இதன்மூலம் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் சமயம் சார்ந்த நலன்களை அடைந்து கொள்வதே காலனித்துவ நாடுகளின் இலக்காகும். அதாவது காலனித்துவ வாதிகள் பொதுவாக குடியேறிய பகுதிகளின் வளங்கள், உழைப்பு, சந்தைகள் என்பவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தல் அதேபோல் தமது சமய, சமூக, பண்பாட்டு மற்றும் மொழி ரீதியான கட்டமைப்புக்களை உள்ளுர் மக்கள் மீது திணித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான குடியேற்றங்களை மேற்கொள்கின்றனர்.
இந்தவகையில் வரலாற்று ரீதியாக பிரித்தானியா, பிரான்ஸ், ஒல்லாந்து, போர்த்துக்கல் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க கண்டங்களிலுள்ள அதிகமான நாடுகளை கைப்பற்றி அவற்றில் தமது காலனித்துவ அரசை ஏற்படுத்தியிருந்தன. இவற்றின் காலனித்துவத்திற்கு உட்பட்ட சில நாடுகளாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், காணா, தன்சானியா, கென்யா, நைஜீரியா, கனடா, அவுஸ்திரேலியா போன்றவற்றைக் குறிப்பிட முடிடியும்.
காலனித்துவ அரசு / குடியேற்ற நாட்டு அரசு
காலனித்துவத்தை ஏற்படுத்திய அரசு மற்றும் காலனித்துவத்திற்கு உட்பட்ட அரசு என்பவற்றுக்கிடையில் இடையில் காணப்படும் தொடர்புகளை தெளிவுப்படுத்துவதற்காக அரசியல் மற்றும் சமூக ஆய்வாளர்களால் பயன்படுத்தும் எண்ணக்கருவாக “காலனித்துவ அரசு (Colonial State)” என்பது அடையாளப்படுத்தப்படுகின்றது. காலனியாளர்களின் முகவராக செயற்படும், காலனித்துவ சமூகம், அதன் அரசியல் நிர்வாகம் மற்றும் அதன் ஆயுத கட்டமைப்பு போன்றவையே இங்கு குடியேற்றவாத நாடு அல்லது காலனித்துவ நாடு என கருதப்படுகின்றது.
இந்தவகையில் வரலாற்று ரீதியாக காலணித்துவ அரசொன்றின் நோக்கங்களாக பின்வரும் விடயங்கள் காணப்பட்டுள்ளன.
1) காலனித்துவத்திற்கு உட்பட்ட சமூகத்தின் நலன்களையன்றி குடியேற்ற நாட்டு அரசின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதாகக் காணப்படல். அதாவது தமது நாட்டின் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப சுதேச மக்களை வழிநடத்தும் குடியேற்ற நாட்டின் முகவராக செயற்படுதல்.
2) குடியேற்றத்திற்கு உட்பட்ட நாட்டில் அரசியல், நிர்வாக, இராணுவ ரீதியாக தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளலும், அதை தொடர்ந்தேர்ச்சியாக பேனிக் கொள்ளலும்.
3) அரசியல் அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தி, குடியேற்றத்திற்கு உட்பட்ட நாட்டிலிருந்து தமது இலக்குகள் மற்றும் நலன்களை உச்ச அளவில் அடைந்து கொள்ளல்.
4) காலனித்துவத்திற்கு உட்படுத்திய நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்புக்களை, தமது நலனுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் அல்லது திசைமுகப்படுத்தல்.
5) கருத்தியல் ரீதியாக தமது மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்தல். அதாவது குறிப்பிட்ட நாட்டில் காணப்படு சுதேச கருத்தியல்கள் தமது நலன்களை அடைந்து கொள்ள தடையாகக் காணப்படும் என்பதால் தமது மேற்கத்தேய கருத்தியல் கோட்பாடுகளை அவர்களிடையே பரப்புதல் மற்றும் திணித்தல். இதனால் குறித்த நாட்டை இலகுவாக பராமரிக்க முடிவதுடன், அந்நாட்டில் தொடர்ந்தும் தரித்திருக்க முடியுமாக இருக்கும் எனக் கருதினர். இவ்வாறு அவர்கள் கருத்தியல் ரீதியாக மேற்கொண்ட திசைமுகப்படுத்தலே அவர்கள் குறித்த நாடுகளில் நீண்ட காலம் தொடர்ந்திருக்க வழிசெய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
காலனித்துவவாத அரசுகள், தமது காலனித்துவத்திற்கு உட்பட்ட நாடுகளை கட்டியெழுப்ப சிற்சில சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் நிருவாக சீர்த்திருத்தங்களையும் (நிலை மாற்றங்கள்) அறிமுகப்படுத்தியிருந்தன. சில நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அடிப்படையிலேயே இவர்களால் இச்சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை,
1) குறித்த நாடுகளில் தொடர்ந்தும் தரித்திருப்பதற்கு சில முன்னெடுப்புக்கள் தேவைப்பட்டமை. சுதேச அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்பு காணப்படுகின்ற போது அது அவர்களின் தொடர்ந்தேர்ச்சியான இருப்புக்களுக்கு தடையாகவே காணப்பட்டன. எனவே அவற்றை மாற்றுவதை நோக்காக் கொண்டு பல சீர்திருத்தங்களை முன்வைத்தமை.
2) குறித்த நாட்டில் தரித்திருப்பதற்கான வெகுசன ஆதரவு மற்றும் சட்ட வலு அவர்களுக்கு இல்லாமையால் இவ்வாறான மாற்றங்களினூடக இங்கு நிலைத்திருக்க முயற்சித்தமை. உதாரணமாக இவர்கள் வேற்று நாட்டவர்களாகக் காணப்பட்டமையால் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியாமை, சுதேச முறைமையில் காணப்பட்ட மன்னர், நில பிரபுக்கள் போன்ற அந்தஸ்த்துக்களை அடைய முடியாமை.
3) குறித்த நாடுகளில் தொடர்ந்தும் நிதை;திருக்க உதவும் வகையில் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் (உளவியல் ரீதியாக மக்களை திசை திருப்பவதற்கான ஒரு உத்தியாக) அவற்றை மேற்கொண்டமை.
4) தமது காலனித்துவத்தை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பும் நிருவாகச் செலவும் அதிகரித்தமை மற்றும் நேரடியாக காலனித்துவத்தை நிருவகிக்க முடியாமல் போனமை.
5) தமக்கு கீழ்ப்பட்ட சமூகத்தினை தமது தாய்நாட்டின் உச்சமட்ட வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டமை.
உலக வரலாற்றை ஆராயும் போது காலனித்துவமானது இரண்டு முறைகளில் உருவாகியுள்ளமையை அடையாளம் கண்டுக்கொள்ள முடியுமாக இருக்கின்றது.
1. அரசொன்றின் மக்கள் புதிய நாடொன்றை வசப்படுத்தி, குடியேறி தம் தாய் நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார முறைகளோடு இசைவான அமைப்புக்களை கட்டியெழுப்பிக்கொண்டு, தாய் நாட்டின் இறைமைக்கு உட்பட்டு அந்த புதிய தேசத்தினை கொண்டு நடத்துதல்.
2. முன்னர் குடியேற்றமாக காணப்பட்ட பிரதேசத்தினை பலமான அரசொன்றினால் உடன்படிக்கை அல்லது ஆயுத பலத்தினால் ஈர்த்துக்கொண்டு, தமது அதிகார பலத்தின்கீழ் ஆட்சி செய்தல்.
இதில் இரண்டாவது முறையினால் காலனித்துவத்திற்கு உட்படும் சமூகம் காலனித்துவவாத அரசின் அதிகாரத்திற்கு கீழ்ப்படும். இலங்கை இதில் இரண்டாவது வகையிலேயே காலனித்துவமானது.
இலங்கையில் காலனித்துவ மாற்றமும் அதன் விளைவுகளும்
இலங்கை 1505 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டுவரை ஐரோப்பியர்களின் காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்தது. இந்தவகையில் இலங்கையை முதலில் போர்த்துக்கேயரும் (1505 - 1658), இரண்டாவதாக ஒல்லாந்தரும் (1658 - 1796), மூன்றாவதாக பிரித்தானியரும் (1796 - 1948) தமது காலனித்துவத்திற்கு உட்படுத்திக்கொண்டனர். இவர்களில் இலங்கைமீது வன்மையான அழுத்தங்களை பிரயோகித்தவர்களாக பிரித்தானியரே காணப்படுகின்றனர்.
பிரித்தாணியர் 1796 தொடக்கம் 1815 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கரையோர மாகாணங்களை ஆட்சி செய்தனர். 1815 கண்டியை கைப்பற்றியது முதல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். அன்றிலிருந்து பிரித்தானியர் என்ற காலனித்துவவாதிகளால் (Colonizer) அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள் இலங்கை என்ற காலனித்துவ சமூகத்தின்மீது நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தியுள்ளது.
பிரித்தானிய குடியேற்றவாதிகள் இலங்கையை குடியேற்வாதத்திற்கு உட்படுத்தி தாம் மேற்கொண்ட சில சீர்திருத்தங்கள் மூலம் சமூக, பொருளாதார, அரசியல் ரீதிய நிலை மாற்றங்களை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கையில் இவர்களால் இவ்வாறான சீர்திருத்தங்களை அல்லது நிலைமாற்றங்களை மேற்கொண்டமைக்கான அடிப்படைக்காரணிகளாக பின்வருவன காணப்பட்டன.
1) செலவுகளை குறைத்துக் கொள்ளல். பிரித்தானியர் இலங்கையை காலனித்துவத்திற்கு உட்படுத்தியிருந்தபோது, இந்நாட்டில் நேரடியாக நிர்வகிக்கவும் பாதுகாப்பை மேற்கொள்ளவும் அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனவே இலங்கையர்களை ஆளச் செய்து அவர்களை கண்கானிப்பதன் மூலம் அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள இவ்வாறான சீர்திருத்தங்களை மேற்கொண்டனர். (இறுதி முடிவுகளை அவர்களே எடுத்தனர்.)
2) காலனித்துவத்திற்கு உற்படுத்திய புதிய சமூகத்தில் காணப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் அபிலாசைகள் என்பன காலனித்துவவாதிகளின் கலாசாரத்தோடு ஒத்துப்போகமையினால் அவற்றை மாற்றம் அடையச் செய்தல்.
3) தமக்கு கீழ்ப்பட்ட சமூகத்தினை தமது தாய்நாட்டின் உச்சமட்ட வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்ளல்.
கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பையும் click செய்வதன் மூலம் அத்தலைப்பு தொடர்பான pdf ஆக்கத்தினை வாசிக்க முடியும்.
7.1 பிரித்தானிய காலனித்துவத்தால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள்
.
No comments:
Post a Comment