.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, August 7, 2022

வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியும் அதில் ஏற்பட்ட மாற்றங்களும் (அலகு 08)

பிரித்தானியவின் அரசியலமைப்பின் பண்புகளை ஒத்தவகையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக்களே வெஸ்ட்மினிஸ்டர் அரசியலமைப்பு மாதிரிகள் எனப்படுகின்றன. இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியல் அமைப்பானது வெஸ்ட்மினிஸ்டர் மாதிரிக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதாகவே காணப்பட்டது. அத்துடன் 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  யாப்பானது ஒரு குடியரசு யாப்பாகக் காணப்பட்ட போதும், வெஸ்ட்மினிஸ்டர் அரசியலமைப்பு மாதிரிக்கான பண்புகளையும் கொண்டதாகவே அது காணப்பட்டது. இந்தவகையில் சோல்பரி அரசியலமைப்பானது பின்வரும் விடயங்களில் பிரித்தானிய அரசியலமைப்பை ஒத்ததாகக் காணப்பட்டது.

1) அரசியலமைப்பின் கட்டமைப்பில் பாராளுமன்றுக்கு முக்கிய இடம் கிடைத்தல்.

2) பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறும் அமைச்சரவை ஒன்று காணப்படல்.

3) சட்டரீதியாக உயர்ந்த நிலையில் பாராளுமன்றம் இருத்தல்.

4) பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களால் அரசாங்கம் அமைக்கப்படுவதுடன்அவ்வரசாங்கமானது பாராளுமன்றத்தினால் நிருவகிக்கப்படுதல்.

5) அரசாங்கம் பாராளுமன்றுக்கு பொறுப்புக்கூறக் கடமைப்பட்டிருத்தல். (பாராளுமன்றமானது அமைச்சர்களை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ நீக்க முடியும்)

6) பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கு சவால் விடுக்க முடியாத வகையில் நீதிமன்றத்தின் வகிபங்கு வரையறை செய்யப்பட்டிருத்தல்.

7) தனி அங்கத்தவர் தேர்தல் தொகுதி (எளிய பெரும்பான்மை) முறையினை அடிப்படையாகக் கொண்டிருத்தல்.

8) இரு கட்சி முறைக்கு ஏற்றவகையில் காணப்படல்.

1943 இல் பிரித்தானிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பிரகடனத்திற்கு ஏற்படொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் காணப்பட்ட மந்திரி சபையானது இலங்கைக்கான ஓர் அரசியல் சீர்திருத்த நகல் திட்டத்தை 1944 இல் தயாரித்து குடியேற்ற நாட்டு காரியதரிசிக்கு அனுப்பியிருந்தது. இதேவேளை இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக 1944 ஆம் ஆண்டு டிசம்பரில் சோல்பரி பிரபு தலமையிலான குழுவொன்றை பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு அனுப்பியிருந்தது. இக்குழுவினர் இலங்கையின் பல பகுதிகளிலும் காணப்பட்ட பல்வேறு பிரிவினைச் சேர்ந்த மக்களையும் சந்தித்துஅவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒரு அரசியல் யாப்பினை சிபாரிசு செய்தனர்.

இந்தவகையில் இலங்கையின் மந்திரிசபையால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த யோசனைகள் மற்றும் சோல்பரி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் ஆகியவற்றின்  அடிப்படையில் உருவாக்கப்பட்ட கெபினட் (பாராளுமன்ற) அரசாங்க மாதிரியாகவே சோல்பரி அரசியல் அமைப்பு காணப்பட்டது.

இவ்வரசியல் திட்டமானது அமைச்சரவையை உருவாக்குதல்பாராளுமன்றத்தின் கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் நாமநிருவாகியை உருவாக்குதல் போன்ற அம்சங்களில் வெஸ்மின்ஸ்டர் அரசியலமைப்பு மாதிரியை கொண்டிருந்ததோடுசில பிரிவுகளில் பிரித்தானிய அரசியலமைப்பில் இருந்து மாறுபட்டதாகக் காணப்பட்டது. அவை,

1) இது எழுதப்பட்ட அரசியலமைப்பாக காணப்பட்டமை.

2) ஒப்பீட்டு ரீதியில் நெகிழா அரசியலமைப்பாக காணப்பட்டமை.

3) அரசியலமைப்பு விவரண அதிகாரம் வரையறுக்கப்பட்ட மற்றும் எழுதப்படாத வகையில் நீதிமன்றுக்கு உரித்தாக்கப்பட்டிருந்தமை.

சோல்பரி அரசியலமைப்பானது இலங்கை பல்லின மற்றும் பன்மத சமூகங்களை கொண்ட ஒரு நாடு என்பதை ஏற்றுக்கொண்டது. அத்துடன் சுயாதீன நீதித்துறை மற்றும் சுயாதீன அரச சேவையினை உருவாக்குவதற்கும் இவ்வரசியலமைப்பினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த அரசியலமைப்பு நிலவிய சுமார் 25 வருட காலத்தில் (1947 - 1972) அரசியலமைப்பில் எட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பையும் click செய்வதன் மூலம் அத்தலைப்பு தொடர்பான pdf ஆக்கத்தினை வாசிக்க முடியும்.


சோல்பரி அரசியல் யாப்பு (1947)



முதலாம் குடியரசு அரசியல் யாப்பு (1972)


No comments:

Post a Comment