடன்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வதற்கான மனப்பாங்கு விருத்தியினை ஏற்படுத்தவும்வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் வழி செய்ய வேண்டும்.


இவ்வாக்கத்தினை தொடர்ந்து படிப்பதற்கு கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பையும் click செய்வதன் மூலம் அத்தலைப்பு தொடர்பான pdf ஆக்கத்தினை வாசிக்க முடியும்.


   6.1. மோதல் தொடர்பான வரைவிலக்கணங்களும் வகைப்படுத்தல்களும் 

6.1.1  மோதல் தொடர்பான விளக்கமும் வகைப்படுத்தல்களும்

6.1.2  மோதல் வாழ்க்கைச் சக்கரம் (Conflict Life Cycle)

6.1.3  மோதல்களின் போது செய்ய வேண்டியவை

   6.2. மோதல் இணக்கப்பாட்டு செயன்முறைகள்

   6.3. மோதல் இணக்க வழி முறைகள் 

   6.4. சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மீள்கமைத்தல் 


        

தொடர் 01



தொடர் 02



தொடர் 03



தொடர் 04


No comments:

Post a Comment